இந்தியா vs பாகிஸ்தான்: ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிய ஆட்டம் - என்ன நடந்தது?

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிப் போனது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானுக்கு வழக்கம் போல் கேப்டன் பாபர் ஆசம் - விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆபாத்பாந்தவன்களாக வந்து காப்பாற்றினர். ஆனால், இந்த ஜோடி பிரிந்த பிறகு ஆட்டம் தலைகீழாக மாறிப் போனது.

பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. முடிவில் பாகிஸ்தான் அணி 43-வது ஓவரிலேயே 191 ரன்களுக்கு ஆல்ஆகிவிட, எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ரோகித் அதிரடியால் சிரமமின்றி வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாறை இந்திய அணி இதன் மூலம தக்க வைத்துக் கொண்டது.

முதல் விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி விளையாட்டு அரங்கில் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா, “நாங்கள் முன்பு பெற்ற வெற்றிகளிலேயே திளைத்திருக்க விரும்பவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக விளையாட வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி வெற்றிபெற வேண்டும்,” என்றார்.

ஷுப்மன் கில் இந்த அணியில் இடம் பெற 99% வாய்ப்பு உள்ளது என ஏற்கெனவே தெரிவித்திருந்த ரோஹித் சர்மா, இன்று இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெறுவார் எனத் தெரிவித்தார்.

டாஸ் இழந்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் , “நாங்கள் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருப்போம். இந்தியாவில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார்.

முகமது சிராஜ் வீசிய 8வது ஓவரின் 2வது பந்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் கால்காப்பில் வாங்கி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். லோ-பவுன்ஸராக வந்த பந்தைத் தடுத்து ஆட ஷபீக் முற்பட்டபோது கால்காப்பில் வாங்கினார், மூன்றாவது நடுவரிடம் முறையிடாமல் அப்துல்லா வெளியேறினார்.

பாகிஸ்தான் கேப்டன் அவுட்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ரிஸ்வான் இருவரும் 3வது விக்கெட்டுக்கு நங்கூரம் அமைத்து பேட் செய்தனர். பாபர் ஆசமும் நிதானமாக ஆடி இந்திய அணிக்கு எதிராக முதல்ஒருநாள் போட்டி அரைசதத்தை பதிவு செய்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

மிகவும் முக்கியமான, ஆபத்தான கூட்டணியை சிராஜ் தனது பந்துவீச்சில் பிரித்தார். சிராஜ் வீசிய பந்து தாழ்வாக வந்தது, அந்த பந்தை ஸ்டெம்புக்குள் விட்டு தாமதாக அடிக்க முயன்றபோது,க்ளீன் போல்டாகியது. இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

தலைகீழாக மாறிய ஆட்டம்

இந்தியாவுக்கு எதிராக 7-வது போட்டியில் ஆடிய பாபர் ஆசம் முதல் அரைசதம் அடித்த திருப்தியுடன் அவுட்டாக, அதன் பிறகு அந்த அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அடுத்த இரண்டாவது ஓவரில் சவுத் ஷகீலை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் காலி செய்தார். ஷகீல் 10 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தார். எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் இஃப்திகார் அகமதுவை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார் குல்தீப். இஃப்திகார் 4 ரன்களே எடுத்தார்.

இந்திய அணியை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான் 34-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர், ஜஸ்பிரித் பும்ரா கிளீன் போல்டாக்கினார். 58 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்திருந்த அவர் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். தனது அடுத்த ஓவரில் ஷதாப் கானை 2 ரன்களில் பும்ரா வெளியேற்றினார்.

30-வது ஓவரில் பாபர் ஆசம் மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழக்க, அடுத்த 5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 29 ரன்களை சேர்ப்பதற்குள்ளாக மேலும் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

36 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி 155 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 30-வது ஓவரில் பாபர் ஆசம் மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததுமே ஆட்டம் தலைகீழாக மாறிப் போனது. அடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்களால் களத்தில் நிலைத்து ஆட முடியவில்லை. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த 32 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 2 விக்கெட் என்று வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி பின்னர் 187-க்கு 9 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசி விக்கெட்டுக்கு ஷாகின் ஷா அப்ரிடி - ஹரிஸ் ரஃப் இணை விளையாடியது. இந்த ஜோடியை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா எல்.பி.டபிள்யூ முறையில் பிரித்தார்.

