குர்ஜப்னீத் சிங், அன்சுல் கம்போஜ்: அனுபவமில்லாத இரு பவுலர்களை சிஎஸ்கே வாங்கியது ஏன்? தோனியின் அணுகுமுறை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் விளையாடாத இரு இளம் வேகப்பந்துவீச்சாளர்களை அதிக விலைக்கு வாங்கி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சாதாரண வீரரையும் தனது அணிக்குள் கொண்டுவந்தால் அவரை தகுந்த சமயத்தில் பயன்படுத்தி, நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திவிடுவார் என புகழப்படுகிறார்.

நட்சத்திர வீரராக மாற்றும் சிஎஸ்கே
குறிப்பாக ஷிவம் துபேவுக்கு இந்திய அணியில் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டபோதிலும் அவரால் பெரிதாக முத்திரை பதிக்க முடியவில்லை.
ஆனால், ஷிவம் துபேயை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்ட தோனி, அவரை “இம்பாக்ட் ப்ளேயராக” களமிறக்கி அதிரடியான பல வெற்றிகளை சிஎஸ்கே அணிக்குக் கொண்டு வந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதுமட்டுமல்லாமல் சர்துல் தாக்கூர், தீபக் சஹர், மதீசா பதிரணா உள்ளிட்ட வீரர்கள் பெரிதாக சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லை. இதில் தீபக் சஹர், சர்துல் தாக்கூர் இருவரும் இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால், இவர்கள் 3 பேரின் பந்துவீச்சும் சர்வதேச போட்டிகளின் போது எதிரணிக்கு சிம்மசொப்னமாக இருக்கும் எனக் கூற முடியாது.
ஏனென்றால், ஷர்துல் தாக்கூர் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் பந்துவீச்சு சராசரியை 18க்கு மேல்தான் வைத்துள்ளார். அதேபோல தீபக் சஹரின் பந்துவீச்சு சராசரியும் 20க்கும் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இருவரையும் சிஎஸ்கே அணியில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து தோனி சரியாகப் பயன்படுத்தி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
அந்த வகையில் ஒவ்வொரு ஐபிஎல் மெகா ஏலத்திலும் சிஎஸ்கே அணி ஏதாவது வித்தியாசமான அணுகுமுறையில் வீரர்களைத் தேர்ந்தெடுத்து விலைக்கு வாங்கும்.
அந்த வகையில் ஏற்கெனவே அணிக்குள் சாம் கரன் என்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இருக்கும்போது, குர்ஜப்னீத் சிங்கை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கியது.

பட மூலாதாரம், Getty Images
தமிழக ரசிகர்களின் மனக்குறை
சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் இல்லை என்ற ஆதங்கத்தையும், குற்றச்சாட்டையும் ரசிகர்கள் நீண்டகாலமாக சமூகவலைத்தளங்களில் முன்வைத்தனர்.
ஆனால், இந்தமுறை ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி அந்தக் குற்றச்சாட்டை களையும் வகையில் 3 தமிழக வீரர்களையும், தமிழக அணிக்காக ஆடும் ஒரு வீரரையும் ஏலத்தில் எடுத்துள்ளது.
குறிப்பாக 2015-ஆம் ஆண்டுக்குப்பின் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வின் சிஎஸ்கே அணிக்குத் திரும்பியுள்ளார். ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், ஆண்ட்ரே சித்தார் ஆகிய வீரர்களையும், தமிழக அணிக்காக விளையாடிவரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கையும் சிஎஸ்கே வாங்கியுள்ளது.
7 மடங்கு விலையில் குர்ஜப்னீத் சிங்

பட மூலாதாரம், X/TNCACricket
குர்ஜப்னீத் சிங் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டபோதிலும் அவரின் அடிப்படை விலையைவிட 7.7 மடங்கு அதிகமாகக் கொடுத்து ரூ.2.20 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் அவரை எடுத்தது.
