கேப்டன் மில்லர் விமர்சனம்: தனுஷ் அசர வைத்தாரா? படம் எப்படி இருக்கிறது?
தனுஷ் நடிப்பில், ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.
தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கோகென், இளங்கோ குமாரவேல் எனப் பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தியதா?
ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருந்த நிலையில், தனது மூன்றாவது படத்திலும் அதே பாணியைத்தான் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பின்பற்றியுள்ளாரா? தனுஷுக்கு ஒரு வெற்றிப் படமாக கேப்டன் மில்லர் இருக்குமா?
படத்தின் கதை என்ன?

பட மூலாதாரம், Dhanushkraja/@X
தனது கிராமத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு இருக்கும் மரியாதை மற்றும் பயத்தைப் பார்த்து அவர்களின் படையில் சேர்வதுதான் சிறந்தது என எண்ணி பிரிட்டிஷ் படையில் சேர்கிறான் ஈசன் (தனுஷ்).
ஆனால் தன் கிராமத்து மக்களையே பிரிட்டிஷ் படைகள் கொன்று குவிக்கும்போதுதான் தன் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளதை எண்ணி, மனம் வருந்தி பிரிட்டிஷ் படையிலிருந்து வெளியேறுகிறான்.
பின்னர் தன் வாழ்வின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் செய்யும் கேப்டன் மில்லராக மாறுகிறான் ஈசன்.
சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய படம்

பட மூலாதாரம், Captain Miller/@X
கேப்டன் மில்லர் படத்தின் கரு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் விமர்சனத்தில், "கேப்டன் மில்லர், சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய படம், ஆனால் அது பிரிட்டிஷ் படைகள் மட்டுமல்லாது அனைத்து விதமான ஒடுக்குமுறைகளில் இருந்து பெறவேண்டிய சுதந்திரம் பற்றிப் பேசுகிறது.
ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பார்வையில் இருந்து சுதந்திரப் போராட்டக் கதையைச் சொல்லும் அரிய திரைப்படங்களில் ஒன்று கேப்டன் மில்லர்," என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Captain Miller/@X
இந்தப் படத்தில் தனுஷ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுகிறார். அதன்மூலம் சிறந்த நடிகர்களில் ஒருவராக அவர் மாறி நிற்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.
தனுஷுக்கு நேர்த்தியுடன் எழுதப்பட்ட ஒவ்வொரு மாஸ் காட்சியையும் ரசிக்க முடியும் என்பது உறுதி எனவும் தனுஷின் அண்ணன் செங்கோலனாக சிவராஜ்குமார் சரியான தேர்வு எனவும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காகப் போராடினாலும், அவர்கள் ஒன்றாக இணையும்போது, திரையில் அவர்களது கெமிஸ்ட்ரி மிரட்டும் விதத்தில் உள்ளது. சிவராஜ்குமார், ஜெயிலர் திரைப்படத்தின் கெட்டப்பில் தோன்றுகிறார். ஆனால் அவருக்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் மிகப்பெரியது. குறிப்பாக க்ளைமாக்ஸின்போது அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது," என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "சுதீப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன், ஜான் கோக்கன், எட்வர்ட் சோனென்ப்ளிக், வினோத் கிஷன் ஆகியோர் தங்கள் சிறந்த நடிப்பால் பிரகாசிக்கிறார்கள், ஆனால் தனுஷ் அவர்களை நடிப்பில் எளிதாக மிஞ்சிவிடுகிறார்," என்று கூறியுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக துப்பாக்கி தூக்கும் மில்லர்

பட மூலாதாரம், Captain Miller/@X
இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் 'ராக்கி' மற்றும் 'சாணி காயிதம்' ஆகிய இரண்டு படங்களும் எளிமையான கதைக்களத்தைப் பேசின.
புத்திசாலித்தனமான திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலம் அவை மெருகேற்றப்பட்டன. அந்த வரிசையில், 'கேப்டன் மில்லர்' அவரது சிறந்த படைப்பு என்றே சொல்லலாம் என இந்தியா டுடே விமர்சனத்தில் கூறியுள்ளது.
"இந்த திரைப்படம் ஒரு மனிதனின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பல அடுக்கு கதைகளைக் கொண்டுள்ளது. முதல் காட்சியிலிருந்தே கேப்டன் மில்லர் உங்கள் கவர்ந்துவிடும்," என்று இந்தியா டுடே விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
'அழுத்தமான கதையாடல்’

பட மூலாதாரம், Captain Miller/@X
ஆங்கிலேயே ஆதிக்கத்தையும், அரசனின் சாதிய ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் இணைத்து, அதைச் சுற்றி ‘மாஸ்’ தருணங்களைக் கட்டமைத்து அழுத்தமான கதையாடலை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நிகழ்த்தியிருப்பதாகக் கூறுகிறது, ‘இந்து தமிழ் திசை’.
சுதந்திர போராட்ட கதையை சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளிருந்து சொல்ல முயன்றது சிறப்பு எனவும் அந்நாளிதழ் பாராட்டியுள்ளது.
“முன்னாடி அவனுக்கு அடிமையா இருந்தோம், இப்போ வெள்ளக்காரனுக்கு அடிமையா இருக்கோம். கோவில் கருவறைக்கு உள்ள போக விடுவானுங்களா?’ என தனுஷ் பேசும் வசனம், “கீழ் சாதி, மேல் சாதி, குடிசை மாளிகைன்னு எங்க இருந்தாலும் பெண்கள் அடிமை தான். நம்ம சொல்றத கேக்கணும்னா அதிகாரம் இருக்கணும்,” என்ற அதிதி பாலன் வசனம் வழியே ஒடுக்குமுறையின் அனைத்துக் கதவுகளையும் பதம் பார்த்தற்கு பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளது ‘இந்து தமிழ் திசை’.

பட மூலாதாரம், Captain Miller/@X
சில விமர்சனங்களையும் அந்நாளிதழ் முன்வைத்துள்ளது. 6 அத்தியாயங்களாக பிரித்துச் சொல்லப்படும் இந்தக் கதையில் அருண் மாதேஸ்வரன் ஸ்டைலில் வன்முறைக் காட்சிகளும், தெறிக்கும் தோட்டாக்களும், ரத்தமும் சதையுமான திரைக்கதைக்குத் தேவையாக இருந்தாலும், சில இடங்களில் ஓவர் டோஸ் உணர்வைத் தருகிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
“பொறுமையாக நகரும் காட்சிகளும் அதீத வன்முறையும் சிலருக்கு அயற்சியைக் கொடுக்கலாம். தாய் இறந்துவிட்டதாக ஓரிடத்தில் வசனத்தில் சொல்லப்படும்.
அந்த வசனத்தையே இரண்டாம் பாதியில் மீண்டும் காட்சி ஆக்கியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. அதேபோல, பிரிட்டிஷ் ராணுவப் படையில் இணைந்தால், தன் மக்களைக் கொல்ல வேண்டியிருக்கும் என்பது கூடவா தனுஷுக்கு தெரிந்திருக்காது என்பன போன்ற லாஜிக் கேள்விகள் எழத்தான் செய்கின்றன,” என்றும் ‘இந்து தமிழ் திசை’ கூறியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













