புதுவை முழு அடைப்பு: அழைப்பு விடுத்த அதிமுக எடப்பாடி அணி, எதிர்த்த ஓபிஎஸ் அணி - மக்கள் நிலை என்ன?

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி புதன்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
புதுவையில் பாஜகவின் தோழமைக் கட்சியான அதிமுகவின் ஓர் அணியே மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் நோக்கத்துடன் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பதும், இதையொட்டி அதிமுக-வுக்குள் நிலவும் பிளவு மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருப்பதும், அரசியலை கூர்ந்து கவனிக்க வைத்துள்ளது.
அதிமுக பழனிசாமி அணியினர் முழு அடைப்புக்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் முழு அடைப்புக்கு எதிராகவும் புதுவை முழுவதும் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பேசுபொருளாக மாறியுள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக-வுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை. ஆனாலும், கூட்டணியில் உள்ள கட்சியே போராட்ட அழைப்பு விடுத்துள்ளது புதுவை அரசியலில் நிலவும் பரபரப்பில் புதிய காட்சியாகியுள்ளது.
ஆனாலும், புத்தாண்டு வருகிற நிலையில் இந்த முழு அடைப்பு, வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களைப் பாதிக்கும் என்று கூறி வணிகர் சங்கத்தினர், பேருந்து உரிமையாளர்கள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தோர் இந்த முழு அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதா?

இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் நகரின் முக்கியப் பகுதிகளில் பெரும்பாலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் புதுவையின் உட்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் சுமார் 50 சதவீத சிறு குறு வியாபாரிகள் கடைகளைத் திறந்திருந்தனர். மேலும் இன்று போதிய பேருந்து வசதி இருக்காது என்று கருதி, தனியார்ப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பேருந்து நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை, கடலூர், விழுப்புரம் தடங்களில் செல்லும் அரசுப் பேருந்துகள் மட்டும் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வேலைக்கும், கல்வி நிலையங்களுக்கும் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே அதிமுக அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தராததால், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்ற எதிர்பார்ப்பில், பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தை அறிவித்த அதிமுக யூனியன் பிரதேச செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.
ஆனாலும், முழு அடைப்பு அழைப்பை மதிக்காமல் இயக்கப்பட்ட இரண்டு பேருந்துகள், டெம்போ, ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
முழு அடைப்பு உண்டு – இல்லை: சுவரொட்டிப் போராட்டம்

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினரால், இந்த முழு அடைப்புப் போராட்டம் நடக்கும் என்று சுவரொட்டிகள் ஒட்டியிருந்த நிலையில், அதிமுகவின் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அதிமுக மாநிலச் செயலாளர் ஓம் சக்தி சேகர் 'இன்று பந்த் போராட்டம் இல்லை' என்று புதுச்சேரி நகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "நாங்கள் மாநில அந்தஸ்து தருவதை எதிர்க்கவில்லை. எங்களுக்கு மாநில அந்தஸ்து வேண்டும். புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுகவும் இடம் பெற்றுள்ளது. அதிமுகவுடன் இணைந்து தான் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆட்சி இங்கே நடைபெறுகிறது.
அப்படி இருக்கும்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசிடம் இருந்து வாங்கித்தர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. ஆனால் அதை தார்மீக பொறுப்பேற்று செய்ய வேண்டுமே தவிர, அடாவடி அரசியல் செய்து, கூட்டணி அரசுக்கு துரோகம் செய்கின்ற வகையில் செயல்படக்கூடாது," என்றார்.

பட மூலாதாரம், Handout
இது தவிர, “புத்தாண்டு நேரத்தில் பொது மக்கள், வியாபாரிகளைப் பாதிக்கும் வகையில் முழு அடைப்பு செய்வது தவறானது. அரசியல் சுய விளம்பரத்திற்காகவே இது செய்யப்படுகிறது,” என ஓம் சக்தி சேகர் கூறுகிறார்.
"இங்கே நாம் ஆளும் கட்சி என்பதால் நாம் சொன்னால் கேட்கின்ற நிலையில் மத்திய அரசும் இருக்கிறது. ஆகவே வேண்டுகோளைச் சொல்லி வலியுறுத்துவோம். அவர்கள் கொடுக்கவில்லை என்றால் அப்போது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்.
மாறாக கூட்டணியில் இருந்துகொண்டே ஒரு முதல்வரையும் பிரதமரையும் தவறாக சித்தரிப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்கிறார் ஓம் சக்தி சேகர்.
"புதுச்சேரியில் நடப்பது பாஜக ஆட்சியா? திமுக ஆட்சியா?"

பட மூலாதாரம், handout
புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இந்த முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவதாக புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எந்த முதலமைச்சராக இருந்தாலும் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து கோப்புகளில் கையெழுத்து பெறும் அடிமை நிலையே தொடர்கிறது” என்று கூறிய அவர், இந்த நிலையை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை திமுகவின் துணையோடு ஆளும் கட்சி ஒடுக்குகிறது; அதிமுகவினரை போலீசார் கைது செய்கின்றனர் என்றார்.
“கடந்த 25 ஆண்டு கால புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எந்த அரசியல் கட்சித் தலைவரும் கைது செய்யப்பட்டதில்லை. இந்நிலையில் திமுகவின் புகாரை அடுத்து அதிமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஓபிஎஸ் அணியினர் பந்த் இல்லை என்று விளம்பரம் வேறு கொடுத்திருந்தனர். நடப்பது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசா அல்லது திமுக கூட்டணி அரசா என்ற சந்தேகம் எழுகிறது. உண்மையில் கடந்த மூன்று தினங்களாக எங்களுக்கு எதிராக பேசியவர்கள் அனைவருமே எங்கள் போராட்டத்துக்கு விளம்பரம் தேடித் தந்தனர்,” என்றார் அவர்.
களத்தில் நிலவரம் என்ன?
காவல் துறை தரப்பில் இந்த பந்த் போராட்டத்தால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறினாலும், பேருந்துகள் இன்றி பொது மக்கள் அவதிப்பட்டனர். நகரில் பகுதியளவே கடைகள் திறக்கப்பட்டிருந்தன. முக்கிய சந்திப்புகளிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இது பொது மக்களுக்கு ஒருவிதமான அச்சத்தையே ஏற்படுத்தியது. அன்றாடம் வேலைக்குச் செல்லும் பொது மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதை பிபிசி தமிழ் களத்தில் நேரடியாக கண்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












