பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுசீலா சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி என எங்கு சென்றாலும் அலமாரிகளில் பல பானங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். மக்கள் இந்த பானங்களை பார்த்தவுடனேயே ஆரோக்கியமானது என எண்ணி வாங்கிச் செல்கின்றனர்.

உண்மையில் அவை ஆரோக்கியமானதா?

சமீபத்தில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மின்வணிக நிறுவனங்களுக்கு ஓர் ஆலோசனையை வெளியிட்டது. அதன் அறிவுறுத்தலின்படி, ”மின்வணிக தளங்கள் அல்லது இணையதளங்களில் போர்ன்விட்டா உட்பட சில பானங்கள் `ஆரோக்கிய பானங்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தனது விசாரணையில் `உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 என்ற சட்டத்தின் படியும் (FSS Act 2006) `மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தனியார் நிறுவனம் வழங்கிய விதிகளின்படியும் ஆரோக்கிய பானங்கள் என்பது வரையறுக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.

எனவே, வணிக நிறுவனங்கள் தங்கள் இணையதளங்கள் உட்பட அனைத்து தளங்களில் இருந்தும் ஆரோக்கிய பானங்கள் என்ற பதாகையின் கீழ் இருந்து போர்ன்விட்டா உள்ளிட்ட பானங்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றன” என்றார்.

இந்த விவகாரம் தற்போது பூதாகரம் ஆனது ஏன்?

'ஆரோக்கிய பானங்கள்' உடல் நலத்திற்கு ஏற்றதா? இந்திய அரசின் அறிவுறுத்தல் என்ன?

பட மூலாதாரம், GETTYIMAGES/DJAVAN RODREQUEZ

இதுகுறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ பிபிசியிடம் பேசுகையில், போர்ன்விட்டாவில் உள்ள சர்க்கரை, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறினார். ஆனால் "அது ஆரோக்கிய பானமாக விற்கப்படுவதாகவும் கடந்த ஆண்டு புகார் வந்தது. இந்த பானம் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது."

இந்த விளம்பரம் குழந்தைகளின் நலன் கருதி வெளியிடப்பட்டது அல்ல, பெற்றோர்களைத் தவறாக வழிநடத்துகிறது எனக் கூறும் பிரியங்க் கனுங்கோ, "இதுபற்றி சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளிடம் தெரிவித்தோம், அதே வேளையில் போர்ன்விட்டா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், அவர்கள் தங்களின் தயாரிப்பு ஆரோக்கிய பானம் அல்ல என்று ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர்.

அதன் பிறகுதான் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006இல் `ஹெல்த் டிரிங்க்’ என்ற வகைப்பாடு இல்லை என்று தெரிவித்தோம்,’’ என விவரித்தார்.

அவரது கூற்றுப்படி, கலவை, குளிர்பானம், ஆற்றல் பானம் என எந்த வகையில் இருந்தாலும் எந்தவொரு உணவுப் பொருளையும் ஆரோக்கிய பானம் என்ற பெயரில் விற்க முடியாது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) என்பது குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் 2005இன் கீழ் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக மொண்டலேஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் மின்னஞ்சல் வாயிலாக பிபிசி தொடர்பு கொண்டது. ஆனால் அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

விளம்பர உத்திகளைக் கையாளும் நிறுவனங்கள்

பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images

இது நிறுவனங்கள் மேற்கொள்ளும் விளம்பர உத்தி என்றும், ஆரோக்கிய பானம் என்று எதுவும் இல்லை என்றும் மும்பையில் உள்ள சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் மூத்த மருத்துவர் ராஜீவ் கோவில் கூறுகிறார்.

ஆரோக்கியம் என்ற பெயரில் விற்கப்படும் பல பானங்களை மின்வணிக தளங்களில் காணலாம். இதுபோன்ற பானங்கள் உடல் நலத்திற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என மருத்துவர் ராஜீவ் கோவில் தெரிவித்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, தாதுக்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் குறைந்த சர்க்கரை கொண்ட அத்தகைய பானங்களைத்தான் மக்கள் உட்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஆனால், குறைவான சர்க்கரை அளவு என்பதை நிர்ணயிப்பது எப்படி?

இதுகுறித்து டாக்டர் ராஜீவ் கோவில் விளக்கமளிக்கையில், ‘‘இந்தியாவில் 100 கிராம் அளவை வைத்துத்தான் உணவு லேபிளிங் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒரு உணவுப் பொருள் 100 கிராம் என்றால் அதில் பத்து கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்க வேண்டும். ஐந்து கிராமுக்கு குறைவாக இருந்தால் அது குறைந்த சர்க்கரை அளவு எனப்படும்.

'ஆரோக்கிய பானங்கள்' உடல் நலத்திற்கு ஏற்றதா? இந்திய அரசின் அறிவுறுத்தல் என்ன?

பட மூலாதாரம், GETTYIMAGES/JACK ANDERSEN

சர்க்கரை அளவு 0.5 ஆக இருந்தால் அதை `சுகர் ஃப்ரீ’ என்று சொல்லலாம். சர்க்கரையைத் தவிர, இந்த பானங்கள் அனைத்திலும் கார்ன் சிரப் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஐ) இணையதளத்திலும் இந்த ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலின்படி, தனியுரிம உணவு உரிமம் பெற்ற உணவுப் பொருட்கள் பால் சார்ந்த பான கலவை, தானியம் சார்ந்த பான கலவை அல்லது மால்ட் சார்ந்த பானங்கள், ஆரோக்கிய பானங்கள், ஆற்றல் பானங்கள் ஆகிய வகைகளின் கீழ் விற்கப்படுவது தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், எஃப்.எஸ்.எஸ்- இன் கீழ் ஆற்றல் பானங்கள் என உரிமம் பெற்ற தயாரிப்புகளை மட்டுமே விற்க முடியும் மற்றும் எஃப்எஸ்எஸ் சட்டம் 2006இன் கீழ் ஆரோக்கிய பானம் என்பது வரையறுக்கப்படவில்லை.

