நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததை செய்த சிஎஸ்கே - சேப்பாக்கத்தின் வரலாற்றுப் பதிவுகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிஎஸ்கே அணியின் நேற்றைய பேட்டிங் ரசிகர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரையும் வெறுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்பதால் கூடுதல் உற்சாகத்தோடு வந்திருந்த ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்துக்குச் சென்று சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்தது. 104 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
20 ரன்களுக்குள் 7 விக்கெட்
சிஎஸ்கே அணியில் டேவன் கான்வே(12), திரிபாதி(16), விஜய் சங்கர்(29), துபே(31) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களின் பொறுமையை சோதித்தனர்.
59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சிஎஸ்கே அணி அடுத்த 20 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் பேட்டிங்கை மறந்தவாறு பேட்டர்கள் ஆடியது போல் தெரிந்தது.
விஜய் சங்கர் களத்துக்கு வந்தவுடனே டக்அவுட்டில் ஆட்டமிழக்க வேண்டியவர் ஆனால் வெங்கடேஷ் கேட்சை நழுவவிட்டதால் தப்பித்தார். விஜய் சங்கரும் போராடியும் பெரிய ஸ்கோர் எடுக்க முடியவில்லை. சிஎஸ்கே அணியின் ஒரே பிக்ஹிட்டர் என்று அறியப்படும் ஷிவம் துபே நேற்றைய ஆட்டத்தில் களத்துக்கு வந்து 17 பந்துகளாக ஒரு பவுண்டரிகூட அடிக்கவில்லை. அதன்பின்புதான் முதல் பவுண்டரி, சிக்ஸரை அடித்தார்.
பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாத வீரர்களான திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா, கான்வே ஆகியோரை அணியில் சேர்த்து தோல்விக்கு மேல் தோல்வியை சிஎஸ்கே சந்தித்து வருகிறது.
ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேயின் பேட்டிங் திறமை, திறன் என்ன என்பதை கொல்கத்தா அணி வெளிப்படுத்தி(எக்ஸ்போஸ்) செய்துவிட்டது. இது சிஎஸ்கே அணிக்கு இன்னமும் ஆபத்தாக அமையப்போகிறது. வரும் ஆட்டங்களில் சிஎஸ்கேயின் பலவீனத்தை மற்ற அணிகள் இன்னும் ஆழமாகப் பயன்படுத்தப் போகின்றன.
வந்தார், சென்றார் தோனி
சிஎஸ்கே அணியில் விக்கெட்டுகள் மளமள சரிந்தநிலையில்கூட தோனி 8-வது விக்கெட்டுக்குதான் களமிறங்கினார். சிஎஸ்கே அணி டாப்ஆர்டர்களை இழந்தவுடனே தோனி களமிறங்கி இருந்தால், ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரை கொண்டு வந்திருக்லாம். ஆனால், தொடர்ந்து தோனி ஏன் கடைசி வரிசையில் களமிறங்குவது புரியவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் நரைன் பந்துவீச்சில் தோனி இதுவரை ஒரு பவுண்டரிகூட அடித்தது இல்லை. அதனை உணர்ந்து, கேகேஆர் அணி நரைனையே தோனிக்கு எதிராகப் பந்துவீச வைத்தது.
அதற்கு ஏற்றபடி தோனி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். தோனி கால்காப்பில் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. தோனி களத்துக்கு வந்த வேகத்தில் 4 பந்துகளில் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.
ஒரு பவுண்டரிக்காக காத்திருந்த ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே பேட்டர்கள் நேற்று பவுண்டரி அடிக்கும் திறமையை மறந்துவிட்டதுபோல் பேட் செய்தனர். 8வது ஓவருக்குப் பின் சிஎஸ்கே அணி அடுத்த பவுண்டரியை அடிக்க 63 பந்துகளை எடுத்துக்கொண்டது. 18.3 ஓவரில்தான் அடுத்த பவுண்டரியை ஷிவம் துபே அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு பவுண்டரி அடிக்க அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட 3வது அணியாக சிஎஸ்கே மாறியது.
இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட தீபக் ஹூடா எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஜடேஜா ரன் ஏதும் சேர்க்காமல் நரைன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தரப்பில் மொத்தமே 8 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்கப்பட்டிருந்தது.
பேட்டிங் கற்றுக்கொடுத்த கொல்கத்தா

பட மூலாதாரம், Getty Images
எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுனில் நரைன், டீகாக் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை நொறுக்கி அள்ளினர். சிக்ஸர் எப்படி அடிக்க வேண்டும் என்று சிஎஸ்கே பேட்டர்களுக்கு பாடம் எடுப்பது போன்று விளாசித்தள்ளினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் சேர்த்து ஏறக்குறைய ஆட்டத்தையே கொல்கத்தா அணி முடித்துவிட்டது. டீகாக் 21 ரன்னில் 3 சிக்ஸர்களுடன் கம்போஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சுனில் நரைன் 5 சிக்ஸர்கள் உள்பட 18 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து நூர் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரஹானே(20) ரிங்கு சிங்(15) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் தோல்வி

