ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத பொருள் இந்திய ராக்கெட்டின் பாகமா? உண்மை என்ன?

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராட்சத பொருள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் பாகம்

பட மூலாதாரம், Reuters

சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்ட சில நாட்களிலேயே ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத உலோக உருளை போன்ற பொருள் இந்தியாவுக்கு சொந்தமானதா என்று சந்தேகம் எழுந்தது.

அதுகுறித்து விளக்கமளித்த இஸ்ரோ தலைவர், அதைத் தாங்கள் ஆய்வு செய்யாத வரை தங்களுடையதுதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது எனக் கூறினார்.

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று காலையில் ட்வீட் செய்துள்ள ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம், “மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத பாகம், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரோ இதுகுறித்து இன்னும் எந்தவித விளக்கமும் வெளியிடவில்லை.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவிலுள்ள கிரீன் ஹெட் கடற்கரையில் சில வாரங்களுக்கு முன்பு ராட்சத உலோகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த உலோகப் பொருள் பற்றிய ஊகங்கள் நிலவி வருகின்றன.

சந்திரயான் 3-ஐ விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வுடன் ஒப்பீடு

இந்த ராட்சத பாகம், இந்தியா விண்ணுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தைச் சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், வல்லுநர்கள் அதை மறுத்தனர்.

இந்தப் பொருள் குறித்துப் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்டன. சுமார் 2.5 மீட்ட அகலமும், 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர் நீளமும் கொண்ட உருளை வடிவ பொருள், காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றுகூட ஊகங்கள் எழுந்தன. ஆனால், விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் அது விமானத்தின் பாகமாக இருக்க முடியாது என்று மறுத்தனர். இது ராக்கெட்டின் எரிபொருள் கலனாக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ராக்கெட்டின் பகுதி என சந்தேகம்

வெளிநாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ராக்கெட்டில் இருந்து இந்த ராட்சத பொருள் விழுந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியது.

இதைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் எரிபொருள் கலன் என்று ஊகங்கள் எழுந்தன.

ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம்

பட மூலாதாரம், TWITTER

இதுகுறித்த செய்தி வெளியான நேரத்தில் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டேவிடம் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இது ராக்கெட்டின் ஒரு பகுதி. இது பி.எஸ்.எல்.வி ராக்கெட்டோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் பாகமாக இருக்கலாம்.

அதைப் பகுப்பாய்வு செய்யாமல், உறுதி செய்ய முடியாது,” என்று கூறினார்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் பாகம் என உறுதி செய்த ஆஸ்திரேலியா

இந்நிலையில், ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய அந்த உலோகப் பொருள் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் இருந்து விழுந்திருக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெறிவித்துள்ளது.

மேலும், அதன் டிவிட்டர் பக்கத்தில் இந்தப் பாகங்கள் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதோடு, இந்த ராட்சத பாகம் குறித்த விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்தான் அறிவுறுத்த வேண்டும் என்றும் அது ஐ.நாவின் விண்வெளி ஆய்வுக்கான உடன்படிக்கையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பி.எஸ்.எல்.வி என்றால் என்ன?

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரோ தலைவர் சோம்நாத்

முனைய செயற்கைக்கோல் ஏவூர்தி(Polar Satellite Launch vehicle) என்று அழைக்கப்படும் இது இந்தியாவின் மூன்றாம் தலைமுறை ராக்கெட் வகையைச் சேர்ந்தது.

திரவ நிலைகள் பொருத்தப்பட்ட முதல் இந்திய ராக்கெட் இதுதான். அக்டோபர் 1994ஆம் ஆண்டில் முதன்முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிறகு, பி.எஸ்.எல்.வி ராக்கெட் இந்தியாவின் நம்பகமான, பல்துறை ஏவுதள வாகனமாக உருவெடுத்தது.

இந்த ராக்கெட், ஏராளமான இந்திய செயற்கைக்கோள்களையும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவியுள்ளது.

அதுமட்டுமின்றி, பி.எஸ்.எல்.வி வகையைச் சேர்ந்த ராக்கெட்டுகள் 2008ஆம் ஆண்டில் சந்திரயான் 1, 2013ஆம் ஆண்டில் மங்கல்யான் ஆகிய இரண்டு விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அவை இரண்டும் பிறகு வெற்றிகரமாக நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் பயணித்தன.

பி.எஸ்.எல்.வி-சி48 விண்கலம், பி.எஸ்.எல்.வி-யின் 50வது ஏவுதலை குறிக்கிறது. பல்வேறு செயற்கைக்கோள்களை பூமியின் குறைவான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய பெருமை இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டையே சேரும்.

தொடர்ச்சியான வெற்றிகள், பல செயற்கைக்கோள்களை ஒரே முறையில் ஏவும் திறன் ஆகியவற்றால் உலகளாவிய சந்தையில், நம்பகமான, மலிவான ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: