ஐபிஎல் 2022: மகுடம் சூடியது குஜராத் டைட்டன்ஸ் - கோப்பையை தட்டிப்பறித்த ஹர்திக் படை

ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி

பட மூலாதாரம், BCCI / IPL

    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்

நரேந்திர மோதி மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர் கூட்டத்திற்குள் சிக்சரை பறக்கவிட்டார் சுப்மன் கில்.

அதுதான் இறுதி யுத்தத்தின் வின்னிங் ஷாட்டாக அமைந்தது. நடப்பு ஐபிஎல்லின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்று சாதித்திருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்.

அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவார வெள்ளத்தின் நடுவே விறுவிறுப்புடன் நடைபெற்றது ஐபிஎல் இறுதி ஆட்டம். முன்னதாக, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்ற ஐபிஎல் நிறைவு விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரன்வீர் சிங் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். டாஸில் அதிக முறை தோற்ற கேப்டன் என பெயர் எடுத்திருந்தாலும் இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

குஜராத் பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான்

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வாலும் பட்லரும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஷ்வால் அதிரடி காட்ட, பட்லர் பொறுமையுடன் ஆடினார். 16 பந்துகளில் 2 சிக்சர், 1 பவுன்டரியுடன் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாய் கிஷோரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 14, படிக்கல் 2 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 4 சதம், 4 அரைசதம் என தொடர் முழுவதும் தனது பேட்டால் மிரட்டிய பட்லரால் கூட இந்த முறை முடியவில்லை. 39 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டை பறிகொடுத்த வேகத்தில் தனது ஹெல்மெட்டை தூக்கி எறிந்து அதிருப்தியை வெளிப்படுத்தினார் பட்லர். குஜராத்தின் துல்லியமான பந்துவீச்சுக்கு ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களால் களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பார்னர்ஷிப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அமையவில்லை.

குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

கடைசி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானால் எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 130 ரன்களை மட்டுமே சேர்த்தது ராஜஸ்தான். கோப்பையை வெல்ல குஜராத்திற்கு 131 ரன்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் குஜராத்தின் அபாரமான பந்துவீச்சு திறன்.

4 ஓவர்களை வீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மயர் என 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் ரஷீத் கான், யாஷ் டயல், ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நிதானம் காட்டிய கில்

131 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது குஜராத். முதல் ஓவரில் விக்கெட் எடுப்பதில் நேர்த்தியான டிரென்ட் போல்ட் தனது 4வது பந்தை சுப்மன் கில்லுக்கு வீச, அவர் கொடுத்த நல்ல கேட்சை தவறவிட்டார் சஹல். இருப்பினும் 2வது ஓவரில் பிரஷித் கிருஷ்னா சாஹாவின் விக்கெட்டை வீழ்த்த ஆட்டம் சூடுபிடித்தது. மேத்யூ வேடும் 8 ரன்களில் ஆட்டமிழந்ததால் களத்தில் விறுவிறுப்பு கூடியது.

கில்லுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார் கேப்டன் ஹர்திக் பாண்டியா. 1 சிக்சர் 3 பவுன்டரியுடன் 34 ரன்களில் ஹர்திக் விடைபெற, டேவிட் மில்லர் வழக்கம்போல அதிரடியாக விளையாடி 32 ரன்கள் சேர்த்தார். களத்தில் நங்கூரமிட்ட சுப்மன் கில் 1 சிக்சர் 3 பவுன்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். மிக்காய் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை கில் சிக்சருக்கு விரட்ட, 7 விக்கெட் வித்தியாசத்தில் இறுதி யுத்தத்தில் வெற்றிபெற்றது குஜராத் டைடன்ஸ்.

கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

கம்பேக் கொடுத்த ஹர்திக்

நடப்பு ஐபிஎல்லில் அறிமுகமாகி 9 அணிகளுடன் மல்லுக்கட்டி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்திருக்கிறது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ். ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் தக்க வைக்காத நிலையில், புதிய அணியான குஜராத் டைட்டன்ஸுக்கு கேப்டனாகி கோப்பையையும் வென்று கொடுத்து சிறப்பான கம்பேக்கை கொடுத்திருக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் 3வது கேப்டன் எனும் பெருமையை பெற்றுள்ளார் ஹர்திக் பான்டியா. தோனி, கவுதம் கம்பீர், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து கேப்டனாக கோப்பையை வெல்லும் 4வது இந்தியராகவும் ஹர்திக் பாண்டியா வலம் வருகிறார். ராஜஸ்தான், மும்பைக்கு அடுத்தபடியாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் குஜராத் டைடன்ஸும் இடம்பெற்றுள்ளது.

தோல்விக்கு பின்னர் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வெல்ல மிகவும் உரித்தான அணி என கூறினார். "இந்த சீசன் சிறப்பாக இருந்தது. கடந்த 2,3 சீசன்களில் பலரும் மிகுந்த சிரமப்பட்டனர். இப்போது நல்ல கிரிக்கெட் விளையாடி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை வழங்கியுள்ளோம். உண்மையில் எனது அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்" என்றார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Bcci/ipl

பின்னர் பேசிய குஜராத் கேப்டன் பாண்டியா, "உலகின் எந்த அணிக்கும் இதுவே சரியான உதாரணம். நீங்கள் ஒரு குழுவாக விளையாடி, நல்ல வீரர்களுடன் சிறந்த ஒரு யூனிட்டை உருவாக்கினால், அதிசயங்கள் நிகழலாம்" என்றார். மேலும், "5 இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலியாக என்னை எண்ணுகிறேன். உற்சாகமாக இருக்கிறது. அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி, முதல் ஆண்டு சாம்பியன்ஷிப்பை வென்றது சிறப்பாக உள்ளது" என பேசினார்

இறுதிப்போட்டியில் வென்ற குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பையுடன் பரிசுத்தொகையாக 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இதனை வழங்க ஹர்திக் பாண்டியா பெற்றுக்கொண்டார். 2வது இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 12.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: