அமெரிக்க பொருளாதாரத்தில் குடியேறிகளின் பங்கு என்ன? அவர்கள் இல்லையென்றால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லூயிஸ் பாருச்சோ
- பதவி, பிபிசி உலக சேவை
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியேற்றம் தொடர்பான விவகாரங்கள் ஒரு முக்கியப் பிரச்னையாக எழுப்பப்படுகிறது. தேர்தலில் பிரதான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.
குறிப்பாக மெக்ஸிகோவின் எல்லையில் இருக்கும் பிரச்னைகளை விவாதிக்கின்றனர்.
டொனால்ட் டிரம்ப் குடியேற்றத்திற்கு எதிராகப் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த பெரும் பகுதியினரை அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதாக உறுதியளித்துள்ளார்.

தேர்தலில் அவரது எதிர்க்கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ், குடியேறிகள் பிரச்னையை டிரம்ப் ஊதிப் பெரிதாக்குவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், எல்லைச் சுவர் கட்டுமானத்திற்காக லட்சக்கணக்கான டாலர்களை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிக்கு ஆதரவளிப்பதாகக் கூறினார்.
உலகில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினர் வசிக்கும் நாடு அமெரிக்கா. அப்படி இருக்கையில், அமெரிக்காவில் குடியேற்றம் என்பதன் முக்கியத்துவம் என்ன? அந்நாட்டில் குடியேறியவர்கள் (Immigrant) இல்லை என்றால் என்ன நடக்கும்?
மக்கள் தொகை

பட மூலாதாரம், Getty Images
குடியேறியவர்கள் இல்லாவிட்டால், அமெரிக்காவின் மக்கள் தொகை வெகுவாகக் குறையும்.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 2023இல் 4.78 கோடியை எட்டியது. அமெரிக்க மக்கள் தொகையில் இது 14.3 சதவீதம். இதில் அதிகபட்சமாக 1.06 கோடி பேர் மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்கா வந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக, 28 லட்சம் இந்தியர்களும் 25 லட்சம் சீனர்களும் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மக்கள்தொகையில் பங்கு வகிக்கின்றனர்.
ஒருபுறம், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ள நிலையில், மறுபுறம் அமெரிக்காவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் மக்கள் தொகை வளர்ச்சியும் குறைந்து வருகிறது.
கடந்த 2010 முதல் 2020க்கு இடையில், பிறப்பு விகிதம் 1930களில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து, மக்கள்தொகை வளர்ச்சியில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
எனவே மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவும், வயதானவர்களின் அதிக எண்ணிக்கையால் பல சவால்களைச் சந்திக்கிறது. உதாரணமாக வயதானவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால், சுகாதார செலவுகள் அதிகரிக்கிறது, தொழில்துறையில் வேலை செய்யக்கூடிய வயதில் உள்ள மக்கள்தொகையில் பற்றாக்குறை ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகத்தின் கணிப்புகளின்படி, 2040இல் ஒரு முக்கிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இறப்பு சதவீதம் பிறப்பு சதவீதத்தைவிட அதிகமாக இருக்கும். அதன் பிறகு மக்கள்தொகை வளர்ச்சி முற்றிலும் குடியேற்றங்களைச் சார்ந்திருக்கும் எனக் கணித்துள்ளனர்.
அதன்படி, பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, குறிப்பாக கிராமப்புறங்களில் குடியேற்றங்கள் அதிகரிக்க வேண்டும் என்று சில பொருளாதார நிபுணர்கள் மற்றும் குடியேற்றத்தை ஆதரிக்கும் நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
பொருளாதார தாக்கம்
பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர் தாரிக் ஹசன், குடியேறிகள் இல்லாமல் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறுகிறார்.
"குடியேறியவர்களை முற்றிலுமாக வெளியேற்றினால், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 முதல் 10 சதவீதம் சரிவைச் சந்திப்போம். அதாவது தனி நபர் சொத்து மதிப்பு (wealth per person) குறையும் மேலும் மக்கள் எண்ணிக்கை குறைவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறையும்."
