You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சைபர் திருடர்களிடம் இருந்து பாதுகாக்கும் வழிகள்
சமீபகாலங்களில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி பணம் திருடப்படும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதில், அரசியல் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை யாரும் தப்பவில்லை. சமீபத்தில் திமுக எம்பி தயாநிதி மாறனும் அவரது மனைவியும் சேர்ந்து வைத்திருந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 8ஆம் தேதி ரூ. 99,999 திருட்டுப் போனதாக அவர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த தயாநிதி மாறன், தான் எந்த ஓடிபியையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமலேயே தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதேபோல, பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஹிவ்தசானியும் தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ 1.5 லட்சத்தை இழந்ததாக கடந்த 8ஆம் தேதி புகார் கூறியிருந்தார்.
ஓடிபி இல்லாமல் பணத்தைத் திருட முடியுமா? வங்கிக்கணக்கில் உள்ள பணம் திருட்டு போகாமல் தவிர்ப்பது எப்படி? என வங்கியின் முன்னாள் மேலாளர்கள் மற்றும் காவல்துறையில் சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றியவர்களிடம் பிபிசி பேசியது.
ஓடிபி. இல்லாமல் பணம் எடுக்க முடியுமா?
ஓடிபி இல்லாமல் பணம் எடுக்க முடியாது, ஆனால், ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு ஓடிபி மட்டுமே ஒரே வழியில்லை என்றார் தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் ராகுல்.
“தற்போது சைபர் குற்றங்கள் நாம் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. நிச்சயமாக வாடிக்கையாளர் தரப்பிலிருந்து ஏதேனும் ஒரு வகையில் ஒப்புதல் அளிக்காமல் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாது. ஆனால், அது ஓடிபி.யாக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,” என அவர் தீர்க்கமாகக் கூறினார்.
ஓடிபி.,யை நேரடியாகக் கேட்டு மக்களிடம் இருந்து பணத்தை திருடுவது பழைய உத்தி எனக் கூறிய அவர், அதே ஓடிபி.யை நம்மிடம் கேட்காமலேயே எடுக்கும் உத்திகளை சைபர் குற்றவாளிகள் செய்வதாகக் கூறினார்.
சமீபத்தில் வங்கிகள் எதிர்கொண்ட ஒரு மோசடி குறித்து பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார் ராகுல்.
“ஒரு மாதத்திற்கு முன் நான் பணியாற்றிய வங்கியின் பல்வேறு கிளைகளில் 10க்கும் மேற்பட்டோர் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டுப் போனதாகக் கூறினர். அவர்கள் அனைவரும் புதிய வேலை தேடி வரும் 25 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள்."
இவர்களிடம் விசாரித்ததில் அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன.
"அவர்கள் அனைவரும் தங்களின் புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வை காணொளி மூலமாக முடித்துள்ளனர். பின், அந்த நேர்காணல் குறித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் தங்களின் தொலைபேசியில் நேர்முகத் தேர்வை எழுதியுள்ளனர். அப்போது தேர்வில் அவர்கள் ‘காப்பி’ அடிக்கிறார்களா எனக் கண்காணிக்க தங்களின் தொலைபேசி ‘ஸ்கிரீனை’ பகிர்ந்துள்ளனர். அதன் மூலம் அந்த சைபர் குற்றவாளிகள், ஸ்கிரீனில் தெரிந்த ஓடிபி மூலமாக அவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர்,” என விரிவாகக் கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார் ராகுல்.
இது தவிர, வங்கிகளும் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை நோக்கிக் கட்டாயப்படுத்துவதாலும் இதுபோன்ற மோசடிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"தனியார் மற்றும் தேசிய வங்கிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் தற்போது விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால், அது பாதுகாப்பானதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே" என்றார்.
இதற்கு சமீபத்தில் ஒரு தனியார் வங்கியின் செயலியை பயன்படுத்த வேண்டாம் என ஆர்பிஐ.யின் உத்தரவே சான்று என ராகுல் கூறினார்
திருட்டில் இருந்து தப்பிப்பது எப்படி?
டிஜிட்டல் பணப்பரிமாற்ற யுகத்தில் நம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பாதுகாக்க நாம் விழிப்புடன் இருப்பது மட்டுமே ஒரே வழி என்கிறார் தேசிய வங்கியின் ஒய்வு பெற்ற மேலாளர் ராஜன்.
“இந்த மாதிரியான சைபர் குற்றவாளிகளால் நானே பாதிக்கப்பட்டேன். நான் கடைசியாக செலுத்தியிருந்த மின் கட்டணத்திற்கான பரிவர்த்தனை முடிவடையவில்லை எனக் கூறி என்னுடைய கணக்கில் இருந்தே ரூ 4999-ஐ எடுத்தனர். ஆனால், இதற்கு விழிப்புணர்வும், வங்கிகள் தங்களின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையில் பாதுகாப்பு அம்சத்தையும் அதிகரிப்பதே இதற்கு தீர்வாக இருக்கும்,” என்றார்.
வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பாதுகாக்க அவர் சில வழிகளையும் கூறினார்.
“எந்த ஒரு வை-பை(WiFi)) தொடர்பையும் பயன்படுத்தி வங்கிப் பணப்பரிமாற்றம் செய்யக் கூடாது. எல்.ஐ.சி, ஆதார், மின் இணைப்பு, வங்கி என எந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து குறுஞ்செய்தி வந்தாலும், அதில் குறிப்பிட்டுள்ள செய்தியை படித்துவிட்டு, பதற்றமடைந்து உடனே அதில் உள்ள லின்கை(link) க்ளிக் செய்யாமல், அந்த நிறுவனத்திடம் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றார் ராஜன்.
கிரெடிட் கார்டுகளிலிருந்தும் பணம் திருடப்படுவதை எப்படி தடுப்பது?
வங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் கிரெடிட் கார்டுகளிலிருந்து பணம் திருடப்படுவதும் அதிகரித்திருக்கிறதாகக் கூறுகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை முன்னாள் இயக்குநர் ரவி. இவர் சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையே அபாயமானதுதான் என்றார். ஆனால், பாதுகாப்பாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் வழிமுறைகளை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதுகுறித்து விரிவாக பேசிய அவர், “நாம் எப்போதும் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் நம் ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுக்கலாம், எவ்வளவு பணம் நம் கிரெடிட் கார்டில் பயன்படுத்தலாம் என்பதை நிர்ணயிப்பதே இல்லை."
"எப்போதும் நம் வங்கியின் அதிகாரப்பூர்வ செயலை பயன்படுத்தி, ஒரு நாளைக்கு ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி நாம் செய்யப்போகும் அதிகபட்ச பணப்பரிவர்த்தனையை ரூ 5000 ஆக வைத்துக்கொள்ளலாம். சில சமயங்களில் நிச்சயம் நாம் அதிகப் பணப்பரிவர்த்தனை செய்வோம்தான். அன்று மட்டும் நாம் அதே செயலியில் போய் அந்த உச்சவரம்பை அதிகரித்துவிட்டு, நம் தேவை முடிந்ததும், அதனை குறைத்துக்கொள்ள வேண்டும். இது டெபிட் கார்டு பயன்படுத்துவோரைவிட, கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு உதவியாக இருக்கும்,” என்றார்.
வங்கிக்கணக்குளை அந்த கணக்கின் உரிமையாளரே பயன்படுத்தினால், இதுபோன்ற சைபர் தாக்குதல்களிலிருந்தும் ஒரளவு காப்பாற்றலாம், என்றார் ரவி.
எத்தனை வழிமுறைகளை பின்பற்றினாலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் குறிப்பிட்ட அளவு அபாயம் உள்ளதாக அனைவரும் ஒருமித்தவாறு கூறினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)