You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகா: பா.ஜ.க. 28-ல் 25 இடங்களை மீண்டும் வெல்வது சாத்தியமா? இலவச பஸ், மாதம் ரூ.2,000 திட்டங்களால் காங்கிரஸ் பக்கம் சாயும் பெண்கள்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பெங்களூருவிலிருந்து, பிபிசி இந்திக்காக
ஜெயராமு காயத்ரியின் கணவர் பத்தாண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பெங்களூரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள மாண்டியாவில் வசித்து வரும் காயத்ரி, கணவர் இறப்புக்கு பிறகு, வாழ்வாதாரத்திற்காக வீட்டில் இருந்தபடியே தையல் தொழில் செய்து வருகிறார்.
அவர் பிபிசி-இந்தியிடன் பேசுகையில், "நான் தொடர்ந்து க்ருஹ லட்சுமி ( பெண் குடும்பத் தலைவிக்கு வழங்கப்படும் ரூ. 2,000 மாதாந்திர உதவித்தொகை) மற்றும் அன்ன பாக்யா (அரிசிக்குப் பதிலாக வழங்கப்படும் ரொக்கப் பணம்) திட்டங்களின் கீழ் உதவித் தொகைப் பெற்றுள்ளேன்.’’ என்கிறார்.
மேலும், "மத்திய அரசால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளப் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக நான் சமையல் கேஸ் இணைப்பை பெறவில்லை’’ என்றும் காயத்ரி குறிப்பிட்டுள்ளார்.
"மக்களுக்காக முதல்வர் சித்தராமையா சிறப்பான நலத் திட்டங்களை கொண்டு வந்தார்'' என்று கூறும் அவர், இந்த கருத்து மக்களவைத் தேர்தலில் தனது வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
தார்வாட் மாவட்டத்தில் உள்ள நர்குண்டைச் சேர்ந்த இல்லத்தரசி பசவா, மைசூருவுக்கு வருகை தந்திருந்த போது பிபிசி இந்தியிடம் பேசினார், ‘‘எனது கணவர் அரசாங்கத்தில் பணிபுரிவதால் க்ருஹ லட்சுமி திட்டத்தின் கீழ பயனாளியாக நான் தகுதி பெறவில்லை. இருப்பினும், சித்தராமையா பேருந்து பயணத்தை இலவசமாக்கியதால் பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க முடிகிறது. அன்ன பாக்யா உதவித் தொகையும் பெறுகிறேன்’’ என்றார்.
அவர் தனது தேர்தல் வாக்களிப்புத் தேர்வு பற்றியும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். "பெண்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளருக்கு தான் வாக்களிப்பார்கள்’’ என்று பசவா கூறினார். இதே நிலைப்பாட்டை நாங்கள் பேசிய மற்றொரு பெண்ணும் எதிரொலித்தார்.
மாண்டியா மாவட்டத்தில் உள்ள உராமரகசலகெரேயில் தண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த பாக்கியம்மா என்ற மூதாட்டி பிபிசி ஹிந்தியிடம், தான் க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்றதாகவும், சித்தராமையாவைப் பாராட்டுவதாகவும் கூறினார். தேர்தல் வாக்களிப்பது பற்றி பேசிய அவர், "எங்கள் வீட்டை பொறுத்தவரையில் என் மகன் தான் அனைத்தையும் தீர்மானிப்பார். அவர் வேலைக்கு போய் சம்பாதிக்கிறார். எனவே, எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார்’’ என்றார்.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மக்களிடத்தில் செயல்படுத்திய வாக்குறுதிகள், பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிரான ஆயுதமாக களமிறங்குவது தெளிவாகத் தெரிகிறது.
மக்களுக்கு கொடுத்த ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு செயல்படுத்தியுள்ளது. அவற்றில் மூன்று நலத்திட்டங்கள் நேரடியாக பெண்களை இலக்காகக் கொண்டதால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது, வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் மத்தியில் கண்டிப்பாக யாருக்கு வாக்களிப்பது என்னும் குழப்பமான நிலை ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வாக்காளர்களின் முரணான செயல்பாடு
வாக்காளர்களின் குழப்பத்திற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, கர்நாடக மாநில வாக்காளர்கள், எப்போதுமே தேசியத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையேயான வேறுபாட்டைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதுதான். 1984 மற்றும் 1985 இல் ஜனநாயக தேர்தல் வாக்களிப்பு முடிவுகள் இதற்கு சிறந்த உதாரணம்.
1984 டிசம்பரில், காங்கிரஸின் ராஜீவ் காந்தி நாட்டின் ஆட்சியாளர் ஆவார் என வாக்காளர்கள் முடிவு செய்தனர். சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர்களின் விருப்பம், ஜனதா கட்சியின் ராமகிருஷ்ணா ஹெக்டே மாநிலத்தை ஆள வேண்டும் என மாறியது. அவர்களின் இந்த முடிவு அரசியல் வர்க்கத்தையும் அரசியல் ஆளுமைகளையும் திகைப்பில் ஆழ்த்தியது.
