பிறந்ததுமே பெற்றோரை பிரிந்த குழந்தைகள் 70 ஆண்டுக்கு பின் உண்மை தெரிந்ததும் என்ன செய்தனர்?

வீட்டிலிருந்தே டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கான ‘கிட்’ (kit), கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பரிசுகள் ஆகியவைதான் கனடாவை சேர்ந்த இருவரின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப்போட்டது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சீஷெல்ட் நகரத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் போவே, தன் வாழ்நாள் முழுவதும் தான் கனடிய குடிமகன் என்றே நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அவரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளின் மூலம், அவரை யுக்ரேனிய - ஆஷ்கெனாசி யூதர் - போலந்து ஆகியவற்றின் கலப்பினத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

அதேசமயத்தில், கிட்டத்தட்ட 2,400 கி.மீ-க்கு அப்பால், மனிடோபாவின் வின்னிபெக்கில், யுக்ரேனிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட எட்டி அம்ப்ரோஸ் என்பவரின் சகோதரியும் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொண்டார். அதில், எட்டி அம்ப்ரோஸ் தன் சகோதரர் அல்ல என்பது அவருக்குத் தெரியவந்தது.

மேலும், ரிச்சர்ட் போவே தான் உடன்பிறந்தவர் என்பதும் உறுதியானது. இவர்கள் பிரிந்தது எப்படி? என்ன நடந்தது?

70 ஆண்டுகளுக்கு பிறகு கேட்கப்பட்ட மன்னிப்பு

இந்த முடிவு அவர்களின் வாழ்க்கையையே மாற்றக்கூடியதாக இருந்தது. 1955ஆம் ஆண்டில், மனிடோபாவின் ஆர்போர்க் எனும் சிறுநகரில் ஒரே மருத்துவமனையில் ஒரே தினத்தில் ரிச்சர்ட் போவேவும் எட்டி அம்ப்ரோஸும் பிறந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் பிறந்ததுமே பெற்றோர்களிடம் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழப்பத்தால் அவர்களுக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சிக்காக, 70 ஆண்டுகள் கழித்து வியாழக்கிழமை இருவரிடமும் நேரில் மன்னிப்பு தெரிவித்துள்ளார், மனிடோபா மாகாண முதலமைச்சர் (premier) வாப் கினியூ.

இதுதொடர்பாக, மனிடோபா மாகாண சட்டமன்றத்தில் பேசிய கினியூ, “இரு குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினரை பல தலைமுறைகளாக பாதித்த நடவடிக்கைக்காக இன்று நான் மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்தார்.

”மற்றொரு நபரின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, அனுதாபம் மற்றும் இரக்கத்துடன் அணுக வேண்டும் என கூறுவார்கள்” என அவர் அப்போது தெரிவித்தார்.

“அது உண்மையெனில், இன்று நம்முடன் இருக்கும் விருந்தினர்கள் இருவரும் நம்மில் மிகச் சிலராலேயே அணுக முடியும் அளவுக்கு அனுதாபம் மற்றும் இரக்கத்தை புரிந்துகொண்டுள்ளனர் எனலாம்.”

இருவரும் தங்களின் ஆரம்ப நாட்களில் மிகவும் வேறுபட்ட வாழ்க்கையை வாழ்ந்ததாக, அவர்களின் வழக்குரைஞர் பில் காங்கே பிபிசியிடம் தெரிவித்தார்.

68 வயதான ரிச்சர்ட் போவே, கனடாவை சேர்ந்த உள்நாட்டு மற்றும் ஐரோப்பிய வம்சாவளி கலப்பினமான மேத்திஸ் எனும் பழங்குடியின குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார்.

அவருக்கு மூன்று வயதான போதே அவரின் தந்தை உயிரிழந்ததால், தன் உடன்பிறந்தவர்களை காப்பாற்றும் பொறுப்பு அவர் மீது விழுந்தது.

பூர்வகுடி குழந்தைகளுக்கான பள்ளியில் அவர் படித்தார். ஆனால், பூர்வகுடி குழந்தைகளை வளர்ப்பு இல்லங்கள் அல்லது பூர்வகுடி சமூகத்திற்கு வெளியே அவர்களை தத்துக் கொடுப்பதற்கு வழிவகுக்கும் கனடாவின் `சிக்ஸ்டீஸ் ஸ்கூப்` எனப்படும் கொள்கை காரணமாக, ரிச்சர்ட் போவே வலுக்கட்டாயமாக தன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டார்.

