அயலான்: தமிழ் பேசும் ஏலியன் மக்களைக் கவர்ந்ததா? படம் எப்படி இருக்கிறது?
பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'அயலான்' திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கலகலப்பான படமாக வந்துள்ளது.
வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன், பணத்தாசை பிடித்த தொழிலதிபர் ஒருவரின் பிடியிலிருந்து சமூகத்தைக் காக்க, விவசாயியான சிவகார்த்திகேயனுடன் இணைந்து செயல்படுகிறது.
படத்தின் முதல் பாதியில், ஏலியனின் பார்வையில் உலகைக் காட்டும் காட்சிகள் சிரிப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. கருணாகரன், யோகி பாபு ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர். இரண்டாவது பாதியில் படம் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக உள்ளது என்று ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளன.
ஏலியன் படங்கள் புதிதல்ல என்றாலும் அவை பெரும்பாலும், ஹாலிவுட் படங்களிலேயே பயன்படுத்தப்பட்டது. தமிழ் ரசிகர்கள் அதை மொழிபெயர்ப்புப் படமாக மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் கதை ஒன்றில் ஏலியனை பொருத்திப் பார்த்து ரசிக்கும் வாய்பை இயக்குநர் ரவிக்குமார் உருவாக்கி தந்திருக்கிறார்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, உருவாகி வரும் அயலான், கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தாமதமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களை இனி பார்க்கலாம்.

பட மூலாதாரம், Sivakarthikeyan/@X
அயலான்: தமிழ் பேசும் ஏலியன்

பட மூலாதாரம், TheAyalaan/@X
முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளை நம்பியே படக்குழு இதில் இறங்கியிருப்பதைக் காண முடிவதாக தினமணி தன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “அதற்கேற்ற தகுந்த உழைப்பை கிராபிக்ஸ் குழு சரியாகக் கொடுத்திருக்கிறது. ஏலியனை திரையில் துறுத்தல் இல்லாமல் கொடுத்து ரசிகர்களைத் தக்க வைத்திருக்கிறது படக்குழு.
ஏலியனை முகபாவனைகளுடன் நடிக்க வைத்திருப்பது, அதற்கு உணர்ச்சிகளைப் பயன்படுத்தியிருப்பது என மெனக்கெட்டிருந்தனர்,” என்று தினமணி விமர்சனம் செய்துள்ளது.
மேலும், “நாம் யூகிக்கக்கூடிய கதை என்றாலும் அதை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதில் அடங்கியிருக்கிறது இயக்குநரின் திறமை. படத்தின் தொடக்கக் காட்சிகள் சற்று நீண்டதாக இருந்தாலும், அதன் பின் மெதுவாக மெதுவாக வேகமெடுக்கத் தொடங்குகிறது திரைப்படம், ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய சிவகார்த்திகேயனின் தொடக்கக் கால நடிப்பு சாயல் படத்தில் தெரிகிறது.
ஆக்ஷன் ஹீரோவாக மாறிய பிறகு அவரின் பழைய பாணியிலான நடிப்பை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது,” என்றும் அயலான் திரைப்படத்தைப் பற்றி தினமணி கூறுகிறது.
ரசிக்க வைக்கும் ஏலியன்

பட மூலாதாரம், Sivakarthikeyan/@X
ஹாலிவுட் படங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலப்பயணம் என்ற கருவை இயக்குநர் ரவிக்குமார், 'இன்று நேற்று நாளை' என்ற படத்தில் எளிய தமிழ் கதை மூலம் அனைவருக்கும் புரியும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தார். ஒன்பது ஆண்டுகள் கழித்து, அவருடைய இரண்டாவது படத்திலும் சையன்ஸ் ஃபிக்ஷன் கருப்பொருளைக் கொண்டுள்ளார்.
அதுகுறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், "ஹீரோ அறிமுக பாடல், காதல், இரண்டு நகைச்சுவை நடிகர்கள், ஒரு கார்ப்பரேட் வில்லன், கொஞ்சம் அம்மா சென்டிமென்ட், இயற்கை முறை விவசாயம் குறித்த சில அறிவுரைகள் என தமிழ் படத்துக்கான எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன," என்று விமர்சித்துள்ளது.
எனினும், சூப்பர் பவர், பறக்கும் தட்டு, ரோபோக்கள் என ஹாலிவுட் படங்களில் பார்த்த விஷயங்களுக்கு நிகராக இயக்குநர் ரவிக்குமார் கதையில் நிறைய டிவிஸ்டுகள் வைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.
இந்தப் படம் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளதற்கு இதுவே காரணம் எனப் பாராட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், "படத்தின் முதல் பாதியில் டாட்டூ என்ற ஏலியனை ரசிக்கும்படியான கார்ட்டூன் கதாபாத்திரம் போல் பயன்படுத்தி நகைச்சுவையைத் தூண்டியிருக்கிறார் இயக்குநர்.
விசுவல் எஃபெக்ட்ஸ் திரையில் காண்பதற்குத் தங்கு தடையின்றி இருப்பது, படத்தில் கூடுதல் மேஜிக் செய்கிறது,” என்று தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.
அயலான் காட்டும் புதிய உலகம்

பட மூலாதாரம், TheAyalaan/@X
இந்து தமிழ் திசை நாளிதழ் தனது விமர்சனத்தில், “தமிழில் இதுவரை பார்த்திராத அளவு கிராபிக்ஸ் காட்சிகளில் அத்தனை நேர்த்தி. குறிப்பாக, ஏலியனின் உடல் பாகங்கள் தொடங்கி அதன் அசைவுகள், உடல்மொழி வரை துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன," எனப் பாராட்டியுள்ளது.
"தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். வழக்கமாக இந்திய சினிமாக்களில் கிராபிக்ஸ் சொதப்ப காரணம், அதன் லைட்டிங்கில் கவனம் செலுத்தாததுதான் என்று கூறப்படுவதுண்டு.
ஆனால் இதில் படம் முழுக்க அப்படியான குறை எதுவும் இல்லாமல் துல்லியமான கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. ஏலியனும் கியூட்டாக வடிவமைப்பட்டுள்ளதால் குழந்தைகளைக் கவர வாய்ப்புள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் நடனம்

பட மூலாதாரம், Sivakarthikeyan/@X
தி இந்தியன் எக்ஸ்பிரஸ், “அசர வைக்கும் காட்சிகள் மூலம், இந்த திரைப்படம் உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். திகைப்பூட்டும் காட்சிகள் வேறொரு உலகத்துக்கு உங்களை எடுத்துச் செல்லும்,” என்று கூறுகிறது.
“படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள். அதை ஓரிடத்தில்கூட பிசிறு தட்டாமல் காட்சிப்படுத்தி இருக்கிறது கிராஃபிக்ஸ் குழு. ஏலியனுக்கு பின்னணிக் குரலாக வந்திருக்கும் சித்தார்த்தின் குரல் கனகச்சிதமாக பொருந்தியுள்ளது,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர் ரஹ்மான், ஒரு பாடலில் சிவக்கார்த்திகேயனுடன் சேர்ந்து நடனமாடியும் உள்ளார். மேடைகளில் அதிக சத்தம் போட்டுக்கூட பேசாத ரஹ்மானை பார்த்த ரசிகர்களுக்கு, அவர் நடனமாடியிருப்பது கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. இயக்குநர் ரவிக்குமாரும் அதே பாடலில் நடனமாடியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