டிஎன்பிஎல் போட்டியில் மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் குர்ஜப்னீத் சிங் விளையாடியுள்ளார். 2024-ஆம் ஆண்டுதான் ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக தமிழக அணியில் குர்ஜப்னீத் சிங் அறிமுகமாகியுள்ளார்.
இந்த அளவு மிகக்குறைந்த அனுபவம் கொண்ட குர்ஜப்னீத் சிங்கை சிஎஸ்கே அணி ஏலத்தில் போட்டிபோட்டு ரூ.2.20 கோடி கொடுத்து விலைக்கு வாங்க காரணம் என்ன?
1998-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தவர் குர்ஜப்னீத் சிங்.
6.3 அடி உயரம் கொண்ட குர்ஜப்னீத் சிங் ஹரியாணாவின் அம்பாலா நகரில் படித்து வளர்ந்து 17-வது வயதில் தமிழகத்துக்கு வந்தார்.
7 ஆண்டுகளாக தீவிரமான கிரிக்கெட் பயிற்சியின்போது 2021-ஆம் ஆண்டு டிஎன்பிஎல் போட்டியில் மதுரை டிராகன்ஸ் அணியில் அறிமுகமாகி குர்ஜப்னீத் சிங் விளையாடினார்.
அதன்பின் குர்ஜப்னீத் சிங் முதுகு வலி காரணமாக ஓர் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து விலகி, சிகிச்சைப் பெற்று 2023-ஆம் ஆண்டு மீண்டும் கிரிக்கெட்டுக்குள் வந்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடினார்.

பட மூலாதாரம், Instagram : gurjapneet
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக குர்ஜப்னீத் சிங் விளையாடியபோது அங்கு ரவிச்சந்திரன்அஸ்வின், யோமகேஷ் இருவரும் சிறந்த வழிகாட்டிகளாக அவருக்கு இருந்தனர். அவரின் திறமையை மேலும் மெருகேற்றினர்.
2024-ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பை சீசனில் தமிழக அணிக்காக விளையாட குர்ஜப்னீத் சிங்கிற்கு அறிமுகம் கிடைத்தது.
கோவையில் நடந்த சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குர்ஜப்னீத் சிங் 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி பெற காரணமாக அமைந்தார்.
2005 ரஞ்சி சீசனுக்குப்பின் தமிழக வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் குறைந்த ரன்னில் எடுத்த அதிக விக்கெட் இதுவாக அமைந்தது.
அது மட்டுமல்லாமல் 2வது இன்னிங்ஸில் அனுபவ பேட்டர் சத்தீஸ்கர் புஜாராவை கால்காப்பில் வாங்கவைத்து டக்அவுட்டில் குர்ஜப்னீத் சிங் ஆட்டமிழக்கச் செய்தது அவரின் பந்துவீச்சுக்கும், அறிமுகத்துக்கும் முத்தாய்பாக அமைந்தது. 4 போட்டிகளிலே குர்ஜப்னீத் சிங் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஏன் சிஎஸ்கே வாங்கியது
ஐபிஎல் ஏலத்தில் குர்ஜப்னீத் சிங்கை ரூ.2.20 கோடிக்கு சிஎஸ்கே நன்கு திட்டமிட்டே வாங்கியுள்ளது.
நீண்டகாலமாக குர்ஜப்னீத் சிங்கின் பந்துவீச்சை கண்காணித்து, அவரின் வளர்ச்சியைப் பார்த்தபின்புதான் அடிப்படை விலையில் இருந்து 7 மடங்கு அதிகமாக சிஎஸ்கே வாங்கியுள்ளது.
குர்ஜப்னீத் சிங் சென்னைக்கு வந்தபின் குருநானக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்குதான் இந்தியா சிமெண்ட்ஸ் அணியின் பயிற்சிக்களம் என்பதால் குர்ஜப்னீத் சிங் தன்னை வலைப்பயிற்சியில் ஈடுபடுத்திக்கொண்டு, படிப்படியாக 3--ஆம் நிலையிலிருந்து முதல்நிலை பந்துவீச்சாளராக உயர்ந்தார்.
