புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்: வீடியோ மூலம் வெளியான அறிவிப்பு

    • எழுதியவர், சான் காக்லன்
    • பதவி, அரச குடும்ப செய்தியாளர்

வேல்ஸ் இளவரசிக்கு புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது சிகிச்சையின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "கடினமான மற்றும் நம்பமுடியாத சில மாதங்களுக்கு" பிறகு இது ஒரு "பெரிய அதிர்ச்சி" என்று கூறியுள்ளார் கேத்தரின்.

ஆனால், தான் நலமாக இருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் மன உறுதி அதிகரித்து வருவதாகவும் நேர்மறையாகத் தெரிவித்துள்ளார் அவர்.

அவருக்கு என்ன புற்றுநோய் பாதித்துள்ளது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இளவரசி முழுமையாக குணமடைவார் என்று கென்சிங்டன் அரண்மனை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கேத்தரின் வெளியிட்ட வீடியோவில், ஜனவரி மாதம் தனக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தபோது இந்த புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.

"அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே எனது மருத்துவக் குழுவினர் நான் முன்தடுப்பு கீமோதெரப்பியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். நான் இப்போது அந்த சிகிச்சையின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறேன்," என்று இளவரசி தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் கீமோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புற்றுநோயின் வகை உட்பட எந்தவிதமான தனிப்பட்ட மருத்துவ தகவல்களையும் பொதுவெளியில் பகிரமாட்டோம் என்று கூறியுள்ளது அரண்மனை நிர்வாகம்.

தனது வீடியோவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேசியுள்ள 42 வயதான இளவரசி கேத்தரின், “இதே போன்ற புற்றுநோயால் ஏதாவது வகையில் பாதிக்கப்பட்டுள்ள, துன்பத்தை எதிர் கொண்டுவரும் நபர்கள் நம்பிக்கையை கைவிட வேண்டாம். நீங்கள் தனியாக இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

இளவரசிக்கு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட (விவரங்கள் வெளியிடப்படவில்லை) அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதற்கு சில நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும், இப்போது தனது குடும்பத்தை உறுதிப்படுத்துவதே தனது முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எங்களது இளம் குடும்பத்தின் நலனுக்காக இதைத் தனிப்பட்ட முறையில் கையாள நானும் வில்லியமும் எங்களால் முடிந்தவற்றைச் செய்து வருகிறோம்.”

மேலும், "ஜார்ஜ், சார்லோட், லூயிஸ் ஆகியோருக்கு எல்லாவற்றையும் சரியான முறையில் விளக்கி, நான் நலமாகி விடுவேன் என்று புரிய வைக்க, மன உறுதியை ஏற்படுத்த எங்களுக்கு நேரம் எடுத்துக்கொண்டது," என்று கூறியுள்ளார் இளவரசி.

தனது குடும்பத்திற்கு தற்போது இதிலிருந்து மீண்டு வர சில காலம், அதற்கான இடைவெளி மற்றும் தனிமை தேவை என்றும் இளவரசி கேட் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இளவரசியின் உடல்நிலை குறித்த செய்தி அரசருக்கும் ராணிக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மன்னர் சார்ல்ஸும் ஏற்கெனவே புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார்.

மன்னர் சார்ல்ஸ், கேத்தரின் இருவரும் ஒரே நேரத்தில் லண்டன் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு இளவரசி கேத்தரினுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மன்னருக்கு விரிவடைந்துள்ள புரோஸ்டேட்டை சரி செய்வதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர், "செயலைப் போலவே கேத்தரீனின் பேசும் தைரியத்திற்காகவும் அரசர் மிகவும் பெருமைப்படுகிறார்," என்று கூறியுள்ளார்.

சில நாட்கள் இருவரும் ஒன்றாக மருத்துவமனையில் நாட்களைக் கழித்த பிறகு, “கடந்த சில வாரங்களாகத் தனது அன்பான மருமகளுடன் அரசர் நெருக்கமாக இருந்து வருகிறார்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேட் குறித்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அனுப்பியுள்ள செய்தியில், "கேட் மற்றும் குடும்பத்தினர் விரைவில் ஆரோக்கியம் பெற மற்றும் குணமடைய நாங்கள் விரும்புகிறோம். மேலும் அதை அவர்களால் தனிப்பட்ட முறையில் அமைதியுடன் செய்ய முடியும் என்று நம்புகிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.

இளவரசி கேத்தரின் உடல்நிலை காரணமாக, அவரும், இளவரசர் வில்லியமும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்வில் அரச குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் இளவரசியின் அதிகாரபூர்வ பணிகளுக்கும் அவர் விரைவில் திரும்ப வாய்ப்பில்லை.

பிப்ரவரி 27 அன்று நினைவு தின நிகழ்வில் இளவரசர் வில்லியம்ஸ் பங்கேற்காமல் போனதற்கும், இளவரசிக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதே காரணம் என்று தெரிவித்திருந்தது கென்சிங்டன் அரண்மனை.

