தோனி புதிய சாதனை: தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டி சிஎஸ்கே அணிக்கு ஏற்றம் தந்த 'ஆட்டநாயகன்'

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க. போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்டநாயகனாக ஜொலித்த கேப்டன் தோனி, புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

லக்னெளவை ஏமாற்றிய பேட்டர்கள்

லக்னெள அணிக்கு நேற்று பேட்டர்கள் எதிர்பார்த்த பங்களிப்பை செய்யவில்லை. மார்க்ரம்(6), நிகோலஸ் பூரன்(8) இருவரும் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியுடன் முன்னணியில் இருக்கும் பூரன் விரைவாக விக்கெட்டை இழந்தது சிஎஸ்கேவின் நல்லநேரம்.

அதேபோல மார்ஷ் 30 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததும், லக்னெளவுக்கு பெரிய ஸ்கோரை வழங்க முடியவில்லை. பூரன், மார்ஷ் இருவரும் களத்தில் நின்றிருந்தால், சிஎஸ்கேவுக்கு 6வது தோல்வி கிடைத்திருப்பது உறுதியாகியிருக்கும்.

கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் லக்னெள அணிக்காக முதல் அரைசதத்தை அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரிஷப்பந்த் பேட்டிலிருந்து பெரிதாக ரன்கள் வரவில்லை. அதன்பின் ரிஷப் பந்த் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி லக்னெள ஸ்கோரை உயர்த்தினார். பதிரானா, கலீல் அகமது ஓவர்களை குறிவைத்த ரிஷப் பந்த் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி லக்னெள அணியை 150 ரன்கள் கடக்க உதவினார்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

மில்லர் ஏன் விரைவாக வரவில்லை?

அதேபோல நெருக்கடியான நேரத்தில் அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரை களமிறக்காமல், அப்துல் சமதையும், ஷர்துல் தாக்கூரையும் களமிறக்கி லக்னெள அணி தவறு செய்துவிட்டது. அப்துல் சமது களமிறங்க வேண்டிய இடத்தில் மில்லர் களமிறங்கி இருந்தால், லக்னெள ஸ்கோர் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருக்கும். அப்துல் சமது 20 ரன்கள் சேர்த்தும் அதில் 2 சிக்ஸர்கள் மட்டுமே சிரமப்பட்டு அடித்தார், 'ஷாட்' ஏதும் சிக்கவில்லை.

ஆனால், மில்லரை அணியில் வைத்திருந்தும் அவரை நடுவரிசையில் களமிறக்காமல் கடைசிவரிசையில் களமிறக்கி லக்னெள அணி அவரை வீணாக்கியது.

சிறப்பான அறிமுகம்

சிஎஸ்கே அணியில் நீண்டகாலம் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோர் அணியின் துணைக் கேப்டன் ஷேக் ரஷீத் நேற்று அறிமுகமாகினார். 2023ம் ஆண்டு சீசனில் இருந்து இவரை சிஎஸ்கே பாதுகாத்தாலும், விளையாட வாய்ப்பு வழங்கவில்லை.

ஆனால், ரஷீத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நேற்று பயன்படுத்தினார். ஆகாஷ் தீப் பந்துவீச்சில் 3 பவுண்டரிகள், விராட் கோலி ஸ்டைலில் பிளிக் ஷாட்டில் சூப்பர் பவுண்டரி என 6 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற எந்த பதற்றமும், அச்சமும் இல்லாமல் மிகவும் கூலாக ரஷித் பேட் செய்தார். கெய்க்வாட் பேட்டிங் ஸ்டைலில் ரஷீத் பேட் செய்ததாக வர்ணனையாளர்கள் தெரிவித்தாலும், ரஷீத்தின் ஆட்டம் நேற்று சிஎஸ்கே அணிக்கு பவர்ப்ளேயில் நல்ல தொடக்கத்தை அளிக்க உதவியது.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் என நல்ல தொடக்கத்தை அளித்தாலும் நடுப்பகுதியில் விக்கெட்டுகளையும் இழந்து, ரன் சேர்க்கும் வேகத்தையும் குறைத்தது.

ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் மார்க்ரம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதிக்கு கிடைத்த 5வது வாய்ப்பையும் வீணடித்து 9 ரன்கள் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு சுமையாக மாறிவருகிறார். ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்களில் தவறான ஷாட்களால் ஆட்டமிழந்தனர். 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என்று சிஎஸ்கே தடுமாறியது. கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டதால், சிஎஸ்கே வெற்றி மதில்மேல் பூனையாக மாறியது.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

தோனி, துபே சிரமப்படவில்லை

ஷிவம் துபே களத்தில் இருந்தபோது, அவருக்கு லக்னெள சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியவரை ரன் சேர்க்கக் கடும் சிரமப்பட்டு, 20 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்திருந்தார். விஜய் சங்கர், ஜடேஜா ஆட்டமிழந்தபின் துபேயின் ரன்சேர்ப்பில் தொய்வு ஏற்பட்டது. தோனி களமிறங்கியபின், லக்னெள கேப்டன் ரிஷப் பந்த் ஏன் வேகப்பந்துவீச்சுக்கு வாய்ப்புக் கொடுத்தார் எனப் புரியவில்லை.

2024 ஐபிஎல் தொடரிலிருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமாக ஆடியுள்ளார். ஆனால் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்காமல் தாக்குர், ஆவேஷ்கானை வைத்து வைடு யார்கர், ஃபுல்டாஸ், ஷார்ட் பிட்ச்சில் பந்துவீச வைத்து தோனி, துபே ரன் சேர்ப்பை லக்னெள எளிதாக்கியது.

ஷர்துல் வீசிய 19-வது ஓவரில் துபே 2 பவுண்டரி, நோபாலில் சிக்ஸர் என 19 ரன்கள் சேர்த்தபோது வெற்றி லக்னெளவின் கைகளைவிட்டு சென்றுவிட்டது. 6-வது விக்கெட்டுக்கு தோனி, துபே கூட்டணி 28 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தனர். துபே 43, தோனி 26 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே வெற்றிக்கான காரணம்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, நூர் முகமது இருவரும்தான். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி நடுப்பகுதியில் லக்னெள ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். நூர் முகமது விக்கெட்டுகள் வீழ்த்தாவிட்டாலும், 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே வழங்கினார். ஜடேஜா 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் பதிராணா, கலீல் அகமது, ஓவர்டன் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு கட்டுக்கோப்புடன் வீசவில்லை, கம்போஜ் 3 ஓவர்கள் வீசி 20 ரன்களுடன் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது, நூர் முகமது, ஜடேஜாவின் பந்துவீச்சுதான்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்டியது எப்படி?

வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில், "வெற்றி பெற்றது மகிழ்ச்சி. கடந்த போட்டிகள் துரதிர்ஷ்டமாக நாங்கள் எதிர்பார்த்தவாறு செல்லவில்லை. இந்த வெற்றி அணிக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த ஆட்டம் கடினமாக இருந்தது, எங்கள் தருணத்தை மீண்டும் மீட்டெடுத்துள்ளோம். கடந்த போட்டிகளில் தொடக்க ஓவர்களில் சிறிது சிரமப்பட்டுள்ளோம் ஆனால் நடுப்பகுதியில் மீண்டு வந்துள்ளோம் சென்னை ஆடுகளமாக இருந்ததால் அவ்வாறு நடந்திருக்கலாம். சிறந்த ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "முதல் 6 ஓவர்களில் அதிக பந்துவீச்சாளர்கள் தேவை, அஸ்வினை பவர்ப்ளேயில் பந்துவீச வைத்து அதிக அழுத்தம் கொடுப்போம், எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த பந்துவீச்சாளர்களை மாற்றுவோம். அந்த வகையில் பந்துவீச்சு என்பது இன்று பேட்டிங்கைவிட சிறப்பாக இருந்தது.

ரஷித் உண்மையாகவே நன்றாக பேட் செய்தார், கடந்த சில ஆண்டுகளாகவே எங்களுடன் பயணிக்கிறார். வலைப்பயிற்சியில் ரஷீத் பேட்டிங் சிறப்பாக இருந்தது, முன்னேற்றம் காணப்பட்டது. பேட்டிங் வரிசையிலும் எங்களுக்கு மாற்றம் தேவைப்பட்டதால் ரஷீத்தை கொண்டுவந்தோம்" எனத் தெரிவித்தார்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

வெற்றியை தாரை வார்த்த ரிஷப் பந்த்

லக்னெள அணி இன்னும் கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். உண்மையில் இன்னும் 40 ரன்கள் கூடுதாக அடித்திருந்தாலும், ரிஷப் பந்தின் தவறான, மோசமான கேப்டன்சியால் லக்னெள அணி தோற்றிருக்கும்.

