You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாஸ்கோ தாக்குதல்: 133 பேரை பலிவாங்கிய சம்பவம் நடந்தது எப்படி? வீடியோ ஆதாரம் காட்டுவது என்ன?
- எழுதியவர், பால் கிர்பி
- பதவி, பிபிசி செய்தி
வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 23) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஒரு இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 133 பேர் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தத் தாக்குதலை ‘காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்’ என்று விவரித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணியாக சில நிமிடங்களே இருக்கும்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றது. பிக்னிக் எனப்படும் ரஷ்ய இசைக்குழுவின் ராக் இசை நிகழ்ச்சிக்காக குரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள வளாகம் நிரம்பியிருந்தது.
"பழுப்பு நிற ஆடை அணிந்த சிலர், பயங்கரவாதிகளோ அல்லது ராணுவமோ, அவர்கள் யார் என்று எனக்குத் சரியாகத் தெரியவில்லை. துப்பாக்கிகளுடன் வளாகத்திற்குள் நுழைந்து மக்களைச் சுடத் தொடங்கினர்," என்று புகைப்படக் கலைஞர் டேவ் ப்ரிமோவ் கூறினார்.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் வளாகத்தில் கூடியிருந்த கூட்டத்தின் நடுவே அமைதியாக நடந்து சென்று, பின்னர் கண்முன் தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மோசமான பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த இசைக் கச்சேரிக்கு சுமார் 6,200 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. ஆனால் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தது வெறும் நான்கு காவலர்களே. அந்த நான்கு காவலர்களில் ஒருவர் பேசுகையில், “தாக்குதல் தொடங்கியவுடன் எனது சகாக்கள் ஒரு விளம்பரப் பலகைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள்” என்று கூறினார்.
மேலும், "தாக்குதல் நடத்தியவர்கள் எங்களிடமிருந்து 10 மீட்டர் தொலைவில் கடந்து சென்றனர். அவர்கள் தரைத்தளத்தில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினர்" என்றார்.
தாக்குதல் நடத்தியவர்கள் எத்தனை பேர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மேல் தளத்தில் இருந்து படமாக்கப்பட்ட ஒரு காணொளியில் நான்கு ஆண்கள் தரைத்தளத்தில் தனித்தனியாக நடந்து செல்வதைக் காண முடிகிறது.
முதலில் துப்பாக்கியுடன் செல்பவர், ஜன்னல்களுக்கு அருகே பதுங்கியிருப்பவர்களைக் குறிவைத்துச் சுடுகிறார். அவ்வாறு சுடப்பட்டவர்களே ரஷ்யாவின் மீதான இந்தக் கொடிய தாக்குதலில் முதலில் பலியானவர்கள்.
கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பலர் மாஸ்கோவின் வடமேற்கு எல்லையில் உள்ள கிராஸ்னோகோர்ஸ்க், கிம்கி மற்றும் அதன் அருகிலுள்ள பிற நகரங்களில் இருந்து வந்தவர்கள்.
அந்தக் காணொளியில் இரண்டாவது நபரும் துப்பாக்கியுடன் மக்களை நோக்கிச் சுட்டவாறே முன்னேறுகிறார். அதே நேரத்தில் மூன்றாவது நபர் ஒரு பையுடன் அமைதியாகப் பின்தொடர்கிறார். நான்காவது நபர் தனது துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்கிறார்.
தாக்குதலை நேரில் கண்ட பெண் ஒருவர், “நான் எனது 11 வயது மகளுடன், நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது துப்பாக்கிச் சத்தமும் மக்களின் அலறலும் கேட்டது. அருகிலிருந்தவர்கள் தரையில் படுக்குமாறு கூச்சலிட்டனர்.
நாங்கள் குழந்தைகள் இருந்த பகுதிக்கு விரைந்தோம், கீழே படுத்து, மேசைகள் மற்றும் நாற்காலிகள் கொண்டு தடுப்புகளை அமைக்கத் தொடங்கினோம். காயமடைந்த பலர் எங்களை நோக்கி ஓடி வந்தனர்," என்று பிபிசியிடம் கூறினார்.