பாகிஸ்தான் அணி 191 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணி கடைசி 36 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அசத்திய பந்துவீச்சாளர்கள்

காயத்திற்கு சிகிச்சை பெற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் அசத்தினார். பந்துவீச்சுக்கு அனுகூலமாக இல்லாத ஆடுகளத்தில், 30 ஓவர்கள் வீசப்பட்ட பிறகு பழைய பந்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை அவர் நிரூபித்தார்.

சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தனது ரிஸ்ட் ஸ்பின் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்கிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை வீழ்ச்சியில் இருந்து மீண்டும் நிமிர விடாமல் செய்தார்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய 5 பேரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா தரப்பில் பந்துவீசிய ஷர்துல் தாகூர் மட்டுமே விக்கெட் வீழ்த்தவில்லை. அவர் 2 ஓவர்களை வீசி 12 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

சுப்மான் கில் அவுட்

192 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் - சுப்மான் கில் இருவருமே பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினர்.

டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ள சுப்மான் கில் 4 பவுண்டரிகளை ஓடவிட்டார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 11 ரன்களில் 4 பவுண்டரிகளுடன் 16 ரன்களை சேர்த்த அவர் ஷாகின் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் ஷதாப் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ரன் குவிக்கும் மிஷின் என்று அழைக்கப்படும் கோலி களத்திற்கு வந்து கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார்.

ரோகித் சர்மா சரவெடி ஆட்டம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் அடித்து உலகக்கோப்பையில் சாதனை படைத்த ரோகித் சர்மா, அதே பார்மை பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்தார். அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்த வண்ணம் இருந்தன.

மறுமுனையில் நின்றிருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசன் அலி பந்துவீச்சில் நவாஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

36 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராகவும் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், நல்ல பார்மில் இருந்த அவர், 86 ரன்களில் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 63 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்களையும, 6 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார்.

இந்திய அணி வெற்றிக் கோட்டை நெருங்கும் இந்த வேளையில் ஸ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி விளையாடி வருகிறது.

வெற்றி இலக்கை எளிதில் எட்டிய இந்தியா

இந்திய அணி வெற்றிக் கோட்டை நெருங்கும் வேளையில் ரோகித் வெளியேற ஸ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஸ்ரேயாஸ் 53 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாறை இந்திய அணி இதன் மூலம தக்க வைத்துக் கொண்டது.

10 ஓவர்களில் இந்தியா 79 ரன்

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த அணியும் செய்திராத ஒன்றை 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சாதித்துள்ளது. அதாவது, இன்றைய போட்டியில் இந்திய அணி 10 ஓவரிலேயே 79 ரன்களைக் குவித்துவிட்டது.1999-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு எந்தவொரு அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் இவ்வளவு ரன்களைக் குவித்ததில்லை.

2003-ம் ஆண்டும் இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதல் 10 ஓவர்களில் ரன்களைக் குவித்து மலைக்க வைத்துள்ளது.

இந்திய அணி முதலிடம்

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வென்றுள்ளது.

நியூசிலாந்து அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவைக் காட்டிலும் சற்று பின்தங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தானை குறைந்த ரன்களில் சுருட்டியது எப்படி?

போட்டிக்குப் பின்னர் பரிசளிப்பு விழாவில் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, அணி வீரர்களின் சிறப்பான பங்களிப்பை பாராட்டினார்.

"இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பாகிஸ்தானை 190 ரன்களில் கட்டுப்படுத்தியது பெரும் முயற்சி. இது 190 ரன்னுக்கான ஆடுகளம் அல்ல. ஒரு கட்டத்தில் நாங்கள் 280 அல்லது 290 ரன்களை எடுப்பார்கள் என்று எண்ணினோம்.

ஒவ்வொரு நாளும் எல்லோருடைய நாளாகவும் இருக்க முடியாது. அன்றைய தினம் யாருக்குச் சிறப்பானதோ அவர் அணிக்கான பணிகளை முடிக்க வேண்டும். கேப்டனாக எனது பணி முக்கியமானது. அன்றைய தினம் யாருக்குரியது என்பதை கண்டுபிடித்து அவரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டும்.

