சிக்னல்களே இல்லாத சாலைகள் எப்படி இருக்கும்? - கோவையில் புதிய முயற்சி

- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மற்றும் வளர்கின்ற இரண்டாம் அடுக்கு நகரங்கள் சந்திக்கும் பிரதான சிக்கல்களுள் முதன்மையானது போக்குவரத்து நெரிசல். பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, அருகி வரும் சாலைகள் என போக்குவரத்து சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
அந்த சிக்கலுக்கு தீர்வு காணும் முறையில் கோவை மாநகர காவல்துறை புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். போக்குவரத்து சிக்னல்கள் இல்லாத கோவை என்கிற இந்த திட்டத்தை கோவை மாநகர காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
சோதனை முறையில் தொடங்கிய இந்த திட்டம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலே முதல் முறையாக கோவையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய திட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிக்னல் இல்லாத கோவை என்றால் என்ன?
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிற சாலைகள், முக்கியமான சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல், காத்திருக்கும் நேரம் ஆகியவற்றை குறைக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் அடிப்படை.
பெரும்பாலும் வாகனங்கள் போக்குவரத்து சந்திப்புகளில் தான் அதிக நேரம் காத்திருப்பதாக தெரியவந்தது. எனவே இதை தீர்ப்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான தீர்வுகளை ஆராய்ந்தோம் என்கிறார் கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவானன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பெரு நகரங்களின் முக்கியமான சாலைகளில் பயண தூரத்தை குறைப்பதற்கு பாலங்கள், சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் பெரிதும் உதவுகின்றன. எங்களின் முதல் கட்ட ஆய்வில் போக்குவரத்து சிக்னல்களில் தான் அதிக அளவில் நெரிசல் ஏற்படுகிறது என்பது தெரியவந்தது. சிக்னல்களில் காத்திருப்பது தான் பயண நேரம் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது” என்றார்.

தமிழ்நாட்டில் முதல் முறை
இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தபோதுதான் நோ சிக்னல் திட்டம் தோன்றியதாக அவர் கூறுகிறார்.
“இதை மாற்ற வேண்டும் என முதலில் முடிவு செய்தோம். காவல்துறை, நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி இணைந்து தான் இதை செயல்படுத்துகின்றனர். அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய சாலை பாதுகாப்பு குழுவில் தான் இது தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. எங்கள் ஆய்வில் இரண்டு விதமான தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.
போக்குவரத்து சந்திப்புகளில் வாகனங்கள் நிற்க வேண்டிய தேவை இல்லாமல் கடந்து செல்ல ரவுண்டானாக்கள் அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. முதல் கட்டமாக சில இடங்களில் பரிட்சார்த்த முறையில் இதை செயல்படுத்தியபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டாவதாக சிக்னல்களை தவிர்த்து யூ-டர்ன் அமைத்தால் வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
முன்னர் போக்குவரத்து நெரிசல் என்றால் ஒரு குறிப்பிட்ட சாலை அல்லது சந்திப்பிற்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். ஆனால் இம்முறை அவ்வாறாக இல்லாமல் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்பதற்காக இத்தகைய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோவையில் தான் முதன்முறையாக இது அமல்படுத்தப்படுகிறது.
கோவையின் பிரதான சாலைகளான மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, திருச்சி சாலை, ஆனைக்கட்டி சாலை என அனைத்து இடங்களிலும் இந்த முறை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. லட்சுமி மில் சந்திப்பு, சிங்காநல்லூர் சந்திப்பு உள்ளிட்ட பிரதானமான சந்திப்புகளில் சிக்னல்கள் அகற்றப்பட்டுள்ளன.
கோவையில் வடவள்ளி தொடங்கி அவிநாசி சாலை வரை 8.5 கி.மீ தூரத்துக்கு எந்த சிக்னலும் இல்லை. வாகனங்கள் நிற்காமலே பயணிக்கும் நிலைக்கு வந்துள்ளது. பயண நேரம் வெகுவாக குறைகிறது. சிக்னல் இல்லாததால் ஹாரன் அடிப்பது குறைந்து ஒலிமாசு குறைகிறது. வாகனங்கள் அதிக நேரம் நிற்பதில்லை என்பதால் காற்று மாசும் குறைகிறது. பயண நேரம் என்பது 40% வரை குறைகிறது,” என்றார்.