அதேசமயம், அம்ப்ரோஸ் மனிடோபாவின் கிராமப்புற விவசாய குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். "மிக அன்பான மற்றும் ஆதரவான யுக்ரேனிய வம்சாவளி குடும்பத்திடம்" அவர் வளர்க்கப்பட்டதாக வழக்குரைஞர் பில் காங்கே தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன் யுக்ரேனிய நாட்டுப்புறப் பாடல்களை அம்ப்ரோஸ் கேட்பார் என்கிறார் அவர். 12 வயதிலேயே ஆதரவற்ற நிலையில் இருந்ததால், அவரும் தத்தெடுக்கப்பட்டார்.

ரத்த சொந்தங்களிடம் திரும்புதல்

தன் வாழ்நாள் முழுவதும் தான் பூர்வகுடி வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பது அம்ப்ரோஸுக்குத் தெரியாது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பூர்வகுடியினரால் மட்டுமே இயக்கப்படும் மீன்பிடி படகை கொண்டிருப்பதாக பல ஆண்டுகளாக போவே பெருமை கொண்டிருந்தார்.

"ஆனால், தான் ஓர் பூர்வகுடி அல்ல என்பதை அவர் இப்போது உணர்ந்திருக்கிறார்" என்கிறார் காங்கே. "அவர்களின் வாழ்க்கையில் அதிகப்படியான மாற்றங்கள் இதனால் நிகழ்ந்துள்ளன."

"சிறு வயதில் அம்ப்ரோஸ் தன் உடன்பிறந்த சகோதரி என தெரியாமலேயே" தன் பேஸ்பால் அணியில் இருக்குமாறு ஒரு சிறுமியிடம் கேட்டதாக மனிடோபா மாகாண முதலமைச்சர் வாப் கினியூ தெரிவித்தார்.

அதேபோன்று, இளைஞராக மீன்பிடித்தல் மீது ரிச்சர்ட் போவேவுக்கு இருந்த காதல், அவருடைய உடன்பிறந்த சகோதரி இருந்த அதே கரைக்கு அவரை அழைத்து வந்தது. அப்போது இருவரும் தங்கள் உறவு குறித்து அறிந்திருக்கவில்லை.

இழப்புகள் இருந்தாலும் தாங்கள் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பது குறித்தும் தங்களை வளர்த்த குடும்பங்கள் குறித்தும் மிக பெருமையாக அவர்கள் கருதுவதாக வழக்குரைஞர் காங்கே தெரிவித்தார்.

தன் ரத்த உறவுகளுடன் அம்ப்ரோஸ் தற்போது இணைந்துள்ளார். மனிடோபா மேத்திஸ் கூட்டமைப்பில் உறுப்பினராகியுள்ளார்.

ரிச்சர்ட் போவேவும் தன் குடும்பத்துடன் இணைய திட்டமிட்டுள்ளார். அவருடைய வயது வந்த இரு மகள்களும், தன் தந்தையின் குடும்பப் பெயரான "அம்ப்ரோஸ்" என்பதை பச்சை குத்தியுள்ளனர்.

மேலும், அவர்கள் இருவரும் மனிடோபா மாகாணத்திடமிருந்து மன்னிப்பு மற்றும் இழப்பீடை தன் வழக்குரைஞர் மூலம் கோரியுள்ளனர்.

ஆரம்பத்தில் மனிடோபா மாகாண நிர்வாகம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மேலும், அது மருத்துவமனையில் தவறால் நேர்ந்ததாகவும், அம்மருத்துவமனை நகராட்சியால் இயக்கப்படுவதால் அது தங்களின் பொறுப்பல்ல என்றும் கூறியிருந்தது.

ஆனால், அரசாங்கம் மாறிய நிலையில், 1987-க்குப் பிறகு மனிடோபாவின் முதல் பூர்வகுடி முதலமைச்சரான வாப் கினியூ அரசாங்கம் தன் நிலைப்பாட்டை மாற்றியது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)