மத்திய கிழக்கில் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது ஏன்? ஓர் அலசல்

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா தோல்வியடைந்தது ஏன்?
    • எழுதியவர், டாம் பேட்மேன்
    • பதவி, அமெரிக்க வெளியுறவு செய்தியாளர்

கடந்த ஆண்டு அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து, போர்க் காலத்தில் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தான்.

டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் போர்க்கால அமைச்சரவையைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரேல் மக்களை குறிப்பிட்டு, “நீங்கள் தனியாக இல்லை” எனக் கூறினார்.

ஆனாலும், செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா கோபத்தில் செய்த தவறுகளை போன்று செய்யக்கூடாது எனவும் இஸ்ரேல் தலைமையை ஜோ பைடன் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையில், அதிபர் பைடன், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று வலியுறுத்திய உலகத் தலைவர்களின் அழைப்புக்குத் தலைமை தாங்கினார். அதற்கான தனது பதிலை நெதன்யாகு வெளிப்படுத்தினார். தங்களின் பெரும் பலம் மூலம் பிராந்தியத்தில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் அடைய முடியும் என்று அவர் கூறினார்.

அதற்கு 90 நிமிடங்கள் கழித்து, தெற்கு பெய்ரூட்டில் உள்ள கட்டடங்கள் மீது (கடினமான இலக்குகள் அல்லது ராணுவப் பதுங்கு குழிகள் போன்ற ஆழமான நிலத்தடியில் புதைக்கப்பட்ட இலக்குகளை ஊடுருவிச் செல்லும் வகையில்) அமெரிக்கா வழங்கிய “பங்கர் பஸ்டர்” (bunker buster) வகை வெடிகுண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய ஓராண்டில், இது மிக முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவால் விநியோகிக்கப்பட்ட வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் மூலம் பைடனின் ராஜ்ஜிய ரீதியிலான முயற்சிகள் வீணானது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மோதல் இன்னும் தீவிரமாகலாம் என அச்சம்

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் ராஜ்ஜிய ரீதியிலான முயற்சிகளை உன்னிப்பாகக் கவனிப்பதில் நான் இந்த ஓர் ஆண்டின் பெரும்பகுதியைச் செலவிட்டுள்ளேன்.

அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனின் மத்திய கிழக்கு பயணத்தில் ஊடகக் குழுவுடன் பயணித்துள்ளேன். கடந்த ஆண்டு டிசம்பர் வரை, மத்திய கிழக்கில் நான் ஏழு ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன்.

பைடன் நிர்வாகத்தைப் பொறுத்தவரை காஸாவில் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அமெரிக்காவின் மிக முக்கிய ராஜ்ஜீய நோக்கமாக உள்ளது. அதிக பாதுகாப்பு கொண்ட எல்லை வேலியைக் கடந்து தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டாகிவிட்டது.

இதில், 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், சுமார் 250 பேர் கடத்தப்பட்டனர், இன்னும் விடுவிக்கப்படாத ஏழு அமெரிக்கர்கள் உள்படப் பலர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களுள் பலர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. காஸாவில் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலில் சுமார் 42,000 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பிரதேசமே அழிவு, இடப்பெயர்வு, பசி ஆகிய பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் காணாமல் போனார்கள். இஸ்ரேலிய தாக்குதல்களில் அதிகளவில் நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்களை இஸ்ரேல் தடுப்பதாக மனிதநேய குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன, அதை இஸ்ரேல் அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

இதனிடையே, இந்தப் போர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை மற்றும் லெபனானுக்கும் பரவியுள்ளது. இரான் ஆதரவு ஹெஸ்பொலா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் கொலைக்கு பதிலடியாக, கடந்த வாரம் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை இரான் ஏவியது. இந்த மோதல், இன்னும் தீவிரமாகி, அப்பிரதேசத்தை சூழலாம் என எச்சரிக்கப்படுகிறது.

வெற்றியும் தோல்வியும்

ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது அமெரிக்க நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது

அமெரிக்க வெளியுறவுத் துறை குறித்த செய்தி சேகரிப்பின்போது, பைடன் நிர்வாகம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஆதரிக்கும் அதேவேளையில் கட்டுப்படுத்தியும் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால், இந்த மோதலைத் தணிப்பதற்கும் போர்நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்வதற்குமான இலக்கை அடையும் முயற்சியில் பைடன் நிர்வாகம் தோற்றது.

அமெரிக்காவின் அழுத்தம் “ராணுவ நடவடிக்கையின் வடிவத்தை மாற்றியதாக” பைடன் அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். தெற்கு காஸாவில் ரஃபாவுக்குள் இஸ்ரேலின் ராணுவ படையெடுப்பு அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இல்லையெனில் அந்த நகரமே அழிவுக்குள்ளாகி இருக்கும் என்பதும் அமெரிக்க நிர்வாகத்தின் பார்வையாக உள்ளது.

ரஃபா படையெடுப்புக்கு முன்னதாக, பைடன் முழு வீச்சிலான தாக்குதலில் இருந்து இஸ்ரேலுக்கு அறிவுறுத்தும் நோக்கில் 2,000 பவுண்ட் மற்றும் 500 பவுண்ட் வெடிகுண்டுகள் அடங்கிய சரக்குகளை ரத்து செய்தார். ஆனால், இதன் காரணமாக குடியரசுக் கட்சியினரிடம் இருந்து அதிபர் பைடன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

மேலும், பைடனின் இந்த நடவடிக்கையை நெதன்யாகு “ஆயுதத் தடையுடன்” ஒப்பிட்டார். அதன் பிறகு, சரக்குகளை ரத்து செய்யும் முடிவை பகுதியளவு விலக்கினார், பின்னர் மீண்டும் அப்படிச் செய்யவில்லை.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் காஸாவில் பஞ்சம் ஏற்படும் சூழல் இருப்பதாக ஐநா தெரிவித்திருந்த நிலையில், தங்களின் அழுத்தத்தால் அதிகளவு உதவிகள் அப்பகுதிக்கு வழங்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்தது.

“அமெரிக்காவின் தலையீடு, பங்கெடுப்பு மற்றும் கடின உழைப்பால் காஸாவில் உள்ளவர்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்கின்றன. ஆனால், இதுவே இலக்கை எட்டிவிட்டதாகப் பொருள்படாது. இன்னும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என அந்தத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

அந்தப் பிரதேசத்தில் பைடனின் பெரும்பாலான பணிகளை அவருடைய தலைமை ராஜ்ஜீய அதிகாரியான ஆண்டனி பிளிங்கன் மேற்கொள்கிறார். ராஜ்ஜீய ரீதியிலான கூட்டங்களுக்காக பிளிங்கன் கடந்த அக்டோபர் முதல் மத்திய கிழக்கிற்கு பத்து முறை அவசர பயணம் மேற்கொண்டுள்ளார். காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதில் அவருடைய வெளிப்படையான முயற்சியையும் அமெரிக்காவின் உளவு முகமையான சி.ஐ.ஏ.வின் ரகசியமான பணியையும் இது காட்டுகிறது.

பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஒப்பந்தத்தை இறுதி செய்யவிடாமல் வேண்டுமென்றே தடுப்பதாக நெதன்யாகு மீது அமெரிக்க அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டுகிறார்.

ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை நான் கண்டுள்ளேன். பிளிங்கன் கடந்த ஆகஸ்ட் மாதம் 9வது முறையாக பயணம் மேற்கொண்டபோது, சி-17 அமெரிக்க ராணுவ விமானத்தில் அப்பிரதேசம் முழுவதும் நாங்கள் பயணம் மேற்கொண்ட நேரத்தில் அமெரிக்கர்கள் அதிகமாக எரிச்சலடைந்தனர். ஒப்பந்தம் இறுதியாகிவிடும் என நேர்மறையாக நம்பப்பட்ட இந்தப் பயணத்தின்போது, ஹமாஸுடன் பேசுவதற்கு முக்கியமான நபராகக் கருதப்பட்ட கத்தார் ஆட்சியாளர் உடல்நலமின்றி இருப்பதால் அவரைக் காண முடியாது என பிளிங்கனிடம் டோஹாவில் கூறப்பட்டது.

பிளிங்கனுடன் பேசுவதற்கு அவர் மறுத்தாரா?

