You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: தலைமன்னாரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - என்ன நடந்தது?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் தனது போலியான அடையாளத்துடன் தலைமன்னார் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி எப்படி உயிரிழந்தார்? யார் அந்த நபர்? என்ன சொல்கிறார்கள் காவல்துறையினர்?
நடந்தது என்ன?
மன்னார் - தலைமன்னார் பகுதியில், உயிரிந்த 10 வயது சிறுமியும், அவரது நான்கு சகோதரர்களும், தங்களின் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் புத்தளம்-பூங்குளம் பகுதியில் தொழில் செய்து வருகின்றனர். அதனால், அவர்களின் ஐந்து குழந்தைகளும் தங்களின் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 15) அன்று மாலை, இந்த 10 வயத சிறுமி அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார்.
வர்த்தக நிலையத்திற்கு சென்ற சிறுமி, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அதனையடுத்து, அவரது உறவினர்களை, அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
பல மணித்தியாலங்கள் தேடல் தொடர்ந்த போதிலும், சிறுமி தொடர்பான எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, சிறுமியின் பாட்டி உள்ளிட்ட உறவினர்கள், தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் அன்று மாலையே புகார் செய்துள்ளனர்.
தொடர்ந்து, தலைமன்னார் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து, சிறுமியை தேடியுள்ளனர்.
எனினும், சிறுமி தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, போலீசார் அருகிலுள்ள சிசிடிவி கமராக்களை ஆராய்ந்துள்ளனர். அதில், சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர், சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதை போலீசார் கண்டறிந்தனர்.
சிறுமியைப் பின்தொடர்ந்து சென்ற நபர், அப்பகுதியில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் நபர் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்
பெயர் மாற்றி வாழ்ந்த வந்த சந்தேக நபர்
சந்தேகத்திற்கிடமான வைகயில் சிறுமியை பின்தொடர்ந்த நபர், திருகோணமலை-குச்சவெளி பகுதியைச் சேர்ந்த கே.வி.அப்துல் ரகுமான்(52) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
அவரது அனைத்து அடையாள அட்டையிலும், அவரது பெயர் கே.வி அப்துல் ரகுமான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவர் விஜேந்திரன் என்ற பெயரிலேயே வாழ்ந்து வந்ததாகவும் போலீசார் கூறினர்.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள தென்னைத் தோட்டம் ஒன்றில், காணாமல் போன 10 வயது சிறுமியின் சடலம் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.
சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாரா?
சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
காணாமல் போன சந்தர்ப்பத்தில் சிறுமி பெண்கள் அணியும் நீளமான சட்டையொன்றை அணிந்திருந்த நிலையில், சிறுமி அரை நிர்வாணமாக மீட்கப்பட்டார் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலத்தில் காணப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு வருகைத் தந்த மன்னார் மாவட்ட நீதவான், விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
அத்துடன், மன்னார் மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரியும் சம்பவ இடத்தில் ஆய்வுகளை நடத்தியுள்ளதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.
இந்த விசாரணைகளை அடுத்து, சடலம் மன்னார் மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம்
சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தலைமன்னார் பகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
சிறுமியை கொலை செய்த குற்றவாளி உடனடியாக தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
அத்துடன், இந்த குற்றவாளிக்கு விரைவில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான மகஜரொன்றை பிரதேச மக்கள் நீதவானிடம் வழங்கியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் தொடர்ச்சியாக அவதானத்துடன் இருப்பது இந்த காலப் பகுதியில் அத்தியாவசியமானது என மூத்த வழக்கறிஞர் இளையதம்பி தம்பையா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
அத்துடன், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பெற்றோர் சிறுவர்களுக்கு தெளிவூட்டி வைத்தல் மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தெளிவூட்டல்களை பெற்றுக்கொள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொள்ள வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)