அது மட்டுமல்லாமல் வங்கதேச டெஸ்ட் தொடருக்காக இந்திய அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் குர்ஜப்னீத் சிங் இருந்துள்ளார்.
அப்போது இந்திய பேட்டர்களுக்கு அவர் பந்துவீசும் முறையையும், துல்லியத்தையும் சிஎஸ்கே நிர்வாகிகள் கண்காணித்துள்ளனர்.
ஏலத்தின்போது லக்னெள, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் குர்ஜப்னீத் சிங்கை வாங்க கடுமையாக போட்டியிட்டபோது ரூ.2.20 கோடிக்கு அவரை சிஎஸ்கே அணி முந்திக்கொண்டு வாங்கியது.
சிஎஸ்கே அணிக்காக வலைப்பயிற்சியில் பலமுறை குர்ஜப்னீத் சிங் பந்துவீசியுள்ளார். அப்போது அவரின் பந்துவீச்சுத் திறமையை சிஎஸ்கே நிர்வாகிகள் கூர்ந்து நோக்கியுள்ளனர்.
குர்ஜப்னீத் சிங் 6.3 அடி உயரம், யார்கர் வீசும் திறமை, வேகம், லைன் லென்த் ஆகியவற்றின் துல்லியம் ஆகியவற்றை அறிந்துதான் ஏலத்தில் பெரிய விலைக்கு வாங்கியது.
டெத் ஓவரில் இவரின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்பதை அறிந்து ஏலத்தில் எடுத்துள்ளது.
முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சில் இருக்கும் வேக்கத்தைவிட, யார்கர் வீசும் துல்லியம் குர்ஜப்னீத்திடம் இருக்கிறது. அதனால்தான் வங்கதேசத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை தக்கவைக்காமல் குர்ஜப்னீத்தை சிஎஸ்கே வாங்கியது.
சிஎஸ்கே அணி ஏலத்தில் சரியான வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனப் பொதுவாக விமர்சனங்கள் வந்தாலும், குர்ஜப்னீத் சிங் வரும் ஐபிஎல் சீசனில் முக்கியத்துருப்புச் சீட்டாகவும், கருப்புக் குதிரையாகவும் இருப்பார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழக அணியில் இடம் பெற்றது, சிஎஸ்கே அணிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டது குறித்து கிரிக்இன்போ தளத்துக்கு குர்ஜப்னீத் அளித்த பேட்டியில் “ டிஎன்பிஎல் அணியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக நான் ஆடியபோது எனக்கு பல்வேறு ஆலோசனைகளை அஸ்வின்(அண்ணா), யோமகேஷ் இருவரும் வழங்கினர். இது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. சிகப்புப் பந்தில் இருந்து வெள்ளைப்பந்தில் பந்துவீசும் போது எவ்வாறு வீசுவது, துல்லியத்தை எவ்வாறு பராமரிப்பது, லைன்அன்ட் லென்த்தில் வீசுவது என்பதை இருவரும் கற்றுக் கொடுத்தனர்.
குறிப்பாக இந்திய அணிக்கு வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகவும் நான் இருந்தேன். அப்போது விராட் கோலிக்கு பந்துவீசியபோது எனக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது உதவியாக இருந்தது. குறிப்பாக புஜாராவுக்கு எதிராக நான் விக்கெட் வீழ்த்தியபோது கோலியின் ஆலோசனை உதவியாக இருந்தது.
சிஎஸ்கே அணிக்காக வலைப்பயிற்சியில் பந்துவீசியபோது, தோனிக்கு பந்துவீசும் வாய்ப்புக் கிடைத்தது. டாப்கிளாஸ் பேட்டர் ஒருவருக்கு பந்துவீசும்போது நாம் கூடுதல் கவனத்துடன் வீச வேண்டும், பல விஷயங்களையும் கற்க முடியும். தோனி போன்ற கடினமான பேட்டருக்கு டெத் ஓவரில் பந்துவீசுவது சிரமமானது. அதை சிறப்பாகச் செய்தேன். சிறிய தவறு செய்தாலும், யார்கர் வீசாமல் இருந்தாலும், நமக்கு தண்டனை கிடைப்பது உறுதி. டெத் ஓவரில் எவ்வாறு பந்துவீசுவது என்பதை சிஎஸ்கே பயிற்சியின்போது கற்றுக்கொண்டேன்” எனத் தெரிவித்தார்.
அன்சுல் கம்போஜை வாங்க காரணம் என்ன

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணி வாங்கிய மற்றொரு குறிப்பிடத்தகுந்த வீரர் ஹரியானாவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ்.
முதல்தரப் போட்டிகள், லிஸ்ட்ஏ போட்டிகளில் கூட விளையாடாத அனுபவம் குறைந்தவர் அன்சுல் கம்போஜ். பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கம்போஜை கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்குவாங்கியது.
3 போட்டிகளில் மட்டுமே களமிறங்கிய கம்போஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் அவரை மும்பை அணி, கழற்றிவிட்டநிலையில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.
சிஎஸ்கே அணி, அன்சுல் கம்போஜை ரூ.3.40 கோடி கொடுத்து வாங்க முக்கியக் காரணம் அவரின் சமீபத்திய சிறப்பான பந்துவீச்சாகும்.
நடப்பு ரஞ்சிக் கோப்பை சீசனில் கேரள அணிக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 49 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை கம்போஜ் வீழ்த்தி அனைவரையும் வியக்கவைத்தார்.
அது மட்டுமல்லாமல் 19 முதல் தரப் போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையையும் அன்சுல் பெற்றார்.
ரஞ்சிக் கோப்பை வரலாற்றிலேயே, இதுபோன்று ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையையும், 39 ஆண்டுகளுக்குப்பின் இந்த சாதனையைச் செய்த வீரர் என்ற பெயரையும் கம்போஜ் பெற்றார்.
கம்போஜ் பெயரை ஏலத்தின்போது உச்சரித்தவுடனே அவரை விலைக்கு வாங்க டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை அணியும் போட்டியிட்டன. அவருக்கான அடிப்படை விலை ரூ.20 லட்சமாக இருந்தநிலையில், அவரை மற்ற அணிகள் வாங்கவிடாமல் தடுத்த சிஎஸ்கே அணி இறுதியாக ரூ.3.40 கோடிக்கு வாங்கியது.
ஹரியானாவின் கர்னால் நகரில் கடந்த 2000-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி பிறந்தவர் அன்சுல் கம்போஜ்.
2021-22 ரஞ்சிக் கோப்பையில்தான் கம்போஜ் முதன்முதலாக ஹரியாணா அணிக்காக அறிமுகமாகினார். இந்த சீசனில் 10 போட்டிகளில் அன்சுல் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்
அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் விஜய் ஹசாரே கோப்பையை ஹரியாணா அணி வெல்வதற்கு கம்போஜ் பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் துலீப் டிராபியிலும் கம்போஜ் 8 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பட மூலாதாரம், Getty Images
கம்போஜின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்தபின்புதான் கடந்த சீசனுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஆனால் அவருக்கு 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. சமீபத்தில் ஓமன் நாட்டில் வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் நடந்தது. அதில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்த கம்போஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கம்போஜ் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஓவருக்கு 8 ரன்களை விட்டுக்கொடுத்து பந்துவீசியுள்ளார்.
சிஎஸ்கே அணியில் நடுப்பகுதியில் ஓவர்களை வீசுவதற்கு சாம் கரனைத் தவிர வேகப்பந்தவீச்சாளர்கள் இல்லை. ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களுக்காக அஸ்வின், நூர் அகமது போன்றோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதற்காகவே கம்போஜை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