ஆனால், தேசியத் தேர்தலில் தேசியக் கட்சியையும், மாநிலத் தேர்தலில் வேறு கட்சியையும் தேர்ந்தெடுக்கும் இந்த நடைமுறை, அடுத்தடுத்த சில தேர்தல்களிலும் பிரதிபலித்தது.
உதாரணமாக, 2013-ல் கர்நாடகத்தை ஆள காங்கிரஸுக்கு வாக்களித்தனர். ஓராண்டுக்குப் பின், 2014ல், பா.ஜா.க நாட்டை ஆட்சி செய்யும்படி அதே மக்கள் வாக்களித்தனர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையை வழங்காமல் 2019 தேர்தலில் அதே கட்சிக்கு மீண்டும் வாக்களித்தனர்.
பா.ஜ.க.வின் 28 வேட்பாளர்களில் 25 பேரை தேர்வு செய்த தருணத்தை நினைவூட்டும் வகையில் இந்த மக்கள் வரலாறுப் படைத்தனர். காங்கிரஸ் ஒரே ஒரு இடத்திலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
மே 2023 சட்டமன்ற தேர்தலில், கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்தனர். எனவே, இந்த முறை தேசிய தேர்தல் என்பதால் பா.ஜ.க சற்று ஆசுவாசமாக இருக்கப் போகிறதா அல்லது காங்கிரஸ் கடந்த காலத்தைப் போல மெத்தனமாக இருக்கப் போகிறதா என்பதுதான் கேள்வி.
இதனால்தான் அரசியல் விமர்சகர்கள், பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றனர். கர்நாடக வாக்காளர்களின் தேர்வு கடந்த காலத்தைப் போல இருக்குமா அல்லது புதிய போக்கை ஏற்படுத்துமா? குறிப்பாக, 2019-ம் ஆண்டைப் போல, பா.ஜ.க-வுக்கு வாக்காளர்கள் அமோக வெற்றியைத் தருவார்களா?
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா உட்பட அனைத்து தென் மாநிலங்களை ஒப்பிடுகையில், கர்நாடகா மட்டுமே மக்களைவையில், பா.ஜ.க அதிகபட்ச இடங்களைப் பெறக்கூடிய ஒரே மாநிலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களவையில் தென் மாநிலங்களில் மட்டும் மொத்தம் 131 இடங்கள் உள்ளன.
ஒற்றுமையற்ற பாஜக vs ஆக்ரோஷமான காங்கிரஸ்
"கர்நாடகம் எப்போதுமே, தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களை ஒரே மாதிரி அணுகவதில்லை. அதன் வேற்றுமையை மக்கள் நன்கு அறிவர். இருப்பினும், கடந்த காலத்தைப் போன்று இந்த முறை ஒன்றுபட்ட பா.ஜ.க இல்லை என்பதுதான் வித்தியாசம். மறுபுறம், மாநில அளவில் தீவிரமாக செயல்படும் காங்கிரஸ் கட்சியை பார்க்க முடிகிறது. மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் காங்கிரஸின் செயல்பாட்டில் வித்தியாசம் உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் இன்னும் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது,'' என NITTE கல்வி அறக்கட்டளையின் பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் இயக்குனர்-கல்வியாளர் டாக்டர் சந்தீப் சாஸ்திரி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
இதனால்தான் கடந்த காலத்தை விட இம்முறை போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019-ல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்ததைப் போலல்லாமல் இந்த முறை பா.ஜ.க-வுடன் ஜேடிஎஸ் இணைந்துள்ளது.
"ஜே.டி.எஸ் உடன் நாங்கள் கைகோர்த்ததில் கட்சித் தொண்டர்களுக்கு விருப்பமில்லை. இதனால் பா.ஜ.க பிரமுகர்கள் சிலரும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் இதில் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. பழைய மைசூரு பகுதியில் பா.ஜ.க தனது இருப்பை நிரூபிக்க வேண்டும்,'' என்று பெயர் வெளியிட விரும்பாத பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.
பழைய மைசூருபகுதியில் ஒக்கலிகாஸ் என்ற சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இச்சமூகத்தினர் வட கர்நாடக மாவட்டங்களில் உள்ள லிங்காயத்துகளை போலவே பா.ஜ.க-வுக்குச் செல்லவில்லை. லோக் சக்தியின் ராமகிருஷ்ண ஹெக்டே தனது லிங்காயத் குழுவின் ஆதரவை மாற்றியதில் இருந்து லிங்காயத்துகள் எப்போதும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர்.
