உலகக்கோப்பை: பாகிஸ்தானின் பந்துவீச்சு தாக்குதலை இந்திய அணியால் சமாளிக்க முடியுமா?

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கிரிக்கெட்டில் மிகவும் பரபரப்பான மற்றும் அதிகம் எதிர்பார்ப்புக்கு உள்ளாகும் போட்டிகளில் ஒன்று இந்தியா-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.

இன்று நடக்கும் போட்டி பிளாக்பஸ்டர் என விவரிக்கப்படுகிறது.1,32,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில், இந்தப் போட்டியைக் காண லட்சக்கணக்காண மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் உலகக்கோப்பை போட்டியில் தங்களது முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இந்த மூன்றாவது போட்டியில் களமிறங்குகின்றன.

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் போட்டி எப்போதும் தனித்துவமானதுதான். போட்டியை ஒரு போராகப் பார்க்கும் லட்சோபலட்சம் ரசிகர்கள் மத்தியில், மற்ற விளையாட்டைப் போல மைதானத்தில் எந்த சத்தமும் வராமல் நடந்துவது சாத்தியமில்லை.

பாகிஸ்தான் பேட்டிங் எப்படி இருக்கும்?

இரு அணிகளிலும், இந்தப் போட்டியை ஒரு மறக்க முடியாத நிகழ்வாக்கும் திறன் கொண்ட வீரர்கள் உள்ளனர்.

இதுவரையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில், ஏழு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளதால், இந்த வரலாற்று சாதனையின் நம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கும்.

அதேபாேல, பாகிஸ்தான் அணியையும் நம்ப முடியாது. அவர்கள் செப்டம்பரில் நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் உலகின் தலைசிறந்த ஒரு நாள் அணியாக போட்டியில் நுழைந்தனர். ஆனால், அரையிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினர்.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திறமை எப்போதும் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாமை சுற்றியே உள்ளது. அவர் திறமையான வீரராக இருந்தாலும், அவர் எப்போதும், குறைத்தே மதிப்பிடப்படுகிறார்.

அவர் எப்போதும் தனது இன்னிங்ஸை அமைதியாகவும், மெதுவாகவும் நகர்த்துபவர். அவர் என்ன செய்கிறார் என்பதை எதிர் அணியினர் உணரும் முன்னரே அவரது ஸ்கோ் 50 அல்லது 60ஐ தாண்டியிருக்கும். பின், அவர் தன் விருப்பப்படி, பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்கத் தொடங்குவார். அவர் களத்தில் அமைதியாக இருந்து, போட்டி எப்படி நடந்தாலும் சற்று விட்டுக்கொடுக்கும் தன்மை கொண்டவர்.

கடந்த 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு, ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அவர் எடுத்துள்ள ரன்களின் சராசரி 70 ரன்களில் இருப்பதை இந்தியா கவனத்தில் கொள்ளவேண்டும்.

அவர் ஆட்டமிழக்காமல், விளையாடினால், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படும். ஆனால், அவர் மட்டுமே இந்தியாவுக்கு இருக்கும் ஒரே சிக்கல் இல்லை.

விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அபாரமான ஃபார்மில் உள்ளார். கடந்த செவ்வாயன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 344 ரன்களை எட்டுவதற்காக ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் எடுத்து அணிக்காக உதவியிருந்தார்.

இதே போட்டியில் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் சதம் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

ஃபகார் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோருக்கும் இந்தியாவை சிக்கலுக்கு உள்ளாக்கும் திறன் உள்ளது. ஆனால் பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் எளிதாக ஆட்டமிழந்தால், பாகிஸ்தானால் இன்னிங்ஸை மீண்டும் கட்டமைக்க முடியுமா என்பது சந்தேகமே.

இந்தியா எளிதாக முதலில் களமிறங்கும் பாகிஸ்தான் வீரர்களை வீழ்த்தினால், பாகிஸ்தானின் மிடில் ஆர்டரில் உள்ள பலவீனத்தை பயன்படுத்திக் கொள்வதே இந்தியாவின் நோக்கமாக இருக்கும்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் இந்தியாவை திணறடிக்க முடியுமா?

பாகிஸ்தானின் பந்துவீச்சாளர்கள் இலங்கைக்கு எதிராக சமமான திறனை வெளிப்படுத்தாத காரணத்தாலும், அணியின் மோசமான ஃபீல்டிங்காலும், ஆசியக்கோப்பை அரையிறுதியில் அவர்களால் இலங்கையை வெல்ல முடியவில்லை.

ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர்கள் அப்படி விளையாட முடியாது. ஒவ்வொரு வீரரும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பும் ஒரு மேடைதான் இந்தியா-பாகிஸ்தான் போட்டி. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மீண்டு வருவதற்கு இந்தப் போட்டி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

பாக்கிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஒரு "தொழிற்சாலை" என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஏனெனில், அவர்கள் மிருகத்தனமான வேகம் மற்றும் பந்துகளை நன்றாக ஸ்விங் செய்யும் திறன்களைக் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குகிறார்கள்.

காயம் காரணமாக நசீம் ஷா வெளியேறியதால் பாகிஸ்தான் அணி அவர் இல்லாததை நிரப்ப சிரமப்படும்.

பாகிஸ்தான் அணி ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரை பெரிதும் நம்பியுள்ளது. ஆனாலும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களைப் போல, சழற்பந்துவீச்சாளர்களால் இந்திய பேட்டர்களை சிக்கலுக்கு உள்ளாக்க முடியுமா என்பதும் சந்தேகமே.

