You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் திடீர் மரணம் - ஏன்? என்ன நடந்தது?
- எழுதியவர், யூ.எல். மப்றூக்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
மறுபுறம், அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலை இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.
இதனால், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்படி மாணவர் மரணித்த தினத்தன்று வைத்தியசாலையின் உள்ளே சிலர் உட்புகுந்து - அங்கிருந்த வைத்தியர்களை அச்சுறுத்தியதாக வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.
எனவே, அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை வைத்தியசாலையைத் திறக்க முடியாது என வைத்தியசாலை நிர்வாகமும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் கூறுகின்றன.
இது இவ்வாறிருக்க, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அலட்சியமே தனது மகனின் மரணத்துக்குக் காரணம் என பிபிசி தமிழிடம் உயிரிழந்த மாணவரின் தாய் கவிதா கூறுகின்றார்.
இலங்கையில் நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்ட மாணவரே உயிரிழந்தாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இன்னொருபுறம், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் – உயிரிழந்த மாணவரிடம் பெறப்படவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில், மாணவரின் மரணத்துடன் தொடர்பான விஷயங்களை ஆராயும் பொருட்டு பிபிசி தமிழ் களத்தில் இறங்கி, அந்த விஷயத்துடன் தொடர்பான தரப்பினரைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது.
மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட விதுஜன்
திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே. விதுஜன் 2007ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் தனது ஊரிலுள்ள மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயதிலிருந்தே விதுஜன் விளையாட்டில் ஆர்வமுள்ளவர் என்று அவரின் அம்மா கூறுகின்றார்.
திருக்கோவிலில் உள்ள பிரபல விளையாட்டுக்கழகம் ஒன்றின் கிரிக்கெட் அணியில் விளையாடும் விதுஜன், தினமும் மைதானத்தில் அதிக தூரம் ஓடுவதை வழக்கமாகக் கொண்டவர் என அறிய முடிகிறது. மேலும், விதுஜனுக்கு எந்தவிதமான நோய்களும் இருக்கவில்லை என்றும் அவரின் தாயார் கூறுகின்றார்.
இந்த நிலையில்தான் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடைபெறும் ‘இல்ல விளையாட்டுப் போட்டிகள்’ கடந்த 11ஆம் தேதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தன.
அதன் ஆரம்பப் போட்டியாக காலை 6.50 மணியளவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில் 33 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், 6.5 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டதாக இந்தப் போட்டி அமைந்திருந்ததாகவும் பாடசாலையின் அதிபர் திருமதி ஜி.கே. தட்சணாமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதில் ஓடிய விதுஜன் 6ஆம் இடத்தைப் பெற்றார்.
மேற்படி மாரத்தான் போட்டி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை, அதில் கலந்துகொண்ட தனது மகனைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டியவாறே தான் சென்றதாக விதுஜனின் தாய் கூறினார்.
'மருத்துவச் சான்றிதழ் பெற்றோம்'
குறித்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்ட பின்னரே, அவர்களைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதித்ததாக, விதுஜனின் பாடசாலை அதிபர் தட்சணாமூர்த்தி பிபிசி தமிழிடம் கூறியதோடு, விதுஜன் பெற்றுக் கொண்டதாகக் தெரிவித்த மருத்துவச் சான்றிதழையும் காட்டினார்.
குறித்த மாரத்தான் போட்டியின் தூரத்தை முழுவதுமாக ஓடி முடித்த விதுஜன், அசாதாரண உடல் நிலையை உணர்ந்தாகவும், அவர் பாடசாலையில் இருந்து நபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் அவரின் பாடசாலை பிரதியதிபர் எஸ். உதய தர்ஷன் கூறுகின்றார்.
மேலும், மேற்படி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பதிவு செய்திருந்த மாணவர்கள் இருவர் மருத்துவச் சான்றிதழ்களின் படி, அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்றும், அதனால் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் பிரதியதிபர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, ‘அதிக வெப்பம் நிலவுகின்றமையால் வெளி நிகழ்வுகளை நடத்த வேண்டாம்’ என அறிவுறுத்தும் வகையில், கல்வியமைச்சின் அறிவித்தல் எவையும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறிய அதிபர், வெயில் நேரத்துக்கு முன்னதாக காலை வேளையிலேயே மாரத்தான் போட்டியைத் தாங்கள் நடத்தி முடித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
மருத்துவமனையில் என்ன நடந்தது?
இந்த நிலையில், திருக்கோவில் வைத்தியசாலை தரப்பினரின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்தாக விதுஜனின் தாய் கவிதா பிபிசி தமிழிடம் கூறினார்.
”எனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10 நிமிடங்களில் நான் அங்கு சென்றுவிட்டேன். ஆனால் எனது மகனைப் பார்ப்பதற்கு முக்கால் மணிநேரம் வரை என்னை அனுமதிக்கவில்லை. அதன் பிறகு பலவந்தமாக நான் உள்ளே சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது.
எனது மகன் கட்டிலில் படுத்திருந்தார், ஒரு வைத்தியர் தனது இரண்டு முழங்கால்களையும் எனது மகனின் நெஞ்சில் வைத்துக்கொண்டு அவரின் கைகளால் எனது மகனின் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தார்.
‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்’ என்று கேட்டேன். உங்கள் பிள்ளையின் உயிருக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள்,” என்று கூறினார் விதுஜனின் தாய்.
மேலும், “எனது மகனின் உயிர் அந்த வைத்தியசாலையிலேயே பிரிந்து விட்டது. ஆனாலும், அதைக் கூறாமல், மேலதிக சிகிச்சைக்காக எனக் கூறி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டார்கள்,” என்றார்.
வைத்தியசாலையிலுள்ள ஆக்சிஜன் இயந்திரத்துக்கு மின்சாரத்தை வழங்குவதற்குப் பொருத்தமான வட்ட வடிவ ‘பிளக்’ (plug) வைத்தியசாலையில் இருக்கவில்லை என்றும், அதனால் அருகிலிருந்த பாடசாலையில் இருந்து அதைக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறிய விதுஜனின் தாய், “அதன் பின்னரே எனது மகனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது” என்றார்.
இப்படி 3 மணிநேரத்துக்கும் அதிகமாகத் தனது மகனை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திருந்ததாகவும், அவர் மரணித்துவிட்ட பிறகுதான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைக்கு எனக் கூறி, திருக்கோவில் வைத்தியசாலையினர் உடலை அனுப்பி வைத்ததாகவும் விதுஜனின் தாய் குறிப்பிட்டார்.
”திருக்கோவில் வைத்தியசாலையில் ஆம்பியுலன்ஸ் இருக்கிறது. ஆனால் அதனை ஓட்டுவதற்கான சாரதி இல்லை என்றும், நோயாளியை கொண்டு செல்வதற்காக வசதிகள் ஆம்புலன்ஸில் இல்லை என்றும் கூறினார்கள். அதன் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸை அழைத்து, அதில்தான் எனது மகனைக் கொண்டு சென்றார்கள்,” எனவும் கவிதா கூறினார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு தனது மகன் அனுப்பப்பட்ட பின்னர் தாம் அங்கு சென்றதாகவும், அங்குள்ள வைத்தியர் ஒருவர் தனது மகன் ஒரு மணிநேரம் முன்பாகவே இறந்துவிட்டார் என்று கூறியதாகவும் விதுஜனின் தாய் பிசிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
விதுஜன் இறந்த செய்தியை அடுத்து, அவர் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக அன்றைய தினம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வைத்தியசாலையின் வெளியில் இருந்த பெயர் பதாகை உடைக்கப்பட்டதோடு, வைத்தியசாலை மீது கற்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விதுஜன் படித்த பாடசாலையின் மாணவர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் சீருடைகளுடன் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு போலீசாரு அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வைத்தியசாலை நிர்வாகம் கூறுவது என்ன?
இந்த நிலையில், விதுஜனின் மரணம் தொடர்பில் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தரப்பு மறுக்கிறது. விதுஜன் வைத்தியசாலைக்கு வரும்போதே அவரின் இதயத்துடிப்பு மிகவும் குறைந்திருந்ததாக அந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
பின்னர் அவருக்குப் பல தடவை இதயச் செயலிழப்பு (cardiac arrest) ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒருவர் தாங்கக் கூடிய அளவை விடவும் அதிகளவான உடல் வேலையில் ஈடுபடும்போது இவ்வாறு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், விதுஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலையில் இருந்த அனைத்துத் தரப்பினரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, விதுஜன் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் மருத்துவ சான்றிதழ், சாதாரண உடல் ஆரோக்கியம் தொடர்பில் வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழ் என்றும், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வோருக்கென தனியான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்காக விதுஜனின் பாடசாலை நிர்வாகத்தினர் தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.
இதன் காரணமாக, திட்டமிட்டிருந்த தேதியில் மாரத்தான் போட்டியை நடத்த வேண்டாம் என திருக்கோவில் வயலக் கல்வி அலுவலகத்தின் அதிகாரி ஒருவருக்கு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியசட்சகர் தொலைபேசி ஊடாக அறிவித்ததாகவும் பிபிசி தமிழிடம் வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.
இந்நிலையிலேயே திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன்போது சிலர் வைத்தியசாலையின் அவசர சிசிச்சைப் பிரிவுக்குள் புகுந்து அங்கிருந்த வைத்தியர்களை அச்சுறுத்தியதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பிரிவு உறுப்பினர் டாக்டர் அன்பாஸ் பாறூக் பிபிசிக்கு தெரிவித்தார். இதை நிரூபிப்பதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
எனவே, "வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், வைத்தியர்களை அச்சுறுத்தியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நிபந்தனை விதித்துள்ளனர்," எனக் கூறும் டாக்டர் அன்பாஸ் அவை நடந்தால் மட்டுமே அங்கு வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்களை வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையிலேயே, மேற்படி பாடசாலையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக டாக்டர் அன்பாஸ் சுட்டிக்காட்டினார்.
காலையிலும் இரவு வேளையிலும்கூட, தற்காலத்தில் அதிக வெப்பம் நிலவுவதாகவும் கூறினார். எனவே, கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு மாற்றாக அந்தப் பாடசாலை நடந்துள்ளதாகவும் அன்பாஸ் குற்றஞ்சாட்டினார்.
அதிக வெப்பம் நாட்டில் நிலவுகின்றமையால் மாணவர்களை வெளிக்களச் செயற்பாடு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியில் இருந்தே கல்வியமைச்சு பல தடவை அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)