சென்னையில் புதிதாக கார் வாங்க விரும்புவோர் அறிய வேண்டிய புதிய கொள்கை

சென்னையில் கார் வாங்க பார்க்கிங் சான்று கட்டாயம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் சாலைகள் மற்றும் தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த தனிக் கொள்கை ஒன்றை (parking policy 2025) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கார்களை வாங்கும்போது வாகன நிறுத்தச் சான்று கட்டாயமாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வாகன நிறுத்தக் கொள்கை 2025 என்ன கூறுகிறது? இத்திட்டத்தை செயல்படுத்துவதில் காத்திருக்கும் சவால்கள் என்ன?

வாகன நிறுத்தம் தொடர்பாக விரிவான செயல்திட்டம் வெளியீடு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், சென்னையில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, அதனால் ஏற்படும் வாகன நிறுத்த தேவையை அறிந்து மேலாண்மை செய்யும் வகையில் வாகன நிறுத்தக் கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து, வாகன நிறுத்தம் தொடர்பாக விரிவான செயல்திட்டத்தை சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் (Chennai Unified Metropolitan Transport Authority - CUMTA) வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த ஜனவரி 20 ஆம் தேதியன்று நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தக் கொள்கை ஏன்?

அதில், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையத்திற்குட்பட்ட 5904 சதுர கி.மீ பரப்பளவில் 2023 ஆம் ஆண்டில் 1.45 கோடி மக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 92 லட்சம் வாகனங்கள் இருப்பதாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தரவுகள் கூறுகின்றன.

ஆனால், போதுமான பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் மாசுபாடு, வாகன நெரிசல், வாகன நிறுத்தப் பற்றாக்குறை என பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அரசின் வாகன நிறுத்தக் கொள்கை கூறுகிறது.

'இதனை சரிசெய்து நகரின் முக்கிய நிலப்பரப்புகளை தனியார் வாகன நிறுத்தங்களாக மாற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும் நிலத்தின் சந்தை மதிப்பைக் கொண்டு இவற்றை வரைமுறைப்படுத்த வேண்டும்' எனவும் கூறுகிறார், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் அய்யம்பெருமாள்.

சென்னை, புதிய வாகன நிறுத்த கொள்கை

பட மூலாதாரம், CUMTA

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சென்னை நகரில் அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. அடுத்தபடியாக கார்கள் உள்ளன. ஆனால், அவற்றுக்கான நிறுத்துமிடங்களுக்கு பற்றாக்குறை நீடிக்கிறது. இதற்கான தீர்வை வாகன நிறுத்தக் கொள்கை முன்வைக்கிறது" என்கிறார்.

"வாகன நிறுத்தக் கொள்கை என்பது நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவது, நெரிசலைக் குறைப்பது மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனைச் செயல்படுத்துவதற்கு சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (Urban Local Bodies), போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றின் பங்களிப்பு அவசியமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகன நிறுத்தக் கொள்கையை தயாரிப்பதற்கு டெல்லி, சூரத், புனே, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களில் அமலில் உள்ள வாகன நிறுத்தக் கொள்கைகளை சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.

இதுதொடர்பான செயல்திட்டத்தை சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் முன்வைத்துள்ளது. தனிநபர் வாகனப் பயன்பாட்டை தவிர்த்து பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இவை உள்ளது.

சென்னை, புதிய வாகன நிறுத்த கொள்கை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, நகரின் முக்கிய நிலப்பரப்புகளை தனியார் வாகன நிறுத்தங்களாக மாற்ற வேண்டிய தேவை உள்ளதாக கூறுகிறார், ஜெயக்குமார் அய்யம்பெருமாள்

அதன்படி, அரசு, தனியார் நிறுவனங்களுக்கு சில ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.

* 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், வாகன நிறுத்தக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓராண்டுக்குள் பொதுப் போக்குவரத்து மற்றும் மோட்டார் அல்லாத பயணத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

*தங்களின் ஊழியர்கள் மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பேருந்து சேவைகள் ஆகியவற்றை அணுகுவதற்கு ஏற்ற வசதிகளை வழங்குதல்

*பொது மற்றும் இயந்திரம் இல்லா போக்குவரத்து முறைகளில் பயணிப்பதற்கு ஊக்கத்தொகையை வழங்குவது

*போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பணிநேரங்களில் மாற்றம், வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குதல் எனப் பட்டியலிட்டுள்ளது.

" பல இடங்களில் மக்கள் எளிதில் அணுகும் வகையில் பொதுப் போக்குவரத்து இல்லை. அப்படியிருக்கும் போது வாகன நிறுத்தக் கொள்கையை அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன" எனக் கூறுகிறார், நுகர்வோர் நலன் வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் நடராஜன்.

