பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி சாதிக்குமா? - மு.க.ஸ்டாலின் முன்வைத்த யோசனைகள் என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளன. இந்தக் கட்சிகளுக்குள் எழுந்துள்ள ஒற்றுமை நீடிக்குமா, இந்தக் கூட்டணியால் பா.ஜ.கவை வீழ்த்த முடியுமா?

இந்த ஆண்டில் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாக ஜூன் 23 அமைந்திருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் பிகார் தலைநகர் பாட்னாவில் கூடி 2024இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது குறித்து வெள்ளிக்கிழமையன்று விவாதித்தனர். பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஒருங்கிணைப்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்,தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டில் காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. எதிர்பார்த்ததைப் போலவே, நவீன் பட்நாயக், மாயாவதி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை. இதில் நவீன் பட்நாயக், சந்திரசேகரராவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

சித்தாந்த யுத்தம்

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக பாட்னாவில் சதாகத் ஆசிரமத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிப்போம்" என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. இந்தியாவை துண்டாடி, வெறுப்பையும் வன்முறையையும் விதைப்பதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஒரு சித்தாந்த யுத்தம் நடப்பதாகக் குறிப்பிட்டார்.

17 கட்சிகளின் தலைவர்கள் பேசியது என்ன?

இந்தக் கூட்டத்தைப் பொறுத்தவரை, 2024ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்குவது குறித்தே பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் இடங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான பிரச்னை நிலவுவதால், அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் தேர்தல் நெருக்கத்தில் மாநில மட்டத்தில் நடக்கக்கூடும்.

அதேபோல, பிரமதர் வேட்பாளர் யார் என்பதும் தேர்தலுக்குப் பிறகு விவாதிக்கப்படலாம். பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை பொறுத்தவரை ஒவ்வொரு தொகுதியிலும் தே.ஜ.கூ. வேட்பாளருக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒற்றை வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தை முன்னிறுத்தி வருகிறார்.

செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்த தலைவர்கள்

சுமார் நான்கு மணிநேரம் நடந்த இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய நிதீஷ் குமார், “தேர்தலை ஒன்றாகச் சந்திக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க விரைவிலேயே இன்னொரு கூட்டம் நடக்கும். 17 கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளன,” எனத் தெரிவித்தார்.

மமதா பானர்ஜி பேசும்போது, எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் பாசிச அரசுக்கு எதிராகத் திரண்டு நிற்பதுதான் தங்களுடைய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் ஷிம்லா நகரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

"ஒரு பொதுவான செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். இதை எப்படி எடுத்துச் செல்வதென அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் என தனித்தனி திட்டங்களை வகுக்க வேண்டும். அதேநேரம், ஒருங்கிணைந்து செயல்பட்டு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசைத் தூக்கியெறிய வேண்டும்" என்றார் அவர்.

ஸ்டாலின் முன்வைத்த யோசனைகள் என்ன?

இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை அவர் தனியாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ஸ்டாலின், “உடனடியாக விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால், தலைவர்கள் கூட்டாகப் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை" என்று தெரிவித்தார். மேலும் இந்தக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் என்ன என்பதையும் மு.க. ஸ்டாலின் அப்போது விளக்கினார்.

"ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், தொகுதிகளைப் பிரித்துக்கொள்ளலாம். அல்லது பொது வேட்பாளரை அறிவித்துக்கொள்ளலாம் என்று கூறினேன்.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி என்பது சரியான நிலைப்பாடு அல்ல. தேர்தலுக்கு முன்பே குறைந்தபட்ச செயல் திட்டம் வேண்டும். இது போன்று எழும் பிரச்னைகளைச் சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும்," என்றார் மு.க. ஸ்டாலின்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நீடிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன?

ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நீடிப்பதில் பல பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, டெல்லியில் அதிகாரிகள் மீது மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்காமல் இருப்பது, காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.கவின் நிலைப்பாட்டை ஆம் ஆத்மி கட்சி ஆதரித்தது ஆகியவை மிக முக்கியமான முரண்களாகப் பார்க்கப்படுகின்றன.

டெல்லி குறித்த மத்திய அரசின் அவசர சட்டம் மாநிலங்களவையில் வரும்போது அதை எதிர்க்க எதிர்க்கட்சிகளில் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் 11 கட்சிகள் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இதுவரை நிலைப்பாடு எதையும் எடுக்காமல் இருப்பது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகக் கடினமான காரியமாகவே இருக்கும் என்கிறார் காங்கிரசின் முன்னாள் செய்தித் தொடர்புச் செயலாளர் எஸ்.வி. ரமணி.

"காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்காததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, டெல்லி மசோதா விவகாரத்தில் காங்கிரசுக்குள் ஒருமனதான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இரண்டாவதாக, 2014இல் காங்கிரஸ் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்ததற்குக் காரணமே ஆம் ஆத்மி கட்சியும் அரவிந்த் கேஜ்ரிவாலும்தான்.

எதுவுமே இல்லாத 2ஜி விவகாரத்தையும் நிர்பயா விவகாரத்தையும் அன்னா ஹசாரேவுடன் சேர்ந்துகொண்டு அவர்தான் பூதாகரமாக்கினார். கோவாவில் துவங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.கவின் மற்றொரு கரமாகச் செயல்பட்டு, காங்கிரஸை தோற்கடித்தார். இம்மாதிரி சூழலில் ஆம் ஆத்மி கட்சியை எப்படி ஆதரிக்க முடியும்?

ஒரு பேச்சுக்கு, இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வாக்களித்தாலும் பஞ்சாப், டெல்லி மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணிக்கு வருமா?" என்று கேள்வி எழுப்புகிறார் ரமணி.

மேலும் "சில மாநிலங்களில் உள்ள சிக்கல்களையும் ரமணி சுட்டிக்காட்டுகிறார். சான்றாக, மேற்கு வங்கத்தில் சி.பி.எம்முடன் கூட்டணி இருப்பதால் திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடியாது. ஆனால், அதே நேரம் கேரள மாநிலத்தில் சி.பி.எம்முடன் கூட்டணி வைக்க முடியாது.

உத்தர பிரதேசத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அகிலேஷ் யாதவ் விரும்பவில்லை. ஹரியானாவில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க, இந்திய தேசிய லோக்தளம் விரும்பவில்லை” என்கிறார் அவர்.

‘ஜனநாயக உரிமைகளை மீட்பதற்கான கூட்டம்’

ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்தக் கூட்டம் மிக முக்கியமான ஒன்று என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன். "முழுமையாக அரசியல்படாத, மத்தியதர வர்க்கத்திற்கான கட்சியான ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் முதல் ராஷ்ட்ரிய ஜனதா தளம், தி.மு.க. போன்ற சமூக நீதி அரசியலை முன்வைக்கும் கட்சிகள் வரை இந்தக் கூட்டணியில் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்புகூட, இது போன்ற ஒரு கூட்டணி அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்தப் பின்னணியில் இத்தனை கட்சிகள் இணைந்து ஒரு விரிவான கூட்டணியை உருவாக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள். அதுதான் மிக முக்கியமான விஷயம்," என்கிறார் பன்னீர்செல்வன்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையிலான தீவிர முரண்பாடுகள் இந்தக் கூட்டணியை பாதிக்காதா?

"முரண்பாடுகளே இல்லாத உறவு ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது. ஆனால், இந்த முரண்பாடுகளையும் தாண்டிய ஓர் உறவை ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. புதிய குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கான முதல்படியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்.

பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டவர்கள், இந்தியாவின் ஜனநாயக உரிமைகளை மீட்க வேண்டும் என்ற ஒரு கருத்தில் இணைந்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்," என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களிக்க விரும்புபவர்கள்கூட, காங்கிரஸ் பலவீனமாக இருப்பதாகக் கருதும் வாய்ப்பிருக்கிறது. அந்தச் சூழலில் இம்மாதிரி ஒரு கூட்டணி அமைந்தால், அது எதிர்க்கட்சிகளை வலுவானதாகக் காட்டும் என்கிறார் ரமணி.

"குறிப்பாக தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி உருவாவதில் இம்மாதிரி தேர்தலுக்கு முந்தைய கூட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். இடங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பொறுத்தவரை, தேசிய அளவில் முடிவெடுக்காமல் ஒவ்வொரு மாநில மட்டத்திலும் முடிவெடுக்க வேண்டும். அப்படி நடந்தால், இந்தக் கூட்டணி நீடிக்கும். பா.ஜ.கவையும் தோற்கடிக்க முடியும்" என்கிறார் எஸ்.வி. ரமணி.

மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

அடுத்த ஆண்டுத் துவக்கத்தில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் பட்சத்தில், பல மாநிலங்களில் இருந்து ஏப்ரல் மாதம்வரை அயோத்திக்கு இலவச ரயில் சேவை இயக்கப்படலாம். அப்படி நடந்தால், அது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

‘ஃபோட்டோ செஷன்’ என்று அமித் ஷா கிண்டல்

ஆனால், இந்தக் கூட்டத்தை புகைப்படங்கள் எடுப்பதற்கான ஒரு வாய்ப்பு என விமர்சித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

"பாட்னாவில் இன்று ஒரு ஃபோட்டோ செஷன் நடக்கிறது. அவர்கள் பிரதமர் நரேந்திர மோதியையும் தேசிய ஜனநாயக கூட்டணியையும் எதிர்க்க விரும்புகிறார்கள்.

வரவுள்ள 2024ஆம் ஆண்டு தேர்தலில் 300 இடங்களுக்கும் மேல் பிடித்து, பிரமதர் மோதி மீண்டும் ஆட்சியமைப்பார் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்," என்று கூறியிருக்கிறார்.

கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்தக் கூட்டணியில் இணையப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி என்ன செய்யப் போகிறது என்பதைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்கும்.

கர்நாடக மாநில தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக, பா.ஜ.கவை பிரதான எதிரியாகக் கருதிய பி.ஆர்.எஸ். தற்போது காங்கிரஸை பிரதான எதிரியாகக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

வெள்ளிக்கிழமை நடந்த கூட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பி.ஆர்.எஸ். கட்சித் தலைவர்களில் ஒருவரும் தெலங்கானா அமைச்சருமான கே.டி. ராமாராவ், "பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் கட்சியோதான் தலைமை வகிக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. இதற்கு மாற்றான ஒரு சித்தாந்தம் வர வேண்டும்" என்று கூறியிருக்கிறார். ஆகவே, வரும் காலத்தில் இந்தக் கட்சி என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெளிவாக இல்லை.

மொத்தம் 543 இடங்களைக் கொண்ட இந்திய மக்களவையில் இந்த எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாக 200க்கும் குறைவான இடங்களே உள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 50 இடங்களும் திருணமூல் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இரட்டை இலக்கத்தில் மக்களவை உறுப்பினர்களும் உள்ளனர்.

சிவசேனாவிடம் 18 இடங்கள் இருந்தாலும், அந்தக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டிருப்பதால், எதிர்க்கட்சிகளோடு கைகோர்த்திருக்கும் உத்தவ் தாக்கரே பக்கம் எத்தனை எம்பிக்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகவில்லை.

எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 12இல் சிம்லாவில் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: