You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தேவர் மகன்' இசக்கி 'மாமன்னனாக' என்ன செய்தார்? மாரி செல்வராஜ் சொல்ல வருவது என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பியுள்ளன. தேவர் மகனின் இசக்கிதான் தனது மாமன்னன் என்கிறார் மாரி செல்வராஜ். அது ஏன்?
வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதில், படக் குழுவைச் சேர்ந்தவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் தவிர, நடிகர் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அந்த இசை வெளியிட்டு விழாவின் வீடியோ தொகுப்பு சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் மாரி செல்வராஜ் பேசும்போது தேவர் மகன் பற்றிக் குறிப்பிட்டது சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
"'மாமன்னன்’ படம் உருவானதற்கு காரணமே ‘தேவர் மகன்’ படம்தான். ’தேவர் மகன்’ பார்க்கும்போது எனக்கு வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிட்டிவ், நெகட்டிவ் என அனைத்துமே ஏற்பட்டன. அந்த நாளை என்னால் கடக்கமுடியவில்லை.
'தேவர் மகன்’ எனக்கு மிகப்பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். இதை எப்படிப் புரிந்துகொள்வது? இந்தப் படம் சரியா, தவறா என்று புரியாமல் அப்படி ஒரு வலி.
இந்த ‘தேவர் மகன்’ உலகில் பெரிய தேவர் இருக்கிறார், சின்ன தேவர் இருக்கிறார். அதில் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி முடிவு செய்து என் அப்பாவுக்காக எடுத்த படம்தான் ‘மாமன்னன்’.
நான் ‘பரியேறும் பெருமாள்’ எடுக்கும்போதும் ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ‘கர்ணன்’ பண்ணும்போதும் ‘தேவர் மகன்' பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன். ’மாமன்னன்’ பண்ணும்போதும் ‘தேவர் மகன்' பார்த்துவிட்டுத்தான் எடுத்தேன்.
வடிவேலு நடித்த அந்த இசக்கி கதாபாத்திரம்தான் ‘மாமன்னன்’. அந்த இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படம்" என்று குறிப்பிட்டார் மாரி செல்வராஜ்.
இதையடுத்து மாரி செல்வராஜ் குறித்தும் தேவர் மகன் திரைப்படம் குறித்தும் சமூக ஊடகங்களில் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.
மாரிசெல்வராஜ் தனது பேச்சில், தேவர் மகன் படத்தில் வடிவேலு ஏற்று நடித்த இசக்கி கதாபாத்திரத்தை ஒடுக்கப்பட்ட சமூகமாக கருதியிருப்பதாகவும் ஆனால் அது சரியான கருத்து அல்ல எனவும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
தேவர் மகன் படத்தில் பூட்டிக் கிடக்கும் கோவிலின் பூட்டை உடைக்கும் வடிவேலு "தெக்கத்திக் கள்ளனடா, தென் மதுரை பாண்டியன்டா" என்ற பாட்டைப் பாடிக்கொண்டே பூட்டை உடைப்பதை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேவர் மகனில் வரும் இசக்கி பாத்திரம் யார்?
இசக்கி பாத்திரத்தை என்னவாகக் கருதினார் என மாரி செல்வராஜ் தனது பேச்சில் தெளிவாகச் சொல்லவில்லை என்பதை ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கமும் சுட்டிக்காட்டுகிறார்.
"அந்த விழாவில் ஆரம்பத்தில் சிறப்பாகப் பேசிவந்த மாரி செல்வராஜுக்கு, கமலை பற்றிப் பேசும்போது சற்று பதற்றம் வந்துவிட்டது. ஆனால், அவர் சொல்ல வருவதை நான் பின்வருமாறு புரிந்துகொள்கிறேன்.