சென்னை, புதிய வாகன நிறுத்த கொள்கை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, வாகன நிறுத்தக் கொள்கையை அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன என கூறுகிறார், வழக்கறிஞர் நடராஜன்

இதுகுறித்து சென்னைப் பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் அய்யம்பெருமாளிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"பொதுப் போக்குவரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. உதாரணமாக, சென்னை நகரில் சுமார் 3,300 பேருந்துகள் உள்ளன. ஆனால், மக்கள் தொகைக்கேற்ப கணக்கிட்டால், 6,500 பேருந்துகள் இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

சென்னையை சுற்றியுள்ள 190 வழித்தடங்களில் சிறிய அளவிலான பேருந்துகளை இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறும் அவர், "இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம், புறநகர் ரயில் சேவையை அதிகப்படுத்துதல், மாநகர பேருந்துகளை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் வாகன நிறுத்தக் கொள்கை என்பது மிக எளிதாகும்" என்கிறார்.

பொதுப் போக்குவரத்து எளிதானதாக மாறும் போது நகரத்தின் கட்டமைப்பு முற்றிலும் மாறிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், குடியிருப்புகளுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து வாகன நிறுத்தக் கொள்கை முன்வைத்துள்ள தீர்வு, விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சென்னை, புதிய வாகன நிறுத்த கொள்கை

பட மூலாதாரம், CUMTA

"கார் வாங்க வாகனச் சான்று கட்டாயம்"

தெருக்களில் எந்தவித ஒழுங்குமுறையும் இல்லாமல் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக அரசின் வாகன நிறுத்தக் கொள்கை கூறுகிறது.

'சாலையில் ஏற்படும் நெரிசலை குறைக்கவும் சாலைக்கு வெளியே வாகன நிறுத்த இடங்களை ஏற்பாடு செய்யும்படி வாகன உரிமையாளர்களைத் தூண்டவும் கட்டடப் பகுதிகளில் வாகன நிறுத்த அனுமதிகள் (Residential Parking Permit) கோரப்படலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தனிநபர் வாகனப் பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் வாகனம் நிறுத்த இடம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வாகன நிறுத்த சான்று அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி தனிநபர் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நீண்ட கால நடவடிக்கையாக இவை பார்க்கப்படுவதாக வாகன நிறுத்தக் கொள்கை கூறுகிறது.

வாகன நிறுத்தச் சான்று சாத்தியமா?

"சென்னையில் மிகச் சிறிய இடவசதியில் வீடுகள் கிடைக்கும் போது அங்கு வாகன நிறுத்தத்தை எதிர்பார்ப்பது கடினம். அதுவும் சென்னை போன்ற பெருநகரத்தில் மிகவும் சிரமம்" எனக் கூறுகிறார் வழக்கறிஞர் நடராஜன்,

"தங்களின் வாகன நிறுத்த இடத்தை உரிமையாளர்கள் உண்மையாகவே காட்டுகிறார்களா எனத் தெரியாது. இதில் தவறு நடக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "அபார்ட்மென்ட்டில் 10 வீடுகள் இருந்தால் 6 வீடுகளுக்கும் மட்டுமே வாகன நிறுத்தம் ஒதுக்கப்படுகிறது. மற்றவர்கள் எந்த இடத்தைக் காட்டுவார்கள்?" எனவும் கேள்வி எழுப்பினார்.

பிபிசி தமிழிடம் பேசிய இந்திய தொழில் கூட்டமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் சங்கர், "மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வாகன நிறுத்தத்தை முறைப்படுத்துவதற்காக இது கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகன நிறுத்தங்களை தொழில்நுட்ப ரீதியாக அணுக முடியும். இதனால் வாகனப் பயன்பாடு குறையும் என்பது ஏற்புடையதல்ல" என்றார்.

மாநகராட்சி துணை மேயர் சொல்வது என்ன?

"வாகன நிறுத்த சான்று கட்டாயமாக்கப்பட்டால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்" எனக் கூறுகிறார் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்.

"மிகப் பழமையான நகரமாக சென்னை உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே இது சாத்தியப்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

வணிக ரீதியாக வாகனங்களை பயன்படுத்துகிறவர்களை மட்டும் கணக்கில் எடுக்க வேண்டும் எனவும் வீடுகளில் கார் வைத்திருப்பவர்களை இடையூறு செய்ய வேண்டாம் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் மகேஷ்குமார் தெரிவித்தார்.

சென்னை, புதிய வாகன நிறுத்த கொள்கை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, வாகன நிறுத்த சான்று கட்டாயமாக்கப்பட்டால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார் மகேஷ் குமார்

தென் சென்னை, மத்திய சென்னையில் இவற்றை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் காட்டிலும் வடசென்னையில் அதற்கான சாத்தியம் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"வட சென்னையில் நெருக்கடியான பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள நடுத்தர மக்கள் கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போய்விடும்" என்கிறார் அவர்.

வாகன நிறுத்தச் சான்று பெறுவதை ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை மாநகராட்சி இன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்தார்.

