You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கூலி' நாகார்ஜூனா தோற்றத்திற்கு முன்னோடியான 'ரட்சகன்' உருவானது எப்படி? இயக்குநர் பிரவீன் காந்தி பேட்டி
- எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழுக்காக
அக்கினேனி நாகார்ஜுனா, தன் ரசிகர்களால் ஆசையாக 'கிங்' என்று அழைக்கப்படுபவர். இந்திய சினிமாவில் சில நட்சத்திரங்கள் மட்டுமே இவர் அளவுக்கு திறமை, ஆளுமை, காலவரம்பு இல்லாத ஈர்ப்பு முதலிய குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். தனக்கென ஒரு தனியிடத்தை சம்பாதித்திருக்கும் நாகார்ஜுனா அடுத்த வருடம் வந்தால், நாயகனாகத் திரையுலகில் 40 ஆண்டுகளை நிறைவுசெய்யவிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 1961ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால் 54 ஆண்டுகள் திரையுலகப் பயணத்தில் இருப்பவர்.
ஆக்ஷன், காதல், பக்தி, நகைச்சுவை என தனது பன்முக நடிப்புத் திறமை மூலம் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கைத் தந்ததோடு, பான் இந்தியா நடிகராக தன்னை நிறுவிக்கொண்டவர். அக்கினேனி நாகேஸ்வர ராவ் என்கிற மிகப் பெரிய திரை ஆளுமையின் மகனாக இருந்தாலும் திரையில் தனக்கன ஒரு பாதை வகுத்துக் கொண்டிருக்கிறார். இன்று (ஆகஸ்ட் 29) தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடும் நாகார்ஜுனாவை, சமீபத்தில் வெளியான கூலி படம் மூலம் இன்றைய தமிழக இளைஞர் பட்டாளம் அறிந்துள்ளது.
இளம் நடிகரைப் பார்த்து ரசிப்பதைப் போல நாகார்ஜுனாவின் ஸ்டைல், மாறா இளமை, தோற்றம் ஆகியவற்றை சிலாகித்து சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிப் பகிர்ந்து வருகின்றனர் 2கே கிட்ஸ் என்று அழைக்கப்படும் இன்றைய இளம் தலைமுறை. இப்படித் தலைமுறை கடந்து நிற்கும் நாகார்ஜுனா, நேரடியாகத் தமிழில் நடித்திருக்கும் படங்கள் மொத்தமே 4 தான். 1997ஆம் ஆண்டு, பிரவீன் காந்தி இயக்கத்தில், கேடி குஞ்சுமோன் தயாரிப்பில், சுஷ்மிதா சென் நாயகியாக அறிமுகமான ரட்சகன் திரைப்படம் தான், நாகார்ஜுனாவுக்கு நேரடியாகத் தமிழில் முதல் படம்.
கூலி திரைப்படத்தில் அவரது தோற்றத்தை வடிவமைக்கும்போது, ரட்சகன் படத்தில் இருப்பதைப் போலத்தான் வேண்டும் என்று கேட்டே வடிவமைத்தாராம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கைகளில் நரம்புப் புடைக்க, கோபத்துடன் சண்டை போடும் ரட்சகன் திரைப்பட நாயகன் நாகார்ஜுனாவைப் பற்றி, அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம்.
1996-97ல், தமிழில் விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார் ஆகியோர் ஆக்ஷன் ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். அந்தச் சூழலில் நாகார்ஜுனாவை தேர்வு செய்தது எப்படி?
வழக்கமாக நாயகன் யார் என்பதை இறுதி செய்த பிறகே ஒரு படத்தின் வேலைகள் தொடங்கும். ரட்சகனைப் பொருத்தவரை, இப்படி ஒரு படம் இறுதியானதே, சுஷ்மிதா சென்னை நாயகியாக இறுதி செய்த பிறகுதான். முதலில் தயாரிப்பாளரிடம் கதை சொல்லி, அவர் சம்மதித்த பிறகு பல நாயகர்களிடம் கதையைச் சொன்னேன். பிரபுதேவா, அரவிந்த்சுவாமி, மோகன்லால் என பலருக்கு கதை சொன்னேன். ஆனால் எதுவும் இறுதியாகாமல் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே இருந்தது. அப்போது சுஷ்மிதா சென் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்.