எவ்வாறு இந்த திட்டம் செயல்படுகிறது?
ரவுண்டானாக்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் சிக்னல்கள் முழுவதுமாக அகற்றப்படுகின்றன. எதிர் திசையில் செல்கின்ற வாகனங்கள் மெதுவாக ரவுண்டானாவைச் சுற்றி செல்லலாம். இதனால் காத்திருக்க வேண்டியது இல்லை.
யூ-டர்ன் அமைக்கும் சிக்னல்களில் நேராக கடந்து செல்லும் வழி அடைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக வலது அல்லது இடது புறம் திரும்பியதும் சிறிது தொலைவில் யூ-டர்ன் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதில் திரும்பி எதிர் திசையில் பயணிக்கலாம்.
அனைத்து இடங்களிலும் இதை கொண்டு வந்துவிட முடியாது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரவுண்டானா அமைக்க 45 மீட்டர் சுற்றளவு உள்ள இடம் தேவைப்படுகிறது. அதே போல் யூ-டர்ன் அமைக்க இரு புறமும் 11 மீட்டர் இடம் தேவைப்படுகிறது.
ஆய்வு என்ன சொல்கிறது?
நெடுஞ்சாலை துறையின் மண்டல பொறியாளர் மனுநீதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “ஒரு சிக்னலை தேர்வு செய்வதற்கு முன்பாக அதனை வீடியோ பதிவு செய்து ஆய்வு செய்கிறோம். எத்தனை வாகனங்கள், எந்த வகையான வாகனங்கள் ஒரு சாலை அல்லது சந்திப்பை கடந்து செல்கிறது என்பதை பொறுத்து முடிவு செய்கிறோம். எங்களுடைய ஆய்வில் தெரியவந்துள்ள முக்கியமான விஷயம் 70% வாகனங்கள் நேராக தான் செல்கின்றன. அது போக 30% வாகனங்கள் தான் இடது, வலது புறம் திரும்பிச் செல்கின்றன.
இந்த 30% வாகனங்களுக்காக 70% வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனால் தான் நேராக செல்லும் வாகனங்கள் தடையில்லாமல் செல்ல இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என யோசித்தபோது தான் இந்த முறையை தேர்வு செய்தோம். கோவை விமான நிலையத்திலிருந்து நகரத்துக்குள் வருவதற்கு பல சிக்னல்கள் இருந்தன. தற்போது விமான நிலையம் தொடங்கி நவ இந்தியா வரை எந்த விதமான நிறுத்தமும் இல்லாமல் செல்ல முடிகிறது.” என்றார்.

வாகன ஓட்டிகளின் அனுபவம்
கடந்த சில மாதங்களாக படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் மீது வாகன ஓட்டிகளுக்கு மாறுபட்ட அனுபவங்கள் உள்ளன. கோவை மாநகரைச் சேர்ந்த வாகன ஓட்டிகளிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
கோவையில் கல்லூரி ஒன்றில் பணியாற்றி வரும் சந்தனக் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “போக்குவரத்து முறை மாற்றங்கள் தொடர்பாக முதலில் புரியவில்லை. பல சிக்னல்கள் மூடப்பட்டு வாகனங்கள் சுற்றி செல்லும் வகையில் மாற்றப்பட்டுள்ளதால் சில இடங்களில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக காந்திபுரம் பேருந்து நிலைய சந்திப்பு யூ-டர்ன் முறையில் மாற்றப்பட்டுள்ளது.
இதனால் பேருந்துகளும் ஒரே திசையில் திரும்புவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்னல் இல்லாததால் சில வாகனங்களில் கட்டுப்பாடின்றி வந்தால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தாலும் சிக்னல் இல்லாததால் அவர்களால் வாகனங்களை கட்டுப்படுத்த முடிவதில்லை,” என்றார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வரும் தயாம்ருதா பிபிசி தமிழிடம் பேசுகையில், “பெரிய சிக்னல்களுக்கு முன் சில இடங்களில் யூ-டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சிக்னலில் காத்திருக்காமல் முன்னரே திரும்பிச் செல்வதற்கு எளிதாக உள்ளது. ஆனால் சிக்னலில் யூ-டர்ன் அடித்த பிறகு எதிர் திசையில் வாகனங்கள் நேரடியாக வேகமாக வருவதால் உடனடியாக இடது புறமோ, வலது புறமோ திரும்ப முடிவதில்லை. அவிநாசி சாலையில் இந்த நடைமுறை சற்று சிக்கலாக தான் உள்ளது,” என்றார்.

கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் அபிஷேக் இந்த மாற்றத்தை வரவேற்கத்தக்க நகர்வு என்று கூறுகிறார். நம்மிடம் பேசிய அவர், “வாகன ஒட்டிகள் சரியான லேனில் ஒழுங்காக சென்று சரியாக பயணித்தால் பிரச்சனை இருக்காது. கோவையில் லட்சுமி மில்ஸ் சிக்னல் தவிர வேறு எங்கும் அதிக நெரிசல் இல்லை. பேருந்து யூ-டர்ன் எடுப்பதற்கு சரியான அடையாளம் இருந்தால் உதவியாக இருக்கும். அதே போல் வாகனங்கள் திரும்புவதற்கு முன் லேன் மாற வேண்டாம் என்கிற குறிப்பு இருந்தாலும் உதவியாக இருக்கும். எனது ஒட்டுமொத்த அனுபவம் சிறப்பாகவே உள்ளது. பயண நேரம் வெகுவாக குறைகிறது,” என்றார்.
வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள நேரங்களில் சிக்னல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நெரிசல் இருக்கவே செய்யும் என்கிறார் மதிவானன். மேலும் பேசிய அவர், “சிக்னல்களை எடுத்த பிறகு அந்த பாதையில் 40% வரை பயண நேரம் குறைவது தெரிய வருகிறது. எந்த விபத்தும் தற்போது வரை நேர்ந்ததாக பதிவாகவில்லை. சிக்னலில் வாகனங்களை நிறுத்தி வைப்பது தான் நெரிசல் ஏற்படுவதற்கு காரணம்.
ஒரு நான்கு முனை சந்திப்பு என்றால் வாகனங்கள் நிற்க வேண்டிய தேவை இல்லாமல் நேராக சென்று, திரும்ப வேண்டிய இடத்தில் திரும்பிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப வேண்டிய மாற்றங்களையும் செய்து வருகிறோம். இனி அடுத்தடுத்து நேராக செல்கின்ற வாகனங்கள், திரும்புகின்ற வாகனங்களுக்கு ஏற்ப லேன் பிரிக்கப்படும். அப்போது வாகனப் போக்குவரத்து மேலும் சுலபம் ஆகும்,” என்றார்.
மேம்பாலங்கள் மட்டுமே தீர்வு அல்ல
விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இதில் வழி உள்ளதாக சொல்கிறார் பொறியாளர் மனுநீதி. “நாங்கள் போக்குவரத்தை ஆய்வு செய்தபோது ஒரு நான்கு முனை சந்திப்பில் வாகனங்கள் நேராக செல்வது தான் அதிக விபத்துக்களுக்கும், வாகன நெரிசலுக்கும் காரணமாக இருப்பது தெரியவந்தது. நேராக செல்லும்போது வேகக் கட்டுப்பாடு இல்லாமல் வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
அதனால் வாகனத்தின் போக்கிலே சென்று திரும்பிச் செல்கிறபோது வேகம் வெகுவாக குறையும். வாகனங்கள் திருப்பம் உள்ள இடங்களில் தாமதமாகி செல்ல வேண்டுமே தவிர நின்று செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது பொதுவாக முன்வைக்கப்படும் தீர்வு. அப்படியில்லாமல் இந்த முறையிலும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த முடியும் என்பதை நிருபித்துக் காட்டியுள்ளோம்,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