பாஜகவுக்கு கடும் சவால் தரும் காங்கிரஸ்
இந்தத் தேர்தலில் முடிவுகளை நிர்ணயிக்கும் காரணிகள் குறித்து அரசியல் விமர்சகர்கள், மாறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பினும், பிரதமர் மோதியின் புகழ் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சில விமர்சகர்கள் கருதுகின்றனர். மோதி பிரசாரம் செய்த பல தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. பிரதமரின் புகழ் குறைந்துவிட்டதாகவே சிலர் நம்புகிறார்கள். 2019 இல் இருந்ததைப் போன்ற மோதி அலை இம்முறை இல்லை என்று கருதுகின்றனர்.
எவ்வாறாயினும், காங்கிரஸ் அரசாங்கம் மிகுந்த ஆர்வத்துடன் செயல்படுத்திய வாக்குறுதிகள் மோதியின் புகழுக்கு சவாலாக மாறியுள்ளன.
"பெண் வாக்காளர்கள் காங்கிரஸுக்கு அதிக சாதகமாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, பெண்களை மையமாக கொண்ட நலத்திட்டங்களான, சக்தி (மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்), குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 2,000 மற்றும் இலவச அரிசித் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தியதால் அதிகப்படியான பெண்கள் பலனடைந்தனர். எனவே பெண்களுக்கு காங்கிரஸ் கட்சி மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருக்கும்.’’ என அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான ஏ நாராயணா, பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
பேராசிரியர் நாராயணாவின் மதிப்பீடு, மாண்டியா மற்றும் மைசூரு தொகுதிகளில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களுடன் பிபிசியின் உரையாடல்களை பிரதிபலிக்கும் வகையில் தான் உள்ளது.
கிரஹ ஜோதி (200 யூனிட் வரை இலவச மின்சாரம்) மற்றும் யுவநிதி (இரண்டு வருட வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி) உள்ளிட்ட ஐந்து நலத்திட்டங்களால் மாநிலத்தின் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளனர்,'' என மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
சுருக்கமாகச் சொன்னால், சித்தராமையா அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் நலத்திட்டங்களுக்காக 52,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கர்நாடக பெண்கள் பிபிசி பகிர்ந்த கருத்துகள், ஒவ்வொருவரும் மாதந்தோறும் ரூ.4000 முதல் ரூ.5,000 வரை வருமானம் அல்லது சேமிப்பின் மூலம் பெறுவார்கள் என்ற அரசாங்கத்தின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.
அரசியல் விமர்சகர் டாக்டர் சாஸ்திரி, ``காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் உத்தரவாதங்களுக்கு இடையேயான இந்தப் போட்டியில், ஒரு புதிய பொருளாதார பிளவு ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்று சுட்டிக்காட்டுகிறார்.
"இந்தத் தேர்தலில் ஏழை அல்லது கீழ் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்களுக்கும் நகர்ப்புற வாக்காளர்களுக்கும் இடையே பொருளாதாரப் பிளவு ஏற்படுவதைக் காண முடியும், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றை பாதிக்கும் உத்தரவாதங்களால் நகர்ப்புற வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. இவர்கள் தேசத்தின் பிம்பத்துடன் மிகவும் ஒத்திசைவாக இருப்பர். எனவே பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்க வாய்ப்பு அதிகம்" என்று அவர் கூறினார்.
மோதிக்கு மீண்டும் அமோக வெற்றி கிடைக்குமா?
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் நாராயணா, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் அணுகுமுறையை ஒப்பிட்டுப் பேசினார்.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், பா.ஜ.க-வைப் போல காங்கிரஸ் மக்களவைத் தேர்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 2019 இல் பா.ஜ.க-வின் அற்புதமான செயல்பாட்டிற்கு புல்வாமா நிகழ்வு மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையும் காரணமாக இருந்தது. புல்வாமா நிகழ்வுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் தான் பா.ஜ.க-வுக்கு சாதகமாக அனைத்தும் மாறியது. 1996 முதல் பா.ஜ.க தொடர்ந்து வாக்கு வங்கியை அதிகரித்து வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 2004 முதலே காங்கிரஸை விட அதிக இடங்களைப் பெற்று தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
அரசியல் விமர்சகரும், வலதுசாரி செய்தித்தாளான விஸ்வவாணியின் ஆசிரியருமான, விஸ்வேஷ்வர் பட் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "பிரதமர் மோதியின் புகழ் எந்த வகையிலும் குறையவில்லை. அதே சமயம், காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்களின் தாக்கத்தை உதறித் தள்ளவும் முடியாது. குறிப்பாக பெண்களே அதிக பயனாளிகளாக உள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் நலத்திட்டங்களின் பலனைப் பெற்றுக்கொண்டு பிரதமர் மோதிக்கு வாக்களிக்க முடியுமா என்பதுதான் அவர்களைத் தொந்தரவு செய்யும் கேள்வியாக இருக்கும்.