அரங்கிற்குள், சில நிமிடங்களில் கச்சேரி தொடங்க இருந்தது. சிலர் துப்பாக்கிச் சத்தம் கச்சேரியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்துள்ளார்கள்.
தாக்குதலை நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?
"ஒருவித முடிவில்லாத பட்டாசு சத்தம் போலத்தான் முதலில் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, ஹாலில் இருந்த அனைவரும் எல்லா திசைகளிலும் ஓடுவதை உணர்ந்தேன்,” என்று சோஃபிகோ க்விரிகாஷ்விலி கூறுகிறார்.
புகைப்படக் கலைஞர் டேவ் ப்ரிமோவ் கூறுகையில், “அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது. அரங்கின் இருக்கைகளுக்கு இடையில் படுத்துக்கொள்ள சிலர் முயன்றனர். ஆனால் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஸ்டால்களில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மக்களின் தப்பிக்கும் முயற்சி பயனளிக்கவில்லை,” என்றார்.
பார்வையாளர்களில் சிலர் தப்பிக்க மேடையை நோக்கிச் சென்றுள்ளனர். மற்றவர்கள் மேலே சென்று வெளியேறும் வழிகளைக் கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். தாக்குதலில் குழந்தைகள் உட்பட முதியவர்களும் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மேடையை நோக்கி ஓடிய ஒரு பெண் தான் கண்ட காட்சியை விவரித்தார், “ஒரு நபர் துப்பாக்கியால் சுடுவதைக் கண்டேன். நாங்கள் திரைக்குப் பின்னால் ஓடினோம், சீருடையில் இருந்த குரோகஸ் ஊழியர்களில் ஒருவர் எங்களை வேகமாக ஓடச் சொன்னார், நாங்கள் ஓடினோம். குளிர்கால ஆடைகள் ஏதுமின்றி கார் பார்க்கிங்கிற்குள் பதுங்கிக் கொண்டோம்," என்றார்.
ஓபரா நிகழ்ச்சிக்காக அங்கு வந்த மார்கரிட்டா புனோவா, முதலில் துப்பாக்கிச் சத்தத்தை பட்டாசு என்று நினைத்துள்ளார், பின்னர் அவரும் அவரது கணவரும் அது துப்பாக்கிச் சூட்டின் சத்தம் என்று அடையாளம் கண்டுள்ளனர்.
"யாரோ கீழே ஓடுங்கள் என்று சொன்னார்கள், முழு இருட்டாக இருந்தது. நாங்கள் வெளியே வந்த நேரத்தில் எங்களுக்குப் பின்னால் துப்பாக்கிச் சூடு சத்தம் அதிகமாகக் கேட்டது," என்றார்.
மற்றொரு நபரான விட்டலி, ஒரு பால்கனியில் இருந்து இந்த தாக்குதலைக் கண்டார், "அவர்கள் சில பெட்ரோல் குண்டுகளை வீசினர், அதனால் எல்லாம் பற்றி எரியத் தொடங்கியது," என்றார்.
அது பெட்ரோல் வெடிகுண்டா என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், தீ வேகமாகப் பரவியது. இதன் காரணமாக தீயணைப்பு வீரர்களால் கட்டடத்தின் அருகில் செல்ல முடியவில்லை. தீ விரைவில் கூரைக்கும் பரவியது. மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து தீ மளமளவென கட்டடத்தின் முன்பகுதிக்கும் பரவி, இரண்டு மேல் தளங்கள் எரிந்து நாசமானது.
ஆடிட்டோரியத்தில் இருந்தவர்களில் பலர் ஃபோயர் அறை வழியாக ஓடிவிட்டனர். ஒரு வீடியோவில், சோபாவில் கிடக்கும் இரண்டு உயிரற்ற உடல்களைக் கடந்து மக்கள் எஸ்கலேட்டர்களில் விரைவதைக் காட்டுகிறது.
மற்றொரு வீடியோவில், துப்பாக்கிச் சூட்டின் சத்தம் சுற்றி எதிரொலிக்கும்போது மக்கள் தப்பி ஓடுவதைக் காட்டுகிறது.
எங்கு செல்வதெனத் தெரியாமல் அவர்கள் கட்டடத்தின் பின்புறத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கு சிலர் பதுங்கி பயத்துடன் அமர்ந்திருக்கிறார்கள், மற்றவர்கள் தாழ்வாரங்கள் வழியாக ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு வெளியேறுகிறார்கள்.
இந்தத் தாக்குதல் நடக்கும்போது, கட்டடத்தில் எங்காவது ரஷ்ய காவல்துறையோ அல்லது சிறப்புப் படையோ இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
உயிர் பிழைத்தவர்கள் ஒரு படிக்கட்டில் ஏறி குரோகஸ் சிட்டி ஹாலின் நுழைவாயிலை அடைந்தனர். ஒருவர் மயக்கமடைவதைக் காண முடிகிறது. மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு தகவலைச் சொல்கிறார்கள்.
ஒரு நடனக் குழுவின் உதவியாளரான ஈவா, துப்பாக்கி ஏந்தியவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தபோது மேடைக்குப் பின்னால் இருந்தார். "நாங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தோம், ஒரு கூட்டம் எங்களைக் கடந்து சென்றது. நடைபாதையில் மக்கள் ஓடுவதை நாங்கள் பார்த்தோம். நாங்களும் கோட்களை எடுத்துக்கொண்டு கூட்டத்துடன் ஓடினோம்," என்கிறார்.
தொடக்கத்தில் பிக்னிக் இசைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும், பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் வெளியான உறுதிப்படுத்தப்படாத செய்திகளில் இசைக் கலைஞர்களில் ஒருவர் காணவில்லை என்று சொல்லப்படுகிறது.
இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியதும், ஆடிட்டோரியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் தீவிரம் அனைவருக்கும் புரிந்தது.
கொல்லப்பட்டவர்கள் குறித்த முதல் அதிகாரப்பூர்வ பட்டியலில், மிகவும் வயதானவர்களும் (70 வயது) இருப்பதாகவும், இறந்தவர்களில் மற்றும் காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பு
இஸ்லாமிய அரசு எனப்படும் ஐஎஸ் அமைப்பு ஓர் அறிக்கையின் மூலம் தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளது. ஆனால் அமைப்பின் எந்தக் கிளை இதைச் செய்தது எனக் குறிப்பிடவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவை தாக்க ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
மாஸ்கோவில் ‘பெரிய கூட்டங்களை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா அப்போது கூறியிருந்தது. இருப்பினும் அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவலில் போதுமான, நம்பகமான விவரங்கள் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர்.
தங்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என யுக்ரேன் உடனடியாக மறுத்தது. போர்க்களத்தில் மட்டுமே நாங்கள் தாக்குவோம் என்று அது கூறியது.
ஆனால் ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி பாதுகாப்பு முகமை, தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யுக்ரேனில் இருந்து ரஷ்யாவை கடக்க முயன்றதாகவும், யுக்ரேனில் அவர்களுக்கு ‘வலுவான தொடர்புகள்’ இருப்பதாகவும் கூறியது. தாக்குதலில் நேரடியாகத் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு பேர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எப்.எஸ்.பி கூறுகிறது.
சனிக்கிழமையன்று தாக்குதல் நடந்த இடத்திற்கு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த திரும்பிய மார்கரிட்டா புனோவாவும் அவரது கணவர் பாவேலும், "தாக்குதலில் இருந்து தப்பித்து வீடு சென்றதும் கண்ணீருடன் தங்கள் குழந்தைகளைக் கட்டிப்பிடித்ததுதான் நாங்கள் செய்த முதல் காரியம்" என்று கூறினார்கள்.
மாஸ்கோவில் சனிக்கிழமை பிற்பகல் வரை அதிபர் புதின் ரஷ்ய சோகத்தில் மூழ்கியுள்ள பொதுமக்களிடையே உரையாற்றினார்.
கொலையாளிகளை இரண்டாம் உலகப் போரின் நாஜிக்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், ரஷ்ய மக்களுடைய ஒற்றுமையின் பலத்தை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். ஞாயிற்றுக்கிழமை, தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)