அவருக்கு சென்னையில் ஒரு வரவேற்பு, பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவரை ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று சந்தித்தோம். அவரிடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என்றுச் சொல்லி திரைக்கதையைக் கொடுத்தோம். நாயகியை மையமாக வைத்து ஒரு படம் என்பதால் அவர் உடனே சம்மதித்தார். சரி, இப்போது இவருக்கு ஏற்ற நாயகனைத் தேட வேண்டும் என்று நினைத்தேன்.
சுஷ்மிதா சென் நல்ல உயரம். அந்த உயரத்தைத் தாண்டி ஒரு நாயகனைத் தேடினேன். சத்யராஜ் சரியாக இருப்பார். ஆனால் காதல் காட்சிகளை மனதில் வைத்து வேறு நாயகனை யோசிக்கும்போதுதான் நாகார்ஜுனா என்று முடிவு செய்தேன். எனவே, சுஷ்மிதாவின் உயரம் இதற்கு ஒரு முக்கியக் காரணம். அவரது சிவா திரைப்படத்தை பல முறை பார்த்து ரசித்தவன் நான்.
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க சரத்குமாரும் ஒரு முக்கியக் காரணம். அவரை வைத்து மதர் இண்டியா என்கிற படத்தை இயக்க தயார் செய்து கொண்டிருந்தேன். ஏனென்றால் அதன் பொருட்செலவு அதிகம். எனது திரைக்கதையைப் பார்த்து பிடித்துப் போனதால், தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் சரத்குமார். அப்படித்தான் ரட்சகன் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
உங்களுக்கு முன்னால் தமிழில் யாரும் அவரை நடிக்க வைக்க முயற்சிக்கவில்லையா?
இதயத்தை திருடாதே திரைப்படத்தை முதலில் மணிரத்னம், தமிழில் இயக்குவதாகத் தான் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் நாகார்ஜுனாதான், தெலுங்கில் இப்படியான படம் தனக்கு அமையவில்லை என்று அவரிடம் கோரிக்கை வைத்து, தெலுங்கில் படத்தை நேரடியாக எடுத்திருக்கிறார்கள்.
கூலியில் நடிக்க 7 முறை கதை கேட்டதாக நாகார்ஜுனா கூறியிருந்தார், உங்களிடம் எவ்வளவு முறை கதை கேட்டார்?
நான் முதல் முறை கதை சொன்னவுடனேயே சம்மதித்துவிட்டார். ஆக்ஷன் காட்சிகளில் அதிகம் ஈர்க்கப்பட்டார். எனக்குத் தெரிந்து, கூலியில் வில்லன் கதாபாத்திரம் என்பதால் பல முறை கதை கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் பணத்துக்காக நடிக்கும் நடிகர் அல்ல. நல்ல கதையைச் சொன்னால் உடனே சம்மதிக்கக் கூடியவர் .
அதே போல, கதையை கேட்ட பிறகு அதன் பின் அது குறித்த எந்த கேள்வியும், சந்தேகமும் அவருக்கு இருக்காது. படப்பிடிப்புக்கு வருவார், நடித்துக் கொடுப்பார், சென்று விடுவார். அவ்வளவே. எந்தக் கேள்வியும் கேட்காமல் முழுதாக என்னை நம்பி நடித்தார்.
ரட்சகன் திரைப்படத்தில் அவருக்கிருந்த அதே தோற்றம் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கியதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். நீங்கள் அவரது தோற்றம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அந்த காலகட்டத்தில் எப்படி முடிவு செய்தீர்கள்?
கதைப்படி ஒரு மிகப்பெரிய கார் தொழிற்சாலை உரிமையாளரின் வாரிசு சுஷ்மிதா சென். பணக்காரர்களின் வாழ்க்கையைக் காட்டும் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடம் எடுபடுவதில்லை. எனவே நாயகிக்கு நேரெதிராக, நாயகன் நடுத்தர வர்க்கமோ, ஏழையாகவோ இருக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்கள் பார்க்கும்போது காதல் காட்சிகளும் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி ஒரு நடுத்தர வர்க்க நாயகனிடம் நாயகி எப்படி ஈர்க்கப்படுகிறாள்?