பட் மேலும் கூறுகையில், ‘‘இந்த முறை வாக்காளர்களின் மனதை இது எப்படி பாதிக்கும் என்று சொல்வது கடினம். மேலும் 28ல் 25 என்ற விகிதத்தில் வெற்றி பெறுவதை மீண்டும் நிகழ்த்திக் காட்ட முடியாது என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் 7 முதல் 10 இடங்களைக் கூட கைப்பற்றக் கூடும்.
அரசியல் விமர்சகர் டி உமாபதி, "மோதியின் பேச்சை மக்கள் செவிக் கொடுத்துக் கேட்பார்கள், ஏனெனில் அவர் TINA ( There is no other alternative) காரணியாக இருப்பார். தனிப்பட்ட முறையில் அவருடைய புகழ் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். காங்கிரஸின் ஒரே வழி, உத்தரவாதங்களைச் செயல்படுத்துவதும், சாதுர்யமும் (சித்தராமையாவிடமிருப்பது), பணபலமும் (மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரிடம் இருந்து வருவது) தான்.’’
எவ்வாறாயினும், 2019 ஐ போன்று பா.ஜ.க மீண்டும் செய்ய முடியாது என்ற கூற்றுக்கு அவர் பட் உடன் உடன்படுகிறார். தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 8 முதல் 12 இடங்களை கைப்பற்றும் என தெரிகிறது,'' என்கிறார் உமாபதி.
உமாபதியின் கருத்து மாண்டியா நகரத்தில் உள்ள ஒரு பிளேஹோமில் உதவியாளராகப் பணிபுரியும் சாரதாவின் கருத்துடன் ஒத்துப் போகிறது. அவர் க்ருஹ லக்ஷ்மி மற்றும் அன்ன பாக்யா திட்டங்களின் பயனாளி ஆவார், ஆனால் இவை இரண்டும் அவரது வங்கிக் கணக்கில் முறையாக செலுத்தப்படவில்லை.
பெல்காவி மாவட்டம் சவுந்தட்டியில் உள்ள எல்லம்மா கோவிலுக்கு பஸ் கட்டணம் இல்லாமல் பயணம் செய்தேன். ஆனால், நான் மோதிக்கு தான் வாக்களிப்பேன். ராமர் கோவிலை திறந்து வைத்துள்ளார். அவர் தொடர்ந்து பிரதமராக இருக்க விரும்புகிறேன்,'' என்கிறார் அவர்.
மாநிலத்தில் பா.ஜ.க-வின் உயரிய தலைவரும், முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா, தனது கட்சி 24 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி 20 இடங்களில் வெற்றி பெறும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தனிப்பட்ட முறையில், இரு கட்சிகளிலும் உள்ள தலைவர்கள் குறைந்த எண்ணிக்கையைக் குறிப்பிடுகின்றனர். பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க தலைவர் பிபிசியிடம் பேசுகையில், "கடந்த முறை போல் 25 இடங்களை நாங்கள் வெல்வோம் என்று எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸ் எட்டு முதல் ஒன்பது இடங்களில் வெற்றி பெறலாம்.'' என்றும், காங்கிரஸ் தலைவர்கள், தனிப்பட்ட முறையில், ''9 முதல் 14 இடங்கள்'' என்றும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் குறிப்பிட்ட காங்கிரஸ் நிர்வாகி "பா.ஜ.க மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (ஜேடிஎஸ்) கூட்டணி வைத்தது, 2019-ம் ஆண்டை ஒப்பிடும்போது அக்கட்சி பலவீனமான நிலையில் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. அக்கட்சி கடந்த முறை வென்ற இடங்களின் எண்ணிக்கை (ஜேடிஎஸ்-க்கு மூன்று அல்லது நான்கு இடங்களை விட்டுக் கொடுத்தது) கர்நாடகாவில் அக்கட்சியின் எண்ணிக்கையில் சரிய வாய்ப்புள்ளது என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.’’ என்கிறார்.
இருப்பினும் இந்த கருத்தில், பேராசிரியர் நாராயணா உடன்படவில்லை. கூட்டணி இல்லாமல் கூட ஜேடிஎஸ் ஓரிரு இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அதே சமயம், கூட்டணியில் இருந்தாலும் பா.ஜ.க-வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸால் 9 அல்லது 10 இடங்களுக்கு மேல் செல்ல முடியாது. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு நாம் காணாத உற்சாகத்தையும், தந்திரமான பிரசாரத்தையும் காங்கிரஸில் காணாததே இதற்குக் காரணம். கட்சி தீவிரமாக செயல்பட்டு இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த உடனேயே அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியிருக்க வேண்டும்’’ என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)