அதை நிச்சயமாகக் கூற முடியாது (அவர்கள் இருவரும் தொலைபேசி வாயிலாகப் பின்னர் பேசியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்). ஆனால், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எகிப்துடனான காஸா எல்லையில் இஸ்ரேலிய துருப்புகளைத் தொடர்ந்து நிறுத்துவதற்கான தேவை குறித்து பிளிங்கனிடம் பேசி “சமாதானப்படுத்தியதாக” நெதன்யாகு கூறியதைத் தொடர்ந்து அந்தப் பயணம் தோல்வியடைந்ததாகப் பார்க்கப்பட்டது.

ஹமாஸ் மற்றும் எகிப்தியர்களை பொறுத்தவரை இது ஒப்பந்த முறிவு. ஒப்பந்தத்தை இறுதி செய்யவிடாமல் வேண்டுமென்றே தடுப்பதாக நெதன்யாகு மீது அமெரிக்க அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டுகிறார். டோஹாவில் இருந்து புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தைத் தாண்டி பிளிங்கன் செல்லவில்லை. ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனத் தோன்றவில்லை. நாங்கள் வாஷிங்டனுக்கு சென்றோம்.

கடந்த மாதம் பிளிங்கன் அப்பிரதேசத்திற்கு மேற்கொண்ட பத்தாவது பயணத்தில், பிளிங்கன் இஸ்ரேலுக்கு செல்லவில்லை.

மேலோட்டமான ராஜதந்திரமா?

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3.8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஆயுதங்களையும் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர் கூடுதலாகக் கோரப்படும் ஆயுதங்களையும் விநியோகித்துக் கொண்டே இருக்கிறது. இதைச் செய்துகொண்டே போரை நிறுத்த அமெரிக்கா அழைப்பு விடுப்பது, நிலைமையை மேம்படுத்துவது தொடர்பாக செல்வாக்கு செலுத்துவதில் தோல்வியையும் பெரும் முரணையும் காட்டுவதாக சில முன்னாள் அதிகாரிகள் உள்பட விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா தோல்வியடைந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

தற்போது பரவியுள்ள இந்தப் போர், அமெரிக்காவின் ராஜ்ஜீய கொள்கையின் தோல்வி என்பதைவிட, அதற்கான உதாரணமாகத் திகழ்வதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

“பைடன் நிர்வாகம் மிகவும் மேலோட்டமான பார்வையில் ராஜ்ஜீய முயற்சிகளை மேற்கொண்டது உண்மை. இந்தக் கோணத்திலேயே அமெரிக்கா பல கூட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால், இந்தப் போரில் முக்கியப் பங்கு வகிக்கும் இஸ்ரேலின் செயல்பாடுகளை மாற்றுவதற்கு எந்த முயற்சியையும் அமெரிக்கா மேற்கொள்ளவில்லை,” என்று மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு உளவு முகமை பிரிவில், அக்டோபர் 7 தாக்குதல் நேரத்தில் பணியாற்றிய முன்னாள் உளவு அதிகாரியான ஹாரிசன் ஜே. மான் கூறுகிறார்.

அமெரிக்க ஆயுதங்கள் மூலம் காஸாவில் மக்கள் கொல்லப்படுவதையும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவையும் எதிர்க்கும் வகையில், ஹாரிசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால், இந்த விமர்சனங்களை பைடனின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். உதாரணமாக, எகிப்துடனான ராஜ்ஜீய ரீதியிலான பேச்சுவார்த்தை மற்றும் கத்தார் ஹமாஸுடன் மத்தியஸ்தம் செய்ததன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

அதனால், "இஸ்ரேலில் சுமார் 300 பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டதற்குப் பதிலாக, 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் காஸாவில் விடுவிக்கப்பட்டதையும்" அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேல் இடையே ராக்கெட் தாக்குதலுக்கு மத்தியிலும், காஸா மோதலுக்கு மிக முன்னதாக, லெபனானுக்குள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பாக இஸ்ரேல் தலைமையை அமெரிக்க நிர்வாகம் நிராகரித்ததாக, அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

காஸா - இஸ்ரேல் இடையேயான மோதல் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸா - இஸ்ரேல் இடையிலான மோதல் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது

செனட் வெளியுறவு குழுவைச் சேர்ந்த பைடனின் விசுவாசியும் இஸ்ரேல், எகிப்து, சௌதி அரேபியாவுக்கு கடந்த ஆண்டின் இறுதியில் பயணம் மேற்கொண்டவருமான செனட் உறுப்பினர் கிறிஸ் கூன்ஸ், கடந்த ஆண்டு நிகழ்வுகளை வைத்து பைடனின் ராஜதந்திரத்தை எடைபோடுவது முக்கியம் எனக் கூறுகிறார்.

