தாய்லாந்து பெண் பிரதமர் நீக்கம் - தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெறிமுறையை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரத்தில் கடந்த ஜூலை மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஷினவத்ராவின் இந்த செயல் நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் நாட்டின் நலனை விட தனிப்பட்ட நலனையே முக்கியமாகக் கருதி, நெறிமுறைகளை பின்பற்ற தவறிவிட்டதாகவும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் இந்த பேடோங்டார்ன் ஷினவத்ரா?

தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார்.

இவர் தாய்லாந்து நாட்டின் இளம் தலைவராக அறியப்படுகிறார். 2024ம் ஆண்டு ஆகஸ்டில் தனது 37 வயதில் பிரதமராக பதவியேற்றார். மேலும் அந்நாட்டின் 2வது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர்.இவருக்கு முன்பாக 2011 - 2014ஆம் ஆண்டில் இவரின் உறவினரான யிங்லக் ஷினவத்ரா ஆட்சி செய்தார்.

இவர் தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் மகள். தாய்லாந்தில் பள்ளி படிப்பை முடித்தார். பின் இங்கிலாந்தில் உயர்கல்வியை முடித்தார்.

பின் 2021ஆம் ஆண்டு ஃப்யூ தாய் (Pheu Thai) கட்சியில் சேர்ந்தார். 2023-இல் கட்சியின் தலைவரானார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

2008ஆம் ஆண்டு முதல் இருந்து அந்நாட்டு நீதிமன்றத்தால் நீக்கப்படும் 5வது பிரதமர் ஆவார்.

அவர் மீதான குற்றச்சாட்டு என்ன?

கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னை அங்கிள் என அழைத்தார் ஷினவத்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கம்போடிய முன்னாள் பிரதமர் ஹுன் சென்னை அங்கிள் என அழைத்தார் ஷினவத்ரா

அண்டை நாடான கம்போடியா எல்லையில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் கம்போடிய செனட் தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, ஹுன் சென்னை சமாதானப்படுத்தும் நோக்கில், அவரை 'அங்கிள்' என அழைத்த பேடோங்டார்ன், அவரின் தேவைகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்த உரையாடல் அடங்கிய ஆடியோ கசிந்ததை அடுத்து, இவருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

தாய்லாந்து, கம்போடிய எல்லையில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டிருக்கும் சமயத்தில், ஹுன் சென்னிடம் தொலைபேசியில் பேசிய பேடோங்டார்ன், 'தாய்லாந்து ராணுவ தளபதி கூலாக தோன்றவே விரும்பினார்' எனக் கூறியுள்ளார். இது நாட்டின் அரசியல் செல்வாக்கு கொண்ட ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டினர்.

எனினும் இந்த தொலைபேசி அழைப்பை 'பேச்சுவார்த்தை யுக்தி' எனப் பேடோங்டார்ன் கூறினார். இனி ஹுன் சென்னுடன் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபடமாட்டேன் எனவும் அவர் கூறினார்.

ஹுன் குடும்பத்துடனான ஷினவத்ராவின் நட்பு பல தசாப்தங்களாக தொடர்கிறது. ஹுன் சென்னும், பேடோங்டார்னின் தந்தை தக்ஷின் ஷினவத்ராவும் நல்ல உறவில் இருந்துள்ளனர்.

ஆனால் தொலைபேசி உரையாடல் கசிந்த பின், ஹுன் சென், தக்ஷின் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர்.

பேடோங்டார்ன் சொல்வது என்ன?

நாட்டை மிகவும் நேசிக்கிறேன் என்றார் ஷினவத்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாட்டை மிகவும் நேசிக்கிறேன் என்றார் ஷினவத்ரா

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பேடோங்டார்ன் ஷினவத்ரா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நீதித்துறைக்கு உரிய மரியாதை அளித்து, நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.

"ஆனால், தாய்லாந்தை சேர்ந்தவராக இந்த நாட்டுக்காக உழைக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மக்களின் உயிர்களை நான் மிகவும் மதிக்கிறேன். பொதுமக்களும் சரி, ராணுவ வீரர்களும் சரி." எனக் கூறிய அவர், நான் ஹுன் உடனான உரையாடலில் சொந்த நலனுக்காக எதுவும் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் "மக்களின் உயிர்களை காப்பாற்றவே நினைத்தேன். அந்த உரையாடலில் அதைதான் வலியுறுத்தினேன்" என்றார்.

இந்த தீர்ப்பு தாய்லாந்து அரசியலில் மேலும் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஓராண்டாக எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. இந்த நாடு, மதம், அரசாட்சியை மிகவும் நேசிக்கிறேன்" என்றார்.

அடுத்து என்ன நடக்கும்?

பும்தாம் வேச்சயாசாய் தற்காலிக பிரதமராக செயல்படுவார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்தாம் வேச்சயாசாய் தற்காலிக பிரதமராக செயல்படுவார்.

பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் பதவியில் இருந்து நீக்கியதால், துணை பிரதமர் பும்தாம் வேச்சயாசாய், இவருக்கு பதிலாக பிரதமராக (செயல்) பொறுப்பேற்பார். கடந்த ஜூலை மாதம் பேடோங்டார்ன் இடைநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து இவரே பிரதமராக செயல்பட்டு வருகிறார்.

பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தி புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு