AI குரல் மூலம் பண மோசடி - பேஸ்புக், இன்ஸ்டாவில் புகைப்படம், வீடியோ பகிர்வதால் புதிய ஆபத்து

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

தொழில்நுட்ப உலகில் விரைவான மாற்றங்களுக்கு மத்தியில், "எல்லாவற்றையும், அனைவரையும் நம்ப வேண்டாம்" என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு துறையின் வல்லுநர்கள் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு நபரின் குரலை நகல் செய்வதன் மூலம் பெரிய நிதி மோசடிகள் செய்யப்படுகின்றன.

இந்த மோசடியின் போது எந்த ஆதாரமும் கிடைப்பதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விசாரணை கூட கடினமாக உள்ளது. ஏமாற்றப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதும் இயலாத செயலாக உள்ளது. தெரியாத எண்கள் அல்லது தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிந்தனையை மாற்ற வேண்டும்

இந்தச் சவால்களை எதிர்கொள்ள நமது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியம் என்று சைபர் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

"புதிய உலகில் நீங்கள் அனைவரையும் அல்லது அனைத்தையும் நம்ப முடியாது. எல்லாவற்றையும் சந்தேகிக்கும் நபராக நீங்கள் உங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் எல்லாவற்றையும், எல்லோரையும் நம்ப வேண்டாம். உங்கள் சிந்தனையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்," என்று க்ளவுட் சீக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சஷி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் ஒரு நபருக்கு வந்த கால் மூலம் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசியில் அழைத்த நபர் பதிலளித்த நபரிடம், ’அவரின் பதின்வயது மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அதை மூடி மறைக்க வேண்டுமென்றால் ஐம்பதாயிரம் ரூபாய் தர வேண்டும்’ என்றும் கூறினார்.

இணைய பாதுகாப்பு

தனது மகனின் அழு குரலையும் தந்தை கேட்டார்.

இதை தொடந்து அவர் உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாயை ட்ரான்ஸ்ஃபர் செய்தார். பின்னர் தனது மகன் நலமாக இருப்பதும், அது போலியான அழைப்பு என்றும் தெரியவந்தது.

மோசடி செய்பவர் வேறு ஒரு நபரைப் போல குரலை மாற்றிக்கொண்டு, அந்த நபரின் நண்பரை அழைத்து, ’தான் தெரியாத நாட்டில் சிக்கித் தவிப்பதாகவும், உடனடியாக பணம் தேவைப்படுவதாகவும்’ கூறுவது போன்ற மோசடி சம்பவங்களை ஒத்ததாக இது உள்ளது.

"இது என்னுடைய நண்பருக்கு நடந்தது" என்கிறார் SecureIT கன்சல்டன்சி சர்வீசஸின் இணைய பாதுகாப்பு நிபுணர் சஷிதர் சிஎன். "இது என்னுடைய நண்பருக்கு நேர்ந்தது. சமூக வலைதளத்தில் உதவி கேட்டு தனது நண்பரின் குரலில் அவருக்கு ஒரு செய்தி வந்தது. தனது உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும், உடனடி நிதி உதவி தேவை என்றும் அந்த குரல் கூறியது,” என்று அவர் சொன்னார்.

“இந்தியாவில் இருக்கும் இவர் தன் நண்பருக்கு போன் செய்து நலம் விசாரித்த போது, தான் நன்றாக இருப்பதாக அவர் கூறியதை கேட்டு ஆச்சரியமடைந்தார். தனது நண்பரிடம் நடந்ததை விளக்கிய அவர், சமூக வலைதளத்தில் அவர் குரலை கேட்குமாறு கூறினார். தன் குரலைப் போலவே அது இருப்பதை கேட்டு அந்த நண்பர் அதிர்ச்சி அடைந்தார்,” என்று சஷிதர் சிஎன் குறிப்பிட்டார்.

இது போன்ற மோசடிகள் படிக்காதவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் படித்தவர்களுக்கும் நடக்கிறது.

"சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு தொலைத்தகவல் தொடர்பு துறையில் இருந்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டது. KYC விவரங்களை இரவுக்குள் கொடுக்காவிட்டால் என் பெயரில் இருக்கும் எல்லா எண்களும் ரத்து செய்யப்படும் என்று என்னிடம் கூறப்பட்டது,” என்றார் சஷிதர்.

”தொடர்வதற்கு ஒரு நம்பரை டயல் செய்யுமாறு சொல்லப்பட்டது. இதில் யார் வேண்டுமானாலும் ஏமாற முடியும்.”

“KYC விவரங்களை பெறுவதற்கான ஃபிஷிங் மோசடி இது என்று எனக்குத் தெரியும். இந்த விவரங்களை வைத்து மோசடி செய்யப்படுகிறது. அந்த எண் யாருடையது என்பதை ஒரு செயலி மூலம் நான் சரிபார்த்தேன். இது மத்திய பிரதேசத்தின் ஒரு நம்பர் என்று எனக்கு தெரியவந்தது. நான் அந்த எண்ணை ப்ளாக் செய்தேன். செயலியில் அதை ஃப்ராட் (மோசடி எண்) என்று விவரித்தேன். இதன் மூலம் அந்த எண்ணிலிருந்து யாருக்காவது அழைப்பு வந்தால், அது ஒரு மோசடி அழைப்பு என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளமுடியும்."

