ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் பலம் வாய்ந்த சக்தி? 30 நாள் கடந்தும் விடை தெரியாத கேள்விகள்

பட மூலாதாரம், BSP - TAMIL NADU UNIT/FB
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், தினசரி கைதுகள், விசாரணை என வழக்கு நீண்டு கொண்டே செல்கிறது. தனிப்படை போலீசாரின் விசாரணை, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருமா?
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் அவர் புதிதாகக் கட்டி வந்த வீட்டின் முன்பு வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டதாக, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்தார். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் கைதான திருவேங்கடத்தை மாதவரம் ஏரிக்கரை அருகே உள்ள பகுதிக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, கொலை வழக்கில் சரணடைந்த நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அதில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் ஹரிதரனும் ஒருவர்.
கொலைக்குப் பயன்படுத்திய 6 செல்போன்களை அவரிடம் கொலையாளிகள் ஒப்படைத்ததாக கூறப்பட்டது. இவற்றில் 3 செல்போன்களை கொசஸ்தலை ஆற்றில் இருந்து போலீசார் மீட்டனர். இவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

பட மூலாதாரம், BSP - TAMIL NADU UNIT/FB
தொடரும் கைதுகள்
இதன்பின்னர், அ.தி.மு.க., முன்னாள் பிரமுகர் மலர்க்கொடி, பா.ஜ.க முன்னாள் பிரமுகர் அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய பொன்னை பாலு, அருள், ராமு உள்பட 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், தமிழக இளைஞர் காங்கிரசின் முன்னாள் நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 7) தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் மகன் ஆவார்.
வேலூர் சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக நாகேந்திரன் அடைக்கப்பட்டுள்ளார். நிலத் தகராறு ஒன்றில் ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமனுக்கு முன்விரோதம் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் 'சம்போ' செந்தில் என்ற ரவுடியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, 'சம்போ' செந்திலின் கூட்டாளியும் சேலம் சிறைக் கைதியுமான ஈசாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவரிடம் 3 நாள்கள் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

200 பேரிடம் விசாரணை
தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 5 பேர் வழக்கறிஞர்கள். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
"இந்த வழக்கில் இன்னமும் விடை தெரியாத கேள்விகள் பல உள்ளன. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நபர்கள், கொலைக்காகப் பெரும் தொகையைச் செலவு செய்யக் கூடியவர்கள் கிடையாது. ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பெரும் தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை செலவழித்த நபர் யார் என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம்," என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலரும் வழக்கறிஞருமான எஸ்.ரஜினிகாந்த்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது, அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது என இந்த நிமிடம் வரையில் சரியான திசையில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது,” என்கிறார்.
ஒன்று சேர்ந்த பகையாளிகள்
மேலும் பேசிய ரஜினிகாந்த், "தனிப்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாகத் தெரியவில்லை. இதன் பின்னணியில் பலம் வாய்ந்த சக்தி ஒன்று உள்ளது. அந்த நபர் தான், ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான பகையாளிகளை ஒன்றிணைத்துள்ளார்,” என்கிறார்.
"தொடக்கத்தில் இந்தச் சம்பவத்தில், தங்க நகை மோசடியில் சிக்கிய ஆருத்ரா நிறுவனத்தின் பெயர் அடிபட்டது. அந்நிறுவனத்திடம் பேசி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் பணம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்நிறுவனத்தின் பின்னணியில் சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டன. இதன் பின்னணியில் கொலை அரங்கேற்றப்பட்டதா என்பதை போலீஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்," என்கிறார்.
"கூலிப்படை கலாசாரத்துக்கு சாதி, மதம், கட்சி ஆகியவை கிடையாது. அவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம். அதற்காக உறவினர்கள், சொந்த சாதி, மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். கைதான தாதாக்களும் ரவுடிகளும் ஓராண்டாக ஆம்ஸ்ட்ராங்கை பின்தொடர்ந்துள்ளனர். வெடிகுண்டுகள் கைமாற்றப்பட்டுள்ளன. அவரின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது. இதை உளவுத்துறை கவனிக்கத் தவறியதா என்ற கேள்வியும் எழுகிறது," என்கிறார், ரஜினிகாந்த்.

சிக்கல் மிகுந்த வழக்கு
"ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஏராளமான கைது சம்பவங்கள் நடக்கின்றன. கொலையின் பின்னணியில் இவர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது முக்கியமானது," என்கிறார், மூத்த பத்திரிகையாளர் செல்வராஜ்.
"நேரடி சாட்சியங்கள் இல்லாவிட்டால், அதை ஈடுசெய்வதற்கு கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் தான் வழக்கு நீதிமன்றத்தில் எடுபடும். ஆனால், இந்த வழக்கு சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது" எனக் குறிப்பிடும் செல்வராஜ், "ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை விசாரித்து தொடக்கத்திலேயே 13 பேரை கைது செய்துவிட்டனர். அதன்பின்னர், அஞ்சலை, மலர்க்கொடி என கைதுப் படலம் விரிவடைந்து, அடுத்தகட்டத்துக்கு வழக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது,” என்கிறார்.
மேலும், "காவல்நிலையங்களில் எழுதி வாங்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் எடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள முடியாது. நீதிமன்றத்துக்கு வலுவான ஆதாரம் தேவைப்படும். அதை நிரூபிக்காதவரை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
"உதாரணமாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜா என்பவரை கைது செய்தனர். நேரடியாக அவர் யாரையும் வெட்டவில்லை. ஆனால், அவர் கூறித் தான் வெட்டியதாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர். அதனால் அவருக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
"கொலையின் பின்னணியை விவரிக்கும் சாட்சியங்கள் சரியாக இல்லாவிட்டால், தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கும் பொருந்தும்" என்கிறார் செல்வராஜ்.
தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா?
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகள் இன்று புளியந்தோப்பு போலீசார் முன்னிலையில் செயலிழக்க வைக்கப்பட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், "ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கொலையாளிகளும் பணத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தவர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் இயங்கியவர்கள் குறித்தும் சட்ட உதவிகளை செய்தவர்கள் பற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அதுகுறித்த விவரங்கள் வெளிவரும்," என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












