ஐபிஎல் 2022: ஏலம் போகாத வீரரின் அதிரடி ஆட்டம் - எலிமினேட்டரில் லக்னோவை வென்றது ஆர்.சி.பி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐபிஎல்லில் ஏலம் போகாத ஒரு வீரர் தொடரின் நடுவில் அணியில் சேர்க்கப்பட்டு முக்கியமான ஆட்டத்தில் சதம் விளாசி வெற்றியை தேடித் தந்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம்... கோலி, மேக்ஸ்வெல் என ஆர்.சி.பியின் டாப் பேட்ஸ்மேன்களால் முடியாததை தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் செய்து முடித்திருக்கிறார் பெங்களூரு வீரர் ரஜத் படிதார். அவரது பெரிய பங்களிப்பால் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது ஆர்.சி.பி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய ஆட்டத்தில், டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸ் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, நிதானமாக விளையாடிய விராட் கோலி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 9, மஹிபால் 14 ரன்களில் விடைபெற்றனர்.

விளாசிய படிதார்

விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய படிதார் எதிரணி பந்துவீச்சை சிக்சரும் பவுன்டருமாக பறக்கவிட்டார். 28 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு களத்தில் நங்கூரமிட்டு பவுலர்களை கடுமையாக சோதித்தார் படிதார்.

16வது ஓவரில் படிதாரின் கேட்சை பிடிக்க தீபக் ஹூடா தவறியதால் அதற்காக லக்னோ அணி அதிக விலையை கொடுக்க நேரிட்டது. குறிப்பாக, அந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருக்கக் கூடும். கேட்சை கோட்டைவிட்டதன் விளைவு கடைசி 5 ஓவர்களில் மட்டும் 84 ரன்கள் விளாசியது பெங்களூரு அணி. ஷேவாக் பாணியில் சிக்சருடன் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் படிதார்.

நடப்பு தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

படிதாருடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் தனது பங்குக்கு அதிரடி காட்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் சேர்த்தது.

படிதார் 54 பந்துகளில் 7 சிக்சர் 12 பவுன்டர்களுடன் 112 ரன்களும் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்

இந்த ஜோடி 41 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தது கவனிக்கத்தக்கது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

வென்ற பெங்களூரு அணி

208 எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

முதல் ஓவரின் 5வது பந்தில் சிக்சர் விளாசி அச்சுறுத்திய டி காக்கை அடுத்த பந்தே ஆட்டமிழக்கச் செய்தார் பெங்களூரு பவுலர் முகமது சிராஜ். அடுத்து வந்த மனன் வோஹ்ரா 19 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார் தீபக் ஹூடா. அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. 4 சிக்சர் விளாசி களத்தில் மிரட்டிக் கொண்டிருந்த தீபக் ஜூடா ஹசரங்கா சுழலில் சிக்கி வெளியேறினார்.

விக்கெட்டுகள் சரிந்தாலும் வெற்றியை எட்டிப்பிடிக்க கே.எல்.ராகுல் கடுமையாக முனைப்பு காட்டினார். 58 பந்துகளில் 5 சிக்சர் 3 பவுன்டரிகளுடன் 79 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹேசில்வுட் பந்தில் ஷாபாசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் LSGயின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியதோடு தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ அணி.

14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குவாலிஃபயர் ஆட்டத்திற்கு தகுதி பெற்று அசத்திய ஆர்.சி.பி, வெள்ளிக்கிழமை நடைபெறும் குவாலிஃபயர் 2வது ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: