You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கற்பனையை விஞ்சிய நிஜம்': இறுதிச்சடங்கு செய்த 12 ஆண்டுக்குப் பிறகு சுமார் 50 வயதில் உயிரோடு வந்த சகோதரன்
- எழுதியவர், துஷார் குல்கர்னி
- பதவி, பிபிசி மராத்தி
- எழுதியவர், பிராச்சி குல்கர்னி
- பதவி, பிபிசி மராத்திக்காக
"உண்மை கற்பனையை விட வியப்பானது" என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம்.
ஆனால், அதை நாமே அனுபவிக்கும் வரை அது வெறும் சொல்லாகத்தான் இருக்கும்.
ஆனால் சிவம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம், அதை விட வியப்பானது.
தாங்களே இறுதிச்சடங்கு செய்த அந்த சகோதரனை, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இது புனேவில் உள்ள பிராந்திய மனநல மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியாலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பாலும் நிஜமாக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டு கேதார்நாத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த நபர், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டனர்.
அதன் பிறகு அவர் மகாராஷ்டிராவில் உயிரோடு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் வைஜாபூர் தாலுகாவில் உள்ள ஒரு கோவிலில் திருட்டில் ஈடுபட்டபோது சிலர் பிடிபட்டனர். அப்போது அந்த திருடர்கள், 'இங்கு வாழும் ஒருவரின் கூட்டாளி தான் திருடியது' என்று கிராமத்தினரிடம் கூறினர்.
அந்தக் கோவிலில் ஒரு நடுத்தர வயதுடைய ஆண் வாழ்ந்து வந்தார். அவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அந்த நபரின் மனநலம் சரியில்லை என்று நீதிமன்றத்துக்கு பின்னர் தெரிய வந்தது.
அந்த நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், போலியோவால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பலவீனம் இருந்ததால் நடக்க முடியவில்லை என்றும் நீதிபதிக்கு தெரிய வந்தது.
அந்த நபர் சில வார்த்தைகளை முணுமுணுப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் எந்த கேள்வி கேட்டாலும், அவர் 'ஓம் நம சிவாய' என்றுதான் பதிலளித்துள்ளார்.
அதன் பிறகு புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலையின் மனநலப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்த ஊழியர்கள் அவரை 'சிவம்' என்று அழைக்கத் தொடங்கினர். இது அவரது உண்மையான பெயர் அல்ல, அங்குள்ள ஊழியர்கள் வழங்கிய பெயர்.
அவரின் வயது சுமார் 50–52 இருக்கும் என்று அந்த மருத்துவமனையின் சமூக சேவைத் துறையின் கண்காணிப்பாளர் ரோஹினி போஸாலே பிபிசி மராத்திக்கு தெரிவித்தார்.
சிவம் யாரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். ஊழியர்கள் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டு, செய்துவிடுவார்.
2023-ல், ரோஹினி போஸாலே அந்தப் பிரிவின் சமூக சேவை கண்காணிப்பாளராக வந்தார். சிவம் எனும் நபருடைய கோப்பைப் பார்த்த ரோஹினி, அவரிடம் பேச முயன்றுள்ளார்.
அந்த நபருக்கு மராத்தி தெரியாது. ஆனால் அவர் இந்தியில் பேச முயற்சிப்பதை ரோகிணி கவனித்ததும், அவரிடம் இந்தியில் பேசத் தொடங்கியுள்ளார். அப்போதுதான் சிவம், இந்தியில் பேசுவதை அவர் உணர்ந்தார்.
சிவம் குடும்பம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?