சிஎஸ்கே அணியை சுருட்டுவதற்கு, லக்னெளவின் கருப்பு மண் ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் போதுமானது. ஆனால், கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களை திட்டமிட்டு பயன்படுத்தாமல் ரிஷப் பந்த் செய்த கேப்டன்சி தவறுதான் இந்த விலையைக் கொடுத்தது.

கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 44 ரன்கள் தேவை என்ற கடினமான நிலையில் ஆட்டம் லக்னெளவின் பக்கம்தான் இருந்தது. கடைசி 18 பந்துகளில் சிஎஸ்கேவுக்கு 31 ரன்கள் தேவை என்கிற வரையிலும் லக்னெளவின் கைகளில்தான் வெற்றி இருந்தது.

2 ஓவர்களில் 24 ரன்கள் என்ற ரீதியில் சிஎஸ்கேவுக்கு கடின இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் லக்னெள அணி விழிக்கவில்லை. தேவையின்றி கடைசி இரு ஓவர்களை ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் கானுக்கு வழங்கி, அணியின் வெற்றியை தனது குருநாதர் தோனிக்கு பரிசாக ரிஷப் பந்த் அளித்துள்ளார். லக்னெள அணி வெற்றிக்கு உரித்தானது, நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்புடன் பந்துவீசி வெற்றிக்கு அருகே வந்துவிட்டனர்,

லக்னெள அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் திக்வேஷ் ராதி, ரவி பிஸ்னாய், மார்க்ரம் ஆகியோர் 11 ஓவர்கள் வீசி 80 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், 19வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் 19 ரன்கள் கொடுத்ததுதான் லக்னெளவை தோல்விக்குழியில் தள்ளியது. ரவி பிஸ்னோய்க்கு 3 ஓவர்கள் மட்டுமே வழங்கிய நிலையில் ஏன் 4வது ஓவரை ரிஷப்பந்த் வழங்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால், ரிஷப்பந்தின் தவறான கேப்டன்சி சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமைந்தது.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

ரிஷப் பந்த் செய்த தவறு என்ன?

லக்னெள சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஸ்னோய் நேற்றைய ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தி கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தார். ஆனால், அவருக்கு 4வது ஓவரை ரிஷப் பந்த் ஏன் வழங்கவில்லை என்பது கேள்வியாக வர்ணனையாளர்கள் வைத்தனர். ரிஷப்பந்தின் இந்த தவறான முடிவுதான் லக்னெள அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

166 ரன்களை லக்னெள அணி சொந்த மைதானத்தில் டிபெண்ட் செய்திருக்க முடியும். இந்த ஸ்கோரையே கடைசி 3 பந்துகள் இருக்கும்போதுதான் தோனி, துபேயால் அடிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது, ஏதேனும் ஒரு ஓவரை கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும்

ரவி பிஸ்னோய் 13வது, 9வது ஓவரில் திரிபாதி, ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்தினரார். இவர் வீசிய 18 பந்துகளில் 9 பந்துகள் டாட் பந்துகள். அனுபவம் இல்லாத திக்வேஷ் ராதிக்கும், மார்க்ரமுக்கும் 4 ஓவர்களை முழுமையாக வழங்கிய ரிஷப் பந்த் ஏன் அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய்க்கு 4வது ஓவரை வழங்கவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது.

கடைசி 30 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 56 ரன்கள் என்பது லக்னெள மைதானத்தில் கடின இலக்குதான். ஆவேஷ்கானுக்கு 3 ஓவர்களும், தாக்கூருக்கு 2 ஓவர்களும் மீதம் இருந்தன, பிஸ்னோய்க்கு ஒரு ஓவர் இருந்தது. ஆவேஷ் கானுக்கு 16வது ஓவரை வழங்கிய நிலையில் 12 ரன்களை வாரி வழங்கினார்.

