You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியா - இஸ்ரோ தயாரித்துள்ள 'புஷ்பக்' ராக்கெட்டின் தனிச் சிறப்பு என்ன?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் முதல் முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்டான ‘புஷ்பக்’-ஐ இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
நேற்று (மார்ச் 22) காலை 7 மணிக்கு கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட சோதனையில் ஆளில்லா புஷ்பக் ராக்கெட் தானியங்கி மூலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் என்றால் என்ன? இந்த திட்டத்தின் வெற்றியால் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்ன? உலக நாடுகளுக்கு இடையேயான விண்வெளிப் போட்டியில் ‘புஷ்பக்’ சோதனையின் முக்கியத்துவம் என்ன?
இஸ்ரோ அறிக்கை
இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடகாவின் சித்ரதுர்கா ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் நேற்று காலை 7 மணிக்கு நடத்தப்பட்ட ‘புஷ்பக்’ மூன்றாம் கட்ட பரிசோதனையின் மூலம், மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இஸ்ரோ.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வானில் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் விடுவிக்கப்பட்ட ஆளில்லா புஷ்பக் ராக்கெட், அனைத்து தரவுகளையும் தானியங்கி முறையில் ஆராய்ந்து, சரியான வேகத்தில் குறித்த இடத்தில் தரையிறங்கியது. இதற்கு முந்தைய, இரண்டாம் கட்ட சோதனையில் பயன்படுத்திய அதே ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தி இந்த வெற்றியை பெற்றுள்ளது இஸ்ரோ.
அதிக சவால்கள் நிறைந்த இந்த திட்டத்தை எந்தக் குறையும் இல்லாமல் செயல்படுத்திய விஞ்ஞானிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் என்றால் என்ன?
மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன, புஷ்பக் திட்டத்தால் இந்தியாவுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து அறிந்துகொள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையிடம் பேசினோம்.
“விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் பெரும்பாலும் திரும்பி வருவதில்லை. அவை பல பாகங்களாக பிரிந்து விண்வெளிக் குப்பைகளாக மாறிவிடுகின்றன அல்லது செயற்கைக்கோள்களை அதன் வட்டப்பாதையில் நிலை நிறுத்திய பிறகு கீழே விழும் ராக்கெட்டுள், வெப்ப உராய்வின் காரணமாக பூமியை அடைவதற்கு முன்பே எரிந்துவிடும்.
இதனால் ஒருபக்கம் விண்வெளியில் குப்பைகள் குவிகின்றன, மறுபக்கம் விண்வெளி பயணத்திற்கு அதிகம் செலவாகிறது. ஒருவேளை நம் பூமியில் பயன்படுத்தும் விமானங்கள் மூலம் விண்வெளிக்கு பயணித்து அதே விமானத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்ப முடிந்தால், விண்வெளிப் பயணம் இன்னும் எளிதாகும் அல்லவா.
அத்தகைய விண்வெளி விமானம் போன்ற அமைப்பு தான் இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டான புஷ்பக்” என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.
“இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ராக்கெட்டின் சில பாகங்களை மட்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இதற்கு உதாரணமாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ஃபால்கான் ஹெவி (Falcon heavy) என்ற ராக்கெட்டை சொல்லலாம்.
இந்த வகையான ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்திய பிறகு, அவற்றின் குறிப்பிட்ட சில பாகங்கள் மட்டும் பூமிக்கு வந்துவிடும். மற்றொரு வகையில் முழு ராக்கெட்டையும் மீண்டும் பயன்படுத்தலாம். இந்தியாவின் புஷ்பக், ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்” என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.
“மீண்டும் பயன்படுத்தலாம் என்பதைத் தாண்டி, விண்வெளி பயணத்திற்கான செலவுகளையும் நேரத்தையும் இது வெகுவாக குறைக்கும். நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்தியா அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அந்த இலக்கை அடைவதில் இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்கிறார் அவர்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இந்தியா
“பல நாடுகள் பூமியிலிருந்து அனுப்பும் ராக்கெட்டுகளின் பாகங்கள் விண்வெளிக் குப்பைகளாக மிதக்கின்றன. அவை சில சமயங்களில் செயற்கைக்கோள்கள் மீது மோதிய சம்பவங்களும் நடந்துள்ளன. அவை விண்வெளியில் ஆய்வு செய்யும் வீரர்கள் மீது மோதும் வாய்ப்பும் உள்ளது.
அதுவே முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் என்றால் அவை அப்படியே பூமிக்கு திரும்பிவிடும். இதன் மூலமாக விண்வெளிக் குப்பைகளை நாம் வெகுவாக குறைக்கலாம்” என்று கூறினார் மயில்சாமி அண்ணாதுரை.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும், அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றன.
சர்வதேச விண்வெளித் துறையில் இந்த மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது இந்தியா.
“விண்கலங்கள் மூலம் விண்வெளியிலிருந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்து பின் பூமியில் தரையிறங்கும் போது, வெப்ப உராய்வு அதிகமாக இருக்கும். அதை சமாளிக்கும் விதத்தில் சில விண்கலங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை கடலில் தரையிறக்கப்படும். ஆனால் புஷ்பக் ஏவுகணையை சாதாரண விமானங்களைப் போல தரையிறக்க முடியும்” என்று கூறுகிறார் மயில்சாமி அண்ணாதுரை.
மேலும், “சந்திராயன் 1 மற்றும் 2 திட்டங்களின் வெற்றியால், நிலவின் மீது மீண்டும் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கோ அல்லது வேறு கிரகங்களுக்கோ நாம் மனிதர்களை குடியமர்த்தும் நிலை வந்தால், புஷ்பக் ராக்கெட்டால் விண்வெளிப் போட்டியில் இந்தியா முன்னிலை பெறும். இந்திய விண்வெளி மையத்தை அமைப்பதிலும் புஷ்பக் முக்கிய பங்கு வகிக்கும்.
அடுத்தடுத்த வருடங்களில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் புஷ்பக் ராக்கெட் சோதனைகள் நடத்தப்படும்” என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
தானியங்கி முறையில் செயல்படும் புஷ்பக்
2016இல் முதன்முதலாக நடத்தப்பட்ட புஷ்பக் சோதனையில், ஸ்ரீஹரிகோட்டா அருகே கடலில் ராக்கெட்டை வெற்றிகரமாக இறக்கியது இஸ்ரோ. இப்போது கர்நாடகாவின் சித்ரதுர்காவில், தானியங்கி முறையில் நிலத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது புஷ்பக்.
இதன் மூலம் விண்வெளிப் போட்டியில் இந்தியா ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் பாண்டியன்.
“முழுக்கமுழுக்க ஆளில்லாமல், தானியங்கி முறையிலே அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஓடுபாதையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக விடுவிக்கப்பட்ட புஷ்பக் ராக்கெட் சரியான வேகத்தில் துல்லியமாகத் தரையிறங்கியது. மேலும் குறித்த நேரத்தில் பாராசூட் விரிந்ததால் ராக்கெட்டின் வேகம் குறைந்து, குறிக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது.
இது இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதற்கு முன்பாக, கடந்த வருடம் இதே இடத்தில் தான் இரண்டாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது, இப்போது அதை விட மேம்பட்ட தொழில்நுட்பங்களுடனும் புதிய சவால்களுடனும் மீண்டும் சோதனை செய்துள்ளார்கள். புஷ்பக் திட்டம் முழுமையடைய இன்னும் சில ஆண்டுகளாகும்” என்று கூறினார் பாண்டியன்.
விண்வெளியில் மருந்து உற்பத்தி
புஷ்பக் திட்டத்தின் அடுத்த கட்ட சோதனைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் பாண்டியன், “வானில் இதேபோன்ற சோதனைகள் வெவ்வேறு உயரங்களில் இருந்து நடத்தப்படும். பின்னர் புஷ்பக்கை விண்வெளியில் 400 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி சோதனை செய்வார்கள்.
அது பூமியை சுற்றிவந்து தகவல்களை சேகரித்து, மீண்டும் பத்திரமாக தரையிறங்குகிறதா என பார்ப்பார்கள். அதுவே இறுதி கட்டமாக இருக்கும்” என்று கூறினார்.
எதிர்காலத்தில் விண்வெளியில் புதிய மருந்துகளை தயாரிக்க, உற்பத்தி செய்ய புஷ்பக் போன்ற ஒரு மறுபயன்பாட்டு ராக்கெட் உதவிகரமாக இருக்கும் என்கிறார் பாண்டியன்.
“விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், சில ஆபத்தான உயிர் கொல்லி நோய்களுக்கான புதிய மருந்துகளை அங்கு வைத்து உற்பத்தி செய்ய முடியும். அதை பத்திரமாக பூமிக்கு கொண்டு வர புஷ்பக் உதவும். எதிர்காலத்தில் பிற கிரகங்களுக்கு மனிதர்களை கொண்டு செல்லவும் புஷ்பக் உதவும்.
அடுத்த வருடத்தின் இறுதியில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த திட்டம் நிறைவேறிய பிறகு, புஷ்பக் மறுபயன்பாட்டு ராக்கெட் குறித்த அடுத்தக் கட்ட சோதனைகள் வேகமாக நடைபெறும்” என்று கூறுகிறார் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் பாண்டியன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)