சிவம் என்ற அந்த நபரால் தனது குடும்பத்தைப் பற்றியோ, பழைய நினைவுகளைப் பற்றியோ அதிகம் விவரிக்க முடியவில்லை என்பதை உணர்ந்த ரோஹினி, அவர் படித்த பள்ளியைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளி குறித்த பேச்சு வந்தபோது, சிவம் ரூர்க்கி பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் பெயரைக் கூறியுள்ளார் (அந்த நபருடைய அடையாளத்தை பாதுகாக்க அந்தப் பெயர் வெளியிடப்படவில்லை)
"அந்தப் பள்ளியின் பெயரைக் கேட்டதும், அது எந்த நகரத்தில் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பின்னர் உரையாடலில் ஹரித்வார் பற்றி பேச்சு வந்தது. உடனே ஹரித்வாரிலும் அதன் அருகிலும் அந்தப் பெயர் கொண்ட பள்ளி இருக்கிறதா என்று கூகுளில் தேடத் தொடங்கினேன்" என்று ரோகினி பிபிசி மராத்தியிடம் கூறினார்.
"சிவம் கூறிய பெயருடன் பொருந்தும் ஒரு பள்ளியை கண்டேன். அந்தப் பள்ளியின் புகைப்படத்தை அவரிடம் காட்டியதும் அவர் உடனே அதை அடையாளம் கண்டுகொண்டார். அவரின் கண்களில் ஒரு ஒளி தெரிந்தது" என்கிறார் ரோகிணி.
அதன் பிறகு ரோஹினி ரூர்க்கி மற்றும் ஹரித்வார் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டார். அங்கு இத்தகைய நபர் ஒருவரை அவர்கள் பராமரித்து வருகின்றனர் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் காவல்துறை அவரைக் குறித்துத் தேடியபோது, இத்தகைய விவரங்களுடன் கூடிய ஒரு நபரைப் பற்றிய பதிவு இருப்பது தெரியவந்தது.
ஆனால் அந்த நபர் 2013-ஆம் ஆண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால், விசாரணை முடங்கியது.
முதலில், 'இத்தகைய ஒருவர் காணாமல் போனதாக உங்களுக்குத் தெரியுமா?' என்று காவல்துறை அந்த நபருடைய குடும்பத்தினரிடம் விசாரித்ததாக ரோஹினி கூறுகிறார். அப்போது, கேதார்நாத் வெள்ளத்தில் தங்களது சகோதரர் அடித்துச் செல்லப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது உடல் கிடைக்காததால் அடையாள இறுதிச் சடங்கு செய்தோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் அவருடைய புகைப்படத்தை குடும்பத்தினரிடம் காட்டியபோது, அது தங்களது சகோதரன் தான் என்று அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிவம் வைஜாபூரை எப்படி அடைந்தார்?
சிவம் என்று அழைக்கப்பட்ட அந்த நபர் பல வருடங்களாகக் காணாமல் போயிருந்தார்.
2013ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அவர் காணாமல் போயிருந்தார்.
சுமார் இருபது வருடங்களாக அவர் வீட்டை விட்டு தனித்து வாழ்ந்து வந்துள்ளார் என ரோகிணி கூறுகிறார்.
உத்தராகண்டிலிருந்து வைஜாபூரை எப்படி அடைந்தார் என்பது பற்றி அந்த நபருக்கு எதுவும் நினைவில் இல்லை.
அதைப் பற்றி அவரால் எதையும் சொல்ல இயலாது.
2015-ஆம் ஆண்டு, சிவம் வைஜாபூரில் உள்ள ஒரு கோவிலில் பராமரிப்பாளராக பணிபுரியத் தொடங்கினார். அங்கேயே உணவு உண்டு, அங்கேயே தூங்கி, கோவிலின் மரம் செடிகளை பராமரித்து வந்துள்ளார்.
ஆனால் அவர் எப்படி அங்கு வந்தார் என்பது குறித்து யாருக்கும் தெரியாது என்கிறார் ரோகிணி.
குடும்பத்தினர் அவரை எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள்?
உத்தராகண்டில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடியோ காலில் பேச சிவம் அனுமதிக்கப்பட்டார்.
சிவமின் சகோதரர் அவருடன் வீடியோ காலில் பேசியவுடன், அவரை அடையாளம் கண்டுகொண்டார்.
அதுமட்டுமின்றி, சிவமும் தனது சகோதரனை அடையாளம் கண்டுகொண்டார். இருவருக்கும் கண்ணீர் மல்கியது.
"தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நாங்கள் இங்கு புரிந்துகொண்டோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாலும், அந்த ரத்த சொந்தம் மிகவும் வலுவானது. அதை நாங்கள் நேரில் கண்டோம். அதன் பிறகு சிவமும் மிகவும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினார்," என்று மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீநிவாஸ் கோலோட் கூறினார்.
அவருடைய குடும்பத்தினர் அவரைச் சந்திக்க புனேவுக்கு வந்தனர். ஆனால் அவரை அழைத்துச் செல்வதில் ஒரு சிக்கல் இருந்தது.
சிவம் மீதான திருட்டு குற்றச்சாட்டுகள் என்ன ஆயின?
அவருடைய குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர் கைது செய்யப்பட காரணமான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. கைதிகளுக்கான மனநல வார்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், அந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை அவரால் வீடு திரும்ப முடியவில்லை.
இதுகுறித்து எனக்கு தகவல் கிடைத்ததும், இந்த வழக்கின் நிலையை சரிபார்த்ததாக ரோகிணி கூறுகிறார்.
ஆனால் அப்போது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இல்லை.
இது குறித்து காவல்துறைக்கும் நீதிபதிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, 2023 இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, வழக்கு விசாரிக்கப்பட்டது.
சிவம் நடக்க முடியாத நிலையில் இருந்ததால், வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றவர்கள், சிவம் திருட்டில் ஈடுபடவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் கிராமவாசிகள் எங்களைப் பிடித்தபோது, அவர்கள் எங்களை கொன்றுவிடக்கூடும் என்ற பயத்தில், அங்கே வேலை செய்த நபரின் பெயரை பொய்யாகக் கூறினோம் என அவர்கள் கூறியதாக ரோஹினி விவரித்தார்.
அவர்களின் வாக்குமூலங்களுக்கு பின்னர், 2025-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அந்த வழக்கில் தீர்ப்பு வந்தது, அதில் சிவம் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.
இந்த உத்தரவு நகல் நவம்பரில் வந்ததும், சிவம் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குடும்பத்தினர் வருகையும் சிவம் பிரியாவிடையும்
சிவம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தது எங்களுக்கு மறக்க முடியாத தருணம் என்று ரோகிணி கூறுகிறார்.
"கடந்த நான்கு ஆண்டுகளாக, வார்டில் சகோதரர் நிலேஷ் திகே மற்றும் சகோதரி கவிதா காதே ஆகியோர் அவரை கவனித்துக்கொண்டனர். சிவம் அனைவருக்கும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல மாறிவிட்டதால், அவருக்கு விடைகொடுப்பது எங்களுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான தருணமாக இருந்தது. ஆனால் அவர் தனது குடும்பத்தினரிடம் செல்வதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம்" என்று ரோகிணி பகிர்ந்து கொண்டார்.
"நான்கைந்து வருடங்களாக, நாங்கள் அவருடன் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை வளர்த்துக் கொண்டுள்ளோம். அவர் மிகவும் அமைதியான மற்றும் மென்மையான மனிதர். அவர் தனது வேலையை மிகச் சிறப்பாகச் செய்கிறார். உணவுக்குப் பிறகு தட்டுகளைக் கழுவுவதாக இருந்தாலும் சரி, படுக்கைகளைச் சரிசெய்வதாக இருந்தாலும் சரி, அவர் தனது வேலையை மிகச் சிறப்பாகச் செய்கிறார்," என்று கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கோலோட் கூறினார்.
கைதிகளுக்கான மனநல வார்டில் இருந்த ஒருவர் இவ்வாறு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவது இது தான் முதல் தடவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
சிவம் என்ற அந்த நபருடைய சகோதரர் அரசு வேலையில் இருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் ரோகிணி தெரிவித்தார்.
அவரது குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதே நேரத்தில், அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் ரோஹினி கூறினார்.
எனவே பிபிசி மராத்தி அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து இதுகுறித்து எந்தக் கருத்தும் பெறவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு