காஸாவில் இந்த இடத்தில் இஸ்ரேல் விரிவான சாலை அமைப்பது ஏன்? பிபிசி புலனாய்வு

பட மூலாதாரம், Amit Segal
- எழுதியவர், பெனடிக்ட் கார்மன்
- பதவி, பிபிசி வெரிஃபை
காஸாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள முக்கியமான பாதையில் இஸ்ரேலிய படைகள் தார்ச்சாலை அமைத்துவருகின்றன. அப்பிரதேசத்தை விட்டு உடனடியாக முழுமையாக வெளியேறுவதற்கு இஸ்ரேலிய படைகள் தயாராக இல்லை என்பதற்கான சமிக்ஞையாக இதனை நிபுணர்கள் கருதுகின்றனர்.
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த சாலை முக்கிய புள்ளியாக இருந்துவருகிறது.
எகிப்துடனான காஸா எல்லையில் உள்ள குறுகிய, ஆனால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சிறு நிலத்தில் இந்த சாலை அமைந்துள்ளத்தை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்கள், புகைப்படங்கள், காணொளிகள் காட்டுகின்றன. இந்த பகுதி, ஃபிலடெல்ஃபி காரிடார் (Philadelphi Corridor) என்ற இஸ்ரேலிய ராணுவ குறியீட்டுப் பெயரால் வெகுகாலமாக அறியப்படுகிறது.
ஆகஸ்ட் 26 மற்றும் செப்டம்பர் 5-க்கு இடையில் சீரான இடைவெளியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், எல்லை வேலியுடன் கடற்கரையிலிருந்து 6.4 கி.மீ. உள்ளே நீண்டுகொண்டிருக்கும் சாலையில் புதிய பாதையை காட்டுகின்றன.
செப்டம்பர் 4 அன்று இணையத்தில் வெளியான காணொளியில், அப்பகுதியில் மாலை வேளையில் சாலை அமைக்கும் பணிகள் நடப்பதை காட்டுகின்றன.
இரண்டு பெரிய வாகனங்கள் கடப்பதற்கு போதுமான அளவுக்கு விரிவாக, கனரக இயந்திரங்கள் மூலம் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்படுவதை பார்க்க முடிந்தது.
சாலை அமைக்கப்பட்ட இடத்தையும் அச்சாலை எல்லை வேலியில் நீண்டிருக்கும் சாலைதான் என்பதையும் பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Amit Segal
இந்த நடைபாதை எகிப்துடனான ரஃபா கடவுப்பாதையையும் உள்ளடக்கியுள்ளது. இந்த கடவுப்பாதை, காஸாவிலிருந்து வெளியே செல்வதற்கான ஒரே பாதையாக உள்ளது, மேலும் நிவாரண பொருட்களை கொண்டு வருவதற்கும் இந்த பாதை முக்கியமானதாக உள்ளது.
12.6 கிமீ (7.8 மைல்) நீளம் கொண்ட இந்த பாதை, கெரெம் ஷாலோமில் இருந்து மத்தியதரைக் கடல் வரை எகிப்திய எல்லையை ஒட்டி நீள்கிறது.
ஃபிலடெல்ஃபி பாதை அல்லது ஆக்சிஸ் என இப்பாதையை இஸ்ரேலிய ராணுவம் அழைக்கிறது. பாலத்தீனர்கள் சாலா அல்-டின் ஆக்சிஸ் என அழைக்கின்றனர்.
“இது தெளிவாக வரையறுக்கப்பட்ட பகுதி அல்ல,” என்கிறார், லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் செக்யூரிட்டி ஸ்டடீஸ் பள்ளியின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஆண்ட்ரியஸ் கிரேய்க். “ அது எல்லையை ஒட்டியுள்ள நிலம் என புரிந்து கொள்ளப்படுகிறது.” என்கிறார் அவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்ரேல் முன்பு 2005 ஆம் ஆண்டு காஸாவில் இருந்து தனது துருப்புகளையும் குடியேற்றவாசிகளையும் திரும்பப் பெற்ற போது அப்பகுதியிலிருந்து வெளியேறியது.
ஆனால், பீரங்கிகள் மற்றும் ராணுவ கவச வாகனங்களுடன் கடந்த மே 7 அன்று ஃபிலடெல்ஃபி பாதைக்கு இஸ்ரேல் ராணுவம் மீண்டும் திரும்பியது.
ரஃபா கடவுப்பாதையின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் துருப்புகள் கைப்பற்றி, அப்பாதைக்கு வடக்கு-மேற்கு பகுதியிலும், அதன் அருகிலுள்ள தெற்கு நகரமான ரஃபாவுக்குள்ளும் முன்னேற தொடங்கியது.
கடந்த நான்கு மாதங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அப்பாதையில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்களை வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்கள் மூலம் அழித்தது.
மத்திய தரைக்கடல் எல்லையின் முடிவில் உள்ள அல் கர்யா என்ற சுவைதியா என்ற கிராமம் தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி தற்போது இஸ்ரேலிய தளமாக செயல்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு முக்கியமான பாதை
“அப்பகுதியில் சாலை அமைப்பது பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் மற்றும் மத்தியஸ்தர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒன்றும் செய்ய முடியாத நிலையை உருவாக்க இஸ்ரேலியர்கள் முயற்சிக்கின்றனர்,” என்கிறார் டாக்டர் கிரேய்க்.
“காஸா முனையிலிருந்து இஸ்ரேல் உடனடியாக முழுமையாக வெளியேறாது என்பதையே இது காட்டுகிறது,” என்கிறார் அவர்.
இந்தாண்டின் தொடக்கத்தில் வடக்கு காஸா முழுவதும் இஸ்ரேலிய படைகளால் அமைக்கப்பட்ட, நெட்ஸாரிம் பாதை ( Netzarim Corridor) என அறியப்படும் சாலையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“நெட்ஸாரிம் பாதையில் செய்யப்பட்ட முதலீடுகளை நீங்கள் உற்றுநோக்கினால், அவர்கள் அங்கிருந்து உடனடியாக திரும்பப் பெற போவதில்லை என்பது தெளிவாகிறது. கான்க்ரீட் தடுப்புகள், கோபுரங்கள் மற்றும் சுவர்களுடன் தங்கள் தளத்தை இஸ்ரேல் மேம்படுத்தியது. திரும்ப பெறுவது குறித்து திட்டமிட்டிருந்தால், அவற்றை கட்டியிருக்க மாட்டார்கள்” என்றார்.
ஃபிலடெல்ஃபி பாதை, ஹமாஸுக்கு “உயிர்நாடி” என விவரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அப்பகுதியில் இஸ்ரேலின் ராணுவ இருப்பை, எந்த உடன்படிக்கைக்கும் முன்நிபந்தனையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நெதன்யாகு, “ஹமாஸ் ராணுவம் மற்றும் அவர்களின் திறன்களை அழிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு புதிதாக ஆயுதங்கள் கிடைக்க அனுமதிக்கக் கூடாது. எனவே, அந்த பாதையை நீங்கள் (இஸ்ரேல் ராணுவம்) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்” என்றார்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி கடந்த ஆகஸ்ட் 14 அன்று கூறுகையில், “நம்முடைய இருப்பை வலுப்படுத்துவது தொடர்பானது என்பதால், ஃபிலடெல்ஃபி பாதை முக்கியமானது. இங்கு நிலவும் அரசியல் தீர்மானிக்கும் எந்த சூழலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றார்.
எகிப்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் சமீர் ஃபராஜ், தற்போது ராணுவ வியூகம் குறித்த நிபுணராக உள்ளார். அவர் கூறுகையில், “உளவியல் ரீதியான போர் தான் இஸ்ரேலின் நோக்கம். அப்பாதையில் சாலை அமைப்பதன் மூலம், நாங்கள் வெளியேற மாட்டோம் என்ற செய்தியை இஸ்ரேல் பல்வேறு தரப்பினருக்கும் அனுப்புகிறது” என்றார்.
சாலை அமைப்பது குறித்து இஸ்ரேல் ராணுவத்திடம் கேள்வி எழுப்பினோம். ஆனால், இதுவரை பதில் கிடைக்கவில்லை.
சுரங்கப் பாதைகளை அழிப்பதில் உறுதி
காஸாவில் போருக்கு வழிவகுத்த அக்டோபர் 7-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு முன்பாக, எகிப்து வாயிலாக பூமிக்கடியில் சுரங்கப்பாதைகள் மூலமாக, ஆயுதங்கள் மற்றும் மக்களை கடத்துவதற்கு ஹமாஸ் அப்பாதையை பயன்படுத்தியதாக நெதன்யாகு தெரிவித்தார்.
அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய படையினர், ஹமாஸுக்கு மீண்டும் ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பார்கள் என்றும் மீண்டும் அந்த அமைப்பு அச்சுறுத்தலாக அமையாது எனவும் நெதன்யாகு நம்புகிறார்.
கடந்த மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர், “காஸா-எகிப்து எல்லை முழுவதும் நீண்டுள்ள் ஃபிலடெல்ஃபி பாதையில் 150 சுரங்கப்பாதைகளை நாங்கள் அழித்துள்ளோம்” என்றார்.

பட மூலாதாரம், IDF
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பகிர்ந்த காணொளிகளில், ஃபிலடெல்ஃபி பாதையில், “சுரங்கப்பாதை உள்கட்டமைப்பை அழித்ததாக” இஸ்ரேல் கூறுவது உட்பட வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த இடங்களை பிபிசி வெரிஃபையால் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால், அதில் என்ன அழிக்கப்பட்டது என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
அப்பாதையில் முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதை குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மீண்டும் பகிர்ந்த படங்கள் மற்றும் வீடியோக்களை நாங்கள் பார்த்தோம்.
அந்த அனைத்து இடங்களிலும் எல்லையில் உள்ள மற்ற இடங்களிலும் நிலத்தின் மேற்பரப்பில் பெரிதளவில் மாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான அடையாளங்களை பார்க்க முடிகிறது.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












