போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது

காணொளிக் குறிப்பு, ஐபிஎல்: போலி கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்களை இந்திய போலீசார் கைது செய்தனர்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த மோசடிக்கு உயிர் கொடுக்க, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குரலில் ஒருவர் பேசுவது போலவும் இந்த கும்பல் ஏற்பாடு செய்திருந்தது. மீரட்டில் இருந்து ஒரு தொழிலாளி இந்த வேலைக்காக பிரத்யேகமாக அமர்த்தப்பட்டார்.

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்காக பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, ஆனால், அதே நேரத்தில் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலியான ஐபிஎல் சீசன் நடந்தது.

உண்மையான ஐபிஎல் மே மாதம் முடிவடைந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த போலியான போட்டி தொடங்கியது என்று போலீசார் தெரிவித்தனர்.

போலி ஐபிஎல்

பட மூலாதாரம், Gujarat Police

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொலிபூர் கிராமத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் பந்தயம் கட்டுவதில் ஆர்வமுள்ள ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்ற முயன்றனர். 21 தொழிலாளர்கள் கொண்ட குழு, ஐபிஎல் சீசன் முழுவதையும் தாங்களாகவே போலியாக உருவாக்கியது, அவர்கள் வெவ்வேறு ஜெர்சிகளுடன் வீரர்களாக ஆடுகளத்தில் தோன்றினர்.

நவீன கருவிகளுடன் தொடங்கிய ஆட்டம்

இந்த போலி ஷோவில் ஐந்து ஹெச்டி கேமராக்கள், வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போட்டிகளின் தரத்தை மேம்படுத்த இணையத்தில் இருந்து கூட்டத்தின் சத்தத்தை பதிவிறக்கம் செய்தனர். போட்டிகள் முடிந்தவரை உண்மையானதாக தோன்ற யூடியூப்பில் ஒளிபரப்பப்பட்டது. டெலிகிராம் தளம் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்தது.

"இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக்" என்று அழைத்துக் கொள்ளப்பட்ட இந்த ஆட்டம் காலிறுதிப் போட்டிவரை சென்றபோது, போலீசார் இதை கண்காணித்து இந்த மோசடி நபர்களை கைது செய்தனர்.

இந்த மோசடி தொடர்பாக நான்கு பேரை கைது செய்த போலீசார் அதில் மூளையாக செயல்பட்ட நபரின் பெயர் ஷோயிப் தாவ்தா என்று தெரிவித்துள்ளனர்.

Still from the match

இது குறித்து போலீஸ் அதிகாரி பவேஷ் ரத்தோட் கூறும்போது, "ஷோயிப் குலாம் மாசியின் பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு ஹாலோஜென் விளக்குகளை நிறுவினார். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 400 ரூபாய் தருவதாக உறுதியளித்து 21 விவசாய தொழிலாளர்களை தயார்படுத்தினார்கள். அடுத்து, கேமராமேன்களை நியமித்து, ஐபிஎல் அணிகளின் டி-ஷர்ட்களை வாங்கினர்," என்றார்."ஷோயிப் டெலிகிராம் சேனலில் நேரடி பந்தயம் எடுப்பார். அவர் ஒரு வாக்கி-டாக்கியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை சிக்னல் செய்யும்படி நடுவரான கோலுவிடம் அறிவுறுத்துவார். பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளரிடம் அதையே கோலு தெரிவித்தார். எல்லாம் பந்தயம் கட்டுபவரின் எண்ணப்படியே நடப்பதாக நம்ப வைக்க இந்த கும்பல் செயல்பட்டது. உத்தரவுகளுக்கு ஏற்ப பந்து வீச்சாளர் மெதுவாக பந்தை போடுவார். பேட்ஸ்மேன் அதை எளிதாக ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸருக்கு அடிக்க முடியும்," என்று ரத்தோட் கூறினார்.

ஒரு கட்டத்தில் ரஷ்ய சூதாட்டக்காரர்கள் கும்பல் அமைத்த டெலிகிராம் சேனலில் குஜராத் கும்பல் பந்தயம் கட்டினார்கள். பின்னர் போலி நடுவரை வாக்கி-டாக்கி மூலம் தங்களுடைய விருப்பத்துக்கு தக்க ஆட வைத்து மோசடி செய்தனர் என்றும் போலீஸ் ஆய்வாளர் பவேஷ் ரத்தோட் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியாவில் கிரிக்கெட்டில் பந்தயம் கட்டுவது சட்டவிரோதமானது. தற்போது இந்த மோசடி ஆட்டத்தில் தொடர்புடையதாக பிடிபட்டுள்ள சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சதி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வியப்படைந்த ஹர்ஷா போக்லே

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்த நிலையில், தன்னைப்போலவே வர்ணனை செய்து மோசடி செய்த கும்பல் கைது செய்த தகவலையறிந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்ததாக கூறியிருக்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: