தமிழ்நாடு: குற்றம் செய்து சிறை செல்ல விரும்பும் இளைஞர்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

தமிழ்நாடு, சிறைச்சாலை, கைதிகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, ஒருவர் தனது கையில் உள்ள செல்போனில் கூகுள் மேப் பார்த்துக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அக்கம் பக்கம் யார் வருகிறார்கள் என்று கவனிக்காமல் மேப் காட்டும் வழியைப் பார்த்துக் கொண்டே சென்றார் அவர். திடீரென அவரருகே ஓடி வந்த இளைஞர் அவரது கையில் இருந்த செல்போனைப் பிடுங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தார். செல்போனை இழந்தவர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார்.

“கூகுள் மேப் பார்த்துக்கொண்டு நடப்பவர்களிடம்தான் சுலபமாகத் திருட முடியும். செல்போன், சட்டை மேல் பாக்கெட்டில் இருந்தாலும் சுலபமாகத் திருடிவிடலாம்,” என்று கூறுகிறார், சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 600 செல்போன்களை தான் திருடியுள்ளதாகக் கூறும் அவர், சில நேரங்களில் திருட வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்கிறார், சில நேரங்களில் திருடும் எண்ணம் இல்லாவிட்டாலும், கைக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் செல்போன்கள் மாட்டுவதால் பழக்கத்தில் திருடுவதாகக் கூறுகிறார். இதில் ஈடுபடுவதற்கு வேகமாக ஓடுவது ‘அவசியமான திறன்’ என்று அவர் கருதுகிறார்.

தமிழ்நாடு, சிறைச்சாலை, கைதிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னைப் பல்கலைக்கழக ஆய்வில், தண்டனை பெறுவது எந்த வகையிலும் தவறு செய்வதிலிருந்து தடுக்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

‘சிறையைப் பார்க்காவிட்டால் எப்படி?’

மற்றொரு இளைஞர், ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, சாலையில் பார்த்த ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார். தொலைபேசியில் யாரோ அழைத்ததால் வண்டியை ஓரமாக நிறுத்திப் பேசிக் கொண்டிருந்தார். லிஃப்ட் கேட்டவரும் கீழே இறங்கி நின்றுள்ளார். அவர் பேசி முடிப்பதற்குள், லிஃப்ட் கேட்டவர், அவரது கண் முன்னே அந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். தனது வாகனத்தைத் தொலைத்த சோகத்திலும் கோபத்திலும் இருந்தவர், அன்று மாலையே மற்றொருவரின் இரு சக்கர வாகனத்தை இதே போன்று திருடியுள்ளார். தற்போது 100 இரு சக்கர வாகனங்களைத் திருடியுள்ளதாகக் கூறுகிறார் அவர்.

“முதல்முறை சிறைக்குச் சென்றுவரும்போது தான் கஷ்டமாக இருந்தது. அதன்பின் பழகிவிட்டது,” என்கிறார் அவர்.

“புழல்லியே இருந்துட்டு ஜெயிலுக்கு வரலைன்னா எப்படி?”

“ஸ்கூட்டி எல்லாம் யார் கை வைப்பா? எடுத்தா ரேஸிங் போற வண்டிதான்.”

“என் பொண்டாட்டி இப்பதான் வந்து பாத்துட்டுப் போனா. இனிமே திருட மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்கேன்.”

“மிடில் கிளாஸ் வீட்ல திருட மாட்டேன். பெண் குழந்தைகளிடம் திருட மாட்டேன்.”

இவை சென்னைப் பல்கலைக்கழக ஆய்வில் பங்கேற்ற தொடர் குற்றங்களில் ஈடுபடும் விசாரணைக் கைதிகளின் கதைகளும் கூற்றுகளும். தண்டனை பெறுவது எந்த வகையிலும் அவர்களைத் தவறு செய்வதிலிருந்து தடுக்கவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

புழல் மத்திய சிறையில், கடந்த ஏப்ரல் மே மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நீதி அமைப்பும், சீர்திருத்த நிறுவனங்களும் குற்றவாளிகளின் நடத்தைகளைச் சீர்திருத்தவோ அல்லது மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ இல்லை என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

அதிகம் செய்யப்படும் குற்றம் எது?

சென்னைப் பல்கலைகழகத்தின் குற்றவியல் துறையால் நடத்தப்பட்ட ஆய்வில், வாடிக்கைக் (habitual) குற்றவாளிகள் சிறார்களாக அல்லது இளைஞர்களாக இருக்கும்போது குற்றங்களைச் செய்ய ஆரம்பித்தனர் என்பதும், நீண்ட காலமாக குற்றங்களைத் தொடர்ந்து செய்து வந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மத்திய சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்ட 100 கைதிகளிடம் நேர்காணல் நடத்திய முதுகலை மாணவி பி.ஷரோன், அவர்களில் 81% பேர் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதைக் கண்டறிந்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கிய போதிலும், குற்றம் சாட்டப்பட்ட பலர் கணிசமான காலம் விசாரணைக் கைதிகளாக இருந்துள்ளனர். பதிலளித்த மொத்த நபர்களில் 37% பேர் 90 நாட்களுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக இருந்தனர் என்பது முடிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மேலும் 37% பேர் 31-90 நாட்கள் சிறையில் இருந்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உடைமைக் (property) குற்றங்களில் ஈடுபட்ட 173 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 71 பேரில் 55 பேர் ஏற்கனவே உடைமை சார்ந்த வழக்கில் ஈடுபட்டவர்கள் என்று முதுகலை மாணவர் நல்லப்பு நிஹாரிகா கண்டறிந்தார். விசாரணைக் கைதிகளிலும் வாடிக்கையான குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தண்டனை பெற்ற பிறகும் குற்றச் செயலில் ஈடுபட்ட 157 பேரில், 46% பேர் 10-க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் உடைமை குற்றங்களைச் செய்துள்ளனர், 38% பேர் மீது இரண்டு முதல் நான்கு வழக்குகள் உள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விருப்பப்பட்டு சிறைக்குச் செல்கின்றனரா?

சிறைக்குச் செல்வது அவமானமாக, அசௌகரியமாக கருதப்படலாம். ஆனால், ஆதரவற்ற பலர் அதை ஒரு பாதுகாப்பான இடமாகக் கருதுகின்றனர். தண்டனை முடிந்து வெளியே வருபவர்களுக்கு மறுவாழ்வுக்கான பயிற்சியும் நம்பிக்கையும் கிடைக்காததே இதற்கு காரணம் என்கிறார் சிறை கைதிகளின் மறுவாழ்வுக்காக தற்காலிக இல்லங்கள் நடத்தி வரும், டி.என்.பி.சி ப்ரிசன் மினிஸ்ட்ரி என்ற அமைப்பின் செயலாளர் ஏ.ஜேசுராஜா.

“தொடர்ந்து திருடி வந்த 28 வயது இளைஞர் ஒருவர், பொன்னேரி சப்-ஜெயிலில் அடிக்கடி தண்டனை அனுபவித்து வந்தார். அவர் ஏன் தொடர்ந்து குற்றங்களைச் செய்கிறார் என்று விசாரித்த போது, அவருக்கு குடும்பமோ வீடோ இல்லை என்பது தெரிய வந்தது. சிறைக்கு வந்தால் மூன்று வேளை உணவும், பாதுகாப்பான இடமும் கிடைக்கும் என்பதால் எத்தனை முறை வெளியே சென்றாலும், மீண்டும் உள்ளே வருவதற்கு வழி தேடுவார். சில நேரங்களில், காவல்துறையினர் அவர் மீது வேறு சிலரின் வழக்குகளைப் பதிவதும் உண்டு,” என்கிறார் ஜேசுராஜா.

பொதுவாக, ஆதரவற்ற சிறுவர்கள், சிக்கலான உறவுகள் கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகள் ஆகியோரே மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்வதாக அவர் கூறுகிறார். “இது போன்ற சிறார்கள் தான் ரவுடிகளின் கையில் சிக்கிக் கொள்கின்றனர். சிறார்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களைக் குற்றச் செயலில் ஈடுபடுத்துகிறார்கள். நாளடைவில் சிறார்கள் குற்றம் செய்யப் பழகிவிடுகின்றனர். மாதம் ரூ.15,000-க்கு வேலை கிடைத்தாலும், அந்தப் பணம் தனக்கு ஒரே நாளில் கிடைத்து விடும் என்று நினைத்து அவர்கள் வேலைக்குச் செல்வதில்லை,” என்றார்.

தமிழ்நாடு, சிறைச்சாலை, கைதிகள்

பட மூலாதாரம், Jesuraja

படக்குறிப்பு, ஏ.ஜேசுராஜா, செயலாளர், ப்ரிசன் மினிஸ்ட்ரி

‘மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லை’

ஆய்வை நடத்திய சென்னைப் பல்கலைகழக மாணவி பி.ஷாரோன், “பட்டறையில் வேலை பார்த்த ஒரு இளைஞர், லாரி போன்ற பெரிய வாகனங்களின் பாகங்களை எடுத்து, யாருக்கும் தெரியாமல் சிலருக்கு கத்தி செய்து கொடுத்ததாக கூறினார்,” என்கிறார்.

மேலும் பேசிய ஷாரோன், “நான் சந்தித்த விசாரணைக் கைதிகளுக்கு நாள் முழுவதும் செய்வதற்கு என்று வேலைகள் கிடையாது. எனவே முழு நாளும் அவர்கள் சுற்றி இருப்பவர்களுடன் பேசியபடிதான் கழிக்கின்றனர். அப்படி பேசிப் பழகியதில் ஒரு பைக் திருடுபவரும், ஒரு செல்போன் திருடுபவரும் நண்பர்களாகி, சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஒன்றாக இணைந்து திருடியுள்ளனர்,” என்றார்.

“சிறையில் இருப்பவருக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து விரிவாக எழுத்தில் உள்ளது, ஆனால் நடைமுறையில் இல்லை. காலையில் இருந்த கைதிகள் அனைவரும் ஒருவர் குறையாமல் மாலையிலும் இருக்கின்றனரா என்று உறுதி செய்வதே சிறைத்துறையின் முக்கிய கவலையாக உள்ளது,” என்கிறார் ஜேசுராஜா.

தமிழ்நாடு, சிறைச்சாலை, கைதிகள்

பட மூலாதாரம், Ravi Paul

படக்குறிப்பு, ப்ரிசம் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ரவி பால்

முதல் முறை இளம் குற்றவாளிகளுக்கு சிறப்பு கவனம்

முதல் முறை தவறு செய்த 18-24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்ள், தொடர் குற்றங்கள் செய்யும் நபர்களாக மாறுவதிலிருந்து தடுக்கச் சிறைத்துறையும் ப்ரிசம் (PRISM) என்ற தன்னார்வ அமைப்பும் இணைந்து ‘பட்டம்’ என்ற திட்டத்தை நடத்தி வருகின்றனர். திருட்டு உள்ளிட்ட ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை பெறும் குற்றங்கள் புரிந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள எட்டு மத்தியச் சிறைகள், சென்னை சைதாப்பேட்டை சிறை, சென்னை மற்றும் மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், வேலூரில் உள்ள பாதுகாப்பு இல்லம் ஆகியவற்றில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ப்ரிசம் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ரவி பால், “2018-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை சிறையில், முதல் முறை குற்றவாளிகள் அனைவரும் பிற குற்றவாளிகளிடமிருந்து பிரித்து வைக்கப்படுகின்றனர். இது மிக மிக அவசியம். சாதாரண குற்றம் செய்து, முதல் முறை சிறைக்கு வருபவரிடம் இனி குற்றம் செய்து பிழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறி, அடுத்தடுத்த குற்றங்கள் செய்வதற்கு சிறைக்கு உள்ளேயே, ‘ஆள் சேர்ப்பு’ நடக்கும். தற்போது மத்தியச் சிறைகளிலும் முதல் முறை குற்றவாளிகளைப் பிரித்து வைக்கத் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு என சில சிறைகளில், தனியாக ‘பட்டம்’ பிளாக் அமைக்கப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.

“அவர்களது பின்னணியை தெரிந்து கொண்ட பிறகு, சமூகப்பணியாளர்கள், மனநல ஆலோசகர்கள் அவர்களைச் சந்தித்து ஆலோசனை வழங்குவர். அவர்களுக்குத் தேவைப்படும் திறன்கள் கற்றுத்தரப்படும். இவை இரண்டு வாரங்களுக்கு நடைபெறும். அவர்கள் வெளியே வந்த பிறகு ஆறு மாதத்துக்கு அவர்களை கண்காணிப்போம்,” என்கிறார்.

“2018-ஆம் ஆண்டு முதல் பட்டம் திட்டத்தின் கீழ் முதல் முறை குற்றவாளிகள் 9,000 பேர் உள்ளனர். அவர்களில் மீண்டும் குற்றம் செய்தவர்களின் எண்ணிக்கை 1%-க்கும் குறைவாக இருப்பதாகச் சிறைத்துறையினரின் தரவுகள் கூறுகின்றன,” என்கிறார் ரவி பால்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)