You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திராவில் வாழும் 'யூதர்கள்' இஸ்ரேல் செல்ல 300 ஆண்டுகளாக காத்திருப்பது ஏன்?
- எழுதியவர், ஷங்கர் வடிஷெட்டி
- பதவி, பிபிசிக்காக
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலின் விளைவுகள் ஆந்திராவிலும் தெரிகிறது.
குண்டூர் மாவட்டத்தின் கொத்தரெட்டிபாலத்தில் வசிக்கும் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை யூதர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். இவர்கள் தங்களை பெனே எப்ரைம் பழங்குடியினர் என்று அழைக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலில் இருந்து இங்கு வந்து குடியேறியதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் பெனே ஜேக்கப் ஜெப ஆலயத்தில் யூத பாரம்பரியத்தைப் பின்பற்றுகின்றனர். இங்கு யூதர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன, ஹீப்ரூ மொழி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இங்குள்ள யூதர்களின் பிரதிநிதியான யாக்கோபி சாதோக் பிபிசியிடம் பேசியபோது, பல நூறு ஆண்டுகளாகத் தங்களின் குடும்பங்கள் இங்கு வசிப்பதாக தங்களுக்குச் சொல்லப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
“சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலில் இருந்து பல்வேறு இடங்களுக்கு யூதர்கள் குடிபெயர்ந்தனர். அப்போது எங்களின் முன்னோர்கள் முதலில் தெலங்கானா பகுதிக்கும் பின்னர் அமராவதிக்கும் வந்தனர்.
அமராவதி அருங்காட்சியகத்தில் இன்றும் எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாங்கள் இஸ்ரேலியர்கள் என அங்கீகரிக்கப்படுவதில்லை. தெலுங்கு பேசும் மாநிலங்களில் வசிக்கும் மாதிகா இன மக்களின் வாழ்க்கை முறையும் எங்கள் வாழ்க்கை முறையும் ஒன்று போல் இருக்கும். இதனால், அவர்களுக்கு வழங்கும் சான்றிதழ்களையே எங்களுக்கும் வழங்குகின்றனர்,” என்று அவர் கூறினார்.
யாக்கோபி சாதோக் எல்.ஐ.சி. முகவராகப் பணியாற்றி வருகிறார். எளிய தெலுங்கில் பேசுகிறார். தனக்கு ஹீப்ரு மொழியில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியும் என்று அவர் நம்மிடம் கூறினார்.
கொத்தரெட்டிபாலத்தில் வசிக்கும் 40 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேரும் ஹீப்ரூ மொழியில் பேசுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். யாக்கோபி சாதோக்கிற்கு தேவ பிரசாத் என்ற பெயரும் உள்ளது. இதையே தனது அதிகாரப்பூர்வ பெயராக அவர் பயன்படுத்துகிறார்.
‘இஸ்ரேலுக்கு செல்வோம்’
கொத்தரெட்டிபாலத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் யூத பாரம்பரியத்தைப் பின்பற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். விவசாயக் கூலிகளாகவும், கட்டுமானத் தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இரண்டு மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் படித்துவிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூத இனப் பெயரைத் தவிர, அவர்கள் அனைவருக்கும் மற்றொரு பெயரும் உள்ளன.
“நாங்கள் அனைவரும் விரைவில் இஸ்ரேலுக்கு அழைக்கப்படுவோம்,” என்று யாக்கோபி சாதோக் உறுதியுடன் நம்மிடம் கூறினார்.
“இஸ்ரேலில் இருந்து புலம் பெயர்ந்த குழுக்களில் நாங்கள் மிகவும் பொதுவானவர்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து யூதர்கள் மீண்டும் இஸ்ரேலுக்கு அழைக்கப்படுகின்றனர். இஸ்ரேலின் பழங்குடியினரில் ஒருவரான 'பெனே எப்ரைம்' ஆகிய நாங்களும் விரைவில் அங்கு அழைத்துச் செல்லப்படுவோம்.
பிரிந்த அனைத்து உறுப்பினர்களும் இஸ்ரேலுக்கு திரும்ப வேண்டும் என்று புனித நூலான தோராவில் எழுதப்பட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் குடியேறிய யூத மக்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மணிப்பூரை சேர்ந்த 3,000 யூதர்கள் கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு சென்றனர்,” என்று அவர் விளக்கினார்.
கொத்தரெட்டிபாலத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பெனே யாக்கோப் ஜெப ஆலயத்தின் தலைவராகவும் யாக்கோபி உள்ளார். அவருடன் யூத சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பேர் கொண்ட குழுவும் உள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் யூதர்கள் வசித்து வருகின்றனர். மும்பை, கொச்சி, மணிப்பூர், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் யூதர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆந்திராவில் யூதர்கள் இருப்பது 2004ஆம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட பிறகே வெளியே தெரிய வந்தது.
தங்களை மற்ற மக்கள் மகதீன் என்று அழைப்பதாக இந்த யூத மக்கள் கூறுகின்றனர். மகதீன் என்பதற்கு ஆசிரியர்கள் என்று அர்த்தம். தங்களைக் கொல்ல சதி செய்ததாக ராஜமுந்திரியில் ஒரு கும்பலை போலீசார் கைது செய்ததாகக் கூறும் அவர்கள், கைது செய்யப்பட்ட 8 பேரிடம் போலீசார் நடத்திய விசாரனையில் அவர்கள் அனைவரும் யூதர்களைக் குறிவைத்து ஆந்திராவில் குடியேறியது தெரிய வந்ததாகக் கூறுகின்றனர்.
அப்போது முதல் உளவுத்துறையினரும், போலீசாரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொத்தரெட்டிபாலத்துக்கு வந்து அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
யூத மக்கள் சனிக்கிழமையை ஓய்வு நாளாகக் கடைப்பிடிக்கின்றனர். இது ஷப்பாத் என்று அழைக்கப்படுகிறது. இதையும், எபிரேய பாரம்பரியத்தைப் பின்பற்றும் திருமண நடைமுறைகளையும் தாங்கள் பின்பற்றி வருவதாக உள்ளூரைச் சேர்ந்த பெரியவர் இட்ஸ் காக் கூறுகிறார்.
தங்களது நாட்காட்டியின்படி தற்போது நடைபெறுவது 5781ஆம் ஆண்டு என்றும் ஒவ்வோர் ஆண்டும் திஷிரியில் (செப்டம்பர் மாதம்) தொடங்குகிறது என்றும் அவர் விளக்கினார்.
யூதர்களாக அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்
பட்டியல் சாதி பிரிவினராகக் கருதப்படும் தங்களை யூதர்களாக அங்கீகரிக்கும்படி கடந்த காலங்களில் அரசிடம் முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“கடந்த காலத்தில் பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் சென்றபோது எங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பினோம். மணிப்பூர், மிசோர் மக்கள் அங்கு சென்றனர். ஆனால் அந்த இலக்கை நாங்கள் இன்னும் அடையவில்லை.
இஸ்ரேல் பின்பற்றும் லா ஆஃப் ரிட்டர்னின் படி எங்களுக்கு அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதெல்லாம் முடிந்ததும் அழைப்பு வரும். ஆனால் முதலில் எங்களை யூதர்களாக அங்கீகரித்து சிறுபான்மையினர் அந்தஸ்த்தை வழங்க வேண்டும். இது நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்,” என்று மதன்யா மெஹசுவா என்ற இளைஞர் கூறினார்.
மெஹசுவா உள்ளூரில் மட்டா பிரவீன் குமார் என்று அழைக்கப்படுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரேலில் இருந்து ரபீக்கள் என்று அழைக்கப்படும் யூத மதத் தலைவர்கள் கொத்தரெட்டிபாலத்திற்கு வந்து அங்குள்ள உள்ளூர்வாசிகளின் விவரங்களைச் சேகரித்தனர்.
அவர்கள் யூதர்களாக அங்கீகரிக்கப்பட்டால், இஸ்ரேலின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஒரு வாரத்திற்கு முன்பு, கொத்தரெட்டிபாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் இஸ்ரேலின் யூத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எனினும், இஸ்ரேலில் நிலவும் பதற்றம் காரணமாக அனைத்து விழா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாக்கோபி தெரிவித்தார்.
இஸ்ரேலின் பிரதிநிதிகளும் மும்பை திரும்பியுள்ளனர். இஸ்ரேலின் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் அந்த நாட்டிற்குச் செல்ல பிரதிநிதிகள் முயன்று வருகின்றனர்.
சமீபத்திய நிகழ்வுகளால் தாங்கள் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இஸ்ரேலின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசி, அங்குள்ள மக்களின் நல்வாழ்வு பற்றிய தகவல்களைப் பெற்று வருவதாகவும் அவர்கள் விளக்கினர்.
இஸ்ரேலில் தற்போதைய நிலைமை விரைவில் நீங்கி இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறோம் என்றும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
மரபணு பரிசோதனை
ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சிசிஎம்பி) கொத்தரெட்டிபாலத்தில் உள்ள யூதர்கள் என்று கூறிக் கொள்ளும் குடும்பங்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தது.
இவர்களுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மரபணு(DNA) பரிசோதனை நடத்தப்பட்டதாக வட்டார வருவாய் அலுவலர் பி.ராமச்சந்திர ராவ் தெரிவித்தார்.
“அவர்களின் தோற்றத்தைப் பார்த்த பிறகு, அவர்கள் இந்தியர்களிடம் இருந்து வேறுபட்டவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேலுடனான அவர்களின் தொடர்பு தெளிவாக இல்லை,” என்று அவர் விளக்கினார்.
தங்களின் உணவுப் பழக்கம் முதல் திருமண வாழ்க்கை வரை அனைத்தும் யூதர்களை ஒத்திருப்பதால் தங்களை யூதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று சாரா என்ற பெண் குறிப்பிடுகிறார்.
“நாங்கள் கோசர் இறைச்சியை உண்கிறோம். வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, எங்களின் பெரியவர்கள் பிரார்த்தனை செய்த பிறகே இறைச்சி சாப்பிடுவோம், இல்லையென்றால் சாப்பிட மாட்டோம் வாரத்தின் ஏழாவது நாள் 'ஹாலி' என்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம். சிறுவர்களுக்கு 13 வயதிற்கு முன்பே விருத்தசேதனம் செய்யப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.
இந்திய அரசாங்கத்தால் தாங்கள் யூதர்களாக அங்கீகரிப்படுவோம் என்று நம்புவதாக சாரா பிபிசியிடம் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)