தாரிக் ஹசன் மேலும் கூறுகையில், "குடியேற்றம் புதுமையை அதிகரிக்கிறது, இது அனைத்து துறைகளிலும் உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது. ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த புதுமைத் திறனை பலப்படுத்துகிறது" என்று கூறுகிறார்.
கூடுதலாக, குடியேறும் மக்கள் வேலை செய்யும் வயதைக் கொண்டவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் அலுவலகத்தின் (U.S. Bureau of Labour Statistics) தரவுப்படி, குடியேறிகள் அமெரிக்க மக்கள்தொகையில் 14% ஆக இருந்தாலும், அவர்கள் தொழில் துறையில் (civilian workforce) கிட்டத்தட்ட 19% ஆக உள்ளனர்.
அதாவது அமெரிக்க தொழில் துறையில் 3.1 கோடி தொழிலாளர்கள் குடியேறிகள்தான். எனவே அமெரிக்க குடிமக்களைவிட அதிக தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்றதின் பட்ஜெட் அலுவலக கணிப்புகளின்படி, 2022 மற்றும் 2034க்கு இடையில் அமெரிக்காவுக்குள் வரும் 16 வயதுக்கு மேற்பட்ட குடியேறியவர்களில் 91% பேர் 55 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அமெரிக்க மக்கள் தொகையில் 18 வயதைக் கடந்தவர்கள் 62% மட்டுமே உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் விவசாயம் போன்ற சில துறைகளும் குடியேறிய தொழிலாளர்களைச் சார்ந்துள்ளது.
அமெரிக்க தொழில் துறையின் தேசிய விவசாயத் தொழிலாளர்களின் கணக்கெடுப்பின்படி, விவசாயத்தில் பணிபுரியும் 70% பேர் புலம்பெயர்ந்தவர்கள். இருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் நாட்டில் குடியிருப்பு அனுமதி இல்லாதவர்கள்.
"அவர்கள் இல்லையெனில் விதைகளை நடவு செய்வதற்கும், பயிர்களை அறுவடை செய்வதற்கும், அவற்றை அமெரிக்க நுகர்வுக்குப் பயன்படுத்துவதற்கும் தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பதில், பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும்" என்று அமெரிக்காவின் மைக்ரண்ட் ஆக்ஷன் குழுமத்தின் ஆராய்ச்சி இயக்குநர் நான் வு கூறினார்.
குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யத் தயாராக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகை அமெரிக்கர்களின் ஊதியத்தைக் குறைப்பதாக குடியேற்றத்தை எதிர்க்கும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், 2014ஆம் ஆண்டு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வெளிநாட்டு தொழிலாளர்களால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து 27 ஆய்வுகளை நடத்தியது. அதில், குடியேற்றத்தால் அமெரிக்க குடிமக்களின் ஊதியத்தில் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை என்று முடிவு செய்தனர்.
கிழக்கு இல்லினாய் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில், குடியேற்றம் அதிகரிப்பது பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும், ஊதியங்களை உயர்த்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வரி வருவாயில் குடியேற்றத்தின் தாக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஏஐசி-யின் (AIC) பகுப்பாய்வுப்படி, குடியேறிய குடும்பங்கள் 2022ஆம் ஆண்டில் அனைத்து வரி விதிப்புகளிலும், ஆறில் ஒரு பங்கை அதாவது, கிட்டத்தட்ட 580 பில்லியன் டாலர் வரை பங்களித்துள்ளன.
மேலும், வரி செலுத்துவதில் சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள் மட்டும் பங்களிக்கவில்லை, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களும் பங்களித்துள்ளனர் என்று ஏஐசி அமைப்பைச் சேர்ந்த வூ கூறினார்.
பியூ ஆராய்ச்சி மைய ஆய்வின்படி, சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஒட்டுமொத்த குடியேறியவர்களின் எண்ணிக்கையில் 23 சதவீதம் (1.1 கோடி) உள்ளனர். மெக்ஸிகோவில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 40 லட்சம் குடியேறிகள் வந்துள்ளனர்.
வரி மற்றும் பொருளாதாரக் கொள்கைக்கான மையத்தின் ஆய்வில், 2022இல் ஆவணங்களற்ற குடியேறிகள் அமெரிக்காவின் கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் வரிகளில் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் வரை பங்களித்துள்ளது தெரிய வந்தது.
அந்த மையத்தின் இயக்குநர் டேனியல் கோஸ்டா கூறுகையில், குடியேறியவர்களால் பொருளாதார நன்மைகள் இருந்தாலும், சில மாகாணங்களில் பிரச்னைகளும் உள்ளதாகக் கூறினார்.
ஒரு சமீபத்திய ஆய்வில், டேனியல்ஸ் மற்றும் அவரது குழுவினர் குறைந்த ஊதியம் கொண்ட குடியேறிய தொழிலாளர்களால் குறுகிய கால பொருளாதாரச் சிக்கல்கள் வரலாம் என்று கண்டறிந்தனர்.
அதனால்தான், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர் உள்ள மாகாணங்களுக்கு அது ஏற்படுத்தக்கூடிய சவால்களைச் சமாளிக்க அரசு கொடுக்கும் பணத்தின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று அவரும் அவரது குழுவும் வாதிடுகின்றனர்.
புதுமை மற்றும் தொழில்முனைவு

பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய கணிசமான பகுதியினர் அல்லது அவர்களது சந்ததியினர் முன்னணி தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.
ஃபார்ச்சூன் 500' பட்டியலின்படி (அதிக வருவாய் ஈட்டும் 500 பெரிய அமெரிக்க நிறுவனங்களின் வருடாந்திர பட்டியல்), முதல் 500 நிறுவனங்களில் 45 சதவீதம் குடியேறிகள் அல்லது அவர்களது சந்ததியினருக்குச் சொந்தமானது. அதேபோன்று, 1 பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள அமெரிக்க ஸ்டார்ட்-அப்களில் 55 சதவீதம் குடியேறியவர்களால் நிறுவப்பட்டது.
உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் குடியேறியவர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு மாணவர்களாக அமெரிக்காவிற்கு வந்தவர்கள்.
'வெளிநாட்டுக் கல்வியாளர்கள் சங்கத்தின்' கூற்றுபடி, 2022-2023 கல்வி அமர்வில், 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு 40 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளனர். கல்வி மற்றும் குடியிருப்பு தொடர்பான 3,68,000 வேலைகளை உருவாக்க உதவியுள்ளனர்.
பொதுக் கருத்து

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க பொருளாதாரத்தில் குடியேறியவர்கள் வகிக்கும் பங்கைப் பொருட்படுத்தாமல், சமீபத்திய கருத்துக் கணிப்பில் 55 சதவீத அமெரிக்கர்கள் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்புகின்றனர்.
அதே நேரத்தில், குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர். குறிப்பாக மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் பரவலாக ஒருமித்த அரசியல் கருத்து நிலவுகிறது.
பேராசிரியர் பெர்ரி கூறிகையில், "சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் குடியேற்றத்தை "எல்லையில் நடக்கும் அராஜகம்" என்று சித்தரிக்கின்றனர். அமெரிக்க பொருளாதாரத்தில் குடியேற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட அதிகமாக, அவர்கள் சட்டவிரோதமாக வந்தவர்கள் மீது மட்டும் கவனம் செலுத்துகின்றனர்’’ என்றார்.
"பொருளாதாரம் மற்றும் குறைந்து வரும் மக்கள்தொகைக்கு குடியேறியவர்களின் பங்களிப்பைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, மக்கள் தெற்கு எல்லையில் நிகழும் அதிகபடியான குடியேற்றம் பற்றிக் கேள்விப்பட்டு எதிர்வினையாற்றுகின்றனர். அது அதிகப்படியான தீங்கு விளைவிக்கும் என்று நினைக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார்.
பாஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாரெக் ஹசனின் கூற்றுப்படி, "இந்த 20 ஆண்டுகளில் குடியேற்றம் அதிகமாக நிகழ்ந்துள்ளது. இது புதியவர்களுக்கு இடமளிக்கும் சமூகத்தின் திறனுக்கு அழுத்தம் கொடுக்கலாம்" என்றார்.
"ஒரு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அம்சங்களில் குடியேற்றம் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் அது மக்களை சங்கடப்படுத்தும் அம்சங்களையும் கொண்டிருக்கலாம்" என்றும் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












