செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் நடந்த மரணம் புதிர்கள் நிறைந்த வழக்கா?

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
செங்கல்பட்டில் உள்ள அரசு சிறார் சிறப்பு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு சிறுவன் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் சம்பவம் பல சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
அந்த சிறுவனின் இறப்பை அடுத்து, அந்த சம்பவத்தை ஆராய்ந்த சமூக நீதித்துறை அதிகாரிகள், இறப்பு குறித்து தயாரிக்கப்பட்ட முதல் அறிக்கை திருத்தப்பட்டதாகவும், சில மேலதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக அறிக்கை புதிதாகத் தயாரிக்கப்பட்டது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பல இடர்பாடுகள் இருந்தாலும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக பிபிசி தமிழிடம் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
தங்களது பாதுகாப்பு கருதி பெயர்கள் வெளியிட வேண்டாம் என கோரி பிபிசி தமிழிடம் சமூக நீதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பேச முன்வந்தனர். சிறாரின் இறப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு குறித்தும் முதல்வர் ஸ்டாலினுடன் ஒரு கூட்டம் நடந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
''2022 டிசம்பர் 31ம் தேதி ஒரு சிறுவன் வலிப்பு வந்து இறந்துவிட்டதாக அவரது தாயாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தாயார் பிரியா சிறுவனின் உடலில் உள்ள காயங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். சிறுவனின் உடற்கூராய்வு அறிக்கையில், உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகப் பதிவாகியுள்ளது. ஆனால் எங்கள் துறையில் முதலில் தயாரித்த அறிக்கையில், சிறுவன் அங்குள்ள அதிகாரிகள் தாக்கியதால் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த அறிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த அறிக்கையில் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன, '' என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சிறுவனின் இறப்பை அடுத்து சமூகநீதி துறையில் பலர் இடமாற்றத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணையில், அதிகாரிகள் தாக்கியது உறுதிசெய்யப்பட்டு, ஆறு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மற்றும் சம்பவ இடத்திலிருந்த மற்றொரு அதிகாரியும் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
''2022 டிசம்பர் 31ம் தேதி சிறுவன் இறந்துள்ளான். ஆனால் அந்த இறப்பு குறித்து எந்த ஆய்வும் இரண்டு வாரங்களுக்கு நடைபெறவில்லை. ஜனவரி 14ம் தேதிதான் ஆய்வு நடந்தது. அந்த முதல் அறிக்கையில், சிறுவன் இறப்புக்கு அங்கிருந்த அதிகாரிகள் தாக்கியதுதான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிக்கையை எங்கள் மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறார் இல்லத்தில் பணிபுரியும் உயரதிகாரிகளைக் காப்பாற்ற இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதேபோல, இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அதிகாரிகள் சிறுவனின் தாயார் பிரியாவை மிரட்டியுள்ளது குறித்தும் தகவல்கள் வெளியிடப்படவில்லை,'' என்றும் ஒரு அதிகாரி சுட்டிக்காட்டினார்.

சிறுவன் இறந்த சம்பவத்தில் எழும் கேள்விகள்
சிறுவனின் இறப்புக்குப் பின் அடுத்தடுத்த சம்பவங்கள் விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதாகக் கருதுகிறார் தன்னார்வலர் ஆசீர்.
சிறுவனின் இறப்புக்கு நீதி கேட்கும் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஆசீர், மர்மங்கள் நிறைந்த வழக்காக இந்த வழக்கு மாறியுள்ளது என்கிறார்.
''சிறுவன் இறந்த பின்னர், அவனுடன் தங்கவைக்கப்பட்டிருந்த மற்ற இரண்டு சிறுவர்களுக்கு ஜாமீன் தரப்பட்டது. அதிலும் குறிப்பாக, சிறார் இல்ல அதிகாரிகளே அந்த இரண்டு சிறுவர்களை ஜாமீனில் எடுக்க உதவியுள்ளனர்.இது விசாரிக்கப்படவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான ஊழியர் ஒருவர் இந்த சம்பவத்திற்குப் பின்னர், செங்கல்பட்டிலிருந்து தஞ்சாவூருக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.சம்பவம் குறித்த சமூக நீதித்துறையின் முதல் அறிக்கை திருத்தப்பட்டது. சிறுவனின் தாயார் பிரியா மூன்று நாட்கள் வேறு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அதிகாரிகள் தன்னை கடத்தி வைத்திருந்ததாகச் சொல்கிறார். அவர் ஏன் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிந்தால்தான் சிறுவனின் மரணத்திற்கான நீதி கிடைக்கும்” என்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறார் இல்லத்தில் இறப்பு நடந்திருந்தால், அப்போது செய்யப்படும் உடற்கூராய்வு பற்றிய வீடியோ மற்றும் ஆய்வு அறிக்கை சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் அளிக்கப்படவேண்டும். ஆனால் இதுவரை பிரியாவிடம் அந்த அறிக்கை கொடுக்கப்படவில்லை.

பிபிசி தமிழிடம் பேசிய பிரியா, ''என்னை பல அதிகாரிகள் மிரட்டினார்கள். கடத்தி வைத்தார்கள். உடற்கூராய்வு அறிக்கையை இன்னும் தரவில்லை. என் குழந்தை அங்கிருந்த சமயத்தில் இல்லத்திலிருந்த பிற குழந்தைகளிடம் அச்சுறுத்தாமல் விசாரிக்க வேண்டும்,'' என்கிறார்.
மேலும், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைக்கு வந்த சமயத்தில், தன்னை கடத்தியாக தான் அடையாளம் காட்டிய அதிகாரி ஒருவரும் அங்கு வந்திருந்தார் என்று குற்றம்சாட்டுகிறார் பிரியா.
''அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை செய்யவந்தபோது, அவர் உடன் வந்தார். இவர்தான் என்னைக் கடத்தினார் என்று சொன்னபிறகுதான் அவரை அங்கிருந்து போக சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் என் பாதுகாப்பு பற்றிய பயம் அதிகரித்து வருகிறது,''என்கிறார் பிரியா.
தன்னார்வலர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், பிரியாவின் குற்றச்சாட்டுகள் குறித்தும் அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசினோம். தனது கவனத்திற்கு இந்த புகார்கள் வரவில்லை என்று கூறிய அவர், சிறுவன் இறந்த சம்பவத்தில் சட்டப்படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்.
சிறுவனின் இறப்பைப் பற்றிய முதல் அறிக்கை திருத்தப்பட்டதா என்று கேட்டபோது, ''நான் விசாரிக்கிறேன். இது பற்றி என் கவனத்திற்கு வரவில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறார் இல்லங்களில் சோதனை செய்து, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். செங்கல்பட்டு சிறார் இல்லத்தில் சிறுவனை தாக்கிய அதிகாரிகளை உடனடியாக கைது செய்துவிட்டோம், பிற நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறோம்,'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