இந்தக் கலவை அல்லது பானங்கள் குழந்தைக்கு அதிக சர்க்கரையை உட்செலுத்துவதாக பிரியங்க் கனுங்கோ கூறுகிறார். மேலும், இந்த பானங்கள் அருந்திய பின்னர் வேறு எந்த சர்க்கரை கொண்ட உணவையும் குழந்தைகள் உட்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தகவலை தயாரிப்பு நிறுவனங்கள் தெரியப்படுத்துவதே இல்லை.

சராசரியாக எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்?

பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images

``பல ஆண்டுகளாக ஆரோக்கிய பானங்கள் என்ற பெயரில் நம் மக்கள் மீது இந்தப் பொருட்கள் திணிக்கப்பட்டு, விளம்பரங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் தவறாக வழிநடத்தப்படுகின்றன,’’ என்கிறார் டாக்டர் அருண் குப்தா.

குழந்தைகள் மருத்துவர் அருண் குப்தா, பொது நலனுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை (NAPI) என்ற சிந்தனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

அவர் பேசுகையில், “ஆரோக்கிய பானங்கள் வரையறுக்கப்படவில்லை என்று அரசு கூறுகிறது, ஆனால் இந்த விவகாரத்தில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆலோசனை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஆரோக்கியமான உணவு, பானம் எது என்பதற்கும் ஆரோக்கியமற்றவை எவை என்பதற்கும் தெளிவான வரையறை இருக்க வேண்டும்," என்றார்.

`கணிசமான அளவு சர்க்கரை கொண்ட இத்தகைய பானங்கள் சந்தையில் பல ரகங்களில் கிடைக்கின்றன’ என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images

மருத்துவர் ராஜீவ் கோவில் மற்றும் மருத்துவர் அருண் குப்தா ஆகியோர் `புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது போல, மக்கள் குறிப்பாக குழந்தைகள் சர்க்கரைக்கு அடிமையாகக்கூடும். ஏனெனில் இனிப்பு மகிழ்ச்சியான உணர்வைத் தரும்.

ஆனால் சர்க்கரையைப் பெற இத்தகைய பானங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போது, அவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. அவர்கள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்படக்கூடும்.

தொற்றாத நோய் என்பது எந்தவொரு நோய்த்தொற்றாலும் ஏற்படாத, ஆரோக்கியமற்ற நடத்தையால் ஏற்படும் நோய்.

இதுபோன்ற பல பிரச்னைகளை இந்த பானங்கள் ஏற்படுத்தலாம்.

  • உடல் எடை அதிகரிப்பு
  • உடல் பருமன்
  • சர்க்கரை நோய்

உதாரணமாக, பிஸ்கெட்டில் சர்க்கரை தவிர உப்பும் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்பானம் அல்லது ஆற்றல் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளது. இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் கீழ் வருகின்றன.

சமீபத்தில், பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழின் (பிஎம்ஜே) ஓர் ஆய்வறிக்கையில், `இது ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

பூதாகரமாகும் போர்ன்விட்டா விவகாரம்: 'ஆரோக்கிய' பானங்களால் குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?

பட மூலாதாரம், Getty Images

மருத்துவர் அருண் குப்தா கூறுகையில், “உங்கள் தினசரி உணவில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவின் பங்கு 10 சதவீதத்திற்கு மேல் இருந்தால், அது சர்க்கரை நோய், புற்றுநோய், இதய நோய், உடலில் மனச்சோர்வு போன்ற நோய்களை உண்டாக்கும். தொற்றாத நோய்களை அதிகரிக்கும்.

உணவு அல்லது பானங்களில் எவ்வளவு சதவீதம் சர்க்கரை அல்லது உப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளம்பரங்களில் குறிப்பிட வேண்டும்,’’ என்கிறார்.

மேலும் பேசிய அவர், ``குறைந்த சர்க்கரை அளவைக் கொண்ட பொருட்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிக சர்க்கரை அளவு கொண்ட பொருட்கள் பற்றி எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவது குறைக்கப்பட வேண்டும். இதனால், அத்தகைய பொருட்களை மக்கள் வாங்குவதைக் குறைக்க முடியும்,’’ என்கிறார்.

மருத்துவர் அருண் குப்தா மற்றும் மருத்துவர் ராஜீவ் கோவில், உணவுப் பொருள் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிள்களை படிக்கத் தெரியாததால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதுபோன்ற சூழலில், "படிக்காதவர்களை மனதில் வைத்து, போக்குவரத்து வண்ணக் குறியீடு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில், அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பொருட்கள் குறித்து பெரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட வேண்டும்."

அத்தகைய பொருட்களின் "விலையை அதிகமாக வைத்திருக்க வேண்டும்." மேலும் "வரிகளும் அதிகமாக விதிக்கப்பட வேண்டும். இதனால் அதை வாங்குபவர்கள் மனதில் இதைப் பசிக்குச் சாப்பிட வாங்குகிறோமா அல்லது சுவைக்காக வாங்குகிறோமா என்ற கேள்வி எழும்."

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)