பட மூலாதாரம், Getty Images
சென்னை சேப்பாக்கம் ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக கருதப்பட்ட நிலையில் முதல்முறையாக ஒரு சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே அணி சந்தித்துள்ளது.
அத்துடன், ஐபிஎல் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது.
சிஎஸ்கேவை சிதைத்த சுழற்பந்து வீச்சாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையை கொல்கத்தா அணியின் சுனில் நரைன், மொயீன் அலி, வருண் சக்ரவர்த்தி ஆகிய 3 சுழற்பந்துவீ்ச்சாளர்களும் சிதைத்துவிட்டனர். சிஎஸ்கே அணியில் அஸ்வின், ஜடேஜா, நூர் முகமது ஆகியோர் இருந்த போதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் 44 ரன்கள், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மொயின் அலி, சுனில் நரைன், வருண் ஆகியோர் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இதில் 34 டாட் பந்துகள் அடங்கும். அதாவது 12 ஓவர்களில் ஏறக்குறைய 6 ஓவர்கள் மெய்டன்கள். இதில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது ஓவரில் ஒரு பவுண்டரிகூட அடிக்க விடவில்லை. ஐபிஎல் தொடரில் 16-வது முறையாக சுனில் நரைன் 4 ஓவர்களை முழுமையாக வீசி எதிரணியை ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியுள்ளார்.
சேப்பாக்கத்தில் குறைந்த ஸ்கோர்

பட மூலாதாரம், Getty Images
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி எடுத்து மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும். ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை சிஎஸ்கே அணி இதைவிட மோசமாக ஸ்கோர்களை எடுத்துள்ளது.
அந்த வகையில் 103 ரன்கள் என்பது 3வது மோசமான ஸ்கோராகும். இதற்கு முன் 2013ல் மும்பையிடம் 79 ரன்களிலும், 2022ல் மும்பையிடம் 97 ரன்களுக்கும் சிஎஸ்கே ஆல்அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது.
சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக ஹாட்ரிக் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது, முதல்முறையாகவும் இந்த சீசனிலும் தொடர்ந்து 5வது தோல்வியையும் சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணியிடம் 3வது முறையாக சிஎஸ்கே தோற்றுள்ளது. கொல்கத்தா அணியும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக 2வது அதிகமான பந்துகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிராக 60 பந்துகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதுதான் ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியாகும். இதற்கு முன் மும்பைக்கு எதிராக 2020ம் ஆண்டில் 46 பந்துகள் மீதமிருக்கையில் சிஎஸ்கே தோற்றிருந்தது.
3வது முறை 10 ஓவர்களில் சேஸிங்
ஐபிஎல் வரலாற்றில் எதிரணி அடித்த ஸ்கோரை 10 ஓவர்களுக்குள் சேஸிங் செய்த ஆட்டங்கள் 3வதுமுறையாக நடந்துள்ளன. இதற்கு முன் 2021ம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 90 ரன்களை 8.2 ஓவர்களில் மும்பை அணி சேஸ் செய்தது. 2024 சீசனில் லக்னெள அணியின் 165 ரன்களை சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் சேஸ் செய்தது. இப்போது சிஎஸ்கேயின் 103 ரன்களை 10.1 ஓவர்களில் கொல்கத்தா சேஸ் செய்துள்ளது.
கொல்கத்தாவுக்கு சாதகமான மைதானம்

பட மூலாதாரம், Getty Images
சென்னை சேப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கருப்பு மண் கொண்ட மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மண் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் தங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது கிடைக்கும் சவுகரியத்தை கொல்கத்தா அணி நேற்று பெற்றது.
கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வைபவ் அரோரா, ஹர்சித் ராணா இருவரும் மிகத்துல்லியமான லென்த்தில் பந்துவீசி சிஎஸ்கே பேட்டர்களை நடுங்க வைத்தனர்.
சிவப்பு மண் ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டரை நோக்கி வரும் அப்போது அடித்து ஆட வசதியாக இருக்கும். ஆனால், கருப்பு மண் அதாவது களிமண் ஆடுகளத்தில் பந்து சற்று நின்று பேட்டரை நோக்கி மெதுவாக வரும். இத்தகைய சூழலில் பேட்டர் ஆங்கர் ரோல் எடுத்து, சற்று நிதானமாக ஷாட்களை அடிக்க வேண்டும். பந்து வரும்வேகத்தைவிட பேட்டை சுழற்றினால் விக்கெட்டை இழக்க நேரிடும்.
இந்த மைதானத்தின் தன்மையைத்தான் கொல்கத்தா கேப்டன் ரஹானே தெரிந்து கொண்டு அதுகுறித்து எதுவும் பேசவில்லை மைதானத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நோக்கில் 2வது ஓவரிலேயே மொயின் அலியை இடதுகை பேட்டர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினார்.
அதற்கு ஏற்றார்போல் தடுமாறிய கான்வே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் ரச்சின் ரவீந்திரா காலியானார். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
அஸ்வின், ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணிக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் மீது ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் போட்டியைத் தவிர்த்து அதன்பின் 5 போட்டிகளாக அஸ்வின் தனது பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த ஆட்டத்தி்கூடஅஸ்வின் ஓவருக்கு 10 ரன்ரேட்டில் வீசினார். 2012 முதல் 2015வரை அஸ்வின், ஜடேஜாவும் சேர்ந்து தலா 55 விக்கெட்டுகளை சிஎஸ்கே அணிக்காக எடுத்தனர். சேப்பாக்கத்தை சிஎஸ்கேவின் கோட்டையாக வைத்திருந்தனர். இப்போது இருவரும் மீண்டும் இணைந்தபோதிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்த சீசனில் அஸ்வின் இதுவரை ஓவருக்கு 10 ரன்கள் சராசரியாக கொடுத்திருந்தநிலையில் ஜடேஜா 8 ரன்களை வழங்கியுள்ளார். இதுவரை அஸ்வின் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்ட அஸ்வின் இந்த சீசனில் பவர் பிளே ஓவர்களில் 30 பந்துகள் வீசி 78 ரன்களை வாரி வழங்கியுள்ளார். 2012 முதல் 2015 வரை அஸ்வினின் பவர்ப்ளே எக்னாமி ரேட் 6.25 ஆக இருந்தநிலையில் தற்போது 15.60 அதிகரித்துள்ளது.
"யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை"
தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " சில போட்டிகள் நாங்கள் விரும்பியபடிஇல்லை. அணியின் தோல்வியை ஆழமாக ஆலோசிக்க, ஆய்வு செய்ய வேண்டும். சவால்கள் இருக்கின்றன அதை சமாளிப்பது அவசியம். இன்று எதிர்பார்த்த ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை.
பந்து களத்தில் நின்று வந்தது, 2வது இன்னிங்ஸிலும் அப்படித்தான் இருந்தது. பார்ட்னர்ஷிப்பும் எங்களுக்கு அமையவில்லை. எங்கள் ஆட்டத்தை மற்ற அணியுடன் ஒப்பிட்டு பார்க்கவிரும்பவில்லை. எங்களிடமும் தரமான தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால், அடிக்கடி ஸ்கோர் போர்டைப் பார்த்து வெறுப்படையக்கூடாது.
சில பவுண்டரிகள் அடித்தால் ஸ்கோர் நகர்ந்துவிடும். நடுப்பகுதியில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். இந்த தொய்வு ஒருபோதும் வரக்கூடாது" எனத் தெரிவித்தார்.
நடப்பு சீசனில் வேறெந்த அணியும் செய்யாததைச் செய்த சிஎஸ்கே
சிஎஸ்கே அணி படுதோல்வியைச் சந்தித்தாலும், ஒரு ஆறுதலான அம்சம் நடந்துள்ளது. அதுஎன்னவென்றால், இந்த ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் ஒரு அணியால் 30,500 மரங்களை நடுவதற்கு உதவி செய்ததில்.
சிஎஸ்கே அணி நேற்று 61 டாட் பந்துகளை சந்தித்து, ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரங்கள் வீதம் 30,500 மரங்களை நடுவதற்கு உதவி செய்தது. இந்த சீசனில் இதுவரை எந்த அணியும் இதுபோல் டாட்பந்துகளை ஒரு போட்டியில் விட்டதில்லை.
இன்றைய ஆட்டங்கள்
முதல் ஆட்டம்
- லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
- இடம்: லக்னெள
- நேரம்: மாலை 3.30
இரண்டாவது ஆட்டம்
- சன்ரைசர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம்: ஹைதராபாத்
- நேரம்: இரவு 7.30
சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்
- சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்
- நாள் - ஏப்ரல் 14
- நேரம்- இரவு 7.30
- இடம் – லக்னெள
மும்பையின் அடுத்த ஆட்டம்
- மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்
- நாள் - ஏப்ரல் 13
- நேரம்- இரவு 7.30 மணி
- இடம் – டெல்லி
ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்
ஆர்சிபி vs ராஜஸ்தான் ராயல்ஸ்
நாள் - ஏப்ரல் 13
இடம் – ஜெய்பூர்
நேரம்- மாலை 3.30 மணி

பட மூலாதாரம், Getty Images
ஆரஞ்சு தொப்பி யாருக்கு?
- நிகோலஸ் பூரன்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்)-288 ரன்கள்(5போட்டிகள்)
- சாய் சுதர்சன்(குஜராத் டைட்டன்ஸ்)-273 ரன்கள்(5 போட்டிகள்)
- மிட்ஷெல் மார்ஷ்(லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்) 265 ரன்கள்(5 போட்டிகள்)
நீலத் தொப்பி யாருக்கு?
- நூர் அகமது(சிஎஸ்கே)12 விக்கெட்டுகள்(6 போட்டிகள்)
- சாய் கிஷோர்(குஜராத் டைட்டன்ஸ்) 10 விக்கெட்டுகள்(5 போட்டிகள்)
- முகமது சிராஜ்(குஜராத் டைட்டன்ஸ்) 10 விக்கெட்டுகள்(5 போட்டிகள்)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












