அகல் தக்: பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு மத தண்டனை வழங்கியவர்கள் யார்? - எதற்காக தண்டனை?

பஞ்சாப்பின் முன்னாள் துணை முதலமைச்சரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதலுக்கு அகல் தக் சாஹிப் சீக்கிய மதக்குழு, மத தண்டனை வழங்கியது.
இந்த தண்டனையை அனுபவிக்கும்போதுதான் அவர் மீது துப்பாக்கிச்சூடு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அகல் தக் என்பது சீக்கியர்களின் உயர் அமைப்பாகும். தவறுகள் செய்யும் சீக்கியர்களுக்கு சம்மன் அனுப்பவும், அவர்களுக்கு மத தண்டனை வழங்கவும் இந்த அமைப்புக்கு அதிகாரம் உள்ளது.
சீக்கிய மரபுகளின்படி, சீக்கியர் ஒருவர் சீக்கிய மத உணர்வுகள் அல்லது சீக்கியர்களின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டால் அவருக்கு மத தண்டனையை அகல் தக் வழங்கலாம்.
சீக்கிய பிரதிநிதிகள் மற்றும் ஐந்து தக்-கின் தலைவர்கள்( சீக்கிய புனித கோயில்) கூட்டம் டிசம்பர் 2 அன்று நடைபெற்றது.
சுக்பீர் பாதல் மற்றும் 2007 முதல் 2017 வரை சிரோமணி அகாலி தள ஆட்சியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான அமைச்சர்களுக்கு மத தண்டனை வழங்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
2015-ஆம் ஆண்டில் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் (எஸ்ஜிபிசி) நிர்வாக உறுப்பினராக இருந்தவர்கள் மற்றும் சில முன்னாள் மத குருக்களுக்கும் இந்த அமைப்பு சம்மன் அனுப்பி இருந்தது.
- விகாஷ் யாதவிற்கு முன்பு இவர்கள் 'ரா' ஏஜென்டுகளாக வெளிநாடுகளில் செயல்பட்டார்களா?
- திருவண்ணாமலை நிலச்சரிவு: மகளின் உடலைக் காண முடியாது கதறி அழுத தாய், பறிபோன சேமிப்புகள் - பிபிசி கள ஆய்வு
- பொற்கோவிலில் காவலராக நின்ற பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் - ஏன்?
- கனடாவில் சீக்கியர் மத்தியில் 'காலிஸ்தான்' ஆதரவு எப்படி உள்ளது? பிபிசி கள ஆய்வு
- நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் உள்ளதாக கனடா காவல்துறை தகவல்

ஏன் தண்டனை?
சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி அரசு 2007 முதல் 2017 வரை பஞ்சாபில் ஆட்சி செய்தது.
மறைந்த பிரகாஷ் சிங் பாதல் முதல்வராகவும், சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராகவும் இருந்தனர்.
ஐந்து முறை பஞ்சாபின் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங்.
அகாலி தளம் தலைமை சீக்கிய கொள்கைகளுக்கும், சீக்கிய சமூகத்தின் உணர்வுகளுக்கும் எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டில், பஞ்சாபின் பார்கரியில் குரு கிரந்த் சாஹிப்பில் மத அவமதிப்பு நடந்தது.
குரு கிரந்த் சாஹிப் நித்திய குருவாகவும் வழிகாட்டும் ஒளியாகவும் கருதப்படுகிறார்.
அவமதிப்பு சம்பவங்களுக்கு எதிரான போராட்டங்களின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Akali Dal
தேரா சச்சா சவுதாவின் தலைவர் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் இந்த அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அவமதிப்பு சம்பந்தமான வழக்கின் விசாரணை, கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
2007-ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் குரு கோபிந்த் சிங்கை போல செய்கை செய்தார் ராம் ரஹீம்.
இந்த சம்பவம் தேரா ஆதரவாளர்கள் மற்றும் சீக்கியர்கள் இடையே மோதல்கள் ஏற்படக் காரணமானது.
2007-ஆம் ஆண்டு ராம் ரஹீமிற்கு தடை விதிக்கும் உத்தரவை அகால் தக் பிறப்பித்தது.
இந்த தடையை மீறி, ராம் ரஹீமுடன் அகாலி தளம் கட்சி தலைமை தொடர்பில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாதலின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு, கட்சியின் செயற்குழுவுக்கு அகல் தக் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
டிசம்பர் 2-ஆம் தேதி என்ன நடந்தது?

பட மூலாதாரம், SGPC
பொற்கோவில் வளாகத்திற்கு முன் கைக்கட்டி நின்று கொண்டிருந்த சுக்பீர் சிங் பாதலிடம் அகல் தக் மதகுருக்கள் கேள்வி எழுப்பினர்.
பொற்கோவில் மேடையில் நின்று, சீக்கிய மதகுரு ரகுபீர் சிங் 7 கேள்விகளை சுக்பீர் சிங் பாதலை நோக்கிக் கேட்டார்.
"ஆட்சியில் இருந்தபோது சீக்கியர்களைக் கொன்ற அதிகாரிகளுக்குப் பணி உயர்வு வழங்கி, அவர்கள் குடும்பத்திற்கு டிக்கெட் வழங்கி நீங்கள் பாவச் செயல் செய்தீர்களா?"
''ராம் ரஹீம் மீதான வழக்குகளை ரத்து செய்து பாவச் செயலில் நீங்கள் ஈடுபட்டீர்களா?"
"ராம் ரஹீம்க்கு மன்னிப்பு வழங்குவதற்காகப் மதகுருவை சண்டிகரில் உள்ள உங்கள் இல்லத்திற்கு அழைத்து பாவம் செய்துள்ளீர்களா?"
"ராம் ரஹீம்க்கு வழங்கிய மன்னிப்பை நியாயப்படுத்த எஸ்ஜிபிசி பணத்தைத் பயன்படுத்தி செய்தித்தாளில் விளம்பரம் செய்து பாவச் செயலில் ஈடுபட்டீர்களா?" என கேள்வி எழுப்பப்பட்டது.
இதைப்பற்றி உங்களுக்குத் தகவல் தெரியுமா என்றும் அதற்கு எதிராகப் பேசினீர்களா என்றும் அகாலி தலைமையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளை ஆம் என்று பதிலளித்து சுக்பீர் சிங் பாதல் ஏற்றுக் கொண்டார்.
தலைவர்கள் என்ன செய்கிறார்கள்?

சிரோமணி அகாலி தளம் தலைவர்களின் பேச்சைக் கேட்ட பிறகு இது குறித்து முடிவெடுக்க ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
பொற்கோவில் மேடையில் நின்று, மதகுரு ரகுபிர் சிங்,"அகாலி தலைவர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டுள்ளனர், எனவே அவர்கள் டிசம்பர் 3 முதல் "தன்கா" சேவை செய்வார்கள்''என கூறினார்.
மேலும் ''அவர்கள் பொற்கோவில் வளாகத்தின் கழிப்பறைகளை மதியம் 12-1 மணி முதல் சுத்தம் செய்வார்கள். தர்பார் சாஹிப் மேலாளர் அவர்களின் வருகையை உறுதி செய்வார். இதற்குப் பிறகு அவர்கள் குளித்துவிட்டு பாத்திரங்களைக் கழுவி, "குர்பனி" படிப்பார்கள். கழுத்தில் ஒரு பலகையும் வைக்கப்படும்," என்றார்.
சுக்பீருக்கு காலில் அடிப்பட்டுள்ளதால் உடல்நலனை கருத்தில் கொண்டு, ஈட்டி ஏந்தியவாறு இரண்டு நாட்கள் இரண்டு மணி நேரம் தர்பார் சாஹீப் (அமிர்தசரஸ் பொற்கோவில்) வாசலில் சக்கர நாற்காலியில் அமர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
ராம் ரஹீமை மன்னித்த முன்னாள் மதகுரு கியானி குர்பாச்சன் சிங்கிற்கு வழங்கப்பட்ட அனைத்து வசதிகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சுக்பீர் பாதல், சுச்சா சிங் லங்கா, குல்சர் சிங், டல்ஜித் சிங் சீமா, பல்வீந்தர் சிங் புந்தர் மற்றும் ஹீரா சிங் காப்ரியா ஆகியோரிடம் வட்டியுடன், தேரா சச்சா சவுதா தொடர்பான விளம்பரங்களுக்குச் செலவிடப்பட்ட பணத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டில் மறைந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு பொற்கோவில் சார்பில் வழங்கப்பட்ட பந்த் ரத்தன் ஃபக்ர்-இ-குவாம் (சீக்கிய சமூகத்தின் பெருமை) பட்டமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்த பட்டம் வழங்கப்பட்ட முதல் அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆவார்.
பொற்கோவில் சீக்கியர்களுக்கு முக்கியதுவம் வாய்ந்தது ஏஏன்?

பட மூலாதாரம், Ravinder Singh Robin
அமிர்தசரஸ் பொற்கோவில் சீக்கியர்களுக்கு ஆன்மீக சக்தியின் அடையாளமாகும். அகல் தக் குழு இந்த பொற்கோவில் வளாகத்தில் இருந்து செயல்படுகிறது.
சீக்கிய சமூகத்தில் ஐந்து 'தக்'-குகள். அகால் தக் (அமிர்தசரஸ்), தக் கேஷ்கர் சாஹிப் (அனந்தபூர் சாஹிப்), தக் டம்டமா சாஹிப் (தல்வாண்டி சாபு), தக் ஶ்ரீ பட்னா சாஹிப் (பீகார்), தக்த் ஶ்ரீ நந்தீத் சாஹிப் (மஹாராஷ்டிரா).
இதில் அமிர்தசரஸில் உள்ள அகல் தக் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சீக்கிய குருவால் உருவாக்கப்பட்ட ஒரே தக் இதுவாகும்
ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் சாஹிப்பால்1606- ஆம் ஆண்டு அமிர்தசரஸ் இது உருவாக்கப்பட்டது. இதன் இயற்பெயர் அகல் புங்கா.
குரு ஹர்கோபிந்த் சாஹிப் சீக்கியர்களின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகளைத் தீர்த்தார். சீக்கிய மத பாரம்பரியங்களின்படி, அகால் தக் ஒரு உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டுள்ளது.
தக்கில் இருந்து சீக்கியர்களுக்கு வழங்கப்படும் உத்தரவு "ஹுகாம்நாமா" என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு சீக்கியரும் மத ரீதியாக இதனை பின்பற்ற வேண்டும்.
ஒட்டுமொத்த சீக்கிய சமூகமும் அகல் தக் சிக்கிய மதகுருவின் கருத்துக்களை பின்பற்றுவார்கள். மேலும் மதகுரு தனது முடிவுகளை எந்த சார்பும் இல்லாமல், முற்றிலும் சீக்கிய மரபுகள் மற்றும் குரு க்ரந்த் சாஹிப்பின் தத்துவத்தின்படி எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தண்டனை வழங்குவதற்கான நடைமுறை என்ன?

ஒரு சீக்கியர் எவ்வளவு பிரபலமாகவும் சக்தி வாய்ந்தவராகவும் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் சீக்கிய மதக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், எந்தவொரு சீக்கியரும் அல்லது சீக்கிய அமைப்பும் அவரைப் பற்றி அகல் தக்கில் புகாரளிக்கலாம்.
அகல் தக் மதகுரு புகாரைப் பரிசீலித்துச் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து விளக்கம் கேட்பார். அந்த பதிலில் மதகுரு திருப்தி அடையவில்லை என்றால் சம்மந்தப்பட்ட நபர் தவறு செய்தவர் என அறிவிப்பார்.
பின்னர் அவர் அகல் தக் முன்பு ஆஜராகுமாறு அழைக்கப்படுவார். குற்றம் சாட்டப்பட்டவர் சபையின் முன்னிலையில் நிற்க வைக்கப்படுவார்.
மதகுரு அந்த நபருக்கு எதிரான குற்றங்களைப் படிப்பார். சபையின் முன் அந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கச் சொல்வார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டாலோ அல்லது அவரது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக மதகுரு கருதினாலோ, அவருக்கு மத தண்டனை வழங்கப்படும்.
ஒரு வேளை அந்த நபர் அந்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ, அல்லது ஆஜராகாமல் இருந்தாலோ அவர் இந்த சமூகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.
ஒரு நபர் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு ஆஜரானால், அவருக்கு மத தண்டனை விதிக்கப்பட்டு சீக்கிய சமூகத்தில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












