பிரதமர் மோடியே முன்னின்று தீவிர பிரசாரம் செய்தும் கர்நாடகாவில் பா.ஜ.க. தோல்வி ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முன்னிலை கிடைத்திருக்கறது. பா.ஜ.க. மிகக் கடினமான முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியைத் தழுவிவருகிறது. என்ன நடந்தது கர்நாடகாவில்?
தேர்தல் ஆணைய இணைய தளம் தரும் தகவல்களின்படி கர்நாடக மாநிலத்தில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான முன்னிலைபெற்றிருக்கிறது. ஆளும் பா.ஜ.க. குறைவான இடங்கலில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்திருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு இந்த முறை அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 38 ஆண்டுகளில் அதாவது 1985க்குப் பிறகு எந்தக் கட்சியும் இன்னொரு முறை ஆட்சிக்கு வர முடியாது என்ற போக்கு இந்த முறையும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பிரசார அணுகுமுறையில் மாறுபாடு
ஹிஜாப், திப்பு சுல்தான், மதரீதியான வன்முறை, ஊழல், தேர்தல் வாக்குறுதிகள், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ஆகிய விவகாரங்கள்தான் கர்நாடக மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான விவகாரங்களாக இருந்தன.
ஆனால், இதில் பெரிய அளவு பா.ஜ.கவுக்கு பலன் கிடைக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது. காங்கிரசைப் பொருத்தவரை, இலவசங்களுடன் கூடிய தேர்தல் வாக்குறுதிகள், பா.ஜ.க. அரசில் இருந்த ஊழல் - குறிப்பாக எல்லா அரசு ஒப்பந்தங்களுக்கும் 40 சதவீத கமிஷன் கேட்பதாக இருந்த குற்றச்சாட்டு.

பட மூலாதாரம், Getty Images
மத ரீதியான அணுகுமுறைக்கு எதிரான மத சார்பற்ற அணுகுமுறை ஆகியவற்றை முன்வைத்தது காங்கிரஸ். விலைவாசி உயர்வு, ஊழல் ஆகியவற்றை முன்னிறுத்தி தினமும் ஒரு முன்னணி ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
கர்நாடக தேர்தல் குறித்த செய்தி சேகரிக்க அம்மாநிலத்திற்குச் சென்றபோது, அங்கு தேர்தல் நடப்பதற்கான பரபரப்பையே பார்க்க முடியவில்லை. அங்கு நடந்த பிரதமரின் ரோட் - ஷோ மட்டுமே பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, இதுபோன்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல், வீடுவீடாக வாக்காளர்களை அணுகுவதில் கவனம் செலுத்தியது.

பட மூலாதாரம், Getty Images
நகர்ப்புறம், கடலோர கர்நாடகாவில் பா.ஜ.க. தொடர்ந்து ஆதிக்கம்
பெங்களூரைப் பொருத்தவரை, பா.ஜ.கவுக்கு பரவலான ஆதரவு இருந்ததைப் பார்க்க முடிந்தது. தற்போதைய அரசில் உள்ள பல பிரச்சனைகளை அவர்கள் குறிப்பிட்டாலும் பா.ஜ.க. ஆதரவிலிருந்து அவர்கள் மாறாமல் பதிலளித்தார்கள். "பா.ஜ.க. எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடும்" என்பதுதான் அவர்களது நம்பிக்கையாக இருந்தது. பெங்களூர் பகுதியிலிருந்து வந்துகொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, அங்கிருந்த பா.ஜ.க. ஆதரவு தேர்தல் முடிவுகளிலும் வெளிப்பட்டிருக்கிறது.
கிரேட்டர் பெங்களூர் பகுதியில் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க. 18 இடங்களில் அந்தக் கட்சி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 12 தொகுதிகளில்தான் முன்னிலை கிடைத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மதவாத அரசியலை முன்னெடுத்தது பா.ஜ.க. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக இருந்தன. ஓபிசி பிரிவில் இஸ்லாமியர்களுக்கு இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டது. இவையெல்லாம் சேர்ந்து, பா.ஜ.கவின் கோட்டையான கடலோர கர்நாடகத்தில் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது தற்போது நடந்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கடலோர கர்நாடக மாநிலத்தில் உள்ள 21 தொகுதிகளில் பா.ஜ.க. 16 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆகவே, பா.ஜ.க.வுக்கு இந்தப் பகுதியில் உள்ள ஆதரவு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
மேலும் நகர்ப்புறப் பகுதிகளில் பா.ஜ.கவுக்கான ஆதரவுதளம் தொடர்ந்து சிறப்பாகவே நீடித்துவருகிறது. மொத்தமுள்ள 58 நகர்ப்புற தொகுதிகளில் 32 இடங்களில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கிறது. கிராமப்புற பகுதிகளில் உள்ள 159 தொகுதிகளில் காங்கிரஸ் 97 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.
"கர்நாடகத்தின் நகர்ப்புறங்களில் தொடர்ச்சியாக பா.ஜ.கவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது. நகர்ப்புறங்களில் பா.ஜ.கவின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் இருக்கிறது. பா.ஜ.கவுக்கு ஆதரவுள்ள இடங்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது, இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முழுமையான கன்னட மக்கள் அல்ல. கடலோரப் பகுதிகளில் உள்ள நகர்ப்புறங்களில் துளு, கொங்கணி பேசுபவர்கள் பா.ஜ.கவை ஆதரிக்கின்றனர். பெங்களூர் மாதிரியான நகர்ப்புறங்களிலும் கன்னடம் பேசுபவர்களைவிட தெலுங்கு, இந்தி பேசுபவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

வேட்பாளர் தேர்வில் குளறுபடியால் காங்கிரசுக்கு பின்னடைவு
இவையெல்லாவற்றையும்விட பெங்களூர் பகுதியில் காங்கிரசின் பின்னடைவுக்குக் காரணம் வேட்பாளர் தேர்வுதான். புலிகேசி நகரில் கடந்த முறை 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அகண்டா ஸ்ரீநிவாஸ மூர்த்திக்கு இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை.
அதேபோல கல்யாண கர்நாடக பகுதியில் ஐந்து இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னிலை வகிக்கிறது. அவர்கள் காங்கிரஸில் இருந்து இடம் கிடைக்காமல் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்டவர்கள். இதையெல்லாம் சரிசெய்திருந்தால் காங்கிரஸ் இன்னும் அதிகமான இடங்களைப் பிடித்திருக்கும்" என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ஆர். வினோத்.
ஆகவே, நகர்ப்புறங்களில் வசிக்கும் படித்த, மேல்தட்டுவர்க்கத்தினர் ஊழல் குற்றச்சாட்டுகளையெல்லாம் மீறி மீண்டும் பா.ஜ.கவுக்கே வாக்களித்துள்ளனர் என்பதை இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழர் பிரதிநிதித்துவம் கானல் நீரே
அதேபோல, இந்தத் தேர்தலிலும் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும்போலிருக்கிறது. கோலார் தங்க வயல் தொகுதியில் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட தமிழரான ராஜேந்திரன் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட எம். ரூபகலாவே மீண்டும் வெற்றிபெறும் சூழல் நிலவுகிறது.

மத பிரசாரம் தீவிரமாக நடந்த ராமநகரத்தில் இஸ்லாமியர் முன்னிலை
பெங்களூர் தமிழ்ச் சங்கம் பெங்களூர் சிவாஜி நகர் தொகுதியில் ஆதரவளித்த ரிஷ்வான் அர்ஷத் முன்னிலையில் இருக்கிறார். ஆனால், சி.வி. ராமன் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தமிழரான ஆனந்த் குமார் பின்னடைவைச் சந்தித்துவருகிறார்.
மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வும் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் ராமநகரம் என்ற சட்டமன்றத் தொகுதியிருக்கிறது. இதற்கு அருகில் உள்ள ராமதேவரப்பேட்டா கோவிலை காங்கிரஸ் கவனிக்கவில்லை; அதனால் அந்தக் கோவிலே நாசமாகிவிட்டது; பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் அங்கு அயோத்தியைப் போல மிகப் பெரிய ராமர் கோவில் கட்டப்படும் என்றும் அது தென்னிந்தியாவின் அயோத்தியாக இருக்கும் என்றும் பா.ஜ.க. பெரிய பிரச்சாரத்தை மேற்கொண்டது.
ஆனால், இப்போது அந்தத் தொகுதியில் இஸ்லாமியரும் காங்கிரஸ் வேட்பாளருமான இக்பால் ஹுசைன் 65,192 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் குமாரசாமியின் மகன் நிகில் இருக்கிறார். பா.ஜ.க. சுமார் ஒன்பதாயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
அதேபோல, இந்தத் தேர்தலில் பா.ஜ.கவின் முழு வேலைகளையும் முன்னின்று கவனித்த பி.எல். சந்தோஷின் ஆதரவாளரான சி.டி. ரவி, தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்துவருகிறார். பா.ஜ.க. பொதுச்செயலாளர், தமிழ்நாட்டிற்கான பா.ஜ..கவின் மேலிடப் பொறுப்பாளர் ஆகிய பதவிகளை அவர் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












