இந்தியாவில் விபத்துகளில் தினசரி பலியாகும் 45 குழந்தைகள் - வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எப்படி?

இந்தியா: விபத்துகளில் தினசரி பலியாகும் 45 குழந்தைகள் - வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், சங்கரநாராயணன் சுடலை
    • பதவி, பிபிசி தமிழ்

உங்கள் குழந்தைகளைத் தனியாக பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சரியாக பள்ளிக்குச் சென்று சேர்ந்தார்களா என யோசித்துக் கொண்டிருக்கும் பெற்றோரா நீங்கள்?

மோட்டார் வாகனங்களில் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது என யோசிக்கிறீர்களா?

நீங்கள் மட்டுமே இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதில்லை. நாடு முழுவதுமே குழந்தைகளுடன் தொடர்புடைய சாலைப் பாதுகாப்பு விவாதத்திற்குரிய பொருளாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளில் 18 வயதுக்கு உட்பட்ட 45 பேர் மரணமடைவதாக, ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் மற்றும் பெங்களூருவில் உள்ள உளநலன் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIHMANS) இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் மரணமடைந்த 18 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை 16,443 இது கடந்த 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து மரணங்களைக் காட்டிலும் (7,700) 113 சதவீதம் அதிகம்.

இந்த 10 ஆண்டு இடைவெளியில் மொத்த சாலை விபத்து மரணங்களின் எண்ணிக்கை 18 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணம் 73 சதவீதம் அதிகரித்துள்ளது. சாலை விபத்துகளில் மரணமடைவோரின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 10 சதவீதம் பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்தப் புள்ளிவிவரங்கள் சாலை விபத்துகளின் தீவிரத்தை உணர்த்துவதோடு, இதில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டுகின்றன. சாலை விபத்துகள் வெறும் போக்குவரத்து சார்ந்த பிரச்னை அல்ல, மாறாக குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் செயல் என கூறுகிறது யுனிசெஃப்.

உலக வங்கியின் கூற்றுப்படி, சாலை விபத்துகளை 10 சதவீதம் குறைப்பது ஒரு நாட்டின் தனிநபர் வருவாய் அடிப்படையிலான உள்ளாட்டு உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரிக்க உதவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'விபத்துகள் குடும்பத்தையே வறுமையில் தள்ளும்'

பிபிசி தமிழிடம் பேசிய யுனிசெஃப் அமைப்பின் சுகாதாரப் பிரிவுக்கான இந்திய தலைவர் டாக்டர் விவேக் வீரேந்திர சிங், உடல், உளவியல், சமூக மற்றும் அறிவாற்றல் ரீதியாக வளர்ச்சியடையும் நிலையில் இருக்கும் குழந்தைகள் சாலை விபத்துக்கு எளிதில் இலக்காகக் கூடியவர்களாக இருப்பதாகத் தெரிவித்தார்.

"உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளைத் தாண்டி, நீண்டகால உளவியல் சிக்கல்களுக்கும், கல்வி இடைநிற்றல்களுக்கும் பல நேரங்களில் விபத்துகள் காரணமாகலாம். குழந்தைகள் காயமடையும்போது அந்தக் குடும்பமே மருத்துவச் செலவு, பெற்றோர்களின் பணி பாதிப்பது உள்ளிட்ட காரணங்களால் வறுமைக்குள் தள்ளப்படலாம்" எனவும் விவேக் கூறுகிறார்.

ஒரு சாலை விபத்து ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான அவசர சிகிச்சையில் இந்திய மருத்துவத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருப்பதாகக் கூறும் விவேக் 108 ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுவதும் உடனடி சிகிச்சை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். ஜி.வி.கே. அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் இந்தியாவில் நம்பத்தன்மை வாய்ந்த அவசர ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை தனித்துவமானது என்பதோடு, இதற்கான உள்கட்டமைப்புகள் இந்தியாவில் இன்னமும் வளரும் நிலையிலேயே இருப்பதாகவும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயிற்சி பெற்ற அவசர சேவை மருத்துவர்கள் போன்றவற்றில் இருக்கும் குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நிதி ஆயோக்கின் நிதி உதவியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 2019-20ஆம் நிதியாண்டில் 34 சதவீத ஆம்புலன்ஸ்கள் மட்டுமே பயிற்சி பெற்ற துணை மருத்துவப் பணியாளர்களுடன் இயக்கப்படுகின்றன.