அவள் துரத்தி துரத்தி காதலிக்கும் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்கும்போது, நாயகன் நல்லவனாக, கோபக்காரனாக, முரடனாக இருக்க வேண்டும். நாயகி பார்த்தவுடனே ஈர்ப்பு ஏற்படும்படி ஒரு முரட்டுத்தனமான ஆக்ஷன் காட்சியில் தான் அவள் முன்னால் தோன்ற வேண்டும். தோற்றத்தில் தனித்தன்மை வேண்டும். ஒல்லியாக, உயரமாக, காதில் கடுக்கன், கலைந்த தலைமுடி என அப்போதைக்கு தமிழ்நாட்டில் அப்படியொரு தோற்றம் தனித்தன்மையுடன் இருந்தது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் உருவாக்கினேன்.
நாகார்ஜுனா அப்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு இவ்வளவு தலைமுடி கிடையாது. ரட்சகனில் தலைமுடி இப்படி இருக்க வேண்டும் என்று நான் கேட்டதால், தான் நடித்துக் கொண்டிருந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரட்சகன் ஆரம்பிக்கலாம் என்று கூறினார். இதனால் என் படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப் போனது. அதே நேரத்தில் தெலுங்கில் ஒரு படத்தில் அவர் அதிக முடியுடன் நடிக்க வேண்டியிருந்தது. (அன்னமய்யா) அதற்காக முடி வளர்க்க ஆரம்பித்தார். அது ரட்சகனுக்கும் சரியாக இருக்கும் என்று நினைத்து நானும் காத்திருந்தேன்.
அப்போது ஃபிலிம் பயன்படுத்தி படப்பிடிப்புகள் நடந்தன. நிறைய டேக் வாங்கினால் பொருட்செலவு அதிகமாகும். இந்த நிலையில், தமிழில் வசனங்களைப் பேசுவதில் அவருக்கு சவால்கள் இருந்தனவா?
அவருக்கு அடிப்படையாகத் தமிழ் தெரியும். கொஞ்சம் பேசவும் செய்வார். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் தான். கதைப்படி அவர் கோபக்கார இளைஞர் என்பதால் நீளமான வசனங்கள் எதுவும் இருக்காது. எனவே அதை மனப்பாடம் செய்து நடிப்பதில் அவர் கஷ்டப்படவில்லை. சில காட்சிகளை, தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்து தனித்தனியாக எடுத்தேன்.
நடிகர் சுரேஷ், நாகார்ஜுனாவுக்கு பின்னணி பேசினார். நாகார்ஜுனா முதலில் தானே பேசுவதாகச் சொன்னார். சிவா திரைப்படத்தின் தமிழ் ரீமெக்கான உதயம் திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு நடிகர் சுரேஷ் பேசியிருந்தது நல்ல பொருத்தமாக இருந்தது. அதுவே சரியாக இருக்கும் என்று நான் சொல்லும்போது, உங்கள் விருப்பம் என்று கூறிவிட்டார் நாகார்ஜுனா.
கோபம் வந்து நரம்பு புடைக்கும் காட்சிகளை எப்படி யோசித்தீர்கள்? நாகார்ஜுனா என்னச் சொன்னார்?
கோபக்காரன் என்பதை எப்படிக் காட்ட வேண்டும் என்று யோசிக்கும்போதுதான் அந்த யோசனைக் கிடைத்தது. அவரிடம் நான் கதை சொல்லும்போதே அந்த விஷயத்தை சேர்த்து தான் சொன்னேன். ஆனால் ஒரு ஹீரோவை சம்மதிக்க வைக்க, இயக்குநர்கள் இப்படித்தான் மிகையாகக் கூறுவார்கள் என்றுதான் நாகார்ஜுனா முதலில் நினைத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் காட்சியை சாத்தியப்படுவது கடினம். அப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் பயன்பாடு அதிகம் கிடையாது. அதற்கான செலவும் அதிகம்.
ஆனால் நரம்புப் புடைக்கும் காட்சியை கிராபிக்ஸில் தான் உருவாக்க வேண்டும் என்பதால் பிரசாத் ஸ்டூடியோவுக்குச் சென்றேன். அங்கிருந்து ஒரு குழு என்னுடன் படப்பிடிப்பு முழுக்க இருந்தார்கள். கிராஃபிக்ஸ் காட்சி யோசித்தால் அவர்களிடம் கலந்தாலோசித்தே காட்சி அமைப்பேன். அன்றைய காலகட்டத்தில் கிராஃபிக்ஸுக்காக அதிகமாக செலவு செய்த படம் ரட்சகன் தான். நாகார்ஜுனா திரையில் அந்தக் காட்சிகளைப் பார்த்து வெகுவாகப் பாராட்டினார்.
அந்த நேரத்தில் நாகார்ஜுனா தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தாலும் கூட அவரை வைத்து இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் யாரும் படம் தயாரிக்கவில்லை. தமிழில் எப்படி சாத்தியமானது?
தயாரிப்பாளர் குஞ்சுமோன் தான் அதற்குக் காரணம். நாகார்ஜுனா, கதையைக் கேட்டு சம்மதித்த பிறகு வேறு எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. தயாரிப்பாளரையும், என்னையும் நம்பினார். ஏனென்றால் சூரியன், ஜெண்டில்மேன் காதலன் என தயாரிப்பாளரின் முந்தையப் படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டவை. அவர் என்னிடம் கூறியது, இந்தப் படம் 15 கோடி பட்ஜெட் என்று நான் அறிவிக்கப் போகிறேன். அதற்கேற்ற பிரம்மாண்டம் திரையில் வர வேண்டும் என்று கூறிவிட்டார். ரட்சகன் என்று சொன்னவுடன் பலருக்கும் அதன் பிரம்மாண்டம் தான் இன்றும் நினைவில் வரும். அதற்குக் காரணம் தயாரிப்பாளர் குஞ்சுமோன்தான்.
சண்டைக் காட்சிகளில் பல ஆபத்துகளை சந்தித்தது போலத் தெரிகிறது. நாகார்ஜுனாவின் ஆக்ஷன் எப்படி?
பெரும்பாலான சண்டைக் காட்சிகளில் அவரே நடித்தார். நெடுஞ்சாலையில்,வேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பெரிய லாரிக்குக் கீழே பைக் ஒரு பக்கம் சென்று மறு பக்கம் வர வேண்டும். அவ்வளவு ஆபத்தான காட்சியில் அவரே நடித்தார். இந்த விஷயம் கேள்விப்பட்டு அவரது மனைவி நடிகை அமலா, என்னையும், அவரையும் திட்டினார். ஏனென்றால் அவ்வளவு ஆபத்தான ஷாட் அது. நாகார்ஜுனாவிடம், இயக்குநர் கேட்பதை செய்து தர வேண்டும் என்கிற வெறி இருந்தது. எனவே அவரே அந்த ஆபத்தை எதிர்கொண்டார்.
அதன் பிறகு நாகார்ஜுனாவுடன் ஏன் இணையவில்லை?
ரட்சகன் முடிந்தவுடன் உடனே அவரை வைத்து படம் இயக்கியிருக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் இடைவேளை விழுந்துவிட்டது. நானும் அப்படியே விட்டுவிட்டேன். மேலும் ரட்சகன் மிகப் பிரம்மாண்டமான படமாக எடுக்கப்பட்டது. அதற்கு பிறகு அப்படியான பிரம்மாண்டமான படங்களில் மட்டும் தான் நாகார்ஜுனா நடிப்பார் என்பது போன்ற பிம்பம் உருவாகிவிட்டது. அதனாலதான் பலரும் அவரை அணுகவே தயங்கினார்கள். எனக்கும் கூட அந்த பிரம்மாண்டமே உடனடியாக அடுத்த தயாரிப்பாளர் வருவதை தடுக்கும் விஷயமாக இருந்தது.
ஆனால் நான் முதலில் எழுதிய மதர் இண்டியா திரைக்கதையை மீண்டும் கையிலெடுத்திருக்கிறேன். அதற்கு ரட்சகனை விட பல மடங்கு பட்ஜெட் தேவைப்படும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறேன். நாகார்ஜுனாவை மீண்டும் தமிழ் மக்களிடம் பிரபலமாக்கிய லோகேஷ் கனகராஜை பாராட்ட வேண்டும். நன்றி சொல்ல வேண்டும். இந்தச் சூழலில் நானும், அவரும் இணைந்து ரட்சகன் 2 என்று அறிவித்தால் அதற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்று நம்புகிறேன். இந்த தருணத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு