You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேலுக்குள் நுழைய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பயன்படுத்திய இரண்டாம் உலகப் போர் உத்தி
- எழுதியவர், முகமது ஹம்தர் & ஹனான் ரஸேக்
- பதவி, பிபிசி நியூஸ் அரபு
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தியபோது, அந்நாட்டிற்குள் படையெடுத்து வந்த ஆயுதக்குழுவினர் பாராசூட் மூலமாகவும் நாட்டிற்குள் நுழைந்தார்கள்.
'இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ்' ஆயுதக்குழுவின் ராணுவப் பிரிவினர் ஒரு இசை விழாவிற்குச் சென்றவர்கள் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தீடீர் தாக்குதலை 'அல்-அக்ஸா தாக்குதல்' எனக் கூறினர்.
பாலத்தீன ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகவும், கடல் மற்றும் நில வழியாகவும் ஊடுருவியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தாெடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் உறுதிப்படுத்தினார்.
அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகத் தரையிறங்குவது போன்ற படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது.
வான் வழியாக எல்லையைக் கடந்த ஆயுதக்குழுவினர்
பாலத்தீன ஆயுக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலையும் காசாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியை பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வான்வழியாகக் கடந்துள்ளனர்.
ஜெனரேட்டர் மற்றும் பிளேடுகளால் இயக்கப்படும் அந்த பாராசூட், காசாவை சுற்றியுள்ள பகுதிக்கு முன்னேறும்போது இயக்கப்பட்டன.
ஹமாஸ் இரண்டாம் உலகப்போரின் உத்தியைப் பின்பற்றியதா?
எல்லையை ஊடுருவிச் செல்லும் நோக்கத்தில், ஹமாஸின் ராணுவப் பிரிவினர் வான்வழித் தாக்குதல் நடத்த ராணுவ பாராசூட்டுகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினர்.
இரண்டாம் உலகப் போரின்போதும் ஜெர்மனி மற்றும் அதன் நேச நாடுகள் பாராசூட் மூலம் தாக்குதல் நடத்தும் பிரிவினரைத்தான் முதலில் சண்டையிட அனுப்பினார்கள்.
1987இல் நடந்த கிளைடர் தாக்குதல்
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதல், பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் - ஜெனரல் கமாண்ட் அமைப்பைச் சேர்ந்த பாலத்தீனர்கள் இருவர், சிரியாவை சேர்ந்த ஒருவர் துனிசியாவை சேர்ந்த ஒருவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட கிளைடர் ஆபரேஷனை நினைவுபடுத்துகிறது.
நவம்பர் 1987இல் இஸ்ரேலிய ராணுவ தளத்தைத் தாக்க அவர்கள் லெபனானில் இருந்து புறப்பட்டனர்.
பாராசூட் மூலம் ஊடுருவிய ஹமாஸ் ஆயுதுக்குழு
மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட்களை பயன்படுத்தி, திசை திருப்புவதற்குப் பயன்படும் கட்டுப்பாட்டைக்கொண்டு, போர் விமானங்களைத் தரையிலிருந்து ஏவ முடிந்தது.
இதனால், அவர்கள் மலையில் ஏறாமல், விமானத்தில் இருந்து தரையிறங்காமல் பயணிக்கலாம். இந்த இஞ்சின் பொருத்தப்பட்ட பாராசூட்களை மணிக்கு 56கி.மீ. வேகத்தில் செலுத்த முடியும்.
பாராகிளைடர்கள் தரையிலிருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும். பாராகிளைடிங் இணையதளங்களில் உள்ள தகவலின் படி, இந்த பாராகிளைடர்களால் 230 கிலோ எடை வரை சுமக்க முடியும்.
இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ் ராணுவத்தின் ஊடகப் பிரிவினர் பகிர்ந்துள்ள வீடியோக்களில், அவர்கள் தரையிலிருந்து பாராகிளைடர்களை ஏவுவதைக் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது இரண்டு பேரால் இயக்கப்படுகின்றன.
அவர்கள் வெளியிட்டுள்ள மற்ற காட்சிகள், ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலிய தளங்களில் தரையிறங்கும் முன்பாகவே வானிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகின்றன.
காசாவையும் இஸ்ரேலையும் பிரிக்கும் வேலியைத் தாண்டி பாராசூட் மூலம் ஊடுருவியவர்களை 'சகர் படை' என அழைக்கின்றனர்.
இஸ்ரேலிய ராணுவம் பாராசூட்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை?
ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஊடகப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில், அவர்கள் காசாவில் இருந்து ராக்கெட்டுகளை ஏவி, அதன் மறைவில் ஆயுதமேந்திய பாராகிளைடர்கள் மூலம் அவர்கள் பறப்பதைக் காட்டுகிறது.
சில பாராகிளைடர்கள் குறைந்த உயரத்தில் பறப்பது போன்றும், மற்றவை உயரமாகப் பறப்பது போன்று இருந்தன. காசாவை சுற்றியுள்ள வான் பகுதியில் அவை மிகவும் தெளிவாகக் காணப்பட்டன.
இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஆயுதக்குழுவினர் வான்வழியாக ஊடுருவியதை இஸ்ரேலிய படைகளால் ஏன் கணிக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை இஸ்ரேலிய ராணுவம் இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை.
குறிப்பாக, பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
'அயர்ன் டோம்'
இஸ்ரேலியர்கள் நேரடியாக மனிதர்களை ரோந்துக்கு பயன்படுத்துவதை விட தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருந்தார்களோ?
'அயர்ன் டோம்' மற்றும் 'ரேடார்' போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பாராசூட் போன்ற சிறிய பறக்கும் பொருட்களைக் கணிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பலமுனைத் தாக்குதல்
ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை ஏவுவதன் மூலம் தனது திடீர் தாக்குதலை ஆரம்பித்தது என்று அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழுவின் தளபதி முஹம்மது அல்-டீஃப் முதல் நாளில் அறிவித்தார்.
ராக்கெட் ஏவுதலை திசைமாற்றப் பயன்படுத்தி, ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் தரைவழியிலும், துப்பாக்கிப் படகுகளைப் பயன்படுத்தி கடல்வழியிலும், பாராசூட்டை பயன்படுத்தி வான்வழியிலும் ஊடுருவியுள்ளனர்.
ஊடக மற்றும் ராணுவ அறிக்கைகளின் படி, பாராசூட் தாக்குதல் மற்றும் அந்த பாராசூட்களால் வான் பாதுகாப்பு திறனை முறியடிக்கும் உத்தியே ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எல்லைக்குள் ஊடுருவுவதற்கு ஒரு தீர்க்கமான காரணியாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.
முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர். தற்போது, "அவர்களைக் கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)