அணியில் ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு என்பது தெளிவாக இருந்தது. உலகக்கோப்பைக்குள் நுழையும்போது முன்பு என்ன நடந்தது என்பதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்க விரும்பவில்லை. அதேநேரம், மனதளவில் மிகவும் கீழாகவும் இருக்கக்கூடாது. இது ஒரு நீண்ட தொடர். ஒன்பது லீக் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி. சமநிலையை தொடர்ந்து பராமரித்துக் கொண்டு தான் முன்னேற வேண்டும்.

நான் முன்பே சொன்னேன், எங்களைப் பொருத்தவரை, இதுவும் ஒரு போட்டிதான். மற்ற அணிகளைப் போல பாகிஸ்தானும் ஒரு எதிரணிதான். நாங்கள் சிறப்பாக விளையாட விரும்பினோம். குறிப்பிட்ட நாளில் நாம் நன்றாக விளையாட வேண்டும். கடந்த காலமும் எதிர்காலமும் முக்கியமில்லை." என்று அவர் கூறினார்.

பாக். கேப்டன் பாபர் ஆசம் என்ன சொன்னார்?

பரிசளிப்பு விழாவில் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், "நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்து நாங்கள் நன்றாகவே போட்டியைத் தொடங்கினோம். நாங்கள் சாதாரண கிரிக்கெட்டை விளையாடி பார்ட்னர்ஷிப்களை உருவாக்க திட்டமிட்டோம். திடீரென்று ஒரு சரிவு ஏற்பட்டது, எங்களால் நன்றாக முடிக்க முடியவில்லை.

நாங்கள் தொடங்கிய விதம் எங்களுக்கு நல்லதல்ல. எங்கள் இலக்கு 280-290. ஆனால் சரிவு எங்கள் நிலையை மோசமாக்கிவிட்டது. எதுவுமே நன்றாக அமையவில்லை. புதிய பந்தை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ரோஹித் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்தோம், ஆனால் அது நடக்கவில்லை." என்று கூறினார்.

எட்டிப் பிடிக்க முடியாத குறைந்தபட்ச ஸ்கோர்

இந்த மைதானத்தில் குறைந்தபட்சமாக 196 ரன்கள் சேர்த்து மேற்கிந்தியத்தீவுகள் அணி டிஃபென்ட் செய்துள்ளது.

1988ம் ஆண்டு, ஜனவரி 7ம் தேதி நடந்த ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 197 ரன்களை துரத்திய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங்

இந்திய அணி இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 324 ரன்களை சேஸிங் செய்துள்ளது.

2002ம் ஆண்டு, நவம்பர் 15ம் தேதி நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் சேர்த்து. இந்த ஸ்கோரை 14 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி சேஸிங் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இதுவரை...

இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தானும் இந்தியாவும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்த்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் 1947இல் தனி நாடாக உருவானது முதலே இரு அணிகளும் களத்தில் போட்டியிட்டு வருகின்றனர். பிரிவினைக்குப் பிறகு 1950களில் நடந்த போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற சம்பவங்களும் உண்டு.

இன்று நடக்கும் போட்டி பிளாக்பஸ்டர் என விவரிக்கப்படுகிறது. 1,32,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் இந்தப் போட்டியைக் காண லட்சக்கணக்காண மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

பாகிஸ்தான் அணியில், பாபர் ஆசம், அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகர் அஹ்மத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரீதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி இதுவரை உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை மட்டுமே சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி சேஸிங் செய்து 6 விக்கெட்டில் வென்றது. அதன்பின் இந்த உலகக்கோப்பையில் சேஸிங் செய்ய இருக்கிறது.

இந்த ஆட்டத்தைப் பல கோடி பேர் ஆன்லைனில் பார்த்தாலும், நேரடியாகவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காணவுள்ளனர். எனவே ஆமதாபாத் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நரேந்திர மோதி விளையாட்டு அரங்குக்கு அருகில் உள்ள சாலைகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெவ்வேறு ஊர்களிலிருந்து இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும்கூட ஆமதாபாத் வந்திருப்பதால் நகரின் ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

எப்போதும் உணர்வுப்பூர்வமாகவே பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி, இன்று ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையில்தான் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறப் போகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: