பொங்கல் விடுமுறைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வழிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் இப்போதே தங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயில்களில் 120 நாட்கள் முன்பு, டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால், இப்போதே முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.
வரவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான போகி, பொங்கல் பண்டிகைகள் முறையே ஜனவரி 14, ஜனவரி 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. மேலும் ஜனவரி 16, ஜனவரி 17ஆம் தேதியன்று மாட்டுப் பொங்கலும் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு விடுமுறையாக வருகிறது. சில நிறுவனங்கள், பள்ளிகளில் ஜனவரி 13 (சனிக்கிழமை) சேர்த்தே விடுமுறை வழங்கப்படும். எனவே ஆறு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
அதன்படி, ஜனவரி 13ஆம் தேதி (சனிக்கிழமை) பயணிக்க செப்டம்பர் 15ஆம் தேதியிலும், ஜனவரி 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரயிலில் பயணிக்க செப்டம்பர் 16ஆம் தேதியும், ஜனவரி 15ஆம் தேதி (திங்கள்கிழமை) பயணிக்க செப்டம்பர் 17ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும். இந்திய ரயில்வேயின் IRCTC இணையதளத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

IRCTC தளத்தில் முன்பதிவு செய்வது எப்படி?
www.irctc.co.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்ய அந்தத் தளத்தில் கணக்கு ஒன்றைக் கட்டாயம் உருவாக்கியிருக்க வேண்டும்.
ஒரு user id மற்றும் password புதிதாகக் கொண்டு இந்த கணக்கை எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தியே IRCTC இணையதளத்தின் உள்ளே நுழைய முடியும்.
மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்கான பணத்தைச் செலுத்த வங்கிக் கணக்கு அல்லது ஜிபே கணக்கு தகவல்களையும் கொடுக்க வேண்டும்.
முதலில், எந்த ரயில் நிலையத்தில் இருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற தகவல்களைப் பதிவிட வேண்டும். அதன் பின்னர் எந்த தேதியில் பயணம் செய்ய விரும்புகிறோம் என்ற தகவலைப் பதிவு செய்ய வேண்டும்.

பட மூலாதாரம், IRCTC

பட மூலாதாரம், Getty Images
எந்த கோட்டாவை தேர்ந்தெடுக்க வேண்டும்?
அதன் பின், எந்த கோட்டாவில் பயணம் செய்கிறோம் என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜெனரல் கோட்டா, பெண்கள் கோட்டா, மூத்த குடிமக்கள் என மூன்று கோட்டாக்கள் உள்ளன.
பெண்கள் தனியாக பயணம் செய்யும்போது, அல்லது தேவைப்படும் நேரத்தில் பெண்கள் கோட்டாவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மூத்த குடிமக்களுக்கான கோட்டாவை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு வசதியாக கீழ் பெர்த் வழங்கப்படும். இந்த தேவைகள் இல்லாதவர்கள் ஜெனரல் கோட்டாவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
அதன் பிறகு 1A, 2A, 3A என்ற ஏசி பெட்டிகளில் ஏதேனும் ஒன்றில் செல்ல விரும்புகிறோமோ அல்லது ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டியில் செல்ல விரும்புகிறோமா என்பதைத் தேர்வு செய்யவேண்டும்.
இந்தத் தகவல்களைப் பதிவிட்ட பிறகு, இதற்கு ஏற்றவாறு எந்தெந்த ரயில்களில் இடம் இருக்கிறதோ அந்த ரயில்களின் பட்டியல் திரையில் தோன்றும்.
அவற்றில் விருப்பமான ரயிலில் டிக்கெட்டுகளை தேர்வு செய்யலாம். அதற்குரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பிறகு, டிக்கெட் முன்பதிவு உறுதி செய்யப்படும்.
AskDisha 2.0 மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

பட மூலாதாரம், IRCTC
IRCTC இணையதளத்தில் மற்றொரு வழியில் இன்னும் எளிதாக வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இணையதளத்தைத் திறக்கும்போதே, வலதுபுறத்தில் கீழே, நீல நிற புடவை அணிந்த ஒரு பெண்ணின் உருவம் கைகூப்பி அழைக்கும் வட்டமான லோகோ ஒன்று இருக்கும்.
அதைச் சுற்றி, AskDISHA 2.0, book train ticket என்று எழுதப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்தால், தகவல்களைப் பதிவிடுவதற்கான பெட்டி திரையில் தோன்றும்.
User ID மற்றும் பாஸ்வ்ர்ர்ட் கொடுக்காமலே முதலில் எந்த இடத்திலிருந்து எந்த இடத்துக்குச் செல்கிறோம், எந்த தேதியில் செல்கிறோம் என்ற தகவல்களைப் பதிவிட வேண்டும்.
உடனே சம்பந்தப்பட்ட ரயில்களின் பட்டியலும் அவற்றில் எந்த பெட்டியில் எத்தனை இடங்கள் இருக்கின்றன என்ற தகவல்களும் இருக்கும்.
தேவையான பெட்டியில் டிக்கெட்டை தேர்வு செய்து முடித்தால், தொலைபேசி எண் கேட்கப்படும். அதை பதிவிட்ட உடன், அந்த எண்ணுக்கு வரும் OTPஐ பதிவிட வேண்டும். அதன் பிறகு, user id கேட்கப்படும். அதைப் பதிவிட்ட பிறகு மீண்டும் ஒரு OTP வரும். அதையும் பதிவிட்ட பின், டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது உறுதியாகும்.
இவை அல்லாமல், டிக்கெட் கவுன்டர்களில் நேரடியாகச் சென்று, முன்பதிவு படிவங்கள் பூர்த்தி செய்தும் டிக்கெட் பதிவு செய்யலாம்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் விடுமுறை கிடைப்பதால், ஜனவரி 11ஆம் தேதி, 12ஆம் தேதிகளுக்கான முன்பதிவு தொடங்கிய சில மணிநேரத்திலேயே டிக்கெட்டுகள் மளமளவென காலியாகிவிட்டன.
உதாரணமாக சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லவும், கன்னியாகுமரி செல்லவும், 12ஆம் தேதியில் அனைத்து ரயில்களிலும் வெயிட்டிங் லிஸ்ட் உள்ளது.
வழக்கமாக உள்ள ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவதால், ரயில்வே துறை இன்னும் சில நாட்களில் அதிக மக்கள் பயணம் செய்வதற்காக சிறப்பு ரயில்களை அறிவிக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