எப்போது அமலுக்கு வரும்?

"ஆனால், வாகன நிறுத்தச் சான்று முறை உடனடியாக அமலுக்கு வரப் போவதில்லை" எனக் கூறுகிறார், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் அய்யம்பெருமாள்.

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்பாட்டுக்கு வருவது, புறநகர் ரயில் சேவையை அதிகப்படுத்துதல், மாநகர பேருந்துகளை அதிகரித்தல் ஆகியவற்றை முழுமையாக கொண்டு வந்த பிறகே இவை பயன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை, புதிய வாகன நிறுத்த கொள்கை
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பொதுப் போக்குவரத்து எளிதானதாக மாறும்போது தனி நபர்களின் வாகனப் பயன்பாடு குறையும் எனவும் ஜெயக்குமார் அய்யம்பெருமாள் குறிப்பிட்டார். ஆனால், இந்த நிலையை எட்டுவதற்கு 3 முதல் நான்கு ஆண்டுகள் தேவைப்படலாம் என்கிறார் அவர்.

வடசென்னை பகுதியில் பேருந்துகள், மினி பேருந்துகள் என பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை முழுவதும் பல பகுதிகளில் ஷேர் ஆட்டோ என்பது முக்கியமான ஒன்றாக மாறிவிட்டதாக கூறிய அவர், "சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் முறையான அனுமதி இல்லாமல் ஓடுகின்றன. இவர்களுக்கு அனுமதி கொடுத்து செயல்பட வைக்கலாம்" என்கிறார்.

தொழில்துறையினர் சொல்வது என்ன?

"சாலைகளில் பலரும் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். வாகன நிறுத்தக் கொள்கை அமலாகும்போது அவ்வாறு விட்டுச் செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் சங்கர்.

தொடர்ந்து பேசிய அவர், "மெட்ரோ ரயில் நிலையங்களில் கார், பைக் ஆகியவற்றை நிறுத்திவிட்டு போக வேண்டிய இடங்களுக்குப் பயணிக்கலாம். அரசுக்கும் இதன்மூலம் வருவாய் அதிகரிக்கும்" எனவும் அவர் தெரிவித்தார்.

"வாகன நிறுத்தம் எங்கே உள்ளது என்பதை செயலி (APP) மூலம் அறிந்து அங்கே வாகனத்தை நிறுத்தலாம். உலகில் வளர்ச்சியடைந்த நகரங்களில் இந்த வசதிகள் உள்ளன. சென்னையில் அமல்படுத்தப்பட்டால் வரவேற்பைப் பெறும்" எனக் கூறுகிறார் சங்கர்.

சென்னை, புதிய வாகன நிறுத்த கொள்கை

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, மெட்ரோ ரயில் நிலையங்களில் கார், பைக் ஆகியவற்றை நிறுத்திவிட்டு போக வேண்டிய இடங்களுக்குப் பயணிக்கலாம் என்கிறார் சங்கர்

அண்ணா நகரில் முன்னோடி திட்டம்

இந்த விவகாரத்தில் வேறொரு தகவலையும் ஜெயக்குமார் அய்யம்பெருமாள் முன்வைத்தார்.

"பார்க்கிங் கட்டணத்தை தற்போது உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கின்றன. ஆனால் அபராதம் விதிப்பது, வாகனத்தை பறிமுதல் செய்வது ஆகியவற்றை காவல்துறை செய்கிறது" என்கிறார்.

அதற்கு மாறாக கட்டண வசூல் செய்பவரே வாகனத்தைப் பறிமுதல் செய்யும் வகையில் வாகன நிறுத்தக் கொள்கை பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதாவது, விதிகளை மீறி வாகனம் நிறுத்தப்பட்டால் கட்டண வசூலிப்பாளர் செயலி மூலம் அதைப் புகைப்படம் எடுத்து, அவரே வாகனத்தை பறிமுதல் செய்வதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டு செயல்படும வகையில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வாகன நிறுத்தக் கொள்கையின் ஓர் அங்கமாக வரும் ஏப்ரல் மாதத்தில் சென்னை அண்ணா நகரில் முன்னோடி திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட உள்ளதாக கூறுகிறார் ஜெயக்குமார் அய்யம்பெருமாள்.

"அண்ணா நகரில் எந்தப் பகுதியில் வாகனத்தை நிறுத்தினாலும் அங்கு கியூ ஆர் கோடு பலகை இருக்கும். அதை ஸ்கேன் செய்து எத்தனை மணி நேரம் வேண்டுமோ அதற்கேற்ப பணம் செலுத்தலாம்" என்கிறார் ஜெயக்குமார் அய்யம்பெருமாள்.

வாகன நிறுத்தத்தைக் கூடுதல் நேரம் நீட்டித்துக் கொள்ள வேண்டும் என்றால் செயலியை பதிவிறக்கம் செய்து அதனை பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)