சென்னைக்கு அருகே இருவர் கொலை: தமிழகத்தில் தொடரும் என்கவுன்டர்களின் பின்னணி என்ன?

சென்னை அருகே இன்று அதிகாலையில் இரண்டு இடங்களில் நடந்த காவல்துறை மோதல்களில் ரவுடிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஆனால், காவல்துறை அவர்களைப் பிடித்து வந்து கொன்றதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடிகளான முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் பல கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் ரவுடி முத்து சரவணன் என்பவர் மீது மட்டும் 6 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுமட்டுமின்றி இவர் சோழவரம் பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் புகார்கள் இருந்து வந்தன. சன்டே சதீஷ் மீது ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் இருந்தன.

பாடியநல்லூர் ஊராட்சியின் முன்னாள் தலைவரும் அ.தி.மு.க பிரமுகருமான பார்த்திபன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வாக்கிங் சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முத்து சரவணன்தான் பின்னணியில் இருந்தார் எனக் காவல்துறை கருதியது. இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முத்து சரவணனும் சன்டே சதீஷும் தேடப்பட்டு வந்தனர்.

"இவர்கள் இருவரும் சோழவரம் அருகே உள்ள மாறம்பேடு கண்டிகையில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் முயன்றனர். அப்போது அவர்களை நோக்கி ரவுடிகள் சுட்டனர். இதில் மூன்று காவல்துறையினர் காயமடைந்தனர்.

காவல்துறையினர் பதிலுக்கு சுட்டதில் ரவுடி முத்து சரவணன் அந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றொரு ரவுடியான சதீஷ், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்," என ஆவடி காவல்துறை தெரிவித்திருக்கிறது.

தப்பிச் செல்ல முயன்ற ரவுடிகள் தாக்கியதில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. அதே நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் போலீஸ் என்கவுன்டர் சம்பவம் நடந்துள்ளது.

செங்கல்பட்டு பெரியபாளையத்தைச் சேர்ந்த தணிகாச்சலம் என்பவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் இருந்து வந்த அவரைப் பிடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அவரைத் தீவிரமாகத் தேடி வந்த தனிப்படைக் காவலர்கள், நேற்று கைது செய்தனர். அவர் போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் அருகில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினர் சுட்டதில் அவரது வலது கை மற்றும் வலது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.

அவருக்குத் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தொடரும் என்கவுன்டர் கொலைகள்

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் போலீஸ் மோதலில் நடக்கும் கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் 8வது, 9வது என்கவுன்டர் இது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற என்கவுன்டரில் 38 வயதான பிரபல ரவுடி விஷ்வா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி கூடுவாஞ்சேரிக்கு அருகில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சோட்டா வினோத், ரமேஷ் என்ற இரு ரவுடிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் வந்த வாகனத்தை காவல்துறை தடுத்து நிறுத்தியபோது, காவல்துறை மீது இவர்கள் மோத முயன்றதாகவும் அவர்களை விசாரிக்க முயன்றபோது காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

ஆனால், சோட்டா வினோத்தின் தாய் இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். சோட்டா வினோத்தும் ரமேஷும் சிறுசேரிக்கு அருகில் ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டு, ஒரு தனிமையான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு வைத்து ஆய்வாளர் முருகேசனும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனும் இருவரையும் சுட்டுக்கொன்றதாகவும் அவர் புகார் தெரிவித்தார். தனது மகனின் எதிரி கும்பலுக்கு காவல்துறையினர் 'ஒப்பந்தக் கொலைகாரர்களாக' செயல்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை டிஎஸ்பி தலைமையிலான அதிகாரிகள் விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

கடந்த 2021 ஆண்டு அக்டோபரில் தூத்துக்குடியில் முத்தையாபுரம் பகுதியில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தேடப்பட்டு வந்த துரை முருகன் என்பவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது போலி என்கவுன்டர் என குற்றம் சாட்டப்பட்டது.

அதே அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு பெண்ணின் சங்கிலியைப் பறிக்க முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது அவர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

முத்து சரவணன் டெல்லியில் பிடிக்கப்பட்டார்: ஹென்றி திஃபேன்

இவர்கள் காவல்துறை மோதலில் கொல்லப்படவில்லை, போலீஸாரால் பிடித்து வைத்துக் கொல்லப்பட்டனர் என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான ஹென்றி திஃபேன்.

"இன்று கொல்லப்பட்ட முத்து சரவணனை காவல்துறை டெல்லியில் பிடித்து அழைத்து வந்து சுட்டுக் கொன்றிருக்கிறது. இது தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நடக்கும் 8வது மற்றும் 9வது காவல்துறை கொலை. இந்த எல்லா என்கவுன்டர் வழக்குகளிலும் கொல்லப்பட்டவர்களின் பெற்றோர், தங்கள் மகன் காவல்துறையால் கொல்லப்படப் போவதாக முன்கூட்டியே சொல்கின்றனர்.

இருந்தும் இந்தச் சம்பவங்கள் நடக்கின்றன. காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதில் எவ்வளவு தலையிட வேண்டுமோ அவ்வளவு தலையிடவில்லை. அதனால், வேறு யார் யாரோ தலையிடுகிறார்கள். இதனால்தான் இப்படி நடக்கிறது," என்கிறார் ஹென்றி திஃபேன்.

கொல்லப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்று கூறும் ஹென்றி, அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்கிறார். "அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கலாம். அதற்குப் பதிலாக சுட்டுக் கொல்வது எந்த விதத்தில் சரி?" எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.

இந்த போலீஸ் மோதல் கொலைகளில் உள்ள வேறு சில ஒற்றுமைகளையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

"அதாவது, இந்தக் கொலைகளில் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானவர்களின் சடலங்களுக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில்தான் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேதப் பரிசோதனை செய்வதற்கு முன்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடக்க வேண்டும். அது நடப்பதில்லை," என்கிறார் ஹென்றி.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டபோது அவரது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி மருத்துவமனைக்கே சென்று பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த கண்ணதாசன் போன்றவர்கள், இப்போது பேசாமல் இருப்பது ஏன் எனக் கேள்வியெழுப்புகிறார் ஹென்றி. மாநில சட்ட உதவி மையமும் இதுபோன்ற காவல்துறையால் கொல்லப்பட்ட அனைவரது வழக்குகளையும் கையில் எடுக்க வேண்டும் என்கிறார் அவர்.

தமிழ்நாட்டை அதிரவைத்த 2012ஆம் ஆண்டு என்கவுன்டர்

சென்னை பெருங்குடியில் 2012ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி, பாங்க் ஆஃப் பரோடா கிளையில் 19 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. பிப்ரவரி 20ஆம் தேதி கீழ்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் 14 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

இந்த இரண்டு வங்கிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டவர்கள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றது காவல்துறை.

பிப்ரவரி 22ஆம் தேதி இரவு சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டைச் சுற்றி வளைத்த காவல்துறை, அங்கிருந்த ஐந்து இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது. அவர்கள் பிகாரை சேர்ந்த சந்திரிகா ராய், ஹரிஷ் குமார், வினய் பிரசாத், வினோத் குமார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபய் குமார் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த என்கவுன்டர் நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு சில ஆண்டுகள் என்கவுன்டர்கள் இல்லாமல் இருந்த நிலையில், 2018ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் என்கவுன்டர்கள் நடக்க ஆரம்பித்தன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)