பனியின் தாக்கத்தால் பந்து மாற்றப்பட்டு புதிய பந்து தரப்பட்டது. ஆனால் புதிய பந்தை சுழற்பந்துவீச்சாளர் பிஸ்னோய்க்கு ரிஷப் பந்த் வழங்கவில்லை. பெரும்பாலும் புதிய பந்து மாற்றப்பட்டவுடன் தோனி களத்தில் இருந்தால் சுழற்பந்துவீச்சைத்தான் பெரும்பாலான கேப்டன்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

கடந்த போட்டியில் கெளகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்கு 18 பந்துகளில் 45 ரன்கள் தேவை என்றபோது, ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன், தீக்சனாவுக்கு ஓவரை வழங்கினார்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 72 ரன்கள் தேவை என்ற போது அக்ஸர் படேல் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே சேஸ் செய்யும்போது, 24 பந்துகளில் 68 ரன்கள் தேவை இருந்தது. களத்தில் தோனி இருந்ததால், கேப்டன் ஸ்ரேயாஸ் உடனடியாக யஜுவேந்தி சஹலுக்கு ஓவரை வழங்கினார், தோனியால் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை.

2020 ஐபிஎல் சீசனில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு எதிராக தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 94 மட்டும்தான், 243 பந்துகளைச் சந்தித்த தோனி 14 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்தான் அடித்துள்ளார். ஆனால் 2024 ஐபிஎல் சீசனில் இருந்து வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தோனி 222 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

தோனிக்கு ஒரு ஓவரை ரவி பிஸ்னோய் மூலம் பந்துவீச வைத்திருந்தால், ரன் நெருக்கடி அதிகமாகி சிஎஸ்கே தோல்வியில் விழந்திருக்கலாம். லக்னெள அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை கேப்டன் ரிஷப் பந்த் தனது குருநாதர் தோனிக்கு தாரை வார்த்துவிட்டார்.

தோனி புதிய சாதனை

இந்த போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ரன்-அவுட், ஸ்டெம்பிங் செய்து 11 பந்துகளில் அதிரடியாக 26 ரன்கள் சேர்த்த கேப்டன் மகிகேந்திர சிங் தோனி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ம் ஆண்டுக்குப்பின் தோனி ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்றார்.

ரவீந்திர ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 14-வது ஓவரில் லக்னெள வீரர் ஆயுஷ் படோனி இறங்கி அடிக்க முற்பட, பந்து அவரை ஏமாற்றி விக்கெட் கீப்பர் தோனியிடம் தஞ்சம் அடைந்தது. அவர் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து படோனியை பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் பீல்டிங்கில் 200-வது வீரரை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். அதன் பிறகு கடைசி ஓவரில் லக்னௌ கேப்டன் ரிஷப் பந்தை கேட்ச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார் தோனி.

இதுவரை 271 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 201 பேட்டர்கள் ஆட்டமிழக்க காரணமாக இருந்துள்ளார். அதில், 155 கேட்ச்களும், 46 மின்னல் வேக ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

CSK vs LSG, தோனி

பட மூலாதாரம், Getty Images

புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே எங்கே?

சிஎஸ்கே அணி தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்த நிலையில் தோனி கேப்டன்ஷிப் ஏற்றபின் முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணியால் எந்த மாற்றத்தையும் கொண்டுவரமுடியவில்லை, தொடர்ந்து கடைசி இடத்தில்தான் இருக்கிறது. அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்தால் சிஎஸ்கே அணியின் நிலை மாறும். லக்னெள அணி 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.

இன்றைய ஆட்டம்

  • பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம்: முலான்பூர்
  • நேரம்: இரவு 7.30

சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • நாள் - ஏப்ரல் 20
  • இடம் – மும்பை
  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • நாள் - ஏப்ரல் 17
  • இடம் – மும்பை
  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்
  • நாள் - ஏப்ரல் 18
  • இடம் – பெங்களூரு
  • நேரம்- மாலை 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-357 ரன்கள்(7 போட்டிகள்)
  • சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-329 ரன்கள்(6 போட்டிகள்)
  • மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 295 ரன்கள்(6 போட்டிகள்)

நீலத் தொப்பி

  • நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)
  • கலீல் அகமது(சிஎஸ்கே) 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)
  • ஷர்துல் தாக்கூர்(லக்னெள) 11 விக்கெட்டுகள்(7 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.