குழந்தைகளை மீட்பதற்கான உயிர் காக்கும் கருவிகளைக் கொண்ட ஆம்புலன்ஸ்கள் குறித்த சரியான தரவுகள் இல்லை. 75 சதவீத மருத்துவமனைகள் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்கான உபகரணங்கள் இன்றி இயங்குவதும் தெரிய வந்துள்ளதாக டாக்டர் விவேக் கூறுகிறார்.

இந்தியாவில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள்

விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் 45 மரணங்கள் - தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 108 ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுவதும் உடனடி சிகிச்சை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது

சாலை விதிகளை அமல்படுத்துவதில் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களும் பல நேரங்களில் விபத்துகளுக்குக் காரணமாக அமைகின்றன.

இரு சக்கர வாகனங்கள் இருவருக்கே என்பது விதியாக இருந்தாலும் சாலைகளில் இயல்பில் அப்படியான சட்டங்களை நடைமுறைப்படுத்த முடிவதில்லை. பெற்றோருடன் பயணிக்கும் குழந்தைகள் பெட்ரோல் டாங்கில் அமர்ந்து பயணிப்பது சாலைகளில் அன்றாடம் பார்க்கும் காட்சிதான். இன்னும் சில நேரங்களில் 2+2 என இரண்டு குழந்தைகளும், அதற்கு மேலும் ஏறிச் செல்வதையும் காணலாம்.

சென்னையில் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் அருண்குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, "நானும் எனது மனைவியும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இருவருமே தனியார் பணியில் இருக்கிறோம். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கார் என்பதை அத்தியாவசியமான தேவையாக நாங்கள் உணரவில்லை என்பதால் நாங்கள் தற்போது வரை வாங்கவில்லை. நகருக்குள் குறைவான தூரம் பயணிக்கும்போது, எனது மகனை எனக்கு முன்னதாக அமர வைத்து பயணிப்பதை வசதியாக உணர்கிறேன். இதுவே நீண்ட தூரம் செல்வதென்றால் வாடகைக்கு கார் எடுத்துக் கொள்வோம்," என்றார்.

விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் 45 மரணங்கள் - தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இருசக்கர வாகனங்களில் பயணிப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல

ஓரளவுக்கு பொருளாதாரச் சூழல் இருப்பவர்களும்கூட இருசக்கர வாகனங்களில் 3வது நபராக குழந்தைகளை அழைத்துச் செல்வதைப் பாதுகாப்பானதாகவே கருதுகின்றனர்.

குழந்தைகள் பெரும்பாலும் 14 வயதை எட்டுவதற்கு முன்பாக பெற்றோருடன் பயணிக்கும்போதே விபத்துகளில் சிக்குகின்றனர். இதிலும் பெரியவர்களும், குழந்தைகளும் சேர்ந்து பயணிக்கும் ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால், இதில் அதிக பாதிப்பை எதிர்கொள்வது குழந்தைகள்தான் என்பதை மருத்துவர்களும், நிபுணர்களும் உரிய காரணங்களுடன் எடுத்துரைக்கின்றனர்.

இந்திய தானியங்கி ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (ARAI) பொறியியல் வடிவமைப்புத் துறை துணை இயக்குநரான (Deputy Director and HoD Passive Safety Lab and Engineering Design & Simulation) ராகுல் மகாஜனிடம் பேசிய போது அவரது துறைசார் நிபுணத்துவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இரு சக்கர வாகனங்கள் வடிவமைப்பு ரீதியாகவே நிலையற்றவை எனக் கூறும் ராகுல் மகாஜன் தவிர்க்க முடியாத காரணத்தால் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்ல நேரிட்டால் அவர்களும் ஹெல்மெட் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கார் எது?

விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் 45 மரணங்கள் - தீர்வு என்ன?
படக்குறிப்பு, ராகுல் மஹாஜன், துணை இயக்குநர், பொறியியல் வடிவமைப்பு துறை, இந்திய தானியங்கி ஆராய்ச்சி கூட்டமைப்பு (ARAI)

ஆனால் கார்களை பொறுத்தவரை இந்தியாவில் பாரத் என்கேப் (Bharat New Car Assessment Program) புதிய கார்கள் சந்தைக்கு வரும்போது அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து தரக்குறியீடுகளை வழங்குகிறது என்பதை ராகுல் மகாஜன் குறிப்பிட்டார்.

குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரையிலும் கார்களில் 18 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தைகளைப் போன்று பொம்மைகள் வைத்து (Dummies) விபத்து நேரும்போது எப்படி எதிர்வினை புரிகிறது என்று ஆராய்வதாகக் குறிப்பிடுகிறார் ராகுல் மகாஜன். மேலும், இதன் அடிப்படையில் இந்தியாவில் அக்டோபர் 2023 முதல் கார்களுக்கான பாதுகாப்பு தரக் குறியீடு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட வாகனம் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதும் தனியாக ஸ்டார் ரேட்டிங் மூலம் சுட்டிக் காட்டப்படுகிறது.

ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்டு எனப்படும், இந்திய தர நிர்ணய முறையில் குழந்தைகளுக்கான இருக்கைகள் குறித்த விளக்கமும் இருப்பதாக அவர் விளக்கமளித்தார். இதன்படி குழந்தைகளின் வயது, உடல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இருக்கைகளைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் விளக்கினார்.

குழந்தைகள் சீட் பெல்ட் அணிவது ஆபத்தா?

விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் 45 மரணங்கள் - தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கார்கள், பாரத் என்கேப் ரேட்டிங் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன

பெரியவர்களுக்கான சீட் பெல்ட் குழந்தைகளுக்கு ஏன் ஏற்றதல்ல என்று விளக்கிய ராகுல் மகாஜன், இந்தியாவில் பொதுவாக கார்களில் பொருத்தப்படும் சீட் பெல்ட்கள் வயது வந்த ஆண்களின் உடல் அமைப்பைக் கருத்தில் கொண்டு அமைக்கப்படுபவை.

இவற்றில் குழந்தைகள் மட்டுமின்றி, உருவத்தில் சிறிய பெண்களோ, ஆண்களோ அமர்ந்தால்கூட இந்த சீட் பெல்ட்கள் அவர்களைக் காப்பதற்கு போதுமானது அல்ல எனவும் ராகுல் மகாஜன் குறிப்பிடுகிறார்.

விபத்து நேரும்போது வளர்ச்சியடையாத உடல் உறுப்புகளைக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கழுத்தில் சீட் பெல்ட்கள் காயங்களை ஏற்படுத்தலாம் எனவும் அவர் அபாயத்தை விளக்கினார்.

குழந்தைகள் மரணம்: முதன்மைக் காரணியாகும் விபத்துகள்

விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் 45 மரணங்கள் - தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரியவர்களுக்கான சீட் பெல்ட் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல

விபத்தில் சிக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை விளக்கினார் பெங்களூருவில் உள்ள தேசிய உளவியல் நலன் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் துணை பேராசியர் டாக்டர் கௌதம் மேலூர் சுகுமாரன்.

யூனிசெஃப் அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஈடுபட்டபோது, தாம் சந்தித்த சவால்களையும், எழுந்த கேள்விகளையும் விளக்கினார்.

இந்தியாவை பொறுத்தவரை, ஒரு காலத்தில் தடுப்பூசியால் தடுக்கப்படக் கூடிய நோய்கள் மற்றும் குழந்தைப் பிறப்பின்போது நிகழும் மரணங்களே அதிக எண்ணிக்கையில் இருந்தன.

ஒரு நாடு வளர்ச்சியடையும்போதும் பொருளாதாரச் சூழல் வளரும்போதும் இதைக் கட்டுப்படுத்த முடிகிறது எனக் கூறும் சுகுமாரன், இதற்கு மாறாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலை விபத்துகள் குழந்தைகள் மரணத்திற்கான முதன்மைக் காரணியாக உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

சாலை விபத்து மரணங்களை 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாகக் குறைக்க இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், இந்த மரணங்களில் 10 சதவீதம் பங்கு வகிக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் கௌதம் மேலூர் சுகுமாரன் கூறினார்.

விபத்தில் குழந்தைகள் அதிகமாக சிக்குவது ஏன்?

சாலை விபத்துகள் குழந்தைகள் மரணத்துக்கான முதன்மைக் காரணியாக மாறி வருகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாலை விபத்துகள் குழந்தைகள் மரணத்துக்கான முதன்மைக் காரணியாக மாறி வருகிறது

"குழந்தைகளின் தலை, உடலுடன் ஒப்பிடும்போது பெரிதாக இருக்கும். இதுவே பெரியவர்களின் உடல் உருவத்துடன் ஒப்பிடும்போது தலையின் அளவு சிறிதாகிவிடும். இது குழந்தைகளுக்கு தலையின் மீதான இயக்க கட்டுப்பாட்டைக் குறைக்கிறது. இது விபத்துகளின்போது எளிதில் காயமடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்," என்று விளக்கினார் மருத்துவர் சுகுமாரன்.

