வேளாங்கண்ணி: இருவேறு மதத்தவர் காதல் மணம் புரிய எதிர்ப்பு, இளைஞர் கொலை - இன்றைய முக்கிய செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (09/03/2025) தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
காதல் திருமணம் செய்த பெங்களூரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டார் என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"கர்நாடக மாநிலம் பெங்களூரு கங்கம்மாள் சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(வயது 22) அதே பகுதியை சேர்ந்த எலன்மேரி(21) என்பவரை காதலித்தார்.
இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேளாங்கண்ணி மாதா கோவிலில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அருகில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர்.
திருமணம் முடிந்த 2 நாட்கள் கழித்து ஜனார்த்தனனின் நண்பர்களான கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியை சேர்ந்த 2 பேர் வேளாங்கண்ணி வந்தனர். மார்ச் 8 மதியம் எலன்மேரியை மட்டும் அறையில் விட்டு விட்டு மற்ற 3 பேரும் அறையில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.
மாலையில் ஜனார்த்தனனை தவிர மற்ற இருவரும் எலன்மேரி தங்கி இருந்த அறைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் எலன்மேரி அவருடைய கணவர் குறித்து விசாரித்துள்ளார்.
அதற்கு அவர்கள் இருவரும் ஜனார்த்தனனை அருகில் உள்ள ரயில் நிலையத்தில் கொலை செய்து உடலை அங்கேயே போட்டு விட்டு வந்து விட்டோம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கர்நாடகாவில் இஸ்ரேலை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம், தடுக்க வந்த நபர் கொலை - என்ன நடந்தது?
- திருப்பதி கோவிலுக்கு மேலே விமானங்கள் பறக்க தடை கோரும் தேவஸ்தானம் - எதற்காக தெரியுமா?
- இந்தியாவில் விபத்துகளில் தினசரி பலியாகும் 45 குழந்தைகள் - வாகனங்களில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எப்படி?
- ஈரோடு மலையாளிகள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படாதது ஏன்? பல்லாண்டுக் கால போராட்டத்திற்கு தீர்வு என்ன?

"உடனே எலன்மேரி ஜனார்த்தனனை தேடி வந்த போது வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேஷனுக்கு கிழக்கு பகுதியில் ஜனார்த்தனின் உடல் முகம் மற்றும் தலையில் ரத்தக்காயங்களுடன் கிடந்தது தெரிய வந்தது.
அவர் இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜனார்த்தனனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஜனார்த்தனை கொலை செய்த இருவரும் வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை வழியாக தப்பிச்செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து தஞ்சை ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்." என்று அந்த செய்தி கூறுகிறது.
அடையாள அட்டை இல்லாமல் பார்சல் அனுப்பத் தடை
தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"'சிந்தெடிக்' போதைப் பொருள் என்ற வேதி போதைப் பொருள், போதை மாத்திரை ஆகியவற்றின் புழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவற்றின் விற்பனைக் களமாக சமூக ஊடகங்களும் அவற்றின் 'டாா்க் நெட்' சந்தையும் உள்ளன. அவற்றின் மூலம் போதைப் பொருள்களை வாங்கி தனியாா் கூரியா், பாா்சல் சேவை மூலம் வீட்டில் இருந்தபடியே இளைஞா்கள் பெறுகின்றனா்.
இதைத் தடுப்பதற்காக கூரியா், பாா்சல் நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளது. கூரியா் அனுப்புநா், பெறுநா் என இரு தரப்பினரிடமும் ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம் என அரசால் வழங்கப்படும் ஏதாவது ஓா் அடையாள அட்டையைப் பெற்று ஆய்வு செய்த பின்னா், சேவையை வழங்க வேண்டும்.
சந்தேகத்துக்குரிய வகையில் பாா்சல் இருந்தால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். நைஜீரியா, பாகிஸ்தான், ஈரான், மியான்மா், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த நபா்களுக்கு சந்தேக பாா்சல் வந்தால் அவா்களது கடவுச்சீட்டு, நுழைவு அனுமதி (விசா) ஆகியவற்றை கண்டிப்பாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இதுமட்டுமின்றி, கூரியா், பாா்சல் நிறுவனங்கள் வாடிக்கையாளா்கள் குறித்த தகவல்களை கணினியில் சேமிக்க வேண்டும். மருந்து, ஆயுா்வேத பொருள்களை அனுப்பும்போது சம்பந்தப்பட்ட மருத்துவரின் ரசீதின் நகல் பாா்சலின் மேல் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
சா்வதேச கூரியா் நிறுவனங்களில் கண்டிப்பாக பாா்சலை ஊடுருவி சோதனையிடும் ஸ்கேனா்கள் நிறுவப்பட்டு, அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பாா்சல்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். கூரியா் பாா்சல் பதிவு செய்யப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். அதில் பதிவாகும் காட்சிளை 30 நாள்களுக்கு சேமிக்க வேண்டும்.
அனைத்து கூரியா், பாா்சல் நிறுவனங்களிடமும் அந்தந்த பகுதி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகியவை இருக்க வேண்டும் என்று காவல் துறை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
போக்சோ குற்றவாளி விடுதலையானால் தாமதமின்றி மேல்முறையீடு
போக்சோ வழக்கின் குற்றவாளியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தால், அதை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன் முகமது ஜின்னா அனுப்பியுள்ள கடிதத்தில், "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களுக்காக போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளிலும், பிற கொடுங்குற்ற வழக்குகளிலும் விசாரணை நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்தால் அதை எதிர்த்து விசாரணை அதிகாரியும், அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர்களும் உடனடியாக அதில் சிறப்பு கவனம் செலுத்தி தீர்ப்பு விவரத்தை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
அந்த வழக்கில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து உரிய சட்ட ஆலோசனைப் பெற்று காலதாமதமின்றி மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை ஆய்வாளர்கள், புலன் விசாரணை அதிகாரிகள், அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு டிஜிபி தகுந்த சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்," என்று அதில் கூறியுள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி - ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் , "பொதுவாக தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டே தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி, ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்த போலீஸாரின் உத்தரவுகளை ரத்து செய்கிறேன். கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு போலீஸார் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதியளிக்க வேண்டும். போலீஸாரின் பாதுகாப்புக்காக மனுதாரர்கள் தலா ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும்.
குறிப்பாக ஆடல், பாடல் நிகழ்வுகளின் போது மாணவர்கள் மற்றும் இளஞ்சிறார்களின் மனதைக் கெடுக்கும் வகையில் ஆபாச நடனங்களோ, அல்லது இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களோ கண்டிப்பாக இடம்பெறக் கூடாது. அதேபோல சாதி, மதம், அரசியல் தொடர்பான பாடல்கள், பேனர்கள், வசனங்கள், நடனங்கள் இடம்பெறக்கூடாது. சாதி, மத ஒற்றுமைக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் ஆடல், பாடல் நிகழ்வுகளை நடத்தலாம்.
இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அதேபோல அனுமதிக்கப்பட்ட நேரத்தைத்தாண்டி ஒருபோதும் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல போலீஸாரும் தேவையான நிபந்தனைகளை விதிக்கலாம்," என்று உத்தரவிட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்: அரசாங்கம் அறிக்கைகளை சபைப்படுத்த வேண்டும் – தயாசிறி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சபைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அவர், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு அன்று, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் குறித்து குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்ட இமாம் மற்றும் அல்விஸ் அறிக்கைகளையும் பட்டலந்த சம்பவம் தொடர்பான அறிக்கையையும் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சபைப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்ததாக அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












