'கிறிஸ்தவர்களே! 4 ஆண்டுக்கு பிறகு வாக்களிக்கும் அவசியம் எழாது' - டிரம்ப் என்ன சொல்ல வருகிறார்?

அமெரிக்க அதிபர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறிய ஒரு கருத்து செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது குறித்து பல விவாதங்களும் நடந்து வருகின்றன.

கடந்த வாரம் ஃப்ளோரிடாவில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் டிரம்ப், "கிறிஸ்தவர்களே, இந்த ஒரு முறை மட்டும் வெளியே வந்து வாக்களியுங்கள். அதன் பிறகு நீங்கள் வாக்களிக்க வேண்டிய அவசியமே இருக்காது.''

''நான்கு ஆண்டுகளில் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிடும். என் அன்பான கிறிஸ்தவர்களே, நீங்கள் இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டிய அவசியமே இருக்காது. நான் உங்களை நேசிக்கிறேன்,” என்று கூறினார்.

டிரம்ப் ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல் என்று ஜனநாயக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறது.

2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் டிரம்ப் மிகவும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்தார். டிரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில் மீது தாக்குதல் நடத்தினர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்தவர்கள் குறித்து டிரம்ப் கூறிய இந்த கருத்தால் விவாதங்கள் தொடங்கியுள்ளன. டிரம்ப் உண்மையில் என்ன சொல்ல முயன்றார்?

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்பின் அறிக்கைக்கு எதிர்வினைகள்

இந்த கருத்து குறித்து டிரம்பின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் செங்கிடம் விளக்கம் கேட்டபோது ​​அவர் நேரடியாக எதுவும் கூறவில்லை.

"டிரம்ப் நாட்டை ஒன்றிணைப்பது பற்றிப்பேசினார்," ஸ்டீவன் கூறினார்.

ஸ்டீவன் பிறகு பேச்சை மாற்றி, இரண்டு வாரங்களுக்கு முன்பு டிரம்ப் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக அரசியல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்.

டிரம்ப் மீதான தாக்குதலுக்கான காரணத்தை இதுவரை புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு வழக்கறிஞர் ஆண்ட்ரூ சிடல் எதிர்வினையாற்றிள்ளார்.

"நமது ஜனநாயகத்தை அழித்து கிறிஸ்தவ நாட்டை உருவாக்குவது குறித்து டிரம்ப் பேசுகிறார்,” என்று ஆண்ட்ரூ சமூக ஊடகங்களில் எழுதினார்.

‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது’- டிரம்ப் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னது ஏன்?

பட மூலாதாரம், Reuters

“நான் மீண்டும் வாக்களிக்க விரும்பினால் என்ன செய்வது?

''எங்களுக்கு மீண்டும் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கூறிவருகிறேன்… இது அமெரிக்கா,” என்று நடிகர் மோர்கன் ஃபேர்சைல்ட் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்..

"ஓ…டிரம்ப் 2028 தேர்தலை ரத்து செய்துவிட்டார்,” என்று அரசியல் விமர்சகர் கீத் ஓல்பர்மேன் கூறினார்.

"டிரம்ப் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று நாங்கள் சொல்கிறோம். ​​​​அதன் மூலம் நாங்கள் தெரிவிக்க முயற்சிப்பது இப்போது டிரம்ப் கூறியதைத்தான்" என்றார் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் மார்ட்டின் ஹென்ரிச்சின் தகவல் தொடர்பு இயக்குநர் கேட்டி பெட்டி.

”மீண்டும் வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற டிரம்பின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. அது மிகவும் பிற்போக்குத்தனமானது,” என்று கமலா ஹாரிஸின் தேர்தல் பிரசார செய்தித் தொடர்பாளர் ஜேசன் சிங்கர் விவரித்தார்.

டிரம்பின் கருத்து கவலையளிப்பது ஏன்?

வாக்களிக்க அவசியம் இருக்காது என்ற டிரம்பின் தற்போதைய கருத்தை அவரது முந்தைய கருத்துடன் சிலர் இணைத்துப் பார்க்கின்றனர்.

”அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், மெக்ஸிகோவுடனான தெற்கு எல்லையை மூடுவதற்கும் எண்ணெய் சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்கும் முதல் ஒரு நாள் மட்டும் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்,” என்று 2023 டிசம்பரில் ’ஃபாக்ஸ் நியூஸுக்கு’ அளித்த பேட்டியில் டிரம்ப் கூறினார்.

இந்த கருத்தை ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்தபோது, ​​​​டிரம்ப் அதை ஒரு நகைச்சுவை என்று அழைத்தார்.

சர்வாதிகார ஆட்சியாளர்களை டிரம்ப் பாராட்டிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்த ஆட்சியாளர்களில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஹங்கேரியின் விக்டர் ஓர்பன் மற்றும் வட கொரிய ஆட்சியாளர் கிம் ஜாங் உன் ஆகியோரின் பெயர்கள் அடங்கும்.

ஹிட்லர் சில நல்ல விஷயங்களையும் செய்துள்ளார் என்று டிரம்ப் ஒருமுறை கூறியதாக வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர் ஒருவரை மேற்கோள்காட்டி ’தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிட்லரின் நாஜி ஆட்சியின் போது 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.