தேவர் மகன் சாதியைத் தூக்கிப்பிடிக்கும் படமாக இருந்தது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பிரச்னைகள் வந்தன. அந்தப் பிரச்னைகளால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். அந்தத் தாக்கம் என்னிடம் உண்டு என்பதைத்தான் அவர் சொல்ல வந்தார்," என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
தற்போது சமூக ஊடகங்களில் பலர், இசக்கி என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாத்திரமல்ல என்று சுட்டிக்காட்டினாலும், அது ஒரு அடிநிலைப் பாத்திரம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
"அது தேவர் கேரக்டரா, தலித் கேரக்டரா என்பது முக்கியமல்ல. அது ஒரு அடிநிலை பாத்திரம். அந்தப் படத்தில் தேவர் பாத்திரம் உடமைச் சமூகத்தைச் சேர்ந்ததாகக் காட்டப்படுகிறது.
இசக்கி அந்த சமூகத்திலிருந்தே வந்து, தேவர் குடும்பத்தில் வேலை பார்க்கலாம். அல்லது அந்த ஊரிலேயே வசிக்கக்கூடிய, சாதிப் படிநிலையில் கீழே இருக்கக்கூடிய சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.
ஆனால், இசக்கி ஒரு அடிநிலை பாத்திரம் என்பதுதான் அதில் முக்கியம். அந்தக் குடும்பத்திற்குப் பணிந்து இருக்கக்கூடிய பாத்திரம்தான். அந்தப் பணிவு, ஒடுக்கப்பட்டோரின் நிலையாகவும் இருப்பதால், அதை தலித்தாக புரிந்துகொள்கிறார்கள்," என்கிறார் ஸ்டாலின்.
இடைசாதியினரின் ஆதிக்கத்தை வைத்து, 1990களில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்தன. அம்மாதிரி படங்களுக்கு தேவர் மகன் ஒரு முக்கிய முன்மாதிரியாக இருந்தது என்கிறார் ஸ்டாலின்.
சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேசிய கமல்ஹாசன், தற்போது அதேபோல ஒரு படத்தை எடுத்தால் இதுபோன்ற பெயரை வைத்திருப்போமா அல்லது "போற்றிப் பாடடி பெண்ணே" பாடலை வைத்திருப்போமா என்பதெல்லாம் கேள்விக்குரியதுதான்; படத்திற்குப் பெயர் வைக்கும்போது எதையும் யோசித்து வைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைச் சுட்டிக்காட்டும் ஸ்டாலின் ராஜாங்கம், "ஒரு படத்தை உருவாக்குபவர்கள், அந்தப் படம் எந்த விளைவை ஏற்படுத்த வேண்டும், எம்மாதிரி புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று நினைத்து எடுக்கிறார்களோ, சமூகமும் அப்படியே புரிந்துகொள்ளும் என எதிர்பார்க்க முடியாது.
அமரன் படத்தில் வரும் 'சந்திரரே, சூரியரே.. நட்சத்திர நாயகரே' பாடலை வட மாவட்டங்களில் சாதாரணமாகக் கேட்பார்கள். அதற்கு உள்ளர்த்தம் ஏதும் கிடையாது. ஆனால், மதுரையில் வந்து கேட்டால், அதற்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது. "வீரமுள்ள ஆம்பள... அவன் மறவர் குல மணிப்புள்ள" என்ற வரியை வைத்து இந்த அர்த்தம் உருவாகிறது.
தேவர் மகன் படம் 90களில் வெளியானது. அப்போது அந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு புதிய அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சூழல் இருந்தது.
ஆகவே ஒவ்வொருவரும் அதில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டனர். இதற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் இடைநிலை ஆதிக்க சாதியினரை வைத்து இதேபோன்ற சித்தரிப்புகளுடன் கூடிய படங்கள் உருவாக இது காரணமாக அமைந்தது. சமூகத்தில் உள்ள மேல் - கீழ் என்ற அமைப்பை இந்தப் படங்களில் வரும் காட்சிகள் நிலைப்படுத்துகின்றன," என்கிறார் ஸ்டாலின்.
முடிவாகப் பார்க்கும்போது, தேவர் மகன் திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்திற்கு மாற்றான ஒரு தாக்கத்தை உருவாக்க மாரி செல்வராஜ் விரும்புவதாகவும், அதற்காகவே இசக்கி பாத்திரத்தை நாயகனாக மாற்றிக்கொள்வதாகவும் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்