இந்திய அணியின் நட்சத்திர பேட்டிங் வரிசையானது பாகிஸ்தானின் தாக்குதலை, குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் தரத்தைக் கொண்டுள்ளது.

புதன்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா, இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷானுடன் இன்னிங்ஸை தொடங்குவார்.

ஆனால், சுப்மான் கில் உடல்நலக் குறைவால் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. கில் ஃபார்மில் இருக்கிறார், அவர் அணியில் இல்லாததை இந்தியா நிச்சயம் உணரும்.

இந்தியாவின் 'மீட்பர்' பாகிஸ்தானுடன் எப்படி விளையாடுவார்?

ரோஹித் ரன் குவித்ததைப் பார்த்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் தனது தடையற்ற கவர் டிரைவ்கள், சிக்ஸர்கள் மற்றும் அச்சமற்ற புல் ஷாட்கள் மூலம் நல்ல ஃபார்மில் இருப்பதற்கான அறிகுறிகளைக் கடந்த போட்டியில் வெளிப்படுத்தினார்.

இந்திய கேப்டனால் மட்டுமே பாகிஸ்தானிடம் இருந்து ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியும். அவர் ஒரு தொடக்க ஆட்டக்காரர். ஒருவேளை, பாகிஸ்தான் ரோஹித்தை முறியடிக்க முடிந்தால், அவர்கள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலியை எதிர்கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானுக்கு அவர் ஒரு வலிமையான எதிரி. கடந்த மாதம்தான், ஆசிய கோப்பையில் அவர்களுக்கு எதிராக சரளமாக சதம் அடித்து தனது அணிக்கு ஓர் உறுதியான வெற்றியைப் பெற கோலி உதவினார்.

கடந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையில் இந்தியா 160 ரன்களை சேஸ் செய்தபோது. அவர் 82 ரன்கள் எடுத்து இன்னிங்ஸின் மாஸ்டர் கிளாஸை வெளிப்படுத்தினார். அதை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது.

பல ரசிகர்கள் அவரை "மீட்பர்" என்று அழைக்கிறார்கள். இறுதிவரை போராடும் அவரது திறமை அவரைச் சுற்றியுள்ள மற்ற வீரர்களை அடிக்கடி ஊக்குவிக்கிறது. அதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கே.எல் ராகுலின் ஆட்டமே உதாரணம்.

செப்டம்பர் மாதம் நடந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தவர் ராகுல். கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து மிகுந்த சிக்கலில் இருந்தபோது, ​​அணி மீண்டும் "மீட்பரை" எதிர்நோக்கி இருந்தது. அவரும் அணிக்காக விளையாடி ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தார்.

அப்போது, மறுமுனையில் ராகுல்தான் இருந்தார், இருவரும் கிட்டத்தட்ட போட்டி முடிவடையும் வரை பேட் செய்து தங்கள் அணியை கடினமான விக்கெட்டில் 200 ரன்களுக்கு அழைத்துச் சென்றனர்.

ரோஹித், ராகுல், கோலி ஆகியோரைத் தொடர்ந்து வரும் பேட்ஸ்மேன்களும் பாகிஸ்தான் அணிக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்கப் போவதில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஸ்டைலான பேட்டர்கள், அவர்கள் தேவைப்படும்போது இந்தியாவிற்காக இறங்கி அடித்து ஆடக் கூடியவர்கள்.

இந்தியாவிற்கு ஆட்டத்தை முடித்துக் கொடுக்கக்கூடிய ஆபத்தான ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் உள்ளனர்.

இந்திய பந்துவீச்சாளர்களால் பாகிஸ்தானை கட்டுப்படுத்த முடியுமா?

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி பெரும்பாலும் இந்தியாவின் பேட்டர்களுக்கும் பாகிஸ்தானின் பந்துவீச்சுத் தாக்குதலுக்கும் இடையிலான போட்டியாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த முறை அப்படி இருக்காது. இந்தியாவும் பாகிஸ்தானுக்கு நிகரான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் பாகிஸ்தானின் பேட்டிங்கை முறியடிக்கும் திறன் கொண்டவர்கள்.

ஜஸ்பிரித் பும்ரா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரும்பியதில் இருந்து அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவருடன் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இயல்பிலேயே வித்தியாசமான பந்து வீச்சாளர்கள். அதனால், அவர்களால் தேவைப்படும்போது முக்கியமான விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

ஷமி கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார். சுழற்பந்து வீச்சாளர்களில், குல்தீப் யாதவ் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். அவர் அணிக்குத் திரும்புள்ளது அணிக்கு பக்கபலமாக இருக்கும்.

ஆசிய கோப்பை போட்டியில், பாகிஸ்தான் வீரர்களை ஒவ்வொரு ரன்னுக்கும் வியர்வை சிந்த வைத்து, ஐந்து விக்கெட்டுகளுடன் ஆட்டத்தை முடித்து, இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்ய குல்தீப் முக்கியக் காரணமாக இருந்தார்.

பின்னர் ஜடேஜா மற்றும் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ஆகியோர் தங்கள் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தானின் இன்னிங்ஸுக்கு முட்டுக்கட்டை போட முடியும்.

அணிகள் தங்கள் வியூகத்தை சிறப்பாகச் செயல்படுத்த கடைசி தருணம் வரை காத்திருக்கலாம். ஆனால், இன்று கிரிக்கெட்டின் நல்ல ஆட்டத்தை ரசிகர்கள் காண்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)