குழந்தை பிறந்த பிறகு பெண்களுக்கு பாலியல் ஆர்வம் குறையுமா? நிபுணர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Holly Hagan-Blyth
- எழுதியவர், எமிலி ஹோல்ட்
- பதவி, பிபிசி
பலரின் உறவுகளிலும் உடலுறவு என்பது முக்கியமான அங்கமாக உள்ளது. ஆனால் சிலருக்கு பிரசவம், குழந்தை பிறப்பு போன்ற வாழ்வை மாற்றியமைக்கும் சம்பவங்களுக்குப் பிறகு அந்த உணர்வு குறைவது இயல்பானது என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (என்.ஹச்.எஸ்) தெரிவிக்கிறது.
தொலைக்காட்சி நட்சத்திரமும் உடற்பயிற்சி பயிற்சியாளருமான ஹாலி ஹேகன்-ப்ளித் தனக்கு மகன் பிறந்த பிறகு ஏற்பட்ட இத்தகைய உணர்வைப் பகிர்ந்து கொண்டார்.
"நான் என் கணவரிடம், 'கவனியுங்கள், நீங்கள் இனி என்னை தொடவில்லை என்றாலும் எனக்கு கவலையில்லை' என்று கூற வேண்டும் என இருந்தது. ஏனென்றால் அந்த நேரத்தில் அப்படித்தான் உணர்ந்தேன்," என சிபிபீஸ் பேரண்டிங் ஹெல்ப்லைன் (CBeebies Parenting Helpline.) நிகழ்ச்சியை இணைந்து வழங்கியபோது தெரிவித்தார்.
தாய்மார்கள் பெரும்பாலும் அவர்களின் பிரசவத்திற்குப் பிந்தையை ஆறு வார பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் கணவருடன் நெருக்கமாக வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் என்கிறார் உடலுறவு மற்றும் உறவுகள் சிகிச்சையாளரான ரேச்சல் கோல்ட்.
"இது மீண்டும் உடலுறவு கொள்வதற்கான நேரம் என அவர்களை தவறாக நம்ப வைக்கிறது, ஆனால் அது உண்மையல்ல." என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
'அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம்'
2023-இல் தனது மகன் ஆல்பா-ஜேக்ஸ் பிறந்த பிறகு உடலுறவு கொள்வதற்கான ஆர்வம் குறைவிட்டதாகவும், எந்த விதமான நெருக்கத்தையும் தவிர்க்க தொடங்கியதாகவும் தெரிவிக்கிறார் ஹாலி.
"எப்போதெல்லாம் நான் அவருக்கு (ஹாலியன் கணவர் ஜேகப்) தொடுதல் அல்லது அரவணைத்தல் மூலம் அன்பை வெளிப்படுத்த நினைப்பேனோ அப்போதெல்லாம் இது உடலுறவில் சென்று முடியும் என்கிற உணர்வு ஏற்படுகிறது. எனக்கு அது தேவையில்லை.''
''நான் அவருக்காக எதையாவது செய்யும்போது என்னிடம் எதிர்மறையான உணர்வு ஏற்படத் தொடங்கிவிட்டது." என்கிறார் ஹாலி.
கணவரிடம் வெளிப்படையாக இருந்தது தனக்கு உதவியதாகக் கூறுகிறார் ஹாலி.
"'நான் உங்களை அரவணைக்கும்போது அல்லது தொடும்போது அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என நினைக்கிறேன். ஏனென்றால் எனக்கு அதைச் செய்ய வேண்டாம் என்கிற உணர்வைத் தருகிறது.' என என் கணவனிடம் கூறினேன். இதை நான் கூறியவுடன் எனக்கு இருந்த அழுத்தம் குறைந்து சிறப்பாக உணர்ந்தேன்'' என்றார் ஹாலி.
ஹாலிக்கு தன் மீது ஈர்ப்பு இல்லை என அவரது கணவர் ஜேகப் வருத்தப்பட்டார்.
இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ளும் தம்பதிகள் வெளிப்படையாக இருக்கலாம் எனக் கூறும் ஹாலி, "நான் அவரிடம், 'இது உங்களால் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். நான் இந்தச் சமயத்தில் இவ்வாறு உணர்கிறேன், ஆனால் உங்களை நான் வித்தியாசமாக பார்க்கவில்லை.'" எனக் கூறியதாக தெரிவிக்கிறார்.
"எனக்கு தற்போது உடலுறவு கொள்ளும் உணர்வு இல்லை, அடுத்த சில மாதங்களுக்கும் இப்படியே இருக்கலாம். இது நான் சந்திக்கும் பிரச்னை, இதை நான் சரி செய்ய வேண்டும். குழந்தை பிறந்த பிறகு உறவு மாறும் எனக் கூறுவார்கள். ஆனால் நீங்கள் அதைச் சந்திக்கிறபோதுதான் எவ்வளவு மாறுகிறது என்பதை உணர்வீர்கள்."

பட மூலாதாரம், Getty Images
காரணம் என்ன?
குழந்தை பிறந்த பிறகு உடலுறவு கொள்ள பெண்கள் விரும்பாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக தெரிவிக்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான மருத்துவர் ஜெனிஃபர் லிங்கன்.
"குணமடைவது பல கட்டங்களாக நடைபெறுகிறது. கருப்பை பிரசவத்திற்கு முந்தைய அளவை அடைய ஆறு வாரங்கள் எடுத்துக் கொள்ளும். பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயங்களும் அப்போது தான் ஆறி வரும்." என்றார்.
பெண்களுக்கு பெரிய ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படும், இவை அவர்களின் உடலுறவு கொள்ளும் உணர்வைப் பாதிக்கும்.
"எஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்டிரோன் அளவும் கணிசமாக குறையும். குறைவான எஸ்ட்ரோஜன் அளவு என்பது பிறப்புறுப்பு வறண்டுபோவது போன்ற உடலியல் மாற்றங்களை ஏற்படுத்தும், இது உடலுறவை மேலும் வலியானதாக்கும்."
"பலரும் மெனோபாஸ் மட்டுமே பெண்கள் ஹார்மோன் அளவில் மாற்றங்களைச் சந்திக்கும் சமயம் என நினைக்கின்றானர், ஆனால் குழந்தை பிறப்புக்குப் பிறகான சில நாட்களும் அவ்வாறானதாகவே இருக்கும்." என்று தெரிவித்தார் ஜெனிஃபர் லிங்கன்.

பட மூலாதாரம், Holly Hagan-Blyth
பெண்களுக்கு மட்டுமல்ல
இது பெண்களை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. சிபிபீஸ் நேயரான ஃப்ராங்கி மூன்று மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றார், அவரின் ஆண் துணை உடலுறவை தவிர்ப்பதாகத் தெரிவித்தார்.
"நான் தற்போது என் உடலை வெறுக்கிறேன். எனக்கு வேண்டியதெல்லாம் என் துணைவரிடமிருந்து கூடுதல் கவனம் மட்டுமே. ஆனால் அவருக்கு என்னிடம் உடலுறவு கொள்ள விருப்பமில்லை. நான் மாட்டிக் கொண்டதைப் போல உணர்கிறேன்." என்கிறார் அவர்.
சில நேரங்களின் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாக சொல்வதில் ஆண்களும் சிரமப்படுவதாகக் கூறுகிறார் ரேச்சல்.
"தந்தையாவது ஆண்களிடம் அனைத்து விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தும்… உடலுறவு கொள்ள வேண்டாம் என்கிற அவரின் முடிவில் மிகப்பெரிய காரணியாக இருக்கலாம்." என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த உணர்வுகளைக் கையாளுவதை ஆண்கள் பெரும்பாலும் முக்கியமாக நினைப்பது இல்லை என்கிறார் பிரசவ தொண்டு நிறுவனமான என்சிடியில் பயிற்சியாளராக உள்ள ஃப்ளூர் பார்க்கர்.
"நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை பற்றி உங்கள் துணையிடம் பேசுவது நிஜமாகவே உதவும். என்ன நடக்கிறது அல்லது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அவர்களுக்குத் தெரியும் என அனுமானிக்க வேண்டாம்." என்கிறார் அவர்.
இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஜோடிகள் உதவி பெறலாம் என்கிறார் ஜெனிஃபர்.
"நெருக்கம் இயல்பாகவே திரும்பிவிடும் என உணரும் சில பெற்றோர்கள் உடனடியாக பழகிக் கொள்கின்றனர். ஆனால் பலரும் தீவிர அழுத்தத்தை அனுபவிக்கின்றனர்."
"அது உங்கள் உறவில் வேறுபாடுகளை உருவாக்குகிறது என்றால் தம்பதிகள் ஆலோசனை, பாலியல் சிகிச்சை அல்லது நீடித்த உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் பெறுவதை நான் பரிந்துரைப்பேன்." என்றும் தெரிவித்தார் ஜெனிஃபர்.

பட மூலாதாரம், Getty Images
தம்பதிகளுக்கான குறிப்புகள்
- உடலுறவு கொள்ளும் உணர்வு இழப்பதை இயல்பாக்க வேண்டும். இது மிகவும் இயல்பானது, "உங்கள் எண்ணத்தில் மட்டும் இல்லை." என ஏற்றுக்கொள்வது பழி மற்றும் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
- இந்த மாற்றங்களை அனுபவிக்கும் பெண்கள், உங்கள் உடலின் இயற்கையாக குணமாகும் வரை பொறுமையாக இருங்கள்.
- உங்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றி உங்களின் துணைவரிடம் வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள்.
- நெருக்கம் என்பதை தற்காலிகமாக மாற்றியமைத்து உணர்வு ரீதியான தொடர்பு மற்றும் பாலியல் உணர்வில்லாத தொடுதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இணையர்கள் ஒருவருக்கொருவர் சிறப்பாக உதவ முடியும்.
- இது அழுத்தத்தைக் குறைக்க, வீட்டு வேலைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு போன்ற நடைமுறை கடமைகளில் பங்கெடுத்துக் கொள்வது போன்றவற்றை உள்ளடக்கும்.
மருத்துவர் ஜெனிஃபர் லிங்கனால் இந்த அறிவுரை வழங்கப்பட்டது. மேலதிக தகவல்களை என்ஹச்எஸ் இணையதளத்தில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












