லிவ்-இன் உறவில் இருந்த காதலியை கொன்று, துண்டு துண்டாக வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

பட மூலாதாரம், ANI
எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்
மும்பையிலிருந்து ஒரு மணிநேரம் பயணிக்கக்கூடிய தொலைவில் அமைந்துள்ள மீரா ரோடு சிட்டியில் நடந்துள்ள ஒரு கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
36 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண் அவருடன் லிவ்-இன் உறவில் வாழ்ந்துகொண்டிருந்த அவரது காதலரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணைக் கொலை செய்த பிறகு அவரது சடலத்தை வெட்டி அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
புதன்கிழமையன்று (ஜூன் 7), அவர்களது குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்தக் கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
56 வயதான மனோஜ் சானேவை மீரா பயந்தர் பகுதியின் போலீசார் கைது செய்துள்ளனர். ஜூன் 7ஆம் தேதியன்று இந்தக் கொலை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நயா நகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சடலத்தை அப்புறப்படுத்தும் முயற்சி
இந்தக் குற்றத்திற்கான காரணமும் நோக்கமும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதே முறையில் சடலத்தை அப்புறப்படுத்த முயன்றனர்.
சரஸ்வதி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, வீடு முழுவதும் பைகளில் வைக்கப்பட்டிருந்தன என்று அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மனோஜ் சானேவும் சரஸ்வதி வைத்யாவும் கடந்த 3 ஆண்டுகளாக கீதா ஆகாஷ்தீப் சொசைட்டியின் ப்ளாட் 704இல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
ஜூன் 7ஆம் தேதியன்று காலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் காவல்துறையிடம் புகாரளித்தனர்.

பட மூலாதாரம், ANI
அக்கம்பக்கத்தினர் இதுகுறித்துக் கூறியபோது, “இவர்கள் இருவரும் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளாததால், அவர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை,” என்று கூறினர்.
அவர்களது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் ஏபிபி மஜாவிடம் பேசியபோது, “ காலையிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதாகவும் மாலையில்தான் வீடு திறக்கப்பட்டதாகவும்” கூறினார்.
வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்; போலீசில் புகார்
அதில் மேற்கொண்டு பேசியவர், “அவர்கள் திருமணம் ஆனவர்கள் என்று நாங்கள் நினைத்தோம். அவர்களது உறவு குறித்து எங்களுக்குத் தெரியாது.
நாங்கள் அவர்களுடன் அரிதாகவே பேசினோம். நேற்று துர்நாற்றம் வரத் தொடங்கியபோது, ஆரம்பத்தில் அது ஏதோ செத்துப்போன விலங்காக இருக்கலாம் என்று நினைத்தோம். எங்கள் தளத்தில் 704 எண் வீட்டைத் தவிர மற்ற அனைத்து வீடுகளும் திறந்திருந்தன.
என் மகன் அவரது வீட்டுக் கதவைத் தட்டி துர்நாற்றத்தைப் பற்றிச் சொன்னபோது, மனோஜ் அன்று மாலைக்குள் அதைச் சரிசெய்வதாகக் கூறினார். பிறகு கொஞ்சம் ரூம் ஃபிரெஷ்னரை தெளித்துவிட்டுவிட்டு கிளம்பினார்,” என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
மேலும், தனக்கு சந்தேகம் ஏற்பட்டு, சொசைட்டியில் உள்ள மற்றவர்களிடமும் கூறியதாகச் சொல்லும் அவர், “சொசைட்டியில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் வேலைக்காக வெளியே சென்றிருந்ததால், அவர்கள் மாலையில் திரும்பி வந்ததும், பிளாட் ப்ரோக்கரையும் காவல்துறையையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம்.
போலீசார் கதவை உடைத்து பிளாட்டுக்குள் நுழைந்தபோது இந்த உண்மையைக் கண்டுபிடித்தனர். போலீஸ் அந்த வீட்டில் இருக்கும்போதுதான் மனோஜ் வீடு திரும்பினார். பிளாட் ப்ரோக்கர் அவரை அடையாளம் கண்டுகொண்டார்.