பேஸ்புக், இன்ஸ்டாவில் புகைப்படம், வீடியோ பகிர்வதால் என்ன ஆபத்து?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தொலைபேசி அழைப்புகளை, வரும் மெஸேஜூகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

ஒருவரின் குரல் மற்றும் நடத்தை மாதிரியைப் பயன்படுத்தி அசல் போன்ற போலி வீடியோக்களை உருவாக்கக்கூடிய பல கருவிகள் இணையத்தில் உள்ளன. அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க இயலாது என்று அவர் குறிப்பிட்டார்.

"நான் தொலைபேசி அழைப்புகளை செய்து அதை பதிவு செய்ய முடியும். இதன் மூலம் போலி அழைப்புகளைச் செய்ய போதுமான டேட்டா எனக்கு கிடைத்துவிடும். சில அலோக்ரிதமுக்கு seed data தேவை. வீடியோ அல்லது சாதாரண அழைப்புகள் மூலம் seed data வை பெற முடியும். இது மிகவும் எளிது. முன்பின் தெரியாத எந்த நபருடனும் அழைப்பில் பேசலாம். இந்த உரையாடலின் போது மோசடி செய்வதற்காக அவரது குரலை பதிவு செய்யலாம்," என்று ராகுல் சஷி கூறுகிறார்

"இது போன்ற மோசடி செய்யும் பெரும்பாலானவர்களுக்கு சமூக ஊடகங்கள் ஒரு கஜானா போல உள்ளது. இங்கு குரல்களுடன் கூடவே வீடியோக்களையும் புகைப்படங்களையும் நகலெடுக்க முடியும். அவர்களின் கவனம் குழந்தைகளின் சமூக ஊடக கணக்குகளில் உள்ளது. அங்கிருந்து அவர்கள் மிக அதிக தகவல்களை பெற முடியும்,” என்கிறார் சைபர் சட்டக் கல்வியாளர் நாவி விஜயசங்கர்.

தற்போது ​​டீப் ஃபேக் உருவாக்க தொழில்நுட்பம் உள்ளது. ஆனால் அதை முறியடிக்க தொழில்நுட்பம் இல்லை.

"இது ஒரு வகையான விழிப்புணர்வு விவகாரம். அதிர்ச்சியில் மக்கள் அதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். ஆனால் பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துவதன் மூலம் இதற்கு தீர்வு காண முடியும். இதைத்தவிர இதற்கு வேறு தீர்வு இல்லை," என்று விஜய்சங்கர் கூறினார்.

வங்கித் துறை, தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்று விஜயசங்கர் அறிவுறுத்துகிறார்.

"ஒரு நபர் இதுபோன்ற மோசடிக்கு ஆளாக நேரிடும்போது அவர் பயந்துபோய் ஆன்லைனில் பணம் செலுத்துகிறார். இது அதிகாரப்பூர்வ பணம் செலுத்தல் என்பதால் வங்கிகள் அதை கவனிப்பதில்லை. அவர் சாதாரணமாக செய்யும் பரிவர்த்தனைகளை காட்டிலும் தொகை மிக அதிகமாக இல்லாதவரை வங்கி அதை கவனிக்காது."

"கணக்கு வைத்திருப்பவர் இது குறித்து புகார் அளிக்கும்போது பணம் டெபாசிட் செய்யப்பட்ட வங்கியை தொடர்பு கொள்ளமுடியும். நமது வங்கி அமைப்பில் உள்ள குறைபாடுகளில் ஒன்று என்னவென்றால் பாதிக்கப்பட்டவரின் வங்கி, மோசடி செய்தவரின் வங்கிக்கணக்கு உள்ள வங்கியை தொடர்பு கொள்வதில்லை. இது தானியங்கி முறையாக மாற வேண்டும்," என்றார் விஜய்சங்கர்.

தப்பிக்க என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?

  • போனில் கால் வெரிஃபிகேஷன் செயலியை இன்ஸ்டால் செய்யவேண்டும்.
  • தெரியாத என்ணில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்காமல் இருக்காதீர்கள். அவர்களிடம் டெக்ஸ்ட் செய்யுமாறு, அல்லது வாட்ஸ் அப் செய்யுமாறு சொல்லவும்.
  • நான் உங்களை சந்தித்தேன் என்று யாராவது ஒருவர் தொலைபேசியில் சொன்னால், அப்போது நீங்கள் எந்த நிறத்தில் ஷர்ட் அணித்திருந்தீர்கள் என்று கேளுங்கள்.
  • தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை நம்பாதீர்கள்.
  • உங்கள் போனில் Anti virus App கட்டாயம் வையுங்கள். அப்படிb செய்யவில்லையென்றால் நீங்கள் மோசடி வலையில் எளிதாகச்சிக்கும் ஆபத்து உள்ளது.
  • Anti virus App, போலி இணைப்புகளை அடையாளம் காண உதவும்.
  • Fake link வீடியோ அல்லது டெக்ஸ்டை திறக்காதீர்கள். ஏனென்றால் வீடியோ மூலமும் malware ஐ அனுப்ப முடியும்.
  • சமூக ஊடகங்களில் உங்களுடைய மற்றும் உங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பகிரும் போது கவனமாக இருங்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)