“இடைவெளியைக் குறைப்பதற்கு மறுப்பது தொடர்பாக இருதரப்புக்கும் பொறுப்பு உள்ளது எனக் கருதுகிறேன். ஆனால், ஹமாஸ்தான் தாக்குதல்களை ஆரம்பித்தது என்பதை நாம் மறுக்கவோ அல்லது மறக்கவோ கூடாது,” என அவர் கூறுகிறார்.

“ஹூத்தி, ஹெஸ்பொலா, இராக்கில் உள்ள ஷியா ஆயுதக் குழுவால் மோதல் ஏற்படுவதற்கான தூண்டுதல் இருந்தபோதிலும், மோதல் அதிகரிப்பதைத் தடுப்பதில் பைடன் வெற்றி பெற்றுள்ளார். எங்களுடைய பிரதேச கூட்டாளிகள் பலரை அவர் இதில் கொண்டு வந்துள்ளார்,” என்கிறார்.

விமானம் தாங்கிக் கப்பல்கள் மற்றும் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து ஆர்டர் செய்த அணு உலை பொருத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் உள்பட அமெரிக்க ராணுவ நிலைநிறுத்தலைக் குறிப்பிட்டு, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கான ஆதரவை பைடனின் ராஜ்ஜீய முயற்சிகள் ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் இஸ்ரேல் பிரதமர் எஹூட் ஆல்மர்ட் கூறுகிறார். ஆனால், நெதன்யாகுவின் எதிர்ப்பை பைடனால் கடக்க முடியவில்லை என அவர் நம்புகிறார்.

"ஒவ்வொரு முறை பைடன் நெருக்கமாக வரும்போது, நெதன்யாகு அதை நிறைவேற்றாமல் போவதற்கு ஏதேனும் காரணத்தை எப்படியாவது கண்டறிவார். எனவே, இந்தத் தோல்விக்கான முக்கியமான காரணம் நெதன்யாகுவின் தொடர் எதிர்ப்புதான்," என்கிறார் ஆல்மர்ட்.

நெதன்யாகுவின் அரசுக்கு ஆரவளிக்கும் "மெசியானிய" (உலகத்தை மாற்ற வல்ல சக்தி கொண்ட மீட்பர் வருவார் என நம்பும் மதக்குழு) தேசியவாதப் போக்கு (ultra nationalists) கொண்டவர்களை நெதன்யாகு சார்ந்திருப்பதாலேயே போர் நிறுத்தத்திற்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக ஆல்மர்ட் கூறுகிறார்.

"ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பணயக் கைதிகளை விடுவிக்கும் வகையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது, நெதன்யாகுவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அதனால் அதை ஒப்புக்கொள்ள அவர் தயாராக இல்லை. அதனால்தான் அவர் அதை மீறுகிறார். ஒவ்வொரு முறையும் ஒப்பந்தம் இறுதி ஆகாமல் கெடுக்கிறார்," என்கிறார் அவர்.

ஆனால், ஒப்பந்தம் இறுதியாகாமல் தான் தடுப்பதாகக் கூறப்படுவதை இஸ்ரேல் பிரதமர் மறுக்கிறார். அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் திட்டங்களுக்கு தான் ஆதரவாக இருப்பதாகவும் ஹமாஸ் தொடர்ந்து ஒப்பந்தத்திற்கான தங்கள் கோரிக்கைகளை மாற்றும்போது அதுகுறித்த சில "விளக்கங்களை" மட்டுமே கேட்பதாகவும் அவர் வலியுறுத்துகிறார்.

அமெரிக்காவின் செல்வாக்கு குறித்த கேள்வி

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்கா தோல்வியடைந்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இத்தகைய ராஜ்ஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் அமெரிக்க அதிபர் மற்றும் நெதன்யாகு உறவு முக்கியமானதாக உள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் பல ஆண்டுகளாக அறிந்திருந்த போதிலும், அவர்களுக்கு இடையிலான உறவுகள் அவ்வப்போது கசப்பானதாகவும் செயலற்றதாகவும் இருந்தாலும் பைடனின் கருத்துகள் இஸ்ரேல் பிரதமருடனான உறவைவிட பழமையானது.

இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட பைடன், 1970களில் இளம் செனட் உறுப்பினராக இஸ்ரேலுக்கு சென்றது குறித்து அடிக்கடி பேசியுள்ளார். யூத அரசுக்கு பைடன் வழங்கும் நிலையான ஆதரவை அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதைச் சிலர் பலமாகவும் சிலர் தடையாகவும் கருதுகின்றனர்.

காஸாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு, இஸ்ரேல் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதில் பைடனின் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அவருடைய விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவருடைய ஆட்சியின் இறுதியாண்டில் ஜனநாயக கட்சியினர் பெரும்பாலானோரை உள்ளடக்கிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்க வீதிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில், “இனப்படுகொலை ஜோ” (Genocide Joe) என எழுதப்பட்ட பேனர்களை தாங்கி, அவருடைய கொள்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் ஆஃப் மாடர்ன்ஸ் அரபு ஸ்டடீஸ் பேராசிரியர் ரஷீத் காலிதி கூறுகையில், அரசின் நிலைப்பாடுகளுக்கு அடிப்படையான பைடனின் பார்வை, இளம் இஸ்ரேலிய அரசு உடனடி இருத்தலியல் ஆபத்தில் இருப்பதாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது என்றார்.

“இஸ்ரேல் போருக்கு என்னென்ன வேண்டுமோ அதை நாங்கள் கொடுப்போம் என்னும் ரீதியில்தான் அமெரிக்காவின் ராஜ்ஜீய கொள்கை உள்ளது,” என்கிறார் அவர்.

“ஹமாஸை அழிப்பது உள்பட அடைய முடியாத இலக்குகளை நிர்ணயித்துள்ளதால், இஸ்ரேல் அரசாங்கம் முடிவுறாத போரை விரும்புவதாகத் தெரிகிறது. இதில் இஸ்ரேலின் எண்ணங்களுக்கு ஏற்ப அமெரிக்கா செயல்படுகிறது” என்றார்.

அக்டோபர் 7 தாக்குதல்- முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரித்த இஸ்ரேலியர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அக்டோபர் 7 தாக்குதல் - முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்த இஸ்ரேலியர்கள்

தற்போதைய மோதலில் பைடனின் அணுகுமுறை காலாவதியான கருத்தாக்கத்தால் ஏற்பட்டது என்றும், நாடற்ற பாலத்தீனர்களின் அனுபவங்களை அவை புறக்கணிப்பதாகவும் ரஷீத் காலிதி வாதிடுகிறார்.

“பைடன் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். 57 ஆண்டுகால ஆக்கிரமிப்பு, காஸாவில் நடக்கும் படுகொலை ஆகியவற்றை இஸ்ரேலின் கண்ணோட்டத்தில் இருந்து விலகி பைடன் பார்க்கவில்லை,” என்கிறார் அவர்.

அமெரிக்க இளம் தலைமுறையினர் காஸா குறித்து சமூக ஊடகங்களில் பார்ப்பதாகவும் அவர்களில் பலருக்கு வித்தியாசமான அணுகுமுறை இருக்கிறது என்றும் பேராசிரியர் காலிதி கூறுகிறார். “காஸாவில் மக்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் என்ன பதிவிடுகின்றனர் என்பதை அவர்கள் பார்க்கின்றனர்,” என்கிறார்.

ஜனநாயக கட்சியில் பைடனுக்கு பதிலாக 78 வயதான டொனால்ட் டிரம்புடன் போட்டியிடும் 59 வயதான கமலா ஹாரிஸுக்கு பைடனை போன்று கடந்த தலைமுறையின் சுமை இல்லை.

எனினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதைத் தாண்டி கமலா ஹாரிஸோ அல்லது டிரம்போ வேறு எந்தக் குறிப்பிட்ட திட்டங்களையும் தெரிவிக்கவில்லை. தீவிரமாகி வரும் இந்த மோதலில் அடுத்த திருப்புமுனையை எப்படி இந்தத் தேர்தல் ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)