பழைய வாகனத்தை விற்பதற்கு இனி முதலில் செய்ய வேண்டியது என்ன?

 மறுவிற்பனை
படக்குறிப்பு, வாகன முகவர்கள் மூலமாக விற்பனை செய்யும் புதிய நடைமுறை, கோவையில் அமலுக்கு வந்துள்ளது
    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்பின் போது, பாரதிய ஜனதா தலைவர் அத்வானி பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்ட மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஃபியட் காரில் சக்தி வாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டு, பின்பு அது செயலிழக்க வைக்கப்பட்டது.

அதேபோல, 2022 அக்டோபர் 23 அன்று, கோவை –உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக, கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய வாகனங்கள் விற்கப்பட்டு, பல கைகள் மாறிய பின்னும் பெயர் மாற்றம் செய்யாதது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

பழைய வாகனங்களை வாங்கும்போது பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பல ஆண்டுகளாக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பழைய வாகனங்களை மறு விற்பனை செய்வது தொடர்பான புதிய நடைமுறை தமிழ்நாட்டில் அமல்படுத்தும் பணி சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

ஆன்லைன் மூலமாகவோ, டீலர் மூலமாகவோ, நேரடியாகவோ கார், இரு சக்கர வாகனங்களை மறுவிற்பனை செய்யும் போது என்ன செய்ய வேண்டும்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புதிய சட்டத்திருத்தம்

மத்திய மோட்டார் வாகனச் சட்டவிதிகளில் 26வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சில உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த சட்டத்திருத்தத்தின்படி, பழைய வாகனங்களை மறு விற்பனை செய்யும்போது, அந்த வாகனங்களை பெயர் மாற்றம் செய்யாமலே, முகவர்களின் பொறுப்புக்கு மாற்றி விற்பனை செய்தபின் பெயர் மாற்றம் செய்வதற்கு வழிவகை உள்ளது.

அதற்கேற்ப, ‘பரிவாகன்’ தளத்தில் அதற்குரிய படிவங்களில், வாகன விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன்படி, அந்த வாகனம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதற்கு பிறகு அந்த முகவரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த சட்டத்திருத்தம் கூறுகிறது.

கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள், கடந்த ஆண்டிலேயே இதை நடைமுறைப்படுத்தி விட்ட நிலையில், தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு இந்த நடைமுறை தொடங்கியுள்ளது.

வாகன முகவர்கள் மூலமாக விற்பனை செய்யும் இந்த புதிய நடைமுறை, தமிழ்நாட்டில் கோவையில் அமலுக்கு வந்துள்ளது. இதற்காக வாகன விற்பனை முகவர்களுக்கு வாகனங்கள் விற்பனைக்கான அங்கீகாரச்சான்று (29 பி) வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகனச் சட்டவிதிகளில் 26வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சில உட்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள இந்த சட்டத்திருத்ததின் அடிப்படையில், பதிவு செய்யப்பட்ட டீலர்களுக்கு விற்பனைக்கான அங்கீகாரம் வழங்கப்படும்.

டீலர்கள் மூலமாக பழைய வாகனங்கள் விற்கப்பட்டால், வாகனம் தொடர்பான முழுப்பொறுப்பும், அவர்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால் பொது மக்கள் எவ்வித பாதிப்புமின்றி தங்கள் வாகனங்களை விற்பனை செய்ய முடியும்.

தற்போது முதல் முறையாக, கோவை மத்திய வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திலும், கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் என மொத்தம் மூன்று பேருக்கு இந்த சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

பதிவுக் கட்டணம் ரூ.25 ஆயிரம்

பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்களுக்கு அங்கீகாரச்சான்று வழங்கும் நடைமுறையை, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் இணைய சேவைகளைக் கையாளும் அலுவலர்கள் பிபிசி தமிழிடம் விளக்கினர்.

மத்திய மோட்டார் வாகனச்சட்டத்தின் திருத்த விதிகள் 55C பிரிவின்படி, ‘பரிவாகன்’ சேவை போர்ட்டலில், Online Services வழியாக Dealer Authorization for Old Registered Vehicle என்ற முகப்பில் ‘லாக் இன்’ செய்து, 29 A படிவத்தைப் பூர்த்தி செய்து, கட்டணம் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

அதனை சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலர் பரிசீலித்து, டீலருக்கான அங்கீகாரச் சான்றினை வழங்குவார். அது 29B என்ற படிவத்தில் மின்னணு முறையில் போர்ட்டலில் பதிவேற்றப்படும்.

சான்று பெறும் டீலருக்கு, துறையினரால் ‘யூசர் ஐடி, பாஸ்வேர்டு’ வழங்கப்படும். அதைப்பயன்படுத்தி, அந்த போர்ட்டலில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வாகன விற்பனை விபரங்களைப் பதிவேற்றலாம்.

வாகனத்தை மறுவிற்பனை செய்யும் போது மதிப்பு குறையும் என்று கருதும் சிலர், டீலர்களை அணுகுவதில்லை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'வாகனத்தை மறுவிற்பனை செய்யும் போது மதிப்பு குறையும் என்று கருதும் சிலர், டீலர்களை அணுகுவதில்லை'

ஒரு வாகனத்தின் உரிமையாளர் தன் வாகனத்தை டீலரிடம் ஒப்படைத்ததும், அந்த வாகனத்தின் பொறுப்பு, படிவம் 29C யில் பதிவிடப்படும்.

அது சமர்ப்பிக்கப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலர், அந்த மோட்டார் வாகனத்தின் உரிமையாளராகக் கருதப்படுவார்.

வாகனம் சார்ந்த ஆவணங்கள் மற்றும் அந்த வாகனம் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் அவரே பொறுப்பாவார். ஆனால் ஆர்.சி.புத்தகத்தில் பெயர் மாற்ற வேண்டிய அவசியமில்லை. டீலரிடம் உள்ள அந்த வாகனத்தின் விபரம், ‘பரிவாகன்’ போர்ட்டலில் உள்ள 29E படிவத்தில் தானாகவே பதிவேற்றப்பட்டு விடும்.

ஒருவேளை, டீலர் சொன்ன விலை தனக்குக் கட்டுப்படியாகாமல் வாகனத்தை விற்கும் முடிவை வாகன உரிமையாளர் மாற்றிக்கொண்டால், டீலரிடமுள்ள வாகனப்பொறுப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு 29D படிவத்தில் வாகன உரிமையாளர் விண்ணப்பிக்க வேண்டும்.

வாகனம் எங்காவது எடுத்துச் செல்லப்படும்பட்சத்தில், அந்த வாகனம் எங்கு செல்கிறது, டிரைவர் பெயர், அவருடைய லைசென்ஸ் எண் உள்ளிட்ட ‘டிரிப் ஷீட்’ விபரங்கள் அனைத்தும் 29F என்ற படிவம் வழியாக பதிவு செய்யப்படும்.

ஆன்லைன் விற்பனை - என்ன செய்ய வேண்டும்?

பழைய வாகனத்தை டீலர் மூலமாக விற்பனை செய்யாமல், ஏதாவது ‘ஆப்’ மூலமாக அல்லது நேரடியாக வேறு நபருக்கு விற்பனை செய்வதாக இருந்தால், அதனை உடனடியாக பெயர் மாற்றம் செய்து, ‘பரிவாகன் சேவா’ போர்ட்டலில் பெயர் மாற்றுவது கட்டாயமாகும்.

பெயர் மாற்றாமல் அந்த வாகனம், இவரது பெயரில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு, அதில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டாலோ அதற்கு இவரே பொறுப்பாவார். ஆன்லைன் மூலம் விற்றாலும் உடனே பெயர் மாற்றம் செய்து கொள்வது அவரவர் கடமையாகும் என்கிறார் சத்தியகுமார்.

“பெயர் மாற்றம் செய்யாமல் வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் பல விதமான சிக்கல்களுக்கும் நிரந்தரமான தீர்வு கிடைக்க, இதை தமிழகம் முழுவதும் பரவலாக்க வேண்டியது அவசியமாகும். வாகனத்தை விற்க நினைக்கும் ஒவ்வொருவரும் இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற டீலர் மூலமாக விற்பது எல்லாவிதங்களிலும் பாதுகாப்பானது என்பதை உணரவேண்டும்,” என்றார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன்.

வாகனம் மறுவிற்பனை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

வாகனத்தை மறுவிற்பனை செய்யும் போது மதிப்பு குறையும் என்று கருதும் சிலர், டீலர்களை அணுகுவதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் கதிர்மதியோன்.

"வாகனத்தின் ஆர்.சி.புத்தகத்தில் பெயரை மாற்றும்போது, வாகனத்தின் மதிப்பு குறைவதாக பலரும் கருதுவதால், பெயரை மாற்றாமலே வாகனத்தை விற்றுவிடுகின்றனர். இத்தகைய வாகனங்கள், வாங்கிய நபர்களால் சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், விபத்தை ஏற்படுத்தினாலும் ஆர்சி புத்தகத்தில் யாருடைய பெயர் இருக்கிறதோ, அவர்தான் விசாரிக்கப்படுகிறார்," என்கிறார் அவர்

இதுபோன்ற சம்பவங்களில் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று, ஒரு வழக்கில் உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

முதல்முறையாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் விற்கும் டீலருக்கான அங்கீகாரச்சான்று (29B) பெற்றுள்ள கவாஸ்கர், பிபிசி தமிழிடம், ‘‘விண்ணப்பித்தவுடன் எனக்குச் சான்று கிடைத்துவிட்டது. அந்த போர்ட்டல் கையாளவும் எளிதாகவுள்ளது. அங்கீகாரம் பெற்ற டீலரிடம் பழைய வாகனத்தை விற்றால், அதன்பின் அந்த வாகனம் குறித்து வாகன உரிமையாளர் பொறுப்பேற்கவோ, கவலைப்படவோ தேவையில்லை. வண்டியை விற்றால் போதுமென்று பலரும் கருதுவதால்தான், பெயர் மாற்றம் செய்யாமலே பல கைகள் மாறி பலருக்கும் பல விதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு, இரண்டு அரசுகளுக்கும் உள்ளது.’’ என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)