குழந்தைகள் பாதுகாப்புத் திட்டங்களில் சேர டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்து மறுப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ டைடி
- பதவி, சைபர் செய்தியாளர், பிபிசி உலக சேவை
ஆன்லைனில் குழந்தை வன்கொடுமை உள்ளடக்கத்தை கண்டறிந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச திட்டங்களில் சேர்வதற்கு டெலிகிராம் செயலி தொடர்ந்து மறுக்கிறது என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் சமீபத்தில் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார்.
அத்தகைய உள்ளடக்கத்தைக் கண்டறியவும் புகாரளிக்கவும் மற்றும் அகற்றவும் செயல்படும், காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம் (NCMEC) மற்றும் இணைய கண்காணிப்பு அறக்கட்டளை (IWF) ஆகியவற்றுடன் டெலிகிராம் ஒத்துழைப்பதில்லை.
கோடிக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட டெலிகிராம் செயலியில் போதுமான அளவிற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்ற குற்றசாட்டின் பேரில் துரோவ் கைது செய்யப்பட்டார்.
39 வயதான அவர் மீது போதைப்பொருள் கடத்தல், குழந்தை பாலியல் உள்ளடக்கம் மற்றும் மோசடி ஆகியவற்றில் சட்ட அமலாக்க அமைப்புடன் ஒத்துழைக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
"கட்டுப்பாடுகள்,தொழில்துறை தரங்களுக்கு ஏற்ப உள்ளதாகவும், அவை தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும்" டெலிகிராம் வலியுறுத்தி வந்தது.
மேலும் "ஒரு தளம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு அந்த தளம் அல்லது அதன் உரிமையாளர்தான் பொறுப்பு என்று கூறுவது அபத்தமானது" என்றும் அது கூறியது.
குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களில் சேர மறுப்பது குறித்து கருத்து கேட்பதற்காக டெலிகிராம் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டது.
பிற சமூக வலைதளங்களை போல அல்லாமல், காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்தின் ’சைபர் டிப்லைன்’ போன்ற திட்டங்களில் சேர டெலிகிராம் மறுக்கிறது. 1,600 க்கும் மேற்பட்ட இணைய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ளன.
அமெரிக்காவில் இருந்து செயல்படும் நிறுவனங்கள் இதில் சட்டப்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் பதிவு செய்துள்ள நிறுவனங்களில் 16% அமெரிக்காவை சேராதவை ஆகும்.
டெலிகிராம் ரஷ்யாவில் நிறுவப்பட்டது. ஆனால் துரோவ் தற்போது வசிக்கும் துபாயில் இருந்து அந்த நிறுவனம் இப்போது செயல்படுகிறது.
குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் தொடர்பான புகார்கள், ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம், டிக்டாக், எக்ஸ், ஸ்நாப்சாட் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
குழந்தை பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் பிரச்னையை சமாளிக்க தன்னுடன் சேருமாறு காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம்( NCMEC) பலமுறை டெலிகிராமை கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தக்கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்தது.
இணைய கண்காணிப்பு அறக்கட்டளை(IWF) உடன் பணிபுரியவும் டெலிகிராம் மறுக்கிறது.
"கடந்த ஓராண்டாக டெலிகிராமுடன் பேச்சு நடத்த நாங்களே முயற்சித்த போதிலும் அந்த நிறுவனம் இணைய கண்காணிப்பு அறக்கட்டளையில் உறுப்பினராக ஆகவில்லை. மேலும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் படங்கள் பகிர்வை தடுக்க, எங்கள் சேவைகள் எதையும் அது பயன்படுத்துவதில்லை,” என்று இணைய கண்காணிப்பு அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
IWF அல்லது NCMEC உடன் இணைந்து செயல்படாத காரணத்தால், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் என்று இந்த அமைப்புகளால் வரையறுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட பட்டியல்களை முன்கூட்டியே அறியவோ, அகற்றவோ அல்லது தடுக்கவோ டெலிகிராம் செயலியால் முடியாது.

பட மூலாதாரம், Getty Images
’டேக் இட் டவுன்’ திட்டத்தின் ஒரு பகுதியாகவும் டெலிகிராம் இல்லை. வன்முறையுடன் கூடிய பழிவாங்கும் ஆபாச படங்களை அகற்றும் பணியை இந்தத்திட்டம் மேற்கொள்கிறது.
ஸ்நாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், டிக்டாக், பார்ன்ஹப், ஒன்லிஃபேன்ஸ் ஆகிய அனைத்துமே, தங்கள் பொது அல்லது குறியீட்டு சொற்களால் மறைக்கப்படாத தளங்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்கேன் செய்ய 'ஹாஷ் பட்டியலை'ப் பயன்படுத்தும் இந்தத்திட்டத்தின் உறுப்பினர்கள்.
டெலிகிராம் இணங்காத மற்றொரு விதிமுறை ’வெளிப்படைத்தன்மை அறிக்கை’.
ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சமூக வலைதளங்கள் காவல்துறையின் கோரிக்கைக்கு இணங்க, அகற்றப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களின் பட்டியலையும் வெளியிடுகின்றன.
மெட்டாவின் செயலிகள், ஸ்நாப்சாட் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்கள் ஆன்லைனில் தங்கள் அறிக்கைகளை வெளியிடுகின்றன. முந்தைய ஆண்டுகளின் அறிக்கைகளையும் லைப்ரரியில் பார்க்கமுடியும்.
டெலிகிராமுக்கு அத்தகைய இணையதளம் எதுவும் இல்லை. ஒரு சேனல் மட்டுமே செயலியில் உள்ளது. ஆனால், அதில் வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் இல்லை. வெளிப்படைத்தன்மை அறிக்கைகளுக்கான தனது அணுகுமுறையை "ஆண்டிற்கு இருமுறை" என்றும் அது விவரிக்கிறது.
முந்தைய அறிக்கைகளைப் பார்ப்பதற்கான கோரிக்கைக்கு ’டெலிகிராம் வெளிப்படைத்தன்மை சேனல்’ பதிலளிக்கவில்லை. மேலும் "உங்கள் பிராந்தியத்திற்கு எந்த அறிக்கையும் கிடைப்பதற்கு இல்லை" என்று அது கூறியது.
ஊடகங்கள் தொடர்புகொள்வதற்கு டெலிகிராமில் ஒரு அசாதாரண முறை உள்ளது. தானியங்கி பாட் உடன் தொடர்பு கொள்ளும் முறை செயலியில் உள்ளது. ஆனால் இந்த செய்தியாளர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலைப் பெற பல மாதங்கள் முயற்சி செய்த பிறகும் பலன் ஏதும் இல்லை.
ஊடகங்கள் தொடர்புகொண்டு விசாரிக்க விளம்பரப்படுத்தப்படாத மின்னஞ்சல் முகவரி ஒன்று உள்ளது. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பியும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.
ஜூன் மாதத்தில் பவெல் துரோவ், செய்தியாளர் டக்கர் கார்ல்சனிடம், "சுமார் 30 பொறியாளர்களை" மட்டுமே தனது செயலியை இயக்குவதற்குப் பயன்படுத்துவதாகக் கூறினார்.
டெலிகிராமை நிறுவிய துரோவ் ரஷ்யாவில் பிறந்தவர். அவர் இப்போது துபாயில் வசிக்கிறார். அவரிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை உள்ளது.
டெலிகிராம் குறிப்பாக ரஷ்யா, யுக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் மற்றும் இரானில் பிரபலமாக உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












