எல் சால்வடார் நாட்டில் கேங்வாரின் அடையாளமாக மாறியுள்ள பிரமாண்ட சிறை

காணொளிக் குறிப்பு, எல் சால்வடோரில் நயீப் புகேலே அந்நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எல் சால்வடார் நாட்டில் கேங்வாரின் அடையாளமாக மாறியுள்ள பிரமாண்ட சிறை

மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடோரில் நயீப் புகேலே இரண்டாவது முறையாக அந்நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வன்முறைக்கு எதிராக அதிபர் நயீப் புகேலே சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து எல் சால்வடோரின் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன.

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கான மையம் என அழைக்கப்படும் எல் சால்வடோரின் பிரமாண்ட சிறைச்சாலையான இது, கேங் வாரின் அடையாளமாக மாறியிருக்கிறது.

இதன் உள்ளே சென்று பார்வையிட பிபிசிக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைதிகளை நேருக்கு நேர் பார்க்க வேண்டாம் என செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாரா சல்வத்ருச்சா மற்றும் பேரியோ 18 என்ற இரு கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதலால் பல ஆண்டுகளாக வன்முறையான சூழல் உருவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறுகிறது.

ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட சிறைச்சாலையில் கைதிகளின் உரிமைகள் மீறப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் எல் சால்வடோர் சிறை

இது போல புகேலேவின் பாதுகாப்புக் கொள்கையை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

குற்றம் செய்ததாக கூறப்படும் குழுக்களை சேர்ந்தவர்கள் விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மனிதாபிமானமற்ற நிலையில் கைதிகள் நடத்தப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

பிபிசி செய்தியாளர்கள் பார்த்த பயங்கரவாத தடுப்பு மையத்தின் வரைபடத்தின் படி ஒவ்வொரு கைதிக்கும் சுமார் 5 சதுர அடி இடம் மட்டுமே உள்ளது. இது செஞ்சிலுவை சங்கத்தின் பரிந்துரையான 36 சதுர அடி இடத்தை விட மிகவும் குறைவு.

இங்கு 18 சிறை பிரிவுகள் உள்ளன. இவை 19 கண்காணிப்பு கோபுரங்களால் கண்காணிக்கப்படுகின்றன. இங்குள்ள படுக்கைகள் உலோக தகடுகளால் ஆனவை. மேலும் ஒவ்வொரு சிறையிலும் இரண்டு திறந்தவெளி கழிவறைகள் இருக்கின்றன.

பயங்கரவாத தடுப்பு மையம் சர்வதேச தரத்தில் இயங்குகிறது என்றும் 40,000க்கு மேலான குற்றவாளிகளை கையாள முடியும் எனவும் எல் சால்வடோர் அரசு கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)