You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் தேர்தல்: மீண்டும் பைடன் vs டிரம்ப் - பெரும்பான்மை பெற்றது எப்படி?
- எழுதியவர், கைலா எப்ஸ்டீன்
- பதவி, பிபிசி செய்திகள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமது கட்சிகளின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பிரதிநிதித்துவ பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவைப் பெற்றுள்ளனர்.
நான்கு மாகாணங்கள், ஒரு அமெரிக்க பிரதேசம் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஜனநாயகக் கட்சியினர் செவ்வாயன்று தங்கள் முதன்மைத் தேர்வுகளை நடத்தினர்.
இதன் விளைவாக, அமெரிக்க வாக்காளர்கள் எட்டு மாதங்களில் அதிபர் தேர்தலை எதிர்கொள்வார்கள். இந்தக் கோடையில் நடைபெறும் கட்சி மாநாடுகளில் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.
கடந்த செவ்வாயன்று 81 வயதான அதிபர் ஜோ பைடன் பேசியபோது, "டிரம்ப் முன்வைக்கும் அச்சுறுத்தல் முன்னெப்போதையும் விட அதிகமாக இருக்கும் தருணத்தில் வாக்காளர்கள், தான் மீண்டும் போட்டியிடும் முயற்சியை ஆதரிப்பதை கௌரவமாகக் கருதுவதாக" கூறினார்.
நேர்மறையான பொருளாதாரப் போக்குகளை மேற்கோள் காட்டி, அமெரிக்கா "மீண்டும் வருவதற்கான(பாதையின்) நடுவில்" இருப்பதாக அவர் கூறினார். ஆனால் ஒரு ஜனநாயக நாடாக அதன் எதிர்காலத்திற்கு சவால்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை நிறைவேற்றவும் சமூக திட்டங்களைல் குறைக்கவும் முயல்பவர்களிடம் இருந்தும் சவால்களை எதிரக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.
"அமெரிக்க மக்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என பைடன் தனது பிரசாரத்திற்கான தேர்தல் அறிக்கையில் கூறினார்.
பைடன் தற்போது அதிபர் பதவியில் இருப்பதால், இது அவருக்கு இயல்பாகவே பலத்தைத் தருகிறது. அவர், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வாவதற்கு அவர் கடுமையான சவால்களை எதர்கொள்ளவில்லை.
அவர் வயது மூப்பின் காரணமாக, அவர் அதிபர் பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் இருப்பதாக வாக்காளர்களிடம் இருந்து கருத்துகள் வந்தபோதிலும், அவர் சார்ந்திருந்த கட்சி அவருக்கு பக்கபலமாக இருந்தது.
இதற்கிடையில், 77 வயதான டிரம்ப், குடியரசுக் கட்சியின் வாக்காளர் தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். இது அவரை நன்கு நிதியளிக்கப்பட்ட போட்டியாளர்களைவிட அதிக ஆதரவு பெற்று வேட்பாளர் தேர்வில் வெற்றி பெறுவதற்கு உந்தியது.
டிரம்ப், குற்றங்களுக்கு எதிராகப் போராடவும், உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு இறக்குமதிக்கு வரி விதிக்கவும், யுக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், உலக விவகாரங்களில் அமெரிக்காவை முதன்மைப்படுத்தும் அணுகுமுறையை மீண்டும் தொடங்கவும் சபதம் செய்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இருவரும் இதுவரை கட்சியில் நடந்த வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
நவம்பரில் அதிபர் பைடனுக்கும், முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கர்கள் அதிருப்தி அடையும் வகையில் சில சமிக்ஞைகள் இருந்தபோதிலும், அவர்கள் மீண்டும் போட்டியிடுவது தீர்மானிக்கப்பட்டதாகவே தோன்றியது.
ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தங்கள் முதன்மை வேட்பாளர் தேர்வு செய்வதற்கான விதிகளில் சிறு வித்தியாசங்கள் இருந்தாலும், செயல்முறை அடிப்படையில் இண்டும் ஒன்றுதான்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் கட்சி பிரதிநிதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்படுகிறது, அவை வெற்றிபெறும் வேட்பாளருக்கு ஒட்டுமொத்தமாகவோ அல்லது விகிதாசாரமாகவோ முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
குடியரசுக் கட்சி வேட்பாளர் தனது அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற முதன்மை சீசனில் குறைந்தபட்சம் கட்சியின் 1,215 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும். அதேநேரம் ஒரு ஜனநாயகக் கட்சி 1,968 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.
செவ்வாயன்று, குடியரசுக் கட்சியினர் மிசிசிப்பி, ஜார்ஜியா மற்றும் வாஷிங்டன் மாகாணத்தில் முதன்மைக் கூட்டங்களையும், ஹவாயில் ஒரு காக்கஸையும் நடத்தினர்.
ஜனநாயகக் கட்சியினர், இதற்கிடையில், ஜார்ஜியா, வாஷிங்டன் மற்றும் மிசிசிப்பி மாகாணங்களிலும், வடக்கு மரியானா தீவுகளிலும், வெளிநாடுகளில் வாழும் ஜனநாயகக் கட்சியினருக்காகவும் முதன்மைப் போட்டிகளை நடத்தினர்.
பைடன் மற்றும் டிரம்பின் முக்கிய போட்டியாளர்கள் செவ்வாய்கிழமை முதன்மை போட்டிகளுக்கு முன்பே வெளியேறிவிட்டனர், எனவே முடிவுகள் அனைத்தும் உறுதியாக இருந்தன.
டிரம்பின் கடைசி போட்டியாளரான முன்னாள் ஐநா தூதர் நிக்கி ஹேலி, சூப்பர் செவ்வாய் அன்று டிரம்பிடம் 14 மாகாணங்களை இழந்த பின்னர் இந்த மாதத் தொடக்கத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இன்னும் பல மாகாணங்கள் தங்கள் முதன்மைப் போட்டிகளை நடத்தவில்லை என்றாலும், டிரம்ப் மற்றும் பைடனுக்கு தேவைப்படும் பிரதிநிதிகளின் ஆதரவுக்கு மேல் உள்ளது. இதனால், 2024 பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடும் இப்போது திறம்பட நடந்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5, 2024 அன்று நடைபெறவுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)