டிரம்ப் ஏன் கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்?

‘நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருக்காது’- டிரம்ப் கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேபிடல் ஹில்லுக்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் சிலுவைகளுடன் காணப்பட்டனர்.

அமெரிக்காவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறை மக்களின் மதத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதில்லை.

அமெரிக்காவின் மக்கள்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 70 சதவிகிதம் என்று ப்பியூ ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

2021 ஜனவரியில் டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்தபோது கூட கிறிஸ்தவம் தொடர்பான கொடிகள் அங்கு காணப்பட்டன. சில கொடிகளில் ’ஜீஸஸ் 2020’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

கேபிடல் ஹில் நோக்கி நகரும் முன் சிலர் மண்டியிட்டு பிரார்தனை செய்வதையும் காண முடிந்தது.

அமெரிக்காவின் அரசியல் எப்படி பிளவுபட்டுள்ளது என்பதும் 2020 தேர்தலில் வெளிப்பட்டது.

வெள்ளையின அமெரிக்க கிறிஸ்தவர்களில் கால் பகுதியினர் டிரம்பிற்கு ஆதரவளித்தனர் என்பதும், அதே நேரத்தில் 90 சதவிகித கறுப்பின கிறிஸ்தவர்கள் பைடனை ஆதரித்தனர் என்பதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்தன.

டிரம்ப் கடந்த தேர்தல்களிலும் கிறிஸ்துவ மதத்தைப் பாதுகாப்பது குறித்து பேசி வந்தார். டிரம்பின் தேர்தல் பிரசாரமான 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' என்பதை 'மேக் அமெரிக்காவை கிறிஸ்டியன் அகைன்' என்றும் சில ஆதரவாளர்கள் பார்க்கின்றனர்.

”பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் மதம் இல்லை. பைபிளுக்கு கேடு, கடவுளுக்கு கேடு. பைடன் கடவுளுக்கும் துப்பாக்கிகளுக்கும் எதிரானவர்,” என்று 2020 ஆம் ஆண்டில், ஓஹியோவில் ஒரு தேர்தல் பேரணியில் டிரம்ப் கூறினார்.

இப்போது 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் கிறிஸ்தவம் தொடர்பாக தீவிரமாக பேசி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்வின் போது, ​​​​கிறிஸ்தவ மதத்தை குறிவைத்து சொல்லப்படும் கருத்துக்களுக்கு எதிராக ஒரு பணிக்குழுவை உருவாக்குவது குறித்து டிரம்ப் பேசியிருந்தார்.

அமெரிக்காவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

டிரம்பின் கருத்து மற்றும் அரசியலமைப்பு

அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அதாவது மொத்தம் எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும். டிரம்ப் 2016-2020 வரை அதிபராக இருந்தார்.

அமெரிக்காவில், ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மட்டுமே இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்துள்ளார்.

ரூஸ்வெல்ட் 1932 முதல் 1945 இல் இறக்கும் வரை நான்கு முறை அமெரிக்காவின் அதிபராக இருந்தார்.

“ஃபிராங்க்ளின் 16 ஆண்டுகள் அதாவது நான்கு முறை அதிபராக இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் மூன்று ஆட்சிக்காலம் பற்றி பரிசீலிப்போமா அல்லது இரண்டு ஆட்சிக்காலம் பற்றியா என்று சொல்ல முடியாது,” என்று இதுபற்றி டிரம்ப் ஒரு தேர்தல் பேரணியில் கூறினார்.

டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று ’தி கார்டியன்’ நாளேடு தெரிவிக்கிறது.

டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றால், அமெரிக்க அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின்படி, 2029 ஜனவரிக்குப் பிறகு அவர் அதிபர் பதவியை வகிக்க முடியாது என்று அந்த நாளிதழ் எழுதுகிறது.

இந்தத் திருத்தத்தில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை.

இதற்குப் பிறகு நான்கில் மூன்று பங்கு அமெரிக்க மாகாணங்கள் இந்த மாற்றத்தை அங்கீகரிக்க வேண்டும்.

தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசு கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. செனட்டில் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இல்லை.

அத்தகைய சூழ்நிலையில் டிரம்புக்கு இந்தப்பாதை எளிதானது அல்ல.

பைடனின் விலகலுக்குப் பிறகு கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் நுழைந்துள்ளார்.

கமலா ஹாரிஸுடன் டிரம்ப் கடும் போட்டியில் இருப்பதாக குடியரசுக் கட்சியின் பக்கசார்புள்ள ஃபாக்ஸ் நியூஸ் நெட்வொர்க்கின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பைடன் பின்வாங்குவதற்கு முன்பு கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் முன்னிலையில் இருந்தார்.

கமலா ஹாரிஸ் மீதான டிரம்பின் தாக்குதல்கள் இதன் காரணமாகவும் அதிகரித்திருக்கலாம். கமலாவை ’ வெற்றிகரமாக செயல்படாத துணை அதிபர்’ என்று டிரம்ப் கூறி வருகிறார். கூடவே ஹாரிஸின் வம்சாவளி அடையாளம் தொடர்பான தாக்குதல்களையும் குடியரசுக்கட்சி அதிகரித்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)