அதுகுறித்து விளக்கமளித்தபோது, குழந்தைகளின் உடலில் ரத்தத்தின் அளவு குறைவாகவே இருக்கும், பெரியவர்களுக்கு 4.5 லிட்டர் ரத்தம் இருந்தால் குழந்தைகளின் உடலில் 1.5 முதல் 2 லிட்டர் மட்டுமே ரத்தம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

"இது விபத்துகளின்போது ரத்த இழப்பு எற்பட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெறும்போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உடலியல் ரீதியாக அவர்களால் வேகமாக வரும் வாகனங்களின் தூரத்தைக் கவனிக்க முடியாது. நேராக இருக்கும் பார்வையைத் தவிர, அவர்களின் வலப்புறம் அல்லது இடப்புறம் வரும் வாகனங்களின் மீது அவர்களின் கவனம் கிடைப்பதற்கு நேரம் எடுக்கும்."

இவற்றோடு, குழந்தைகள் தன்னிச்சையாக சாலைகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக இருக்கும் பாதகமான அம்சங்களை மருத்துவர் சுகுமாரன் விளக்கினார். "10 வயதுக்குப் பின்னர் குழந்தைகள் தன்னிச்சையாக பள்ளிக்குச் சென்றார்கள் எனில், பள்ளிக்கும் வீட்டிற்குமான தூரம் 1 கி.மீட்டருக்கு அதிகமாக இருந்தால் பள்ளிப் பேருந்தையே பயன்படுத்த வேண்டும்" என்று அவர் பரிந்துரைக்கிறார்.

பள்ளிப் பேருந்துகள் குழந்தைகள் பயணிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான வாகனங்கள் என விளக்கும் பொறியாளர் ராகுல் மகாஜனும், அரசு விதிகளைப் பின்பற்றி இயக்கப்படும் பள்ளிப் பேருந்துகளைப் பயன்படுத்தும்போது, குழந்தைகள் விபத்துகளில் சிக்குவதற்கான சதவீதம் வெகுவாகக் குறைவதாகக் கூறினார்.

விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் 45 மரணங்கள் - தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பள்ளிப் பேருந்துகளே குழந்தைகள் பயணிக்க பாதுகாப்பானவை

பதின் பருவத்தினர் மீது கவனம் தேவை

"சாலை விபத்துகளில் சிறார் மரணமடைவதில் முக்கியமான வயதுப் பிரிவினாராக 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் உள்ளனர். மொத்த சாலை விபத்துகளில் ஏற்படும் சிறார் மரணங்களில் 60 சதவீதம் இவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு கண்காணிப்பற்ற மோட்டார் வாகன பயன்பாடே முக்கியக் காரணம்" என்கிறார் மருத்துவர் சுகுமாரன்.

"சக நண்பர்களைவிட தானே சிறந்தவன் என நிரூபித்துக் காண்பிக்க முயலுவது, இந்த வயதுப் பிரிவினர் விபத்தில் சிக்க காரணம். ஹெல்மெட் அணிந்தே பயணித்தால்கூட, 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் நடைபெறும் மோதல்களின்போது மட்டுமே தலையைக் காக்க இந்தக் கவசங்கள் உதவும்.

ஐந்து அல்லது 6 மீட்டர் உயரத்தில் இருந்து விழும்போது மட்டுமே, ஹெல்மெட்கள் தலையைச் சேதமடையாமல் காப்பாற்றும்," எனக் கூறும் அவர், இந்த வயதுப் பிரிவினர் பாதுகாப்பாக வாகனங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் பொறுப்பு பெற்றோரிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதோடு, அப்படிப் பாதுகாக்கத் தவறினால், பெற்றோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கும் சட்ட வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகள், ஒவ்வொரு நாளும் 45 மரணங்கள் - தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images

சாலை பற்றிய விழிப்புணர்வே தீர்வு தரும்

ஐந்தாம் வகுப்பு முதலே குழந்தைகளுக்கு சாலை விதிகளைக் கற்றுத் தருவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிறார், சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னார்வலரான டிராஃபிக் கிருஷ்ணமூர்த்தி.

சாலையை எவ்வாறு கடப்பது, வாகனங்களை இயக்குவதற்கான விதிகள் உள்ளிட்டவை பள்ளிப் பாடத்தின் ஓர் அங்கமாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

கார்களை ஓட்ட பயிற்சி வகுப்புகள் இருக்கும் நிலையில், இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கும் இத்தகைய பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியம் எனவும் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார்.

ஓட்டுநர் உரிமம் ஹெல்மெட் போன்ற விதிகளைச் செயல்படுத்துவதில் இருக்கும் குறைபாடுகள் களையப்பட வேண்டும் என்பதும் அவரது கோரிக்கையாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)