பிறகு போலீஸ் அவரைக் கைது செய்தனர். எங்களால் அந்த பிளாட்டுக்குள் செல்ல முடியவில்லை. ஆனால், போலீசார் அந்த வீட்டுக்குள் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலத்தைக் கண்டெடுத்ததை நாங்கள் தெரிந்துகொண்டோம்,” என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இதுவரையிலான போலீஸ் விசாரணையில் 4 நாட்களுக்கு முன்பு சரஸ்வதி கொல்லப்பட்டதாகவும் கடந்த 2-3 நாட்களுக்கு முன்பு மனோஜ் சடலத்தை அப்புறப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
சில குடியிருப்புவாசிகள், மனோஜ் அந்த சொசைட்டியை சுற்றி தெருநாய்களுக்கு உணவளிப்பதைக் கண்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் கூற்றுகள் உண்மையா என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மீரா பயந்தர் பகுதியின் காவல்துறை துணை ஆய்வாளர் பஜாலே ஊடகங்களிடம் இதுகுறித்துக் கூறும்போது, “போலீசார் அந்த இடத்தை அடைந்தபோது துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலத்தைக் கண்டெடுத்தனர்.
விசாரணைக்குப் பிறகு மனோஜ் சானேவும் சரஸ்வதி வைத்யாவும் இங்கு லிவ்-இன் உறவில் தங்கியிருப்பது முதன்மை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சரஸ்வதி வைத்யா என்ற பெண், 3 ஆண்டுகளாக வாடைக்கு அந்த வீட்டில் தங்கியிருந்தார். நயா நகர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். குற்றம் சாட்டப்பட்ட மனோஜை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “சமீப காலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதைக் கவனத்தில் கொண்டு, இதுகுறித்து விசாரிக்க மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரலுக்கு கடிதம் எழுதுவோம்” என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார்.
மேலும், “கடந்த காலங்களில் லிவ்-இன் உறவில் வாழும் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த காங்களில் நடந்த சம்பவங்களைப் பார்த்து இத்தகைய குற்றங்களைப் பலரும் செய்வதை நான் பார்க்கிறேன். இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது,” என்றும் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
ஷ்ரத்தா கொலை வழக்குடன் ஒப்பீடு
இந்தச் சம்பவம் ஷ்ரத்தா கொலை வழக்கோடு ஒப்பிடப்படுகிறது.
டெல்லியில் நடந்த இந்த விவகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியே வந்தது. டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு மே மாதம், 27 வயதான ஷ்ரத்தா வால்கர் அஃப்தாப் பூனவல்லாவால் கொலை செய்யப்பட்டார்.
ஷ்ரத்தாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டின் வெவ்வேறு காட்டுப் பகுதிகளில் அவர் வீசியதாக டெல்லி காவல்துறை கூறியது.
ஷ்ரத்தா கொலை செய்யப்படுவதற்கு முன்பு இருவரும் லிவ்-இன் உறவில் வாழ்ந்துகொண்டிருந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அஃப்தாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது.
ஷ்ரத்தா மகாராஷ்டிராவில் உள்ள பால்கரை சேர்ந்தவர். அவரது குடும்பம் இந்த லிவ்-இன் உறவுக்கு சம்மதிக்கவில்லை.
ஆகவே, இருவரும் டெல்லிக்கு வர முடிவு செய்து, ஒன்றாக வாழத் தொடங்கினர். முதல் தகவல் அறிக்கையின்படி, சில நாட்களுக்குப் பிறகு அஃப்தாப் தன்னை அடிப்பதாக ஷ்ரத்தா தன் தாயிடம் கூறியுள்ளார்.
திருமணம் தொடர்பாக இருவருக்கு இடையிலும் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நடந்த சண்டையில் ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