ஜனவரி மாதம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இளவரசி உடல்நலம் குறித்து தீவிரமான சமூக ஊடக வதந்திகள் மற்றும் ஊகங்களை இந்தத் தம்பதியினர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குறிப்பாக கிறிஸ்துமஸுக்கு பிறகு இளவரசி எந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது குடும்பத்தினர் வழங்கும் ஆதரவு குறித்துப் பேசியுள்ள இளவரசி, "வில்லியம் என் பக்கத்தில் இருப்பது ஆறுதலையும் உறுதியையும் தருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

"உங்களில் பலரும் காட்டிய அன்பு, ஆதரவு மற்றும் கருணை எங்கள் இருவருக்கும் அவ்வளவு முக்கியமானது, அது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது” என்று கூறியுள்ளார் அவர்.

இளவரசி வெளியிட்டுள்ள வீடியோவை பிபிசியின் தயாரிப்புப் பிரிவான பிபிசி ஸ்டுடியோஸ் புதன்கிழமை காட்சிப்படுத்தியதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிபிசி நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கென்சிங்டன் அரண்மனையின் இந்த அறிவிப்பு இன்று பிற்பகல் பிற ஊடகங்களோடு சேர்த்து பிபிசிக்கும் வழங்கப்பட்டதாக” தெரிவித்துள்ளது.

சில வாரங்களாகப் பரவி வரும் அரச தம்பதி குறித்த ஊகங்கள் மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்குப் பிறகு, அரண்மனையில் இருந்து ரகசிய காப்புக்கான கோரிக்கைகள் வந்துள்ளன.

இது, மார்ச் 10 சம்பவத்திற்குப் பிறகு தீவிரமடைந்துள்ளது. அன்னையர் தினத்திற்காக வெளியிடப்பட்ட இளவரசியின் புகைப்படத்தை, அதில் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டுள்ள எடிட்டிங் காரணமாக புகைப்பட ஏஜென்சிகள் திரும்பப் பெற்றனர். இதற்காக இளவரசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வார தொடக்கத்தில் வின்ட்சரில் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் ஷாப்பிங் செய்வதைப் போன்ற வீடியோ குறித்தும் சமூக ஊடகங்களில் பல கருத்துகள் பரவி வருகின்றன.

வெள்ளிக்கிழமை இதுகுறித்துப் பேசியுள்ள பிரதமர் ரிஷி சுனக், கேத்தரின் தனது அறிக்கையின் வழியாக "மிகப்பெரிய துணிச்சலை" வெளிக்காட்டியுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இளவரசி சமீபத்திய வாரங்களில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப் பட்டதாகவும், உலகெங்கிலும் உள்ள சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

"அனைவரையும் போலவே உடல்நலம் தொடர்பான விஷயங்கள் என்று வரும்போது, அவரது சிகிச்சையில் கவனம் செலுத்தவும், அவருடைய அன்புக்குரிய குடும்பத்துடன் நேரம் செலவிடவும் அவருக்கு தனியுரிமை வழங்கப்பட வேண்டும்."

தொழிலாளர் தலைவரான சர் கீர் ஸ்டார்மர் தனது சிந்தனை முழுவதும் அரச குடும்பத்தின் மீது இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், “கேத்தரின் பேசும் விதம் மற்றும் நம்பிக்கை குறித்த அவரது வார்த்தைகள் தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக” தெரிவித்துள்ளார்.

“புற்றுநோய் இருப்பதாகக் கண்டறிவது அதிர்ச்சியூட்டும் விஷயம். ஆனால் சமீபத்திய வாரங்களில் நாம் பார்த்த முட்டாள்தனமான ஊகங்களுக்கு மத்தியில் அந்தச் செய்தியைப் பெறுவதில் உள்ள கூடுதல் மன அழுத்தத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.

வில்லியம், கேத்தரின் இருவருக்கும் தனியுரிமை உண்டு. அவர்கள் ”மற்ற எல்லா பெற்றோரைப் போலவே, தங்கள் குழந்தைகளிடம் இந்த விஷயத்தை சரியான நேரத்தில் சொல்லக் காத்திருந்தார்கள்.”

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது எக்ஸ் பக்கத்தில், உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் போலவே கேத்தரின் பூரண குணமுடைய நானும் பிரார்த்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

புற்றுநோயியல் நிபுணரும், கேட்ச் அப் வித் கேன்சர் பிரசாரத்தின் நிறுவனருமான பேராசிரியர் பாட் பிரைஸ், இளவரசி "மிகவும் வெளிப்படையாக" பேசியதற்காகப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

"அரசரைப் போலவே, இளவரசி தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளதும் சந்தேகமே இல்லாமல் பலரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ளவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நம்பிக்கை வழங்கவும் உதவும்.”

“இளவரசியின் இந்த அறிவிப்பு புற்றுநோய்க்கு சமூக அந்தஸ்தோ அல்லது வயதோ ஒரு பொருட்டல்ல என்பதற்கான ஒரு